நீலக் கடல் நாவல் – திருத்திய பதிப்பு

« திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு மற்றவர்களின் உத்தி ஆளும் குணம், நமக்கோ சுலபமாக அடிமையாகும் குணம். அது இன்றளவும் தொடர்வது தமிழனின் சாபக்கேடு. ‘ஆண்டே’, ‘அண்ணே’, ‘தலைவரே’, ‘சார்’, ஐயா, ‘எஜமான்’ வரிசையில் இன்றைக்கு ‘அம்மா’ வையும் சேர்த்துக்கொண்டு, கைகட்டி, வாய்புதைத்து, உடலைக் குறுக்கிவாழ்வதென்பது, மற்ற இனத்தைவிட நம்மிடம் அதிகமாகிப் போன வயிற்றெரிச்சல் இப்புதினத்துக்கான காரணங்களில் ஒன்று.  »

« என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும் »

ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதையை விரிவாக எழுதிய 2005ல் வெளிவந்த நீலக்கடல் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறேன்.

இளம் படைப்பாளிகள் முதல் மூத்த எழுத்தாளர்வரை தங்கள் எழுத்துக்குறித்த பெருமைகள் இருக்கவே செய்யும். எனக்கும் இருக்கிறது.

வாழும் காலத்தில் கிடைக்கிற ஆராதனைகள்  பெரும்பாலும் நமக்கு வேண்டியவன் நம்ம குலம் , நம்ம கோத்திரம் அல்லது நாம் இன்றைக்கு மாலை போட்டால் நாளைக்கு நமக்கு அவன் மாலை போடுவான் என்கிற வணிக நியதிகளுக்கு, நீதிக்கு உட்பட்ட வை.

காலம் கையூட்டுவாங்காத நீதிபதி, விலைக்கு வாங்க முடியாதது. ஈவிரக்கமற்றது, அதன் தராசு துல்லியமானது, இந்தக்  காலத்தின் தயவை நம்பி வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

கிராமத்தில் தந்தை மணியக்காரர் உறவினர்களெல்லாம் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் கர்ணம் ஆகவோ மணியம் ஆகவோ இருந்தார்கள். ஊரில் முதல் மெத்தைவைத்த வீடு எங்களுடையது. நஞ்செய் புன்செய் என செல்வாக்காக வாழ்ந்த குடும்பத்தில் கடன் காரர்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. எனது தந்தையின் வாழ்க்கை ஒரு பாடம்.

ரு வெறியுடன் ஆரம்பித்த இளமை,கல்லூரியில் படிக்கிறபோது ட்யூஷன் சொல்லிகொடுத்தேன். புதுவையில் வருவாய் துறையில்  எழுத்தராக பணிபுரிந்த போது காலையில் Alliance Française பிரெஞ்சு மொழி படிப்பேன்,  மாலையில் the Hindu நடராஜன் புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் நடத்திய கென்னடி டுட்டோரியலில் History Geography பாடம் எடுத்தேன். சென்னை சௌகார்பேட்டை யில்  பேண்ட் பிட், சட்டை பிட்களை எடைக்கு  வாங்கி வருவாய் துறை சக ஊழியர்களுக்கு விற்றிருக்கிறேன். புதுச்சேரியிலும் முன்னள் நீதிபதி அம்புரோஸ் பிள்ளைகளுக்கு , காந்திவீதியில் அவர் பெத்தி செமினேர் பள்ளிகருகிலிருந்த அவர் உறவினர் வீட்டு பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுத்திருக்கிறேன். வருவாய்துறை தேர்வில் கிடைத்த துணைத்தாசில்தார் உத்தியோகத்தை, எனது மாமியார்வீட்டு அண்டைவீடுக்காரரான  திருநெல்வேலிக்காரர் லேபர் கமிஷனர் பாக்கியம் பிள்ளை புத்திமதியை மீறி உதற்விட்டு, ஏதொவொரு துணிச்சலில் பிரான்சுக்கு வந்தேன். இங்கும் ஆரம்ப நாட்கள் எளிமையானவை அல்ல, அந்த அனுபவங்களையும் ஒரு நூலாக வெளியிடலாம். நான் படித்திருந்த முதுகலை சமூகவியல் அங்கீகரிக்கப்பட இங்குள்ள பல்கலையில் DEUG சேரவேண்டியிருந்த து. எரிச்சலூட்ட பாதியில் வெளியேறி DPECF  சேர்ந்தேன், இது Accountancy, commerce க்கு சமம், இதற்கிடையில் புதுச்சேரியில் இருக்கும் மனைவி பிள்ளைகள் ஏக்கம், வேலை தேட தூண்டியது, ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால், முதலில் உள்ளூர் நகரசபையில்  கணக்கெழுதும்  உத்தியோகம், இடையில் ஒருவருட  ஆங்கிலம் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு டிப்ளோமா . சுதந்திர ஆக்ஜிஜன் தேவைப்பட சிறிய முதலீட்டில் வணிகம். 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இன்றைய நிகழ்காலம், எனது இறந்த காலத்தின் கொடை.

காலம் என்னை ஏமாற்றவில்லை. உழைப்பும், உண்மையும் போராட்டகுணமும் எனக்கு உதவி இருக்கின்றன.  ஆம் நன்றும் தீதும் பிறர் தர வாரா.நீகலக்கடல் நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல  எழுத்துக்கும் காலத்தை பெரிதாக நம்புகிறேன், காலமும் காலத்தையொத்த ஒன்றிரண்டு மனிதர்களும் நீதியைச் சரியாக வழங்குவாரகள் என்பதென் அசைக்கமுடியாத நம்பிக்கை. .காலத்தின் தீர்ப்பு எனக்குரிய நியாயத்தையும் உரிமையையும் இன்றுவரை உணர்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது,

இந்த நீலகடல் எடிட்செய்யப்படவேண்டும் , செம்மையான பதிப்பாக வெளிவரவேண்டுமென்ற என்ற எனது குறை தீர்ந்துள்ளது என்ற செய்தியை மட்டும் தற்போது தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                  நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் நாவல் குறித்து …..

«  உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் »  – பிரபஞ்சன்

இன்றைய மொரீஷியஸ் தீவில் வாழ்பவர்களாகிய தமிழர்களில் கணிசமான பேர் அந்தப் பதினேழாம் நூற்றாண்டுகால பகுதியில் குடிபெயர்ந்தவர்கள். சொந்த தேசத்து சாதி அடிமை முறை, மதப் பிணக்கு, சுரண்டும் அமைப்பில் சிக்கி தம் வாழ்வை இழந்தவர்கள் என்று பலரும், தம் பொன்னுலகம் என்று நம்பிய பிரஞ்சு தீவுகளுக்குக் காலடி மண்ணையும் துடைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள். சற்றே பெரிய புறாக்கூடுகளில் இவர்கள் அடைத்து வைக்கபட்டுக் சகல விதமான வன்முறைக்கும் ஆளானார்கள். தாய்நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை இன்றியே சென்ற ‘சொர்க்கத்தில் ‘ தம் உயிரை பலி கொடுத்தார்கள். இந்தத் துயர வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும் வரலாற்று பிழையற்ற தகவல்களோடும் தருகிறது, நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய இந்த நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. பெண்களைக் குறித்த இவர் பார்வை மிக முக்கியமானது. பெண்களை சதையாகவும், காமப்பங்காளிகளாகவும் மட்டுமே பார்க்கபட்டு வந்த பார்வையிலிருந்து விலகி, அவர்களை உயிரும் ரத்தமும் கொண்ட உயிர்களாக, உணர்வும் மனமுங்கொண்ட மனிதர்களாக இவர் சித்தரித்து இருப்பது, இந்த நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல் : நீலக்கடல்நூலாய்வு

– மலேசிய எழுத்தாளர் : முனைவர்.ரெ.கார்த்திகேசு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின்வானம் வசப்படும்இங்கு நினைவு கூரத் தக்கது.

புதுச்சேரி வட்டாரம்வரலாறு சார்ந்த நாவல்கள்:
நீலக்கடல்குறிப்பாகதேவமைந்தன்.

1916ஆம் ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன்  ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணாகுணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும்.

சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு
முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார்.

“உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின்
நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார்.

இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில்
நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலான
வற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி  ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s