ஒலிம்பிக் பதக்கம்
என்னதான் பிறநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் மனதிலும் உடலிலும் ஒட்டிக்கொண்டுள்ள பிறந்த மண்ணை அத்தனை எளிதாக உதறிவிடமுடியாது, அது வெறும் மண் அல்ல சதையும் இரத்தமும், சாகும் வரை உடலோடு கலந்தே இருக்கும். பிரான்சு நாடு வென்ற 10 தங்கப்பதக்கங்களைக் காட்டிலும் ‘இந்தியா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு’ வென்ற ஒரு தங்கபதக்கம் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. கணவன் வீட்டுக்கு வந்த பின்னரும் பிறந்த வீட்டை மறக்க முடியாமல் பெருமூச்சுவிடும் பெண்களின் நிலைதான் எங்கள் வாழ்க்கையும். நீரஜ் சோப்ரா இந்தியக்கொடியை முதுகில் சுமந்தபோது, காந்திசிலையை அந்நிய மண்ணில் கண்டு மகிழும் அதே சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உணர முடிந்தது.
இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் பதக்கம் வெற்றவர்களை ஊக்குவிக்க பரிசு மழையில் நனைப்பதுபோல பிற வீரர்களையும் வீராங்கனைகளையும் ஊக்குவிக்க வேண்டும். உண்மையான போட்டியாளர்களாகச் சென்று எதிர்பாராமல் தோல்வியைத் தழுவியவர்கள் உற்சாகத்தையும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வென்ற பிறகு வீரர்களைப் பரிசு மழையில் நனைக்கின்ற அதே ஆர்வத்தை, ஒலிம்பிக் விளையாட்டிற்குத் தயார் செய்வதிலும் காட்டவேண்டும். சீனாவை வெகு சீக்கிரம் மக்கள் தொகையில் மிஞ்ச இருக்கும் தேசத்தில் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் பதக்கங்கள் பெறுவது கௌவுரவம். குறைந்தபட்ச திட்டமிடல் வேண்டும். பாரீசில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கில் கூடுதல் பதக்கம்பெறுவோம் என பிரான்சு ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து அதற்கான திட்டமிடல்களை தொடங்கிவிட்டார்கள். பதக்கம் பெற்ற்வருக்கும் அளிக்கிற பரிசுத் தொகை வரவேற்க கூடியது, அதேவேளை அதில் பாதியையாவது ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக தகுதியானவர்களை தேர்வுசெய்து பயிற்சி தர செலவிட அரசுகள் முன்வரவேண்டும்.
1973 ஆண்டு சென்னை பி எ மூன்றாம் ஆண்டு தேர்வு முடித்துவிட்டு ஊர் திரும்பியிருந்தேன். எனது பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி என்பவரை புதுச்சேரியில், அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அங்கு புதுச்சேரி நேரு யுவக் கேந்திரா இயக்குனர் துரைக்கண்ணு என்பவர் இருந்தார். பேச்சின்போது, “புதுதில்லியில் விஷ்வ யுவக் கேந்திரா சார்பில் கூட்டப்படும் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் பத்து நாட்களுக்குள் தயாராக இரு” என்றார்கள். அதற்கு முந்தைய நிமிடம்வரை எனக்கும் நேரு யூத் கேந்திராவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான்கு வாரங்கள் தில்லியில் தங்கினோம், சுற்றியுள்ள ஊர்களை அரசாங்க செலவில் பார்த்தோம், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியுடன் படம் எடுத்துக்கொண்டோம். இது போன்ற அவசரகதி தேர்வுகள் நமது ஒல்ம்பிக் தேர்விலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. “இங்கே சும்மாதான சுத்திவர டோக்கியோவை போய் பார்த்துட்டு வாயேன்” என அமைச்சர் வீட்டு திருமதி மகனை டோக்கியோவிற்கு அனுப்பி இருக்கவும் இந்தியாவில் வாய்ப்புண்டு. இதுபோன்ற குறைகளைதவிர்க்க முடிந்தால் பாரீசில் ஒலிம்பிக்க்கில் இரண்டொரு பதக்கம் கூடுதலாக வாங்கலாம், என்னைப் போன்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு வாய்க்கரிசி இடாமல் வயிற்றில் பால் வார்க்கலாம்.