நாவலின் ஒரு பகுதியை அல்லது ஒரு அத்தியாயத்தை வாசிக்கவிருந்த ‘ தமாரி’ என்ற பெண்மணி நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து தாம் தேர்வு செய்த பகுதியை அனுப்பியிருந்தார். அப்பகுதி மறைந்த திரு கி. அ. சச்சிதானந்தம், நாவலின் தமிழ் பதிப்புப் பற்றிய தம்முடைய கட்டுரையில் சிலாகித்திருந்த பகுதி. இநாவலைக் குறித்து பகிர்ந்துகொள்ள வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக பின்னர் எழுதுகிறேன்.
30 மே அன்று வாசிக்கப்பட்ட பகுதி கீழே :
‘வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது காடு நன்று’ எனப்படித்தப் பாரதியின் ‘காட்சி நினைவில் விரிந்தது. மழையின் எல்லாப் பரிணாமங்களும் பவானிக்குப் பிடித்தமானது: சினம், நிதானம், பாய்ச்சல், பரிவு, விழுமியம், குரூரம், ஆளுமை, வன்மம், விதுப்பு, உடல், மனம், விளிம்பு, நுனி, ஓரம், கூரை விழல்முனையின் குன்றிமணிக் காய்ப்புகள், இலைச் சரிவுகளில் எடுக்கும் ஓட்டம், நீர்க் காளான்களாய் நிலத்தில் இறங்குமுன் உள்ளங்கைகளில், உதடுகளில், பற்களில், கண்களில், கண்மடல்களில், இமை மயிர்களில், மார்பகங்களில், இதயத்தில் நிகழ்த்தும் அதன் செப்படி வித்தைகள், ஆனந்தப்படும் உடல், ஏற்படுத்தும் கிளர்ச்சி, அதன் முன்பின் காலங்கள், போதிக்கும் பாடங்கள், கற்றுத் தரும் அனுபவங்கள் எல்லாமே விருப்பமானது. அதை எதிர்கொள்ள, முடிந்ததைச் செய்திருக்கிறாள். ஒதுங்கிக் காத்திருந்து சிறுமியாய் ஓடும்நீரில் கப்பல் விட்டு அது கவிழாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்; பதின்வயதில் பாவடை நாடாவை இறுக்கிக்கட்டிக்கொண்டு, வாசல் நீரில் தபதபவெனக் குதித்திருக்கிறாள், விலாப்புறங்களில் இடித்துக்கொண்டு கூத்தாடி இருக்கிறாள், தெறித்து உயரும் நீரை முகத்தில் வாங்கி இருக்கிறாள், ஒருசிலதுளிகள் சந்தடிச்சாக்கில், இவள் சட்டையின் அனுமதிப்பெற்று, முதுகுப்பரப்பிலும், மார்பிலுமாக இறங்கிப்பரவ, கிறங்கி இருக்கிறாள், பாட்டியுடைய இளஞ்சூட்டுக் கோபத்திற்கு அஞ்சியவளாக மூக்கால் அழுதபடி ஏறிவந்திருக்கிறாள், இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல தும்மிக்கொண்டு, அவள் அரவணைப்பில் வேதுபிடித்திருக்கிறாள். வாலைக்குமரியாய் மழைக்காதலைப் புரிந்து குடை விரிக்காமல் நிதானமாக நடந்து அதன் அன்பில் நனைந்திருக்கிறாள்; இன்றைக்கு உடல் தழுவும் அதன் தாபத்தைப் தெரிந்து, கலவிக்கு உடன்படுகிறாள், முடிவில் பரவசம் காண்கிறாள். இடியும் மின்னலுமாய் ஊடலை வெளிப்படுத்தும் மழையையும் எதிர்கொள்ளத் தெரிந்தவள், அவள் மண் அல்ல குன்று, பேய் மழையிற் கரைவதில்லை. சூறாவளி நண்பனுடன் சிநேகிதம் கொள்ளும் மழையை வெறுக்கிறாள். கெஞ்சுதலுடன் அந்த உறவு வேண்டாமே என்கிறாள். அதன் வெள்ளப் பிரவாகத்தில் நீச்சல் தெரிந்தவர்களுங்கூட மூழ்கடிக்கப் படுகிறார்களே என்கிற வருத்தம் அவளுக்கு.

புதுச்சேரியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும், மழைக்கு முன்னும் பின்னுமான காலங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கடற்கரையில் நின்றபடி, மழைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளும் வானத்தை ஏதோ புதையலைக் கண்டவர்போல அப்பாவின் விழிகளும், உடலும் வாங்கிக்கொள்வதும், அவர் கைவிரல்தொட்டு தன்னுள் பாயும் அனுபவ மின்சாரத்தில் சிறுமி பவானி அதிர்வதும் நிறைய நடந்திருக்கிறது. மழையை வரவேற்கும் அப்பா மேலுக்குச் சட்டை அணிவதில்லை. துண்டைக்கூட வீட்டில் போட்டுவிட்டுத் திறந்த மார்புடன் ஆவேசம் வந்தவர்போல இவளை இழுத்துக்கொண்டு நடப்பார். ‘பார் பார் மேலே பார்.. அங்கே… இதோ இந்தப்பக்கம் அடிவானில்….’ தவறவிட்டால் இனிக் கிடைக்காது என்பதுபோல. அதற்குப் பிறகு அவர் புலன்களின் காட்சித்தரவுகள், துணுக்குச் சித்திரங்களாகத் துளிர்விட்டு கொடிகளாகச் சுற்றிக்கொள்வதும், பல நேரங்களில் கிளைபரப்பி அசைவதும் அவளிடத்தில் நடந்திருக்கிறது. “மழை ஒரு மகத்தான ஜீவன். நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது, கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது, என அப்பா சொல்லிமுடித்துவிட்டு அடிவானத்தைப் பார்க்கவும், சோர்ந்திருக்கும் சூரியனை மேகங்கள் சூழ்ந்துகொள்ளும். பின்னர் அவற்றைக் காற்றின் கைகொண்டு சூரியன் வழித்துப்போடுவதும், அவ்விடத்தை வேறு மேகங்கள் ஆக்ரமிப்பதும் நடக்கும். சாம்பல் வண்ணத்தில் இருள் படர, பகல் தியானத்தில் ஆழ்ந்துவிடும். நெளிவுகளில் தன் உடல்காட்டி பகலின் மோனத்தை குலைக்கவென்று கடல் அலைகள் மூலம் முயற்சிக்கும், தொடர்ந்து நாசித் தமர்களில், ஈரத்துடனான கவிச்சி. தனது உடலைக் குறுக்கித் திணிப்பதுபோல பவானி உணரும்போது, ‘அப்பா வீட்டிற்குத் திரும்பலாமே’, என்பாள். அவர், இவளைத் திரும்பிப் பாராமலேயே, ‘ஸ்ஸ்ஸ்ஸ்..’.என்பார். ‘மழையில் நனைந்து பழகிக்கொள். பனிக்குளிருக்கும், அலைக்கும் காற்றுக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இல்லாத மகத்துவம் மழைச் சஞ்சீவியில் இருக்கிறது மகளே! வாழ்வியல்மேட்டையும் பள்ளத்தையும் சமதளத்தில் நிறுத்துவதற்கான வல்லமை நீருக்கும் அதன் தாயான மழைக்கு மட்டுமே உண்டு. நமது பிறப்பிற்கும், உயிர்வாழ்க்கைக்கும் மழையே ஆதாரம். வயிற்றுக்கு உணவு இல்லையென்றாற்கூடச் சக்கரவாகப் பறவைபோல எனக்கு மழையை உண்டு பசியாறமுடியும், நமது எல்லா வலிகளுக்கும் மழையே நிவாரணம்’, என்பார்.
கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை, ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாகச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை, போது போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடை விடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி, நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மழையிற்தான் எத்தனை விதம். தனது இறப்புக்கூட ஒரு மழை நாளில் நடைபெறவேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தி இருந்த அப்பாவை எரிக்க, ஈரவிறகிற்கு டின் டின்னாய் மண்ணெண்ணெய் தேவைப் பட்டதை, அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவரது உடலை எரிக்கவேண்டி இருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட மழையிற் கரைத்திருக்கலாம்.
அறையைவிட்டு வெளியில்வந்தாள், தென் திசையில் பார்வையின் முடிவில் நீள் வரிசையில் மரங்கள். என்னென்ன மரங்கள் அவை என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவை அரியாங்குப்பம் ஆற்றின் கரை ஒட்டியும் ஒட்டாமலும் வளர்ந்து நிற்கும் தென்னை, பலா, மாமரங்கள். வெண்புள்ளிக் கூட்டமாய் மடையான்கள், கொக்குகள், நாரைகள். மேலாக ஐம்பதில் நரைத்த மனிதத்தலைபோல கறுத்தமேகம். இவள் பார்த்துக்கொண்டிருக்க சருகுகள் சிவ்வென்று மேலெழும்பி, சிட்டுக்குருவிகள்போலத் தட்டாமாலையாகச் சுற்றிவிட்டு மயக்கத்துடன் பூமியில் விழுகின்றன. காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மரங்கள், இரண்டொருமுறை அசைந்துகொடுத்துவிட்டு, ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டதைப்போல நிறுத்திக்கொள்கின்றன. அடுத்து அதிகாலைநேரங்களில் கடற்கரைமணலில், கால் புதைய நடக்கிறபோது, உடலைச் சுற்றிக்கொள்ளுமே குளிர்ந்த காற்று, அப்படியான காற்று. இப்போது இடைக்கழி, கூடமென்று நடந்து வாசலுக்கு வந்திருக்கிறாள். காற்று ஓய்ந்து உடலில் இதமாய்ப் பரவும் வெப்பம். இடக்கையால் உலக்கை மாதிரி இடப்புறம் நிற்கிற தூணைப் பிடித்தாள். பிறகு இடதுகாலால், கவனமாக குதிகாலைப் பின்னே தள்ளி தூணைக் கெந்தி அணைத்தைப்படி வாசலூடாக மீண்டும் விண்ணைப் பார்க்கிறாள். காற்றில் வழுக்கும் முதல் நீர்முத்து, மீன்கொத்திபோலச் செங்குத்தாக அவள் கண்மணியைக் குறிவைத்து இமைமயிர்களில் விழுந்து ஊசலாடி முடிக்கும் முன்பு, சட்டென்று விழிமடல்களில், அடுத்தடுத்து குதித்து விளையாடுகிறது, த¨லையை சிலுப்பிக்கொள்ள நேரிடுகிறது, கிறக்கத்தில் வலது கையைக் குவித்து நீட்டுகிறாள், உள்ளங்கையில் நீர்த் துளி விழுகிறபோதெல்லாம் உடல் சிலிர்க்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பவானியின் விருப்பமானவைகள் பட்டியலில் காற்றும், தீயும், மண்ணும் ஆகாயமுங்கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கும், மழையேகூட காரணமாக இருக்கலாம். அப்பா இருந்திருந்தால் காரணம் சொல்லி இருப்பார். பிடிக்காதது அவைகளை மறந்து வாழ்வது. அவற்றின் கோபத்தோடும், சாந்தத்தோடும் வாழப்பழகி இருக்கிறாள். வானில் வேர் விடவும், மண்ணில் கிளை பரப்பித் துழாவவும், காற்றைப் பருகவும், நீரைச் சுவாசிக்கவும், தீயில் விரல் நனைக்கவும் அவளுக்கு முடிகிறது. இலையுதிர்காலத்தில் பூக்களையும், கோடையில் மழையையும், எதிர்பார்க்கும் சாராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டு, அவற்றுக்கான குறியீடுகளுடன் தனது கதவைத் தட்டுகிறபொழுதெல்லாம் தாழ் திறக்கிறாள். நெஞ்சு பிசையப்பட சர்வமும் சிலிர்த்திருக்கிறாள். பிறரைப்போல நாம் இருப்பதில்லை என்பது இருக்கட்டும், சில நேரங்களில் நாமாகக் கூட நாம் இருப்பதில்லை. அதுதானே உண்மை. நேற்றுப் பாருங்களேன் ‘கா·ப்கா’ போலவே பாய்ச்சலிடும் குதிரை ஒன்றில் செவ்விந்தியனாகச் சவாரிசெய்கிறாள், அவனைப்போலவே அவளது தலையற்ற உடலைப் பார்க்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த பவானி இல்லை. இவள் வேறு.
– ‘மழையோடு இப்படி ஆட்டம்போடுவது, பிறகு இரவெல்லாம், மூக்கை உறிஞ்சியபடி தும்மிக்கொண்டு இருப்பது. நாளைக்கு பிரச்சினைகள் என்றால், கிழவி என்ன செய்வேன்’ -பாட்டி.
இச்சொற்களையும், வாக்கியத்தையும் நினைவு தெரிந்த நாளில் இருந்து கேட்டுக்கேட்டு பவானிக்கு அலுத்துவிட்டது.
– என்ன பாட்டி, ஆரம்பிச்சுட்டியா?
– ஆமாண்டி நீபாட்டுக்கு மழையிலே நனைந்து, சளி காய்ச்சலென்று படுத்துக்கொண்டால், அவசரத்துக்கு எங்கேண்ணு வைத்தியனைத் தேடறது.
– இப்படிப் புலம்புவதை விட்டாகணும். இல்லைண்ணா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நீ வேண்டாமென்று சொல்லிட்டுப் புறப்பட்டுடுவேன்.
பாட்டியின் கண்களை, மறுகணம் கண்ணீர் மறைத்தது. ஒடுங்கிய கண்களின் இடநெருக்கடி காரணமாக ஒன்றிரண்டு துளிகள் சுருங்கிய முக வரிகளில் விழுந்து பரவின.
– அய்யோ பாட்டி! உன்னை விட்டுட்டு எங்கே போவேன். இறுகக் கட்டிகொண்டாள். தளர்ந்த உடலென்றாலும், அவளது, அன்பின் கதகதப்பு தனது உடலில் பரவட்டும் என்று காத்திருந்து, விலகிக்கொண்டாள். அவள் கண்களைத் துடைத்தாள்.
மெள்ள சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் ஈரப்பதத்துடன் திறந்துமூட, பற்களற்ற சூன்யத்தை ஒளிரும் கண்கள் நிரப்புகின்றன. இருகண்களிலும் சேர்ந்தாற்போல நீர்த்திரை. முந்தானையைத்தேடி அவள் கை அலைவதைக் கவனித்தாள். அவளை மீண்டும் அணைத்துக்கொண்டாள். பாட்டியின் கண்ணீர் இவளது கன்னத்தில், இவளது கண்ணீர் பாட்டியின் முகத்திலுமாகச் சங்கமித்து உதட்டினைத் தொட்டு கரித்தது. இடியும் மின்னலுமாக மழை இன்னமும் சடசடவென்று பெய்து கொண்டிருக்கிறது. வாசல் நிரம்பி, நீர்க் குமிழிகள் உண்டாவதும், விலகுவதும், உடைந்து தெறிப்பதுமாக இருக்க, பாட்டியை விலக்கிக்கொண்டு கவனிக்கிறாள்.
“இதில் யார்யாருக்கு எந்தக் குமிழி? படைப்பிலக்கணத்தின் விதிப்படி நான் தொடக்கம், உடைந்து தெறிக்கிற நீர்க்குமிழி பாட்டியாகவும் இருக்கலாம், பிறகு அங்கே அதோ அதுபாட்டுக்கு எனது கவனத்திற்படாமல் உடைந்து நீர்த்துப்போகிற குமிழிகளில் அப்பாவும் அம்மாவும் இருக்கலாம். தொடக்கமென்று நான் குறிப்பிட்ட குமிழி, பார்த்துக்கொண்டிருக்க விலகிப் போகிறது, எத்தனை தூரம் போகும்? வாழ்க்கையே விலகல் சார்ந்ததா? இந்தவீட்டையும், பாட்டியையும் விட்டுவிட்டு எப்படி?”
——-