
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே!
அண்மையில் பிரான்சு நாட்டில் நடந்த தமிழிலக்கிய அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினனாக கலந்துகொண்ட எனக்கு போக்குவரத்து செலவு, பதினைந்து நாட்கள் ஓட்டல் தங்கும் செலவுபோக சிறு தொகையைக் கையிலும் கொடுத்தார்கள். தங்கதுரை(அஜீத், சூர்யா ரஜனி வரிசையில் அவரும் தமிழக அரசாங்கத்தின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவியவர்தான், ஆனால் எனக்கு அவர்களையெல்லாம்விட இவர் பெரியவர்), « இப்பணம் தமிழுக்குரியதே அன்றி உன்னுடையதல்ல வென எனது கனவில் தெரிவித்தார். அவர் கூற்றில் நியாயம் இருந்தது. இந்த உபரித் தொகை உண்மையில் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் போகவேண்டிய தொகை என நினைத்து, பிரெஞ்சு இலக்கிய அமைப்பாளர்களிடம் தமிழ்நாடு முதல்மைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துவிடும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களோ எங்கள் கணக்கில் அப்படி எழுதமுடியாது , உங்களுக்கு கொடுக்கவேண்டும், கொடுக்கிறோம் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் எனக்கூற எனது வங்கிகணக்கில் அவர்கள் போட்ட தொகையில் ஒரு பாதியை (ஐம்பது ஆயிரம் ரூபாயை) தமிழ்நாடு அரசுக்கு வழங்கினேன். முதலில் மொத்த தொகையும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கும் எண்ணமிருந்த து. புதுச்சேரிக்கும் நான் சொந்தமானவன், இடையில் இந்த மாறுதல். இதனைப் பதிவிட பல நாட்களாக தயங்கினேன். பஞ்சுபோன்ற நெருங்கிய நண்பர்களிடமும் பேசத் தயக்கம். ஏதோ ஒரு பேச்சில் பாரீசில் இருக்கும் நண்பர் அலென் ஆனந்தனுடன் பகிர்ந்துகொள்ள நேரிட்டது, பதிவிடுவது அவசியம் என்றார் அதனால் பிறரும் முன் வருவார்கள் என்றார். எனக்கும் சரியெனப் பட்டது, தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கும் உத்துதலை அளித்தவர் தங்கதுரை.
தங்கதுரை இரவு நேர பாதுகாவலர், அவருடைய 10 ஆயிரம் ரூபாய் நன்கொடைபற்றிய செய்தி பலரையும்போல என்னையும் வியப்பில் ஆழ்த்தியது, நெகிழவைத்த து. மனிதர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் என்ற பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 10 வருடங்களுக்கு மேலாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், “எனக்கு யாரும் இந்த பணத்தைக் கொடுக்க கூறவில்லை. நான் தினமும் செய்தித்தாள் படிப்பேன். அதில் சிறுவன் ஒருவன் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்த செய்தி வந்தது. இதைப் பார்த்து எனக்கும் வழங்க வேண்டும் என்று தோன்றியது. » என்றார். அவருக்கு சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன் உந்துகோலோக இருந்ததுபோல, எனக்கு தங்கதுரை உந்துகோலாக இருந்தார். பத்தாயிரம் ரூபாய் அவருடைய ஒரு மாத ஊதியமாக இருக்கலாம் , இரவும் பகலும் உழைத்து, சம்பாதித்த பணம். தானும் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பசியாற வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார். இத்தொகை உண்மையில் பல கோடிக்குச் சமம். அம் மனிதரின் காலில் செய்தியை வாசித்த அன்று மானசீகமாக் விழுந்து வணங்கினேன்..
உகல் அரசியலோடு ஒப்பிடுகிறபோது. இந்திய அரசியலின் ஆரோக்கியம் கொரோனாவுக்கு நிகரான ஊழல் தொற்றால் நலிவடைந்திருக்கிறதென்பது வெள்ளிடை மலை. கொரோனாவுக்கு தடுப்பூசி உதலாம், நாளை மக்கள் இந்த தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டு ஆரோக்கிய வாழ்வில் சங்கமிக்கலாம், ஆனால் ஊழல் என்கிற பெருந்தொற்றில் உலக அளவில் அதிகம் பாதித்துள்ள இந்தியாவுக்கு விடுதலை எப்போது என்பது பதிலிறுக்க முடியாதகேள்வி.
எதிர்கட்சியாக இருக்கிறபோது, வேட்பாளர்களாக களத்தில் இறங்கும்றபோது ஏழைபாங்களர்களாக தோற்றம் தரும் நமது அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் முடிமன்னர் அரசியலை பின்பற்றும் வரலாறும் நமக்குப் புதிதல்ல. அப்படிப்பட்ட அவநம்பிக்கையிலேயே தமிழ் நாட்டின் புதிய திமுக அரசை நினைத்தேன். ஆனால் எண்ணத்திற்கு மாறாக மக்கள் நலனில் இவர்கள் காட்டும் அக்கறை இன்றைய தேதியில் சந்தோஷ மளிக்கிறது. கொரோனா பிரச்சனையை இந்த அரசு கையாளும் விதம் நம்பிக்கை அளிக்கிறது
இந்நிலையில் கொரோனா பேரிடர் சூழலை எதிர்கொள்ள அரசின் நிதியிருப்பு போதாத நிலையில் கொடைகள் பெறப்பட்டன. நல்லுள்ளம் கொண்ட பொருள் மிகுந்தவர் கள் அவற்றின் ரிஷிமூலம் நதிமூலம் முக்கியமல்ல மனமுவந்து கொடுக்கிறார்கள் என்பது முக்கியம். இவர்களைக் காட்டிலும் சாதாரண மக்களில் ஒரு சிலர் உதவ முன்வருவது வியப்பைத் தருகிறது., அநேகமாக உங்களில் பலர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவியிருக்கலாம், அதை என்னைப்போல பதிவிட தயங்கியிருக்கலாம். உடல் சந்தோஷத்திற்காக சில என்பது போல, மனச் சந்தோஷத்திற்காகவும் ஒன்றிரண்டு காரியங்களை நமக்குள் இருக்கிற இருத்தல் விழைகிறது, செய்கிறது. மனிதர்கூட்டத்தின் விளங்கிக்கொள்ள இயலாத அதிசயப் பண்புகளில் இதுவும் ஒன்று. மானுட அறிவியலில் புதைந்துள்ள இதுபோன்ற அனிச்சை செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் புரிந்துகொண்டதை பகிர்ந்துகொள்வதும், பிறமனிதர்களும் தம்மிடமுள்ள தங்கதுரைகளை தேட உதவும்..
மீண்டும் தமிழுக்கும், பிரெஞ்சுக்கும் , தங்கதுரைக்கும் எனது பணிவான நன்றிகள்.