‘புலி வருகிறது, புலிவருகிறது’ என சைகோன் – புதுச்சேரி நாவல் வெளிவரும் தேதி திட்டவட்டமாக தெரியாதவரை நானும் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் புலிக்கும் நாவலுக்கும் தொடர்பு இருக்கிறது. வியட்நாம் ஹோசிமினும் தன்னை புலி எனச் சொல்லிக்கொண்டவர். ஐந்து மாதங்களுக்கு முன்பு நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் இநாவலைக் குறித்து ‘காக்கைச் சிறகினினிலே இதழுக்கு எழுதிய கட்டுரையை வேறு எழுத்தாள நண்பர்களெனில் உடனே முகநூலில் பதிவிட்டிருப்பார்கள். மிகச் சிறந்த கட்டுரை. வெறும் சடங்கான கட்டுரை அல்ல. மனம் உவந்து,, நாவலைப் பாராட்டியிருந்தார். பஞ்சுவின் பாராட்டுகளுக்கு பல படைபாளிகள் காத்திருபதையும் ஏங்குவதையும் அறிவேன். எனக்கது நெஞ்சு தளும்ப வாய்த்திருக்கிறது. சைகோன் – புதுச்சேரி நாவலுக்கும் அப்படியொன்றை எழுதினார். நாவலின் அணிந்துரையாக அதைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். நாவல் புத்தகவடிவம் கிடைத்த தும், காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முகநூலில் பகிர்ந்துகொள்வேன்.
சைகோன்- புதுச்சேரி நாவலில் வரும் சைகோனுக்கும் இன்றைய ஆப்கானிஸ்தான் விடுதலைக்கும் தொடர்பிருக்கிறது. ஆனால் வித்தியாசம் அன்றைய வியட்நாம் பொதுவுடமை வாதிகள் கைக்குச் சென்றது, இன்றைய ஆப்கானிஸ்தான் மதவாதிகள் கைக்குச் சென்றிருக்கிறது.
புதுச்சேரி ஒதியஞ்சாலை(தற்போது அண்ணா) திடலில் சிவாஜி கணேசனின் (தமிழகத்திற்கு கிடைத்த ஓர் அற்புத நடிகர்) வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்தேன்( 1968 என்று ஞாபகம்). வியட்நாம் என்ற பெயரை காதில் வாங்கியது அன்றைக்குத்தான். நாடகத்தில் பத்மினி இடத்தில் ஜீ. சகுந்த்தலா. பத்திரிகை தெரிவித்ததைக் காட்டிலும் இந்நாடகமும் குறிப்பாக இதன் தொடர்ச்சியாக வந்த வியட்நாம் வீடு திரைப்படமும் தமிழ் மக்களிடம் வியட்நாம் பெயரையும் அங்கு நடந்த நீண்டகால யுத்தம்பற்றிய மக்களையும் பாமர மக்களும் அறியுமாறு செய்தது எனலாம்.
ஆஃப்கானிஸ்தான் யுத்தத்தில் « தலிபான்கள் – சோவியத் யூனியன் -அமெரிக்கா» என்பதுபோல வியட்நாம் யுத்த த்தில் « வியட்மின்கள் – பிரான்சு- அமெரிக்கா » என்று நடந்த யுத்தம். இரண்டுமே அதிக காலம் நடந்த யுத்தங்கள். ஆனால் வியட்நாமைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் தலையீடு தென்வியட்நாமிற்கு ஆதரவாக வட வியட்நாம் கம்யூனிஸ்டுகுகளுடன் மோதிய வரலாறு, ஸ்டாலினுக்கு எதிராக கென்னடி நடத்திய யுத்தம்.
இந்தோ சீனா யுத்தமும் – சைகோன் புதுச்சேரி நாவலும்
இந்தியாவின் கிழக்கிலும், சீனாவுக்குத் தெற்கிலும் அமைந்த நாடுகள் இந்தோசீன நாடுகள். இந்தோ-சீனாவின் ஆரம்ப பெயர் கொச்சின் சீனா, சூட்டியவர்கள், இந்தியாவைக் கொச்சின் மூலமாக அறியவந்த போர்த்துகீசியர்கள். ஆனால் இந்நாவல் 1858லிருந்து 1954வரை பிரெஞ்சுக் காலனி அரசாங்கத்தின் கீழிருந்த இந்தோசீனாவை(1858லிருந்து 1907வரை சிறிது சிறிதாக தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த) கதைக்களனாக கொண்டது,அதாவது மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் நீங்கலாக இருந்த இதரப்பகுதிகள். இவறில் பழைய கொச்சின் சீனா பெயரிலிருந்த வியட்நாமின் தென்பகுதியைதியைத் தவிர்த்து பிறபகுதி முடியாட்சிகள், பிரெஞ்சுக் காலனி அதிகாத்தின் நிழலில் இருந்தன. கொச்சின்சீனா பிரான்சு தேசத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழும், பிறபகுதிகள் குறிப்பாக வியட்நாமின் மத்திய (Annam) மற்றும் வட பகுதி (Tonkan), சயாம், கம்போடியா, லாவோஸ் ஆகியவை பாதுகாப்பு விஷயத்தில் பிரான்சு தேசத்தைச் சார்ந்தும் இருந்தன. தொடக்கத்தில் தேசியவாதிகளாலும், அதன் பின்னர் சீனாவில் ஏற்பட்ட பொதுவுடமைத் தாக்கம் வியட்நாமில் செல்வாக்குப் பெற்றதாலும் ஹோசிமினை தலைவராக் கொண்ட வியட்மின்கள் கொரில்லா தாக்குதல்களில் ஈடுபடலானார்கள். பிரெஞ்சுக் காலனிய அரசு வழக்கமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. 1946 தொடங்கி 1953வரை நடந்த முதல் இந்தோ சீன யுத்தம், வியட்நாம் மட்டுமின்றி இந்தோசீனாவின் பிறநாடுகளும் விடுதலைபெற காரணம் ஆயின. வடவியட்நாமை இரண்டாண்டுகளுக்கு (1954) முன்பே போரில் பறிகொடுத்திருந்த பிரான்சு தென்வியட்நாமை விட்டு 1956 ஏப்ரல் 28 அன்று நிரந்தரமாக வெளியேறியது. தென்வியட்நாம் வியட்நாம் தேசியவாதிகள் கைக்குப் போவதை விரும்பாத வடவியட் நாம் ஜெனீவா ஒப்பந்தத்தை மறுத்து போரைத் தொடங்க, பிரான்சு கைவிட்ட நிலையில் அமெரிக்கா தென்வியட்நாமிற்கு ஆதரவாக போரில் இறங்கியது. பின்னர் 1975 போர் முடிவுக்கு வர , தென் வியட்நாம் வடவியட்நாம் இரண்டும் இணைந்தன.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வியட்நாம் பிரான்சு தேசத்தின் காலனியாக இருந்திருக்கிறது. பிரான்சுக்கும் ஹோசிமின் தலமையிலான வியட்மின்களுக்கும் நடந்த ஏறக்குறைய பத்தாண்டுகள் போரில், ஹோசிமின் படையில் இணைந்து சொந்த நாட்டிற்கு எதிராக போரிட்ட பிரெஞ்சு பொதுவுடமைவாதிகள் அதிகம். பிரெஞ்சு கம்யூனிஸ்டுகள் தங்கள் தாய்நாட்டின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த தோடு, ஹோசிமினுடனும் கைகோர்த்து நாட்டிற்கு எதிராக போரிட்டவர்கள். ழார்ழ் பூதாரெல், ஹாரி மர்த்தென் போன்ற பிரெஞ்சு கம்யூனிஸ்டுகளை உதாரணமாக சொல்லமுடியும். பிரான்சு தேசத்தின் காலனி ஆதிக்க அரசியலை எதிர்த்துத் தேசத்துரோகிகள் எனப் பழிச்சுமக்கவும் தயாராக இருந்தார்கள். இன்றைய உலகில் அரிதாக க் காணக்கூடிய மனிதப் பண்பு. அதே வேளை புதுச்சேரியில் என்ன நடந்த து. ஹோசிமினுக்கு ஆதரவாக இங்கும் ஊர்வலம் போனார்கள் ஆனால் புதுச்சேரி காலனி ஆட்சிக்கு எதிராக ஒரு சொல் உரத்துடனில்லை. பிரிட்டிஷ் இந்தியா விடுதலை பெற்றபிறகே தங்களுக்கும் மீசை இருப்பது நினைவுக்குவந்திருக்கவேண்டும். .
சைகோன் – புதுச்சேரி நாவலின் முதல் அத்தியாயம் இந்தோ சீனா யுத்தம் பற்றிய சைகோன் நகரின் குரலாக ஒலிக்கிறது. பிறகு அதனை பதிவிடுகிறேன்.
—————————————————-