அப்துல் கலாம் – மாத்தா ஹரி

          25 ஏப்ரல் 2007  எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. அப்போதைய இந்திய ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் ஐரோப்பிய ஒன்றிய பாராளு மன்றத்தின் விருந்தினர். சிறப்புரை ஆற்றினார் ஐரோப்பிய பாராளுமன்றம் நான் இருக்கிற Strasbourg ல் உள்ளது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை நகருங்ம் ஆகும்.

          ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் அவர் ஆற்றிய உரையைக் கேட்கும் வாய்ப்பு, குறைந்த எண்ணிக்கையில் அழைப்பிதழுடன் அனுமதிக்கப்பட்ட  இந்தியர்களில் நானும் ஒருவன்

கனியன் பூங்குன்றனாரின்  « யாதும் ஊரே யாவரும் கேளீர் » என்கிற சங்கப் பாடலை முழுவதையும் தமிழில் கூறி  அதற்கு ஆங்கிலத்தில் விளக்கவும் செய்து தமது உரையைத் தொடங்க மெய் சிலிர்ந்த து. எழுந்து நின்று வந்திருந்த நான்கைந்து தமிழர்கள் எழுந்து நின்று கைதட்டினோம்.

தொடர்ந்து அவர் ஆற்றிய உரையும் முக்கியமானது, சுவாரஸ்யமானது மாத்தாஹரி நாவலில் அந்த உரையை இடம்பெறச் செய்தேன் :

« ……

இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு திரு அப்துல்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்றனர். பாராளுமன்றத் தலைவர், செயலாளர் புடை சூழ, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதியாக காலெடுத்து வைக்கிறார். வரவேற்புரைக்குப் பின்னர் சிறப்புரை:

“ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில், அதன் உறுப்பினர்களோடு இருக்க முடிந்தமையில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு இருக்கையில் எம்மாதிரியான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதென்றும் யோசித்தேன். கோடிக்கணக்கான மக்கள், மொழிகள், பண்பாடுகள், மதங்கள் என பன்முகப்படுத்தப்பட்ட தலைமையை ஏற்படுத்தித் தந்த அனுபவம் இந்தியாவிற்கு உண்டு. அவ்வனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள எனக்குப் பெரிதும் விருப்பம்.” என்று ஆரம்பித்து ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாராட்டிப் பேசுகிறார்.

– அரவிந்தன் நாம புறப்படுவதற்கு முன்னாலத்தான் மதத்தைப் பத்தி விவாதிச்சோம், ஜனாதிபதி அற்புதமா சொன்னார் கவனிச்சியா. மதமும் அறிவியலும் விரோதிகளல்ல, விரும்பினா அவங்க சேர்ந்து செயல்படமுடியுங்கிறதுக்கு அவரது குருவே நல்ல உதாரணமென்பதுபோல விளக்கினார்.

அரவிந்தனும், ஹரிணியும், பாராளுமன்ற மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஜானாதிபதி உரை நிகழ்த்திமுடித்தபிறகு, ஹரிணி அதன் பிரம்மிப்பிலிருந்து மீளமுடியாமலிருந்தாள்.

–  நான் சரியா காதுல வாங்கலை ஹரிணி, என்னுடைய நாற்காலியிலிருந்த மொழி பெயர்ப்புச் சாதனத்தை எப்படி இயக்குவது என்பதிலேயே நேரம் போயிட்டுது

– 1960ல இந்திய விண்வெளிமையத்திற்கு உரிய இடந்தேடிப் பேராசிரியர் விக்ரம் சாராபாயும், அவரது சீடரான அப்துல்கலாமும் மற்றவர்களும், நாட்டின் பலபாகங்களிலும் அலைந்திருக்கிறார்கள். இறுதியில் கேரளாவிலுள்ள தும்பா அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. அரசாங்கம் பரிசீலனை செய்தபோது, ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ மீனவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய சிக்கலிருப்பது புரிந்தது, முக்கியமாக அங்கே இருந்த தேவாலயம். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அவர்களை வெளியேற்றினால் தங்கள் ஓட்டுவங்கியை இழந்து விடுவோம் என்ற கவலை, பிரச்சினையை பெரிதாக்குவதெற்கென்றே காத்திருந்த மதவாதிகள் வேறு. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு அந்த இடத்தை எப்படியாவது பெற்றே தீருவதென்று தீர்மானமாக இருந்தார். ஒரு யோசனை பிறந்தது. தேவாலயத்தின் பங்குத்தந்தை பீட்டர் பெர்னார் பெரைராவைச் (Rev. Peter Bernard Pereira¡ ) சென்று சந்தித்திருக்கிறார், பங்குத் தந்தை, விக்ரம் சாராபாயிடம்,” என்ன விக்ரம், கடைசியில் என் பிள்ளைகள் இல்லத்தையும், எனது இல்லத்தையும், கடவுள் இல்லத்தையும் சேர்த்தே அல்லவா கேட்கிறீர்கள்? எப்படி முடியும்? எனச் செல்லமாக கடிந்துகொண்டாராம். பிறகு அவரை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேவாலயத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். பங்குத் தந்தை கேட்டுக்கொண்டபடி, விக்ரம் சாராபாயும் அவரது குழுவினரும், ஞாயிற்றுக்கிழமை போனபோது பிரார்த்தனை நடந்துகொண்டிருந்திருக்கிறது. தந்தை பெரைரா பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருந்தவர் முடித்துவிட்டு, விக்ரம் சாராபாயை பக்கத்தில் அழைத்திருக்கிறார். இவர் அவர் அருகில் போய் நின்றவுடன், கணீரென்ற குரலில், ” பிள்ளைகளே இதோ ஒருவரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். பெயர் விக்ரம் சாராபாய், இவர் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானத்தின் பலனைத்தான் நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இந்தத் தேவாலயம் உட்பட. இங்கேயுள்ள விளக்குகள் மின்சாரத்தால் எரிகின்றன, நான் உங்களிடம் உரையாடுவது தொழில்நுட்பத்தின் விந்தையில் உருவான ஒலிபெருக்கியின் உதவியால். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் தரமுடிகிறதென்றால் அதற்கும் அறிவியலே காரணம், பங்குத் தந்தையாகிய நான் என்ன செய்கிறேன்? உங்கள் நன்மைக்காகவும், உங்கள் சுபிட்ஷத்திற்காகவும், அமைதி வேண்டியும் பிரார்த்திக்கிறேன், நமது விக்ரம் சாராபாயும் அதைத்தான் செய்கிறார். அவர் நமக்கு மேலும் நல்லதைசெய்யவேண்டுமென்று நினைக்கிறார், ஒரு மாபெரும் அறிவியல் அர்ப்பணிப்பிற்காக நமது இல்லங்களைக் கேட்கிறார், அதற்கு அரசாங்கத்தின்மூலம் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமென உறுதி அளிக்கிறார். இப்போது சொல்லுங்கள் நமது இல்லங்களைக் கொடுக்கலாமா?” கூட்டத்தினரிடையே முழு அமைதி, எழுந்து நின்றவர்கள் ‘ஆமென்’ என்கிறார்கள். இன்றைக்கு அந்த இடம் விக்ரம்சாராபாயுடைய கனவுகளை மட்டுமல்ல, இந்தியாவின் விண்வெளிக்கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது.

– அவர் பேசினதை அப்படியே வரி பிசகாமற் சொல்லுவேண்ணு நான் நினைக்கலை.

– இதிலே இன்னொரு நீதியும் இருக்கு, இங்கே மதமும் சரி விஞ்ஞானமும் சரி இரண்டுமே மக்களுக்கு நன்மைங்கிற குறிக்கோளில் இணைஞ்சிருக்கின்றன. மக்களுக்கு நன்மை செய்வதுதான் இவர்கள் நோக்கமென்றால், மதமும் விஞ்ஞானமும் மாத்திரமுமல்ல, மதமும் மதமுங்கூட இணைந்து பணியாற்றமுடியும்.  இப்படியொருவரை இந்திய ஜனாதிபதியா பார்க்கிறது, இதுதான் முதன் முறை.

– ஏதோ தவறி வந்துட்டார். நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு இப்படிபட்ட மனிதர்களைத் துளியும் பிடிக்காது

– மணி ஒன்றரை ஆகுது, எங்கேயாவது ரெஸ்டாரெண்டுக்குப் போகலாமா?

————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s