Tu Connais la Nouvelle? என்ற் பிரெஞ்சு அமைப்பு இலக்கிய ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் என்னுடைய இறந்த காலம் நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ‘Je vis dans le Passé’ பிரதியிலிருந்து தமாரி ( Tamari Tchabukaidze) என்கிற மேடை நாடகை நடிகையால் வாசிக்கப்பட்ட பகுதி
“………….கடற்கரையில் காந்தி சிலையிலிருந்து துய்ப்ளே சிலைவரை இருவருமாக நடந்து திரும்பியபின், பழைய கலங்கரை விளக்கிற்கெதிரே இருந்த சிமெண்ட் கட்டையில் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். இதுவரை சராசரி மனிதர்களைப் போலவும் வழிகாட்டிப்போலவும் ஆஸ்ரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதிப்பூங்கா, ஆயி மண்டபம், கவர்னர் மாளிகை, இந்தோசீனா வங்கி யுகோ வங்கியாக மாறிய கதை கடற்கரை ஓரமிருந்த தேவாலயம்.என்று அறிமுகப்படுத்திக்கொண்டும் இடைக்கிடை குட்டிகுட்டிக் கேள்விகளுக்குப் பதில் தெரிவித்துக்கொண்டுமிருந்த மாதவன், இருவரும் உட்காரக் காத்திருந்ததுபோல, “ புதுச்சேரி பற்றி உன் அபிப்ராயமென்ன?” என்று கேட்டான்.



சிலநொடிகள் தாமத த்திற்குப் பின் பதில் வந்தது. – எந்தப் புதுச்சேரி பற்றி என்னுடைய கருத்தைசொல்ல. மேற்கின் எச்சங்களாகத் தங்கிப்போன வீதிகள், காலனி ஆதிக்க வரலாற்றுச்சின்னங்கள் ஆகியவற்றிற்கிடையே கடந்த நான்கு மணி நேரமாக நான் கண்ட கடற்கரை, ஆஸ்ரமம், இந்துக்கோவிலென்றிருக்கிற கிழக்குப் புதுச்சேரியைப் பற்றியா அல்லது பேருந்துநிலையம், காளான்கள் போன்ற புறநகர்பகுதிகள் என்றிருக்கும் மேற்குப் புதுச்சேரி பற்றியா? இவை இரண்டில் உனது தேர்வு எது? என்னைக்கேட்டால் காலையில் உன்வீட்டிற்கு வருவதற்கு முன்பாக பார்த்த மேற்கு புதுச்சேரி அழகு. அது இயற்கையாக இருக்கிறது. சரண்யா, மாதவன், ரங்கநாயகி அம்மா, ஈஸிசேரில் ஒரு அப்பா என்றிருக்கிற குடும்பத்தைப்போல. உன் அம்மாவையும், சரண்யாவையும் எங்கள் வீட்டிற்கு கடத்திப் போகலாமா என்றுபார்க்கிறேன். என் அம்மாவிற்கும் ரங்கநாயகி அம்மாள் பற்றி ஒரு மின்னஞ்சல் எழுதும் எண்ணமிருக்கிறது. அபிப்ராயம் புதுச்சேரி என்ற ஊரைப்பற்றியது என்றால் அவரவர் ஊர், அவரவருக்கு அழகு. உனக்குப் புதுச்சேரி அழகெனில். அமெரிக்கா ஜெஸிக்காவிற்கு அவள் பிறந்த பசடீனா அழகு. அந்தவகையில் பாரீஸ் எனக்கு அழகு. பாரீஸை மறந்துவிட்டு புதுச்சேரியியின் அழகைப்பேசு என்றால் ஆரோவில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பார்த்த பேருந்து நிலையம் அழகு, ஆட்டோவில் வந்தபோது விநோதமான குழல் வாத்தியமும், டமடம மேளமுமாக, கொத்தாக இலைகளை பிடித்துக்கொண்டு மஞ்சள் ஆடையில் நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடியபடி நடந்த பெண்மணி அழகு. கோணிப்பையை விரித்து, வெற்றிலைச் சாறை துப்பிய வேகத்திலேயே கொத்தமல்லி புதினாவென்று கூவி விற்ற பெண்மணி அழகு, வெத்திலை எச்சிலை காலில் வாங்கிய மனிதர் முகம் சுளித்தது அழகு, அவர் மீது மோதிக்கொண்ட சிறுவன் அழகு, Tiens! எப்படி அதைச் சொல்ல மறந்தேன், கோவிலில் பார்த்த குழந்தைகூட அழகுதான். புதுச்சேரியைக் காண என்பதைக்காட்டிலும் புதுச்சேரி மனிதர்களைப் பார்க்க வந்தேன் என்று சொல்வதுதான் சரி. மனிதர்கள் மூலமாகத்தான் ஒரு நகரம் அழகைப் பெறுகிறது. உண்மையில் புதுச்சேரியைத் தேடி வந்தேன் என்று சொல்வது இன்னும் கூட பொருத்தமாக இருக்கும். பாரீசில் இல்லாத சில புதுச்சேரியில் இருக்கின்றன. புதுச்சேரியில் கிடைக்காத சில பாரீசில் கிடைக்கலாம். மனிதர்கள் பயணம் செய்யும் நோக்கமே இங்கே இல்லாதவை அங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். அரவிந்தர் தோழி புதுச்சேரிக்கு வந்தது அவருக்குப் பாரீஸில் கிடைக்காத அரவிந்தரைத் தேடி. அரவிந்தரால் அவர் தோழிக்குப் புதுச்சேரி அழகு. எனக்கும் நான் தேடும் பொருள் கிடைக்கும் இடமெல்லாம் அழகுதான்……..
சரி உனக்கென்ன ஆரோவில் என்ற பெயர் மேல அப்படியொரு கோபம்.
– எங்க வீட்டுக் கூடத்தில் மாட்டியுள்ள படத்தில் இருக்கிற தாத்தாவைத் தெரியுமில்லையா? இந்தக் கோபம் அவர்கிட்டே இருந்து எனக்கு வந்திருக்கலாம். காந்தி அபிமானி. பிரிட்டிஷ் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவிற்கு இங்கே பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்கிறவர். இங்கு போராட்டமென்று நடந்ததெல்லாம் கலவரம் என்பது அவர் கருத்து. தியாகிகள்னு சொல்லனும்னா ஆலைத் தொழிலாளிகளைத் தான் சொல்லனும் என்பார். அவருடைய பங்காளிவீட்டுல ஒரு குடும்பமே அதனாலப் பாதிக்கப்பட்டதென்கிற வருத்தம் அவருக்கு. நீ தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாய் எனில் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆரோவில்லில் இருக்கும் உங்களுடைய ஆட்கள் பலருக்கும் தாங்கள் உயர்ந்த இனமென்கிற எண்ணம் நிறைய. அக்கம்பக்கத்திலிருக்கிற ஏழைத் தமிழர்களை காலனிகால கூலிகளாகப் பார்க்கிறார்கள். காலனி ஆதிக்கத்தின்போது புதுச்சேரி நகரத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்கென உங்கள் மக்கள் ஒதுக்கிக்கொண்டார்கள். பிறகு அரவிந்தரோடு மிரா அல்ஃபஸ்ஸா சேர்ந்துகொள்ள பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஆன்மீக ஜோடிக்கு, கேட்டவரத்தையெல்லாம் கொடுத்தது. வெள்ளையர் பகுதிகளெல்லாம் ஆஸ்ரமத்தின் கைக்கு வந்தன. இதன் அடுத்த கட்டமாகத்தான் ஆரோவில்லைப் பார்க்கவேண்டும். பெருகும் அபிமானிகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஆஸ்ரமத்தை விரிவாக்க ஆரோவில், அரவிந்தரின் தோழிக்குத் தேவைப்பட்டது. உலகமெல்லாம ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிபடையில் சமயமில்லை, எல்லையில்லை, பொருள் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆரோவில்லில் தற்போதைய நிலமை என்ன? பணமில்லாதவர் உள்ளேநுழையமுடியாது. சுதந்திரம் சமத்துவம் என்ற உங்கள் தேசத்து வார்த்தைகளெல்லாம் இங்கும் உச்சரிக்கப்பட்டன. அரசியல் மார்க்ஸியம் எப்படியோ இந்த ஆன்மீக மார்க்ஸியம் கண்டது என்னைப் பொறுத்தவரை தோல்வி. சமத்துவத்தை நிலைநாட்ட ஆசைபட்டால் சுதந்திரத்தைத் துறக்கவேண்டும், சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவத்திற்கு வாய்ப்பேஇல்லை. இரண்டையும் இணைப்பது எப்படிச் சாத்தியம்? சமயம் பாமர மக்களை அடிமைப்படுத்த என்றால், ஆன்மீகம் அறிவாளிகளை அடிமைகொள்ள. ஜெஸிக்காவை சந்தித்ததுபோல பிரான்சுவாஸ், செலின், எதுவார், கிற்ஸ்டோபர் என ஆரோவில் மனிதர்களை சந்தித்துப் பேசு, ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவகையான ஆரோவில் கனவு இருப்பது புரியும். அதுபோல அக்கம்பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் பேசிப் பழகு. நீ புரிந்துகொள்ளவேண்டிய இன்னொன்று, ஆரோவிலியன்கள் எல்லோருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃப்ஸ்ஸாவுமல்ல. , வாழ்க்கையின் முதிர்ச்சியில், வயதின் முதுமையில், அவர்கள் கண்ட கனவுலக வீட்டின் கதவைத் தட்டுகிறவர்களெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்திராத மனிதர்களாக இருப்பது பெரும்பிரச்சினை. இங்கு வருகிறவர்கள் கர்ம யோகிகள் அல்ல, வாழ்க்கை போகிகள், சராசரி மனிதர்கள். தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். ஊர்கூடி தேர் இழுக்கிறபோது, மொத்தபேருக்கும் எந்த திசையில் தேர் போகவேண்டும், எங்கெங்கு ஆராதனைக்கு நிற்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். சில நல்லது நடந்திருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விடியல் நகரம் இன்னும் வைகறையைக்கூடகாணவில்லை….”