பதினெட்டாம் நூற்றாண்டு
அலை –17
Save yourselves from depot wallahs
it is not a service but pure deception
They take you overseas
They are not colonies but jails
– A phamphlet distributed in India (at the end of 19th century)
அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட்புதர்கள், மூங்கிறபுதர்களென இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.. இப்படி ஓடுவதென்பது அவனுக்குப் புதிதல்ல. வெறும்வயிற்றோடு ஓடுவதால், பார்வைபடுமிடங்களில் பூச்சிகள் பறக்கின்றன. வியர்வையில் நனைந்த உடல். சோர்வு தட்டுகிறது. முடிந்தவரை ஓடவேணும். பண்ணை ஆட்களிடம் பிடிபடாமல் ஓடவேணும். மூத்திரம் பெய்து முடித்த பத்தாவது நாழிகையில், கங்காணி கறுப்பன் இவனில்லாததைக் கவனித்திருப்பான். நாய்களும், பண்ணை ஆட்களும், குதிரை வீரர்களும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துவிட்டுக் காடுகளை நோக்கியே ஓடிவருவார்கள். இப்போதைக்கு ஓடவேணும். இலக்கிலாமல் ஓடுகிறான். எங்கே? எவ்விடத்திற்கு? யோசிக்கும் நேரமா இது? சாவு நெருங்கும்வரை ஓடவேணும். சித்திரவதைகளைச் சந்திக்காமல் செத்துப்போகவேணும். இப்போதைக்கு அவனது புத்தி ஓடச்சொல்லி வற்புறுத்துகிறது. கால்கள் பின்புறம் இடிபட, தலைதெறிக்க ஓடுகிறான். பெரிய வேரொன்று, பூமியிலிருந்து நன்கு பெயர்ந்து குறுக்காக நீண்டிருக்கிறது. காத்தமுத்துமேல், அதற்கு என்ன வன்மமோ, வேகமாய்ப் பதிந்த கால்களை இடறுகிறது, அடுத்தகணம் இடப்புறம் அடர்ந்திருந்த முட்புதரில் தலைகுப்புற, விழுந்திருந்தான்.
சாவு நிர்ப்பாக்கியமாய் சம்பவிக்கவேண்டுமென்று அவன் மனது கேட்க்கிறது. ஆனால் அதற்கான தைரியம் காணாமலிருந்தான். சாவு எந்தப்படிக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்: விழிகள் பிதுங்க, நாக்கைத் தொங்கவிட்டு, கழுத்துப் புடைக்க, தாம்புக் கயிற்றில் புளியமரத்தில் ஈமொய்க்கத் தொங்கிய வீராச்சாமியும், ஒர் உச்சிவேளையில் மூன்றுமுலை மலையின் அடிவாரத்திலிருந்த நீர்ப்படுகையில் குதித்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளுத்து உப்புசம்கண்டு மிதந்த கதிரேசனும், ஞாபகத்தில் வந்துபோனார்கள். ஏன்?துரைத்தனம் பண்ணிய கறுப்பனை, கரும்பு வெட்டும் சூரிக்கத்தியால் சாய்த்துப்போட்டு, தப்பித்து ஓடி, பிடிப்பட்ட மரூன் மஸெரியின் முடிவுகூட ஒரு வகையிலே, தற்கொலை என்றுதான் கொள்ளவேணும்..
காத்தமுத்துக்கு எப்போது தீவுக்கு வந்தோமென்று ஞாபகமில்லை. ஆனால் வந்த வயணமும் அனுபவமும் மனசுல கல்லுல செதுக்கினமாதிரிக் கிடக்கிறது. காற்றுமழையின் காரணமாக, துறைபிடிக்க முடியாமல் இவன் வந்த கப்பல், நாலஞ்சு நாள் தாமதிச்சு நங்கூரம் போட்டிருந்தார்கள். கப்பல்கள் பாயெடுக்கும்போதும், துறைபிடிக்கும்போதும் குண்டுகள் போடுவார்களெனக் கிராமத்தில்வைத்துக் கேட்டிருக்கிறான். புதுச்சேரியில் இவனது கப்பல் பாயெடுத்தபோது குண்டுபோட்டிருக்கலாம். இவனையும் மற்றவர்களையும் சரக்குக்கட்டுகளோடு ஏற்றியிருந்ததால் குண்டுபோட்டது கேட்காமற் போச்சுது. கடல் சீர்பட்டபிறகு, புதுச்சேரியில் கண்ட சலங்குமாதிரியான படகொன்றில், இவனையும் சேர்த்து, பத்துநபர்களை முன்னே தள்ளி… “வீத்.. வீத்” (சீக்கிரம்.. சீக்கிரம்..)என்று கூச்சலிட்டுக் கொண்டுபோய் கடற்கரையில் நின்றிருந்த ஐய்யாமாரிடம் சேர்த்துப்போட்டார்கள்.
காத்தமுத்துவும் மற்றவர்களும் ஒன்றைரைமாதக் கடல்யாத்திரையில் ஆரோக்கியத்தைத் தொலைத்திருந்தார்கள். எலிப்புழுக்கை மிதந்த சோற்றுக்கஞ்சியைக் குடிக்காமல் பாதி நாட்கள் குலைப் பட்டினிக் கிடந்திருக்கிறான். மற்றவர்களின் நிலமையையும் அந்தப்படிக்கென்றுதான் சொல்லவேணும். படகிலிருந்து தீவில் இறக்கப்பட்ட இரவில், கடலலைகளின் இரைச்சலும், பூதகாரமாய் நின்றிருந்த மலைகளும், நிழலாய் அடர்ந்திருந்த மரங்களும், அவனை மிகவும் பயமுறுத்திப் போட்டதென்றே சொல்லவேணும்.
அங்கிருந்து, இராத்திரியோடு ராத்திரியாக ஒரு மாட்டுவண்டியில் இவர்களை வாரிப்போட்டுக்கொண்டு வரும்வழியில், இவனோடு வண்டியிலேற்றப்பட்ட ஒரு பெண்மணி மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு, “எம்மவளைக் காணோம், எம்மவளைக் காணோம், வண்டியை நிறுத்தவேணும் சாமி.. தயவுபண்ணவேணும் சாமியென்று ஒப்பாரிவைக்கிறாள். வண்டியோட்டியும், வண்டியிலிருந்த இரண்டு கறுப்புமனிதர்களும் நிர்ச்சிந்தையாய் இருக்கின்றார்கள். காத்தமுத்துக்கு மட்டும் மனத்திற்குள் அவளது வியாகூலம் தொற்றிக்கொள்கிறது. ஓரிடத்தில் அப்பெண்மணி வண்டியினின்று குதிக்க எத்தனித்தபோது, இவந்தான் அவளைத் தடுத்தான். வண்டியோட்டி, “உனதுபெண் கப்பலிலேயே இருக்கவேணும், கரைவரை வந்திருந்தால் நமது வண்டியில் வந்திருக்கவேணுமென” சொன்னபோதும் அவள் புலம்பல் ஓயவில்லை. வழிமுழுக்க அழுதழுது, அவளுக்கு இழுப்பு கண்டிருந்தது. வண்டியில், நான்குகல் கிழக்காக காட்டுப் பாதையைக் கடந்து, ஒரு கொட்டடியை அடைந்தார்கள். பாகூர்ல உடையார் வீட்டுத் தொழுவத்தைவிட பெருசாய் தெரிந்தக் கொட்டடி. அர்த்தராத்திரியைக் கலைக்கின்ற வகையில் இரட்டைக்கதவுகள் ஊளையிட்டுக்கொண்டு திறந்துகொள்ள அதனுள்ளே தள்ளிப்போட்டு, மீண்டும் “வீத்..வீத்” என கூச்சலிடும் முரட்டு மனிதர்கள். கருப்பந் தட்டைகளும் கோரைப்புற்களும் இறைந்துகிடந்தன. திடீரென்று லாந்தர் விளக்கொன்றினைப் பிடித்தவனின் சிவந்த கண்கள். கொட்டடி முழுக்கப் பொதிகள், சிப்பங்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில் பொதிகளும் சிப்பங்களும் சனங்கள் சகலருமாக, குஞ்சு குளவான்களுடன் எழுந்து உட்காருகிறார்கள். கிழிந்த ஆடைகள், அழுக்கு முகங்கள், பீளைவழியும் கண்கள், எச்சிலொழுகிய வாய்கள்; ஊத்தை மனிதர்களாய் இவனது தமிழினம்.
லாந்தர் பிடித்தவன் மீண்டும் இவனுக்குப் புரியாத தொரைத்தனத்தார் பாஷையில் என்னவோ சொல்கிறான். இரு கைகளைத் தட்டி என்னவோ புரியவைக்கிறான். பழைய உயிர்கள் வந்த உயிர்களைப் பார்க்கின்றன. காத்தமுத்துவும்,,பெண்மணியும், மற்றவர்களும் அவர்களை நெருங்குகிறார்கள். இனி, இரு தரப்பினரும், ஒருவர் மற்றொருவருக்குத் தாய் தகப்பன், பந்து சனங்கள், தம்பி, தமையன், உடன்பிறந்தார் என்று விளங்கிக் கொண்டான். இவனது விதி, கூடவே வந்திருக்கவேணும் என்று புரிந்தது. எப்படி எப்போது தூங்கிப்போனான் என்று தெரியாது. பயணக்காலமும், பயணம் செய்த வகையும், அடிச்சுப் போட்ட களைப்பில் குறட்டைவிட்டுத் தூங்கிப் போனான். அதிகாலையிலே காத்தமுத்துவும், மகளைத் தொலைத்திருந்த பெண்மணியும், மற்றவர்களும் எழுப்பப்பட்டார்கள்.
அதற்கப்புறம் பக்கத்திலேயே, கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் சென்றார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேணுமென்று ஒருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. விழுந்தது. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று விழுகிறது.. இம்முறை சில்லென்று ஆரம்பித்து, பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம்.
சொந்த மண்ணுல, கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அப்படியே அடிச்சிருந்தால்கூட. மஞ்சளை இழைச்சு வீரம்மா பத்துப் போட்டா, மறுநாள் வீக்கங்கள் காணாமப் போயிடும். ஒருமுறை சித்திரை மாசத்திலே, பதினெட்டாம்போர் தெருக்கூத்தை விடிய விடிய பார்த்துட்டு, குடிசையிலே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கப்போக, வீட்டெதிரே இருந்த தென்னைமரத்துல கட்டி வச்சு உடையார் அடிச்சதா ஞாபகம். இரண்டாவது முறை, மூத்த மவன் ஏகாம்பரம் சரீர சொஸ்தமிலாமல் பிராண அவஸ்தை கண்டு, மல ஜலம் படுக்கையிற் போக, உள்ளூர் வைத்தியர் ஐயா, “கோழி கொண்டுவந்து சுத்தியும், சோறு சுத்திப்போட்டும் கழிப்பு கழிக்கிறதென்று சொல்லி, ஒரு கவுளி வெத்திலையும் அரை பலம் பாக்கும், ஒத்தைப் பணமும்” கொண்டுவாடான்னு சொன்னபோது, ஆபத்துக்குப் பாவமில்லைண்ணு உடையார் ஆண்டையிடம் சொல்லாம பக்கத்துப் பண்ணைக்கு, ‘அண்டை’ வெட்டப் போயிருந்தான்.,குடிசைக்குத் திரும்பினால், ‘பெரிய ஆண்டை, உன்னை உடனே வரச்சொன்னாருன்னு” வீரம்மா, புகையிலைச் சாற்றைத் துப்பியபடி சொல்கிறாள் அன்றைக்கும் இப்படித்தான் அடிபட்டிருக்கான்.
கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக’விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் பச்சைவாழியம்மன் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா? என்று நினைத்து அழுதான்.
“தீவில் சாதியில்லை, எஜமான், பண்ணையாள்னு பாகுபாடு கிடையாது. இந்த ஊர்லதான் வேதத்துல விழுந்தவங்ககூட வித்தியாசங் காட்டறாங்க. அங்கபோனா எல்லோரும் சமமாம், வயிற்றுக்குச் சாப்பாடு, கட்டிக்கத் துணி எல்லாத்தையும் குடுத்து கவுர்தையாய் நடத்தறாங்களாம்”, தொரைமாருங்கக் கிட்ட சேவகம் பண்ணும் தேவராசன் சொன்னா சத்தியவாக்காதான் இருக்கும்னு மனசு சொன்னது. எரவாணத்தில் ஒட்டியிருந்த கெவுளி ‘நச் நச்’ன்னு நாக்கை அண்ணத்திற் தட்டி ஆமாம் போட்டுச்சுது..ஆனால் வீரம்மாவுக்கு விருப்பமில்லை. அவள் யோசனையைக் கேட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தறதைக் குடிச்சிட்டு தொழுவ சாணியும், ஏரும் கலப்பையுமா அவனுடைய முப்பாட்டன் வழியில் உடையார் ஆண்டை காலில் விழுந்து கிடந்திருக்கலாம். உள்ளூர் மாரியம்மனுக்கு ஆடிமாசத்துலக் கூழு, புதுச்சேரி மாசிமகம், மயிலத்துல பங்குனி உத்திரம்னு வருஷம் ஓடியிருக்கும். வந்திருக்க வேண்டாம். வரும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டுப்போச்சுது.
காத்தமுத்துக்கு பூர்வீகம், புதுச்சேரிக்கிட்ட பத்து பதினைஞ்சு கல் தள்ளியுள்ள பாகூர். தலைமுறை தலைமுறையா ஆஸ்திபாஸ்தியுள்ள உடையார் வீட்டிலே படியாள் சேவகம். வெள்ளி முளைக்கும் வேளையில், மற்ற சேரிவாசிகளைப் போலவே புருஷனும் பொண்டாட்டியும் கம்பத்து வேலைக்கு வந்தாகவேணும். காத்தமுத்து தும்பை அவிழ்த்து மாடுகளை இடம்மாற்றிக் கட்டிவிட்டு, உடையார் வீட்டு நஞ்செய்க்கோ புஞ்செய்க்கோ காத்திருக்கின்ற வேலைக்குப் பேகவேணும். பெண்ஜாதி வீரம்மா, சாணி நிலைகளைக் கூடையில் வாரிக்கொண்டுபோய், குப்பையில் சேர்த்துவிட்டு, மாட்டுமூத்திரமும், சாணமும் கலந்த புழுதியைப் பெருக்க ஆரம்பிப்பாள். நெய் மணக்கச் சோறும் கறியுமா, போஜனம் முடித்த வாழை இலைகளைப் பின்வாசல் வழியாக வெளியே எறிந்து ஓய்வெடுக்கும் நேரங்களில், உடையார் சம்சாரம் மனோரஞ்சிதம் அம்மாளுக்கு, வீரம்மா ஞாபகம் வந்தால் குடத்தில் எஞ்சியிருக்கும் கம்பங் கூழையோ, கேழ்வரகுக் கூழையோ காந்தலுடன் கொண்டுவந்து மட்டையில் ஊற்றுவாள். மிச்சமிருப்பதை காத்தமுத்துக்கான கலையத்தில் ஊற்ற, வீரம்மாள் ஓட்டமும் நடையுமாக கொண்டுவருவாள். இவன் வரப்பில் உட்கார்ந்து கொண்டு பசியாறும் அழகை, கட்டெறும்புக் கடிகளுடன் பக்கத்திலிருந்து ரசிப்பாள்.
பால் பிடிக்காத நெற்கதிர்மாதிரி காத்தமுத்து வெளுக்க ஆரம்பிச்சான். வழக்கம்போல சாமியாடி, வேப்பிலையால மந்திரிச்சுப்போட்டு, விளக்கு வச்சுப் பார்த்ததிலே, “உருமத்துல கன்னிமார் அறைஞ்சிருக்கிறா, பொங்கவச்சி கழிப்பு எடுக்கணும், வெடைக்கோழி காவு கொடுக்கவேணும்.”.என்று சொல்லிப்போட்டு தட்சணை கேட்கிறான். காத்தமுத்துவ அறைஞ்சிருப்பது, கன்னிமார் சாமி இல்லை மனோரஞ்சிதம் சாமின்னு வீரம்மாவுக்குந் தெரியும், சேரிக்குந் தெரியும், உள்ளூர் சாமியாடிக்குந் தெரியும். மனோரஞ்சிதம்அம்மாளுடன் காத்தமுத்து சந்தைக்கும், புதுச்சேரி, கூடலூர், வில்லியனூரென அவள் போகவேண்டுமென்று நினைக்கின்ற ஊர்களுக்கும் வில் வண்டியைப் பூட்டிக்கொண்டு போய்வருபவன் என்பது ஊரறிந்த சேதி. வண்டியை வழியில் நிறுத்தி பசியாற உட்கார்ந்த வேளைகளில் அந்த அம்மாள், காத்தமுத்துவை அழைத்துச் சோற்றுருண்டைகளை உருட்டிப் போட்டு உரச ஆரம்பித்தாள். அவளுக்கு நெய்ச்சோறு கண்ட உடம்பு.. இருட்டு நேரங்களில் ஓடைவெளி, வைக்கோல் போர், மாட்டுத் தொழுவம் எனஇருவரும் ஒதுங்கியது போக, உடையார் இல்லாத நேரங்களில் சகல சம்பிரமத்துடன் எதிர்கொண்டு, கூடத்தில் அழைத்து பாயையும் விரிப்பாள்.
இந்த விவகாரம் சேரியில் புகைய ஆரம்பிக்க, வீரம்மாளுக்குப் பேதி கண்டது.
“வேணாம் சாமி.. நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. அவ ஏதோ குண்டி கொழுத்து அலையறான்னா, நீயும் கார்த்திகை மாசத்து நாய்மாதிரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போற.. நாளைக்கு அந்தாளுக்குச் தெரிஞ்சா வகுந்துடுவான். பெரிய குடும்பத்துக்காரனெல்லாம் ஒண்ணா சேந்துடுவாங்க. புதுச்சேரி தொரமாருங்க கோன்சேல் ஆக்கினை வயணம், சனங்கள் பார்க்க தூக்கில் போடுவார்கள். நான் ரெண்டு புள்ளைக¨ளை வச்சிட்டு என்ன செய்வேன். வேணும்னா நாம்ப புதுச்சேரிக்குப்போய், தொரைமாருங்கக் கிட்டச் சேர்ந்து பொழைச்சிகலாம்யா”.
வீரம்மாள் புலம்பலில் நியாயம் இருந்தது. ஆனாலும், தினைச் சோறும், புளிக்குழம்பும், மனோரஞ்சிதம் அம்மாளின் மீசைமுளைத்த கருஞ்சிவப்பு உதடுகளும், வீரம்மாளுக்கில்லாத மார்பு வளப்பமும், பெரிய இடுப்பும் அவன் மனதில் பாரதக் கூத்தில் பார்த்த சந்தனு மகாராஜா செம்படவப் பெண்ணிடம் கொண்டிருந்த பிரேமையை ஏற்படுத்தலாச்சுது..
இந்தக் கூத்தெல்லாம் ஒரு பங்குனி மாசத்திலே முடிவுக்கு வந்தததென்று சொல்லவேணும். பக்கத்து ஊருலே அங்காளம்மன் திருவிழா. உடையாருடைய கிழக்குவெளிக் கார்த்திகைசம்பா அறுவடைமுடிந்து கட்டுகளாகக் களத்துமேட்டில் கிடக்கிறது. ‘கோட்டை அழிப்பைப் பார்த்துட்டுச் சடுதியிற் திரும்பலாம்’ என்ற எண்ணத்திற் கிளம்பியவனை, தோட்டக்கால் பக்கம் தடுத்து நிறுத்தியவள், மனோரஞ்சிதம் அம்மாளின் எடுபிடி, அம்புஜம். “அம்மா வரச்சொன்னாங்க ” என்று ஒரு வார்த்தையில் ஆக்கினை பண்ணிப்போட்டு, மறைந்து போனாள். மனோரஞ்சிதம் அம்மாளைத் தேடிப்போனவனுக்கு, உடையார் வாங்கிவந்திருந்த காரைக்கால் அல்வாவும், அவள் கைப்படச் செய்த எண்ணை பணியாரமும் கிடைத்தது. ஆசைநாயகன் தின்று முடிக்கவேண்டுமென காத்திருந்ததுபோல, மனோரஞ்சிதம் அம்மாள் அவசரப்பட்டாள். இவனது எண்ணமெல்லாம் முறமெடுத்து ஆடும் காளிமீதும், களத்துமேட்டில் உள்ள கட்டுப்போரிலும் கிடந்தது. ஆர்வமில்லாமலே தழுவினான். சில நாழிகைகள் கடந்திருக்கும். இவர்கள் சேர்ந்திருந்த அறையின் கதவு எட்டி உதைக்கப்பட, படீரென்று திறந்துகொள்கிறது. நிலைப்படியை அடைத்தவாறு மல்வேட்டியை மடித்துக் கட்டியவண்ணம் உடையார்.
“எச்சில் நாயே..” என்பதைத் தொடந்து ஏராளமாய் வசவுகள். அவரைப் பிடித்துக் கீழே தள்ளிப்போட்டு ஓடியவன். விடிவதற்கு ஒரு சாமமிருக்கையில், புதுச்சேரியில், சாவடித் தெருவில் வசித்த தேவராசனை அவன் வளவில் கண்டு, காலில் விழுந்தான்.
நடந்த வர்த்தமானங்களை முழுவதுமாகத் தேவராசனிடம் தெரிவித்து, “அண்ணே.. நான் எங்கனா கண்காணாத தேசத்துக்குப் போகவேணும். நீர் தயவுபண்ணித் தீரவேணும்” என்று மிகுதியும் வருந்திக்கொண்டு சொன்ன விதத்திலே, தேவராசன் அனுகூலம் செய்வானென்று காத்தமுத்து மெத்தவும் நம்பிக்கைவைத்தான்.
‘நாளைக் காலமே.. பாகூர் உடையார் புதுச்சேரியிலதான் நிற்பார். அவருக்கிங்கு பெத்ரோ கனகராய முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை, சுங்கு சேஷாசல செட்டியென இன்னும்பல வேண்டப்பட்ட பெரிய மனுஷர்கள் உண்டு.. உன்னை கோட்டைவாயில்ல தூக்கிலிட்டாலும் ஆச்சரியமில்லை. இந்த இக்கட்டுலேயிருந்து தப்பிக்கவேணுமென்றால், அடுத்தகிழமை கப்பல் ஏறவேணும். ஆனால் அக் கப்பலுக்கு தேவையானபேர் இருப்பதாலே, உன்னை அனுப்பிவக்க முடியுமென்று உறுதியில்லை.”- என்று வயிற்றில் புளியைக் கரைத்தான் தேவராசன்.
-அப்படிச் சொல்லவேணாம் சாமி. காலத்துக்கும் உனக்கு அடிமையாக் கிடப்பேன். எப்பாடுபட்டாவது ஏத்திடவேணும்.
– நீ ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் ஒரு பிரயாசையுமில்லை. இப்போது ரொம்ப சிரமம். உனக்குக் கிடைக்கும் இருபது வராகனில் என் பங்காகப் பத்து வராகன் கணக்குத் தீர்த்தால், உன்னை மஸ்கரேஞ்க்கு (Mascareignes) போகின்றக் கப்பலில் ஏற்பாடு பண்ணலாம்.
“நீங்க பிரயாசைப்பட நன்றி நான் மறக்கிறதில்லை. அதறிந்து நடந்து கொள்வேன்” என்று உபசாரமாய்க் காத்தமுத்து சொல்லிப்போட அன்றிரவே ஒரு துரைமார் வீட்டுல கொண்டுபோய் தேவராசன் சேர்த்தான். அங்கு ஒருவாரம் இவனை வேறு சிலரோடு அடைத்துவைத்து, ஒரு நாள் ராத்திரி, இரண்டு சாமத்திற்குப் பிறகு, சலங்கில் இவர்களை ஏற்றிக்கொண்டுபோய் புடவைக் கட்டுகள் ஏற்றின கப்பலில் அடைத்து, அங்கிருந்து மாஹே சென்று மிளகு ஏத்திக்கொண்டு சீமைக்குச் செல்லும் வழியில், இவர்களைப் பிரெஞ்சுத் தீவில் இறக்கிப்போட்டார்கள்.
இவ்விடத்தில் வந்ததினத்திலிருந்து முப்பொழுதும் நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டையினால் விளாசுகிறார்கள். அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவன் சரீரத்திற்குத் தெம்பில்லை. இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற கூலிகளுக்கு அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கரும்பினை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து இருபுரமும் சமனாய் இறங்குகிறது. முதுகு முழுக்க கன்றிப்போய், திகுதிகுவென்று எரிகிறது, இரண்டொரு ஈக்கள் எப்படியோ மோப்பம்பிடித்து, முதுகை வட்டமிடுகின்றன. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான். சாட்டையை மறுபடியும் சொடுக்கினான். அவன் கைகளைப் பாம்பு பிடுங்க. கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பின் புண்ணை ருசிபார்த்தவண்ணம் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான்.
– ம்.. எழுந்து வேலையைப்பாரு. நான் மறுமுறை வருகின்றபோது, இந்தத்திட்டை நீ முடித்திருக்கவேணும்”- வளர்ந்து சாய்ந்துக் கிடந்தக் கரும்புகளைக் காட்டிவிட்டு ஓடிப்போனான்.
அவன் ஓடுவது, எதற்காகவென்று காத்தமுத்து அறிவான். மற்ற அடிமைகளும் அறிவார்கள். மூத்திரம் வரும்போதெல்லாம் இப்படித்தான் பதறிக்கொண்டு ஓடுவான். தீட்டுப்பட்டபெண்ணிடம் படுத்து அவதிப்படுவதாகப் பண்ணை முழுக்கப்பேச்சு. மூத்திரம்பேய கனக்க நேரம் எடுத்துக்கெள்வான். அவனுக்குச் சுலபத்தில் மூத்திரம் வராதென்று சொல்ல கேட்டிருக்கிறான். காத்தமுத்து இதற்காத்தான் காத்திருந்தான். அவன் மறையும்வரைக் காத்திருந்தான். பாவாடைராயன், அங்காளம்மா, மாரியாத்தா, காத்தவராயனென கிராமத்தில் அவன் நெருங்கி பொங்கவைக்க முடிஞ்ச சாமிகளை நேர்ந்துகொண்டான்.
மேலே கழுகொன்று பறந்து கொண்டிருக்கிறது……. வெட்டப்படாத கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தான், மேற்கு திசையைக் குறிவைத்து ஓடினான். முதுகைக், காய்ந்திருந்த கருப்பங்கழிகள் கிழிக்கத் தொடங்கின. சாட்டை அடிகளுக்கு இது தேவலாம் என்றிருந்தது. ஓடிமுடிக்க இடப்புறம் மரங்கள் அடர்ந்திருந்தன. நிம்மதியாய் நின்று மூச்சுவாங்கிக்கொண்டான். அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட் புதர்கள் மூங்கிற்புதர்கள் என இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..
_________________________________________________________________________
பதினெட்டாம் நூற்றாண்டு
அலை-18
…..
Wherever you go, cold, important and deceitful,
You will bring trouble
Les Oracles -Alfred de VIGNY
நாள் விழித்துக்கொண்டது. காலைச் சூரியன் மரங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய ஒளியை மண்ணுக்கும் தயவுபண்ணியிருந்தான்.காத்தமுத்துவை எறும்புகள் மொய்த்திருந்தன. மண்ணிற் கிடந்தற்கு அடையாளமாக உடல் முழுவதும் அடையடையாய் நெருஞ்சி முட்கள். கசையடிப் புண்கள் கருஞ்சிவப்பிற் கனிந்து, அவற்றின் கொப்புளங்களில் நீர்வடிகின்றது. அவற்றைச் சீண்டி வேதனைப் படுத்தும் ஈக்களை விரட்டி அலுத்துபோனான். எழுந்து நிற்க முயற்சித்தான், நின்றான், விழுந்தான். இயற்கை உபாதை, சுதந்திரமாய் மலசலம் போகவேணும் போலிருக்கின்றது. போகிறான்.
இனி, அவன் எவருக்கும் அடிமை இல்லை. கையிற் பிரம்பும், சிவந்த கண்களுமாய் குதிரையிற் வலம்வருகின்ற பறங்கியர்கள் இங்கில்லை. கசையும், கெட்ட வசவுகளுமாய், அடிமைகளைப் பிழியப் பழகிய கறுப்பு கங்காணிகள் இங்கில்லை. தங்கள் கள்ள புருஷனைப் பல்லக்கில் சுமந்துவரப் பணிக்கின்ற துரைசாணி அம்மாக்கள் இங்கில்லை. மிசியேக்கள் இல்லை, மதாம்கள் இல்லை, எஜமான்கள் இல்லை, எஜமானிகள் இல்லை. ஐயாமார்களோ, ஆண்டைமார்களோ இல்லை.. இல்லை.
அதோ சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கிறதே, அந்த ஆற்றினைப்போல நிற்காமல் காட்டின் அடுத்தமுனைவரை இவன் இப்போது ஓடலாம். கேட்பாரில்லை. இவனைச் சந்தோஷபடுத்தவென்று ஒரு குரங்கும் அணிலும் அவ்விடம் கட்டுப்பாடின்றி ஓடிவிளையாடுகின்றனவே, அவற்றைப் போலவும் ஓடலாம், தடுப்பாரில்லை. சொந்தத் தேசத்தில் பார்த்திராத விசித்திரமான மரமொன்றில், தவிட்டுப் புறாவொன்று கிளைகிளையாய்ப் பறந்துசென்று உட்காருவதும் எழுந்திருப்பதுமாய் வேடிக்கைக் காட்டுகிறது. அதனைத் தலைசாய்த்துப் பார்த்துவிட்டு இளம் பச்சைக்கிளியொன்று இறக்கைகளை உதறுகின்றது. கறுவண்ண இறகுகள் கொண்ட வெண்குருவியொன்று, பப்பாளிமரத்தின் கனிகளைக்கொத்தி அலகிலெடுத்து மிகத்தாழ்வாகப் பறந்து பின்னர் மேலேபோகிறது. கைகளையும், கால்களையும், கங்காணியின் அனுமதியின்றிச் சுதந்திரமாய் இனி அசைக்கமுடியும் என்பதை நினைக்கச் சந்தோஷம். மெல்ல அடியெடுத்து, தன் வலி மறந்து ஓடிப் பார்க்கிறான். தலையில் இடித்த கிளையை உடைத்து அலட்சியமாகத் தூக்கி எறிகிறான். காய்ந்து கிடந்த தேங்காயொன்றை எட்டி உதைக்கிறான். காற்றுச் சுழன்று சுதந்திரமாய் வீசுகிறது. காம்புகளோடு சிவப்பும், ஊதாவுமாய் மலர்கள் சுதந்திரமாகத் தலைகுனிந்து நிமிர்கின்றன. ஆவலாய்ப் பறந்துவரும் வண்டுகள் அம்மலர்களில் அமர்ந்து, வயிறுமுட்டத் தேன்குடிக்க, இவனுக்கும் பசி. வரப்பு நண்டுகளைப் பிடித்து வீரம்மா வைக்கும் சாறும், நத்தை கறியும் ஞாபகத்தில்வர, எச்சில் ஊறுகிறது. அருகிலிருந்த ஈச்சங்கன்றைப் பலங்கொண்டமட்டும் ஆட்டிப் பிடுங்குகிறான். அவற்றைப் பிய்த்துபோட்டு குருத்தினைத் தின்று, தண்ணீர் குடிக்கிறான்.
திடீரென்று பயம் வந்துவிட்டது. வேட்டை நாய்களும், கறுப்பர்களும், வெள்ளை சிப்பாய்களுமாக துரத்தி வரும் மனுஷர்களிடம் இவன் எப்படி தப்பப் போகிறான் என்கின்ற பயம். கறுப்பர்களால் பண்னைகளிலிருந்து தப்பவும், காட்டில் மறைந்துவாழவும் முடியும். அவர்கள் பிடிபடாமலிருந்தால் அடுத்துள்ள தீவுகளுக்குத் தப்பித்துப் போவதும் நடக்கலாம். தன்னாலப்படிக் காட்டில் மறைந்து வாழ முடியுமோ? விஷஜந்துக்களிடமிருந்து தப்பிக்க வேணும். விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேணும். நரமாமிசம் சாப்பிடுகின்ற கறுப்பர்களிடமிருந்துத் தப்பிக்கவேணும். அப்படிய தப்பிக்க முடிந்தால், காட்டில் கிடைப்பதை உண்டு உயிர்வாழத் தெரியவேணும். எத்தனை நாட்களுக்கு, எத்தனை மாதங்களுக்கு, எத்தனை மாமாங்கத்திற்கு, முடியுமா? ஏதோவொரு வேகத்தில் கசையடிகளுக்குப் பயந்து காட்டுக்குள் புகுந்தாகிவிட்டது. இனி எங்கே போவது? எப்படிப் போவது? இவன் பண்ணையிலிருந்து தப்பியவொரு அடிமை. இனி தீவுடைய சட்டதிட்டத்தின்படி, இவனுக்கு மரூனென்கிற பேரு. பிடிபட்டானென்றால், இரண்டு காதினையும் அறுத்து கொட்டடியில் அடைத்துக் கஞ்சி தண்ணி காட்டாமே, உசுரிருந்தால் மீண்டும் நாள் முழுக்கக் கரும்புவெட்டவும், கசையடிகளுக்கும் பழகிக்கச் சொல்வார்கள். சாமி கண்ணைத் தொறக்கணும். ‘அஞ்சு வருஷம், தீவுல காலந்தள்ள முடிஞ்சா பணம் பவுஷோட நாடு திரும்பலாம்னு’ புதுச்சேரியிலவச்சு, தேவராசன் சொன்னவன். கிட்டங்கிச் சுவற்றில் இவன் கிழித்திருந்தக் கோடுகள் பிரகாரம், இரண்டு அஞ்சு வருசம் வந்துபோச்சுது. இவனுக்கு முன்னாலே தீவுக்குவந்ததாகக் கேள்விபட்டிருந்த கொத்தனார் சின்னப்பனையோ, தச்சுவேலைசெய்யும் ஆசாரி முருகேசனையோ இதுவரைக்கும் பார்த்ததில்லை. தன்பெண்பிள்ளையைத் தொலைத்துப்போட்டு சதா சிந்தியமூக்கும் அழுத கண்ணுமா இருந்த ஸ்த்ரீயையும் மற்ற புதுச்சேரி சனங்களையும்கூட முதல் நாள் பண்ணையில்வைத்துக் கண்டதுதான், அதற்கப்புறம் பார்க்கமுடியாமற் போச்சுது. தீவுக்குக் களவாய் அழைத்துவந்தவர்களைக் கடேசிவரைக்கும் திருப்பி அனுப்ப மாட்டார்களாம். இன்னும் கொஞ்ச காலம் தலையெழுத்தேன்னு ஊரு பண்ணையிலேயே கிடந்திருக்கலாம். எப்பேர்பட்ட காரியம் பண்ணிப்போட்டேன். கோவிந்தா….! இனிப் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்கவே முடியாதோ?
கீச்சு.. கீச்சென்ற சத்தம். பெரியமரமொன்றில் ஒரு குருவிக்குடும்பம். தாய்க்குருவி கொடுக்கின்ற இரைக்காகப் போட்டிபோடும் குஞ்சுக் குருவிகள். அலகினைப் பிளந்து அவைகளிடும் குரல் இவனுக்காய் இருக்குமோ? தாய்க் குருவி வீரம்மாவென்றும்? குஞ்சுகள் பிள்ளைகளென்றும் நினைப்புவந்து நெஞ்சை அடைக்குது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். வீரம்மாவையும் பிள்ளைகளையும் பார்க்கவேணும். புதுச்சேரி பட்டணத்திற்குத் திரும்பவேணும். பாகூருக்குத் திரும்பியாகணும். சேரிக்குளத்துத் தண்ணி கலங்கியிருந்தாலும் குடிச்சா பனஞ்சாறு. பாகூர் தணிகாசல கிராமணி இறக்கற கள், எப்பேர்பட்ட உடல் வலின்னாலும் ஷணத்தில் வாங்கிப்போடும். தன் சாதிசனமெல்லாம் அங்கேயே கிடக்கிலையா? இவனுக்கேன் புத்தி இப்படிக் கெட்டுப்போச்சுது. எல்லாத்தையும் ஒதுக்கிட்டு, பொண்டாட்டி புள்ளைங்களோடு புதுச்சேரியிலே பொழைச்சிக் கிடந்திருக்கலாம். எதுக்காக வரவேணும்?
அப்போதுதான் அவனைக் கவனித்தான். பார்த்தவிதத்தில் பண்ணையில் இவனைமேய்த்த கங்காணி கறுப்பனாகவிருக்குமோவென சந்தேகம். இல்லை இவன் இதுவரை பார்த்திராத ஒருவன், அந்நியன். கண்டமாத்திரத்தில் சாவு நெருங்கிவிட்டதாய் நினைத்து ஓட முயற்சித்தான். ஓடினான். இவனைத் தொடர்ந்து அவன் ஓடிவருவதன் அறிகுறியாக, நெருக்கத்திற் காலடிச் சத்தம். பண்ணையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், நேற்றுமுழுவதும் ஓடியிருக்கிறான், அந்த அலுப்பு காத்தமுத்துவை அதிகதூரம் ஓட முடியாமற் தடுக்கிறது. ஓடிவந்த கறுப்பன் இவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டான். இனி அவனிடமிருந்து தப்புவது கஷ்டமென்று புரிந்துபோகின்றது. திரும்பிப்பார்க்கிறான். கங்காணி அல்ல. இவன் வேறு. இப்போதைக்கு இவனால் ஆபத்தேதும் நேர்ந்துவிடாது என்பதை நிச்சயபடுத்திக்கொண்ட திருப்தியில் அவன் இழுத்தபோக்கிலே, இவனும் ஓடினான். குறுகிய ஒற்றையடிப்பாதை நெளிந்து நெளிந்து ஓடியது. பாதை சிலவிடங்களில் மளுக்கென்று முறிந்து போனது. அவ்வாறான இடங்களில் கறுப்பன், அங்குள்ள செடிகளின் வாசத்தை முகர்ந்து அதன் பின்புறம் மறைந்துகிடக்கும் பாதையைக் கண்டுபிடித்து மீண்டும் ஓடுகிறான். விதிப்படி ஆகட்டுமென காத்தமுத்துவும் அவன்பின்னே ஓடுகிறான்.
நெடிதுயர்ந்து து வளர்ந்து நிற்கும் மரங்கள், அடர்த்தியாய்ச் செடிகொடிகள், புதர்கள். அருகில் செவிகளை அதிகம் உறுத்தாமல் விழுகின்ற அருவி. அங்குமிங்குமாக வானத்தைக் கிள்ளியெடுத்து இறைத்தத் துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் நீர் நிலைகள். இவற்றுக்கிடையில் ரகசியமாய் பதுங்கிக்கிடந்தது அவ்விடம். தினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடற்கொள்ளைக்காரர்களின் புழக்கத்திலிருந்த மறைவிடம், இலைதழைகளின் பராமரிப்பில் ஆழமானதொரு பள்ளம். ஏணியின் உதவியோடு, பள்ளத்திற் கிடக்கும் பாம்புகளையும் விஷ ஜந்துக்களையும் கண்டு அஞ்சாதவர்களே வந்து போகலாம்.
அருணாசலத் தம்பிரான் காலமே புறப்பட்டு வந்திருந்தார். ஏற்கனவே பலமுறை தொரை போல் அஞ்ஞெலை இங்கேவைத்து சந்தித்திருக்கிறார். இவர் வந்து அரைமணித் தியாலமிருக்கலாம். தொரை எப்போதும் சொன்னபிரகாரம் வந்திடுவான்.
அவ்விடத்துக் காட்சிகள், அவர்மனதிற்குச் சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன. பண்ணைகளிலிருந்து தப்பியோடிவந்த மரூன்கள் எனப்படும் அடிமைகளும், மதகாஸ்கர், மொசாம்பிக் பகுதிகளிருந்து வியாபாரத்திற்கெனக் கள்ளத்தனமாய்க் கொண்டுவரப்பட்டிருந்த கறுப்பரின அடிமைகளும் கைகால்கள் விலங்கிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கின்றனர். இரவோடு இரவாக நடுக்கடல்வரை படகிலும், பிற்பாடு வாணிபக் கப்பல்களிற் கள்ளத்தனமாகவும் கொண்டு செல்லப்பட்டு, அநேகமாய்த் தென்அமெரிக்கப் பண்ணைகளுக்கு விற்கப்பட இருப்பவர்கள். உணவின்றி தேவாங்குகளைப்போல தம்பிரான் திரும்பும் திசைதோறும் மொய்க்கும் கண்கள். அவையளித்த பீதியில், “சிவசிவா” என்று முனகியவாறு முகத்தைத் திருப்ப, இவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த துரை போல்அஞ்ஞேல் முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர் சகிதம் வந்து சேர்ந்தான். தம்பிரான், நெடுஞ்சாண்கிடையாக அவன் கால்களில் விழுந்தார்.
– தம்பிரான் மன்னிக்கவேணும். நேற்று தெலாக்குருவா பண்ணையிலிருந்து புதுச்சேரி அடிமை ஒருவன் தப்பியோடியிருக்கிறான். அவனைச் தேடிப்பிடிப்பத்தற்கு எமதுபண்ணை குதிரைவீரர்களை உதவிக்குக் கேட்டிருந்தார்கள். அவர்களை அவ்விடம் அனுப்பிவிட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. நீர் இவ்விடம் வந்து வெகுநேரமாகிறதோ?
துரைக்கு ஒருவன் நாற்காலி இட்டான். தம்பிரான் கீழேக்கிடந்த கோரைத் தடுக்கினை இழுத்துப்போட்டுச் சம்மணமிட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டார்.
– அப்படிச் சொல்ல வேண்டாமே. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள துரைமார்கள் நீங்கள். உங்களைப் போன்ற எசாமனர்கள் தயவில் ஜீவிக்கவேணுமாய் எங்கள் தலையில் எழுதியிருக்கிறது. அடிமைகள் வியாபாரம் நல்லபடியாய் நடக்க வேணும். நீர் எம்பெருமான் கிருபையினால் குபேரனைப் போல வாழப்போகிறீர் பாரும். இது சத்தியம். நீர் ஷேமமாய் வாழ்ந்தால்தானே, எங்களைப் போன்றவர்கள் கடவுள் அனுக்கிரகத்தால் நாலு பணம் பார்க்கமுடியும்.
– மெர்சி(நன்றி) தம்பிரான். வழக்கம்போல பணத்தில் குறியாயிருக்கிறீர். மொக்காவில் தரிசாகக் கிடக்கும் காணிகளை மலபாரிகளுக்குக் கொடுக்கவேண்டும் என்பதாய்க் கும்பெனியில் பேச்சு. இயேசுவை விசுவாசிக்கும் மலபாரிகளுக்கு மாத்திரமே அவ்விதமான சலுகைகள் போய்ச்சேரவேணுமென்று எங்கள் கிறிஸ்த்துவ குருமார்கள் யோசனை சொல்கிறார்கள். எப்படியும் கும்பெனிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுமென தெரிகிறது. நான் குவர்னரிடம் முறையிட்டு உம்மை அந்தப் பட்டியலில் சேர்ப்பிக்கிறேன். இனி இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக அழைத்துவரும் ஒவ்வொரு அடிமைக்கும் உமக்குப் பிரத்தியேகமாக இருபது பவுண் கொடுக்க ஏற்பாடு செய்வேன்.
– இங்குள்ள அடிமைகளை தொரை எவ்விடம் அனுப்புகிறீர்?
– இவர்கள் தொர்த்துய்கா (Tortuga) தீவுக்கு அனுப்பப்படவேண்டியவர்கள். அங்கிருந்து தென் அமெரிக்காவிலுள்ள ஸ்பானிய பண்ணை முதலாளிகளுக்கு அனுப்பப்படவேணும். இங்கேயுள்ள தேவைகளுக்கும் அடிமைகள் காணாது. எங்கள் சனங்களும், கும்பெனியை நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென தீர்மானித்துள்ளார்கள். ஆக அடிமைவியாபாரம் தற்சமயம் நல்ல எதிர்காலம் உள்ளது. உமக்குப் புதுச்சேரியிலிருந்து ஏதேனும் தகவல் வந்ததா?
– துரை ஷமிக்கவேணும். தைமாசம் வரவேண்டிய புதுச்சேரிச் சரக்குக்கப்பல்கள் நெசவுத் துணிகள் காணாமல் தவக்கப்படுது. ஆனாலும் என் சினேகிதர் புதுச்சேரி வேலாயுத முதலியார், கும்பெனி எசமானரான பிரான்சுவா ரெமியின் வளவில் ஒரு சில கட்டுமஸ்தான ஆட்களையும், பெண்டுகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பதாக அண்மையில் வந்த கப்பல்மூலம் கடுதாசி கொடுத்துவிட்டிருந்தார். அதனைத் தங்கள் சமூகம் அடிமை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதுவன்றி வேறு தகவல்கள் எம்மிடமில்லை.
– தம்பிரான் தீவில் நடப்பதெல்லாம் நீர் அறிந்ததுதானே. இங்கே பண்ணை வேலைகளுக்குப் போதிய அடிமைகள் இல்லை. இருக்கின்ற அடிமைகளை கும்பெனிக்குத் தேவையான காலங்களில் கொடுத்துதவுமாறு தீவு நிர்வாகம் வற்புறுத்துகின்றது. ஆகவே களவாய் நமக்கு அடிமைகள் அவசரமாக வேண்டும். முக்கியமானதொன்றையும் சொல்ல வேணும்.
– கேழ்க்கச் சித்தமாயிருக்கிறேன்.
– தற்சமயம் உங்கள் சனங்களில், கைத்திறனுள்ளவர்களுக்கு இங்கே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. உள்ளூர்க் கறுப்பர்கள் அநேகவிசை மற்ற அடிமைகள் வெட்டிச் சாய்ப்பதும், சில்லறைச் சாமான்களைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவதுமாய் இருக்கின்றபடியால் கடந்த சில வருடங்களாகத் தீவில் மரூன்கள் பிரச்சினை விபரீதமாகிப் போச்சுது. உங்கள் சனங்களால் அப்படியானப் பிரச்சினையில்லை. அதுவுமன்றி உங்கள் மக்களுக்கு எஜமான விசுவாசம் இரத்தத்திலே ஊறி இருக்கவேணும், சுலபமாய் அடங்கிக்கிடக்கிறார்கள். இந்த விசுவாசத்திற்கு கைலாசம்மாதிரியான மனுஷர்களால் விக்கினம் நேராம பார்த்துக்கொள்ளவேணும். அவனது விடயம் என்னவாயிற்று? அவனைக் கொன்றுபோடுவது அவசியமெனச் சொல்லியிருந்தேனே?
– கைலாசத்தைக் கொல்லவேண்டி எமது ஆட்கள் இருவரை ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் சமுசயப்பட வேணாம். நல்ல சேதி வந்தவுடன் நானே நேரில் உமது பண்ணைக்கு வந்து தெரிவிப்பேன் .
– எம்முடைய பண்ணைக்கருகே நீர் வராதேயும். எனது ஆள் ஒருவனை மொக்காவுக்கு அனுப்பித் தகவல் தெரிந்துகொள்வேன்.
– துரை..! நீங்கள் கைலாசம்குறித்தான கிலேசத்தை விடவேணும். அந்தக் குடும்பமே நிர்மூலமாக்கப்படவேணுமென நாள் குறித்துப்போட்டோம்.
– காமாட்சி அம்மாள் குடும்பத்தின் மீது உங்களுக்கென்ன அப்பேர்ப்பட்ட வஞ்சம்.”
– அந்த ஸ்திரீ காமாட்சி அம்மாள் தமிழ்த்தேசத்திலே, ராசகுடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாகப் பேச்சு. அவளது ஏக புத்ரி தெய்வானை ராசகுடும்பத்தின் வாரிசென்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரமும் அவர்களிடத்திலே இருந்திருக்கிறது. எங்கள் சினேகிதர்கள் காமாட்சியம்மாள் புத்ரி அரசபதவியை ஏற்பதைத் தடுக்கவேணுமென்பதில் உறுதியாய் இருக்கிறார்கள்.
– நீர் ஏற்கனவே ஒருமுறை இதுபற்றி கூறியிருக்கிறீர். ஆனால் ஏதோ ரகசியமிருக்குமென்று சந்தேகப்பட்டப் பெட்டியைத்தான் உமது ஆட்கள் கோட்டைவிட்டுவிட்டார்களே?
– உண்மைதானுங்கோ. எனது யூகம் சரியாகவிருக்கும் பட்சத்தில், நான் தேடிக்கொண்டிருந்தப் பெட்டி தற்சமயம் நமது மற்றொரு எதிரியான பெர்னார் குளோதன் வசமிருக்கவேணும். ஆகவே எனது புதுச்சேரி சினேகிதர்களுக்கு இது விபரமாக எச்சரித்துக் கடுதாசி எழுதிப்போட்டேன்.
-அப்படியே புதுச்சேரி மண்ணிலேயே அவனுக்குக் கல்லறையும் ஏற்பாடு செய்யுமாறு உங்கள் ஆட்களிடம் கூறிவையும். இங்கே போர்லூயியில் உள்ள லாஸாரிஸ்துகளுக்கு* அவனது நடவடிக்கைகள் மீது கிஞ்சித்தும் விருப்பமில்லை. என்னுடைய மகளை அவன் கல்யாணம் கட்டியிருக்கலாம். விருப்பமில்லையேல், எங்கள் நாட்டிலிருந்து ஒரு ஸ்த்ரீயை வரவழைத்துக் கல்யாணம் செய்துகொள்ளவேணும். அவ்வாறில்லாமல் உங்களின ஸ்த்ரீயை கல்யாணம் செய்துக்கொள்வேன் என்பது நியாயம் அல்லவே. தெய்வானையின் சகோதரன் கைலாசமும், நான் முடித்து வைக்கிறேனென சொல்லித் திரிகிறானாமே? உம்மோட சனங்களுக்குப் புத்தி எவ்விடம் போச்சுது. காமாட்சி அம்மாளிடம் இந்த விடயங்கள் குறித்து நீங்கள் பேசவேண்டாமோ?”.
– அந்தத் ஸ்த்ரீயானவள், சீனுவாச நாயக்கர் வார்த்தையன்றி, மற்றவர்களின் வார்த்தையை ஒருபொருட்டாக மதியாதவள். குவர்னரையும் நைச்சியம் பண்ணிவச்சிருக்கிறாள். இந்து தேசத்து சனங்கள், நாய்க்கருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் அடங்கிக் கிடப்பது கும்பெனிக்கு நல்லதல்லவென்று, தொரை நாசூக்காய் குவர்னரண்டை போட்டுவைக்கவேணும். பிழைக்கவந்த இடத்தில் எசமானர்களுக்கு விசுவாசமாய் இருக்கவேணுமென்று இந்தச் சண்டாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது கும்பெனியின் மரியாதைக்கு அபகீர்த்தி அல்லவோ.
காவலரிருவர் காத்தமுத்துவையும், கறுப்பனையும் உரையாடிக்கொண்டிருந்த தம்பிரான் போல் அஞ்ஞெல் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றனர்..
– மிஸியே!..இவர்கள், சந்தேகப்படும் வகையில் நம் வளவுக்கருகே நின்று கொண்டிருந்தார்கள். இவ்விருவரையும் கொன்றுபோட்டிருப்போம். இந்தக் கறுப்பன் நமது தம்பிரானைத் தெரியுமென்று சொல்லுகிறான்”
– தம்பிரான் யார் இவன்? எப்படி இவ்விடம் வந்தான். இந்தவிடம் உம்மைத் தவிர வேறு எவருக்கும் தெரியவரக்கூடாதென்று எச்சரித்திருந்தது மறந்து போச்சுதா?
– துரை மன்னிக்கவேணும். இதோ நிற்கும் கறுப்பன் நமக்கு வேண்டியவன், பெயர் அனாக்கோ. கைலாசத்தைக் கொல்வதற்கு எம்மால் ஏற்பாடு செய்யபட்டவன். மற்றவனை இப்போதுதான் பார்க்கிறேன். தோற்றத்தை வைத்துப் பார்த்தால், மலபாரியாக இருக்கவேணும்.
– தம்பிரான் எவராக இருப்பினும், இவ்விடத்தின் ரகசியம் தெரிந்தவர்களை நான் வெளியே செல்ல அனுமதிக்கமுடியாது. இவர்களை தூக்கிலிடுவதைத் தவிர வேறுமார்க்கமில்லை.
– வேணுமானால் மலபாரியைக் கொன்று போடலாம். கறுப்பன் அனாக்கோ நமக்கு உதவுபவன், அவனுக்கு நான் ஜவாப்தாரி.
– உமது விருப்பபடிச் செய்யும்.
– அனாக்கோ! கைலாசம் என்னவானான், இவன் யார்?
– மன்னிக்கவேணும் ஐயா, முட்டாள் லூதர் செய்த குளறுபடியால் இம்முறையும் அவன் தப்பித்துவிட்டான். எனக்கு வேறொரு சந்தர்ப்பம் கொடுங்கள். அவன் சிரஸோடு வருகிறேன். இல்லாதுபோனால் உங்கள் கையாலேயே அடிமையை வெட்டிப்போடுங்கள்.
– லூதர் இப்போது எங்கே?
– அவன் கடற்கரையில் எங்கள் கிறேயோல் மக்களிடம் பிடிபட்டிருக்கிறான்”
– நமது ரகசியங்கள் எல்லாம் சில்விக்கும், பின்னர் கைலாசத்திற்கும் தெரிந்திருக்குமோ?
– அப்படியானப் பாதகங்கள் ஏதும் நடக்காது. முட்டாள் லூதர் பலமுறைத் தங்களைச் சந்திக்கவேணுமாய் பிரயாசைப் படுத்தினான். நான் அதற்கு இணங்காமற் போனது நல்லதாய்ப் போச்சுது.
-எனக்கு வியப்பாயுள்ளது. இக்கறுப்பனின் பூர்வோத்திரம் பிரெஞ்சுதீவுதானே. உங்கள் மொழியில் சம்பாஷிப்பதெப்படி? – போல் பிரபு வினவினான்.
– துரை, இவன் தகப்பனொரு மலபாரி என்கிறான். தமிழனாம்.
“அப்படியா?” என்று வியந்த போல் அஞ்ஞேல், கறுப்பன் அனாக்கோவையே பார்த்துக் கொண்டிருந்தான். இவனது முகம் பல வருடங்களுக்கு முன், எங்கோ வைத்துக் கண்டிருந்த முகம்போல் தெரிந்தது. எப்போது? எவ்விடமென்று ஞாபகமில்லை?” இப்போதைக்கு இவனைக் கொல்லக் கூடாது என்று தீர்மானித்தான்.
-தம்பிரான் உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் நீர்தான் பொறுப்பு” நான் புறப்படவேணும். இந்த மலபாரியைத் தற்போதைக்கு இங்கேயே அடைத்துப்போடுவோம். இவன் நேற்று தெலகுருவா பண்ணையில் தப்பிய மரூனாக இருக்கவேண்டும். மற்ற அடிமைகளோடு இவனையும் விலங்கிட்டு வைக்க, எமது ஆட்களுக்கு உத்தரவிட்டுச் செல்கிறேன். கறுப்பனை வேணுமானால் நீர் உடன் அழைத்துச் செல்லும்.
-துரை மன்னிக்கவேணும். இந்த மலபாரிக்கும் நான் பொறுப்பு. தற்சமயம் எனக்கு லூதரின் இடத்திற்கு வேறொரு ஆள் தேவைப்படுகிறது. பொறுத்திருந்து சரிபட்டுவரவில்லையென்றால், தங்கள் விருப்பப்படி இவனுக்கு முடிவு கட்டுவோம்.
– ஏதோ கவனமாய்ச் செய்யும், தவறு நடப்பின் உம்முடைய உயிருக்கு பிறகென்னால் உத்தரவாதம் கொடுக்கமுடியாது.- போல் அஞ்ஞெல் புறப்பட்டுச் சென்றான்.
“வெள்ளைப் பன்றியே, உன் ஈரலை ருசிபார்க்கவே என் சீவன் காத்துக்கிடக்குது” புறப்பட்டுச் சென்ற போல் துரையைப் பார்த்தவண்ணம் கறுப்பன் அனாக்கோ முணுமுணுக்க, பயந்துபோன காத்தமுத்து அவன் வாயை அடைத்தான்.
——————————————–
*Lazaristes – தீவின் மதகுருமார்கள்