ஒருவர் தன் புலன்கள் உள்வாங்கியதை, மனம் உணர்ந்ததை சகமனிதருக்குக் கொண்டு செல்ல்லும் முயற்சி, கலைகளும் இலக்கியமும். இம்முயற்சிக்கானப் பட்டறை அவருடைய மூளை. அவர் உள்வாங்கிய உணர்வை, அதன் புரிதலை பிறர் உணர, சுவைக்க அறிவையும் அழகியலையும் பிணைத்து எழுத, தீட்ட, செதுக்க, இசைக்க, சமைக்க தேர்வு செய்யும் களம்.
ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படையில் ஒரு கலைஞன் தனது இதயத்திற்கு வெப்பமூட்டிய , உடல் சூட்டைத் தணித்த உணர்வை « யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் » என ‘புற வெளிக்கு’ அழைத்து வருகிறான். இயற்கைக்கு மாறாக மனிதர் தோப்பில் ஒரு சில மரங்களே இனப்பெருக்க கடமைக்காக மட்டும் இன்றி அதிசயமாக பிறரை மகிழ்விக்க, கிளர்ச்சியூட்ட, காரணம் தேட கலை இலக்கியம் என்ற பெயரில் பூக்கவும் , காய்க்கவும் செய்கின்றன. பழுத்த கனியைக் கடிக்கவோ அல்லது கொத்தவோ எல்லா அணில்களும் அல்லது கிளிகளும் வரவேண்டுமென்பதில்லை. திசைமாறிய, ருசியை வேறாகக் கொண்ட அணிலோ, கிளியோ ஒரு குறிப்பிட்ட கனியை விலக்கிச் செல்ல சாத்தியமுண்டு. அவை தேர்வு செய்த மரமும், பறந்து செல்லும் பாதையும் மாறுபட்டதாக இருக்கலாம். கலையும் இலக்கியமும் ஒருவகையில் கனிகளே, சில மானுடமரங்களின் இயற்கை நிகழ்வு. இப்பிரத்தியேக, மானுடமரங்களை ஔவைகள் எனக்கொண்டால், அம்மரத்தின் கனிகளைச் சுவைக்கும் பேறுபெற்ற அதியமான்கள் அனைவரும் நாவில் ஒருபடித்தான சுவை அரும்புகள் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்காக ஒவைகள் அழவேண்டியதும் இல்லை.
மார்கெரித் யூர்செனாஎர் (Marguerite Yourcenar)என்ற பிரெஞ்சு பெண்படைப்பாளி, புகழ்பெற்ற ‘ அதிரியன் நினைவுகள் (Mémoires d’Hadrien)என்கிற நாவலின் ஆசிரியர். நேர்காணலொன்றில் « பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களை நான் கையாளுவதில்லை என்கிற எளிய காரணத்திற்காகவே, எனது புத்தகங்களை எத்த்னைபேர் படிக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்புகளில்லை ” என்கிறார்.
கலை, மற்றும் இலக்கியபடைப்பாளிகளில் , பண்பியல் அல்லது அருவக் கலை படைப்பாளிகள் தனி இனம். இவர்கள் வெளித்தோற்றங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, « கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் » என்கிற மெய்யியல் வாதிகள். உண்மையில் ஆழ் மனதில் உளர்ந்த உணர்ச்சிகளில் கலவையைப் பிரித்துணர்ந்து தங்கள் அறிவின் துணைகொண்டு பூரணங்கள் மற்றும் குறைபாடுகளுடன் கலையாக வடிக்கிறார்கள். பொருளின் பூரணம் அல்லது அதன் முடிவற்ற அழகு படைத்தவனோடு நிற்பதில்லை, உள்வாங்குகிற பிறமனிதர்களிடத்திலும் பிரிதொரு நிறத்தில், பிரிதொரு பொருளில் அடையாளம் பெறுகிறது. ஆயிரமாயிரம்பேர் உரை எழுதலாம, பிரித்து பொருள் காணலாம். இவையே அவற்றின் சிறப்பு. பெனுவா தெக் (Benoît DECQUE) இத்தகைய ஓவியர் அவரை அண்மையில் சந்தித்தேன். அவருடனான நேர்காணல் இது.
———————————————–
- வணக்கம். பிரான்சு இந்தியா என்ற இரு நாடுகளின் பண்பாட்டையும், கலை இலக்கியத்தையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டத் வலைத்தளம் Chassé-Croisé: France -Inde. இதன் சார்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன். உங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கோண்டு, ஓவியத்த்துறையைத் தேர்ந்தெடுத்தக் காரணத்தைத் தெரிவியுங்கள்?
1951ல் பிறந்த நான், வளர்ந்தது, வாழ்வது அனைத்தும் இங்குதான் அதாவது ஸ்ட்ராஸ்பூரில். அறிவியல் துறை எனத் தேர்வு செய்த கல்வி என்னை கட்டடக் கலைக்குக் கொண்டு சென்றது. 1976 இல் கட்டடக்கலை க்கான பட்டத்தைப்பெற்றேன். 1982 முதல், கட்டடக் கலைத் துறையோடு என்னிடமிருந்த கலை ஆர்வத்தால் நகரிலிருந்த மிகப்பெரிய ஓவியக் கலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். 2008 ஆம் ஆண்டு சமகால ஓவியத்துறையில் ஆற்றிய பணியைப் பாராட்டி ஸ்ட்ராஸ்பூரிலுள்ள “Le Centre Européens d’Actions Artistiques Contemporaines”பரிசளித்து கௌவுரவித்தது. , தற்போது என்னை முழுமையாக ஓவியத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்.
2. உண்மையைச் சொல்வதானால், சமகால கலை பற்றிய எனது அறிவு சுமாரானது, ஆனாலும் நீங்கள் உருவாக்கிய படைப்புகளை வைத்து பார்க்கிறபோது அவை பண்பியல் (l’art Abstrait) ஓவியமென நினைக்கிறேன். எனது முடிவு சரியெனில் நீங்கள் ஏன் பிறவற்றில் ஆர்வம் காட்டாது இவ்வடிவத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?
ஓவியங்கள்(Paintings) அன்றி பெரிய வடிவிலான சித்திரங்கள்(Drawings), சுவரோவியங்கள் நகர்ப்புற அல்லது ..கிராமபுற காட்சிகள் என பன்முகத் தன்மைகொண்ட ஆர்வத்துடன், சுதந்திரமாக செயல்படுகிறேன். எண்ணற்ற கற்பனை மற்றும் சிந்தனை முரண்கள் ஒருவகைப் பன்மைத் தன்மைகொண்ட களத்தை உருவாக்கிக்கொள்ள உதவ, அக்களத்தில் எனது கலைமுயற்சி கட்டமைப்பது எளிதாகிறது
3. உங்கள் படைப்புகளில் பலவித சேர்மங்கள், வடிவங்களை ஒன்றிணைத்த ஒட்டுச் சித்திர(Collage) தோற்றங்களையும் காண முடிகிறது. இவ்வகையான படைப்புகளுக்கு ஆரம்பம் ஒன்று இருக்கலாம், ஆனால் முடிவைத் தீர்மானிப்பது எளிதல்ல, இதுதான் இப்படைப்பிற்குரிய முடிவு என “ஒன்றையும்” அதற்கான தருணத்தையும் எப்படி தீர்மானிக்கிறீர்கள்? மேலும் இதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
எனது படைப்புகள் பண்பியலுக்கும்(Abstraction), உருவியலுக்கும்(Figuration) இடைபட்டவை. இதைநான் விரும்பியே செய்கிறேன், பண்பியல் படைப்பு என்கிறபோதும், ஒரு “பார்வையாளர்” தனது சொந்த கற்பனைகளின் எண்ணிக்கையைப் பெருக்கிகொள்ள போதுமானக் குறிப்புகளைக் கொண்டதொரு படைப்பு. முடிந்ததொரு படைப்பு என்கிறபோதும், பார்வையாளர்கள் தங்கள் கற்பனையில் வெகு தோரம் செல்ல உதவும். உண்மையில் எனது படைப்புகள் முடிவற்றவை, படைக்கிற போது முடிவின்றி அவற்றை விருத்திசெய்யவே மனம் விரும்புகிறது மேலும், உண்மையில் ஒவ்வொரு படைப்பாக்கத்தின்போதும், பணியை முடிக்காத உணர்வே மேலோங்குகிறது, நிறைவின்றி திரும்பத் திரும்பத் கையிலெடுக்கிறேன், யாரேனும் கேட்டால், “இன்னும் முடியவில்லை, வேலை நடந்து கொண்டிருக்கிறது …”என்றே சொல்லத் தோன்றும்.
4. கூடுதலாக, பெரும்பாலான வடிவமைப்புகள் பிரகாசமான நிறங்களைக் கொண்டிருப்பதுடன் அவை உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. அத்தகைய உயிர்த்துடிப்புள்ள வடிவமைப்புகளை உருவாக்க தூண்டுவது எது?
துவாலை மீதான வண்ணங்கள், உயிர்ப்புள்ள நிறங்களாக இருக்கிறபோது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. வண்ணகளுக்கிடையேயான இவ்வேறுபாடு அவைக்கிடையே மோதலை மட்டுமல்ல இணக்கத்தையும் பராமரிக்கின்றன. கிளர்ச்சியாளர்களாக மாறும் நிறங்கள் விதிமுறையை ஏற்பதில்லை, அவவை தங்களுக்கு எது ஒழுங்கின்மையாகப் படுகிறதோ அவற்றில் தலையிடுகின்றன. நிறம் எனப்படுவது கட்டமைத்தல், கட்டுடைத்தல்,மறுதலித்தல் என அனைத்திற்கும் பொருந்த்தும். படைப்புக்கான கருப்பொருள்? அது எதுவென்றாலும் இதொரு படைப்பு, ஓவியம், அதன் களம் சந்தடி மிக்கது. அதொரு யுத்தகளம்!
5. உங்கள் உந்துதலுக்கு எது காரணம்?
பல வேறு கூறுகளில் பெறும் அனுபவங்கள், படைப்புக் குறித்த அக்கறை, எண்ணற்ற தேடல்கள் : குறிப்பாக எங்கும் எதிலும் உள்ள ஆர்வம். இன்று உங்கள் முன் நிற்கும் பெனுவா தெக் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட புலனாய்வுகள் களத்தில் உருவானவர். இப்புலனாய்வுகள் களம் என்னைப் பொறுத்தவரை பன்முகத் தன்மை கொண்டது. இப்பன்முகத் தன்மைகொண்ட புலனாய்வுகள் களமே என்னுடைய கலை உத்வேகத்திற்கு அடிப்படை.
6. உங்கள் படைப்புகள் மூலம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
படைப்புகள் மூலம் செய்தியா? என்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக செய்திகள் உள்ளனவென்று உறுதியாக என்னால் தெரிவிக்க இயலாது. ஒருவேளை விழிகளுக்கு இன்பமூட்டுவதாக இருக்கலாம், அதாவது எளியதொரு விழித்திரை இன்பம் … அதனூடாக உலகாயத விடயப் புரிதல்களில் எளிய அணுகுமுறைகளை வேண்டலாம், ஆனால் எப்போதும் சுதந்திரத்திற்கான அவாவை தூண்டச்செய்யும் எண்ணமுண்டு, காரணம் நான் ஓவியம் தீட்டுவதே என்னுடைய சுதந்திர இருத்தலுக்காக!
—————————————————————-