மனிதர் வாழ்க்கை என்பது விருப்பு வெறுப்பு என்கிற இருபெரும் உணர்வுகளால் வழிநடத்தப்படுவது. ஒவ்வொரு நாளும் வைகறைத்தொடங்கி இரவுநித்திரை கொள்வதற்கு முன்புவரை உடல்சார்ந்தும் உணர்வுசார்ந்தும் நமக்குத் தேர்வுகள் இருக்கின்றன. தேர்வு என்பது ஒன்றை நிராகரித்து மற்றொன்றை தெரிவு செய்தல் : ஒன்றை வெறுத்து, மற்றொன்றை விரும்புவதல். உடலுக்கு ஒவ்வாமைகள் இருப்பதைப்போல உள்ளத்திற்கும் ஒவ்வாமைகள் இருக்கின்றன. எனவேதான் இரண்டின் நலன் கருதி அதாவது அவற்றின் நலன் நமது மகிழ்ச்சி எனக் கருதி ஒன்றை நிராகரிப்பது பிறிதொன்றை ஏற்பது என்கிற வினையாடலுக்கு உட்பட்டதாக நமது உயிர்வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறோம்.
நாம் எப்பொழுதெல்லாம் துன்பப் படுகிறோமோஅல்லது கவலையில் விழுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அதிலிருந்து விடுபட நினைக்கிறோம். மகிழ்ச்சியை, சந்தோஷத்தை மாற்றாக நினைக்கிறோம். இந்த மகிழ்ச்சியைபெற :
புலன்சார்ந்த வழிமுறைகளை மட்டுமே முழுமையாக நம்பி மகிழ்ச்சியைத் தேடுவதென்பது ஒன்று,புலன்களோடு அறிவின் துணைகொண்டு தேடும் மகிழ்ச்சி என்பது மற்றொன்று.
முதல்வகை இன்பம் குறுகியது, அது மாயை தரும் இன்பம். « நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே ! » என்கிற பாரதியின் தெளிவு நமக்கிருப்பின், இத்தகைய தற்காலிக இன்பத்தின்பால் நமக்கு நாட்டம் செல்லாது. « இடும்பையைத் தவிர்க்க, வேண்டுதல் வேண்டாமை இலாதவன் அடி » சேர்தல் என்பது இறை நம்பிக்கை உடையோருக்கு வள்ளுவர் காட்டும் வழிமுறை. அறிவைக் கணக்கிற்கொள்ளாத இன்பத்திற்கும், ஆன்மீக அடிப்படையிலான இன்பத்திற்கும் இடையில் வேறொரு இன்பம் இருக்கிறது « காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் , நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம் ! » என்கிற அறிவுமதி புலன்களுக்கு ஊட்டும் இன்பம் அதாவது, கலைகள் அளிக்கின்ற இன்பம்.
மனித உள்ளம் வெக்கையில் துடிக்கிறபோது நிழலாக இருப்பது கலை. காண்போர்க்கு, கேட்போர்க்கு, ருசிப்போர்க்கு உணர்வோர்க்கு, மகிழ்ச்சி தருவது, இன்பம் அளிப்பது என்பது கலையினால் நமக்குக் கிடைக்கக் கூடிய பலன். கலையின் நோக்கம் புரிகிறது அதன் வகைமைகள் என்னவென்பதும் நமக்குத் தெரியும். ஆனால் ஒரு வினை கலையாக மாறும் மாயம் எப்படி நிகழ்கிறது ?
ஒருவன் தனது கற்பனைக்கேற்ப ஒன்றை வார்த்தெடுக்கும் அழகியல் திறனைக் கலை என்கிறோம். இத்திறன் படைப்பவனின் சிந்தனை, ஆன்மா, பண்பாடு, அவன் சார்ந்த சமூகம் எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இருள் வேண்டாம் ஒளி வேண்டும் ; கசப்பு வேண்டாம் இனிப்பு வேண்டும் ; துன்பம் வேண்டாம் மகிழ்ச்சி வேண்டும் ; வாடைவேண்டாம் தென்றல் வேண்டும் ; முட்கள் வேண்டாம் மலர் வேண்டும் ; முடியாட்சிவேண்டாம் மக்களாட்சி வேண்டும் என ஒவ்வொரு கணமும், ஒவ்வொருநாளும் காலம் கருதி, தேவையின் பொருட்டு இடர்கள், காணச்சகியாதவைகள், கேட்க அருவருப்பானவைகள், தாங்கிக்கொள்ள இயலாதவைகள் போன்றவற்றை ஒதுக்கி, உயிவாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்கும் திறவுகோல் கலையும் இலக்கியமும். கூர்ந்து கவனித்தால் இரண்டுமே ஒன்றென்கிற முடிவுக்கு வரமுடியும்.தான் விரும்பாத ஒன்றை மறுக்க வும், தனது அகபுற கவலைகளை மறக்கவும் கலையைப் படைக்கிறான், ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என பொதுவெளிக்குக் கொண்டுபோகிறான். சுருக்கமாக க் கூறினால் மனிதரின் அழகியல் சார்ந்த வினை கலை.ஒரு மனிதன் பல நூறுபேராக மாறியபின்னர், ஓர் இனத்தின் கலை சாட்சியங்களாக பண்பாடுகள் உலகெங்கும் விட்டுச்செல்லப்பட்டிருக்கின்றன. பண்டைய நாகரிகங்களைப் போகிறபோக்கில் வேதகால நாகரிகம், சிந்துவெளிநாகரிகம், கிரேக்க நாகரிகம் பெயர்களைக் கூறி சொல்லிப் புரிந்துகொண்டுவிட முடியாது. வெறுமனே அவை குடியிருப்பு, நகரவாழ்க்கை என விரித்து மதிப்பெண் வழங்கிடவும் முடியாது. அவற்றின் நுட்பமான உட்கூறுகளில் வெளிப்பட்ட அழகியல் அணுக்கமே பிற்காலத்தில் அவற்றை நாகரிகம் என்ற சொல்லாடலின் கீழ் அணிதிரட்ட அறிஞர்களால் முடிந்தது. கலையின் பிறப்பு நூறாண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததென்று வரையறுப்பது நியாயமாகாது. என்றைக்கு மனிதரினம் தோன்றியதோ, எக்கணத்தில் துன்பத்தை எதிர்கொள்ளநேர்ந்ததோ அன்றே கலையும் பிறந்தது. அழுதகுழந்தையை அமைதிப்படுத்திய குரலும், அவள் பாலூட்டிய செயலும் கலைமுயற்சிகள். இயல், இசை, நாடகம் புகைப்படம், திரைப்படம், ஓவியம், சிற்பம் இவற்றோடு நுட்பமான மகிழ்ச்சிக்கு மனிதர்வாழ்க்கை உறுதி அளிக்கின்ற ஒவ்வொரு செயலும் கலை.
கலை என்பது பரவசம்கொள்ள, தோல்ல்விக்கு ஆறுதல் தேட, அது ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்கும்’ வித்தை. கலையைச் சரியாகப் புரிந்துகொண்டோமெனில் துன்பமோ இன்பமோ யாழெடுத்து பாடுகின்றவரும், பாடலைக் கேட்கும் வாய்ப்புள்ள மனிதரும் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைக்கின்றனர். இலக்கிய கலையும் இத்தகையை பயன்பாட்டினை அளிப்பதுதான்.
கலை என்பது தனித்ததொரு படைப்பு. ஒப்புமை இல்லாதது. ஒன்றுக்கு மேற்ப்பட்டவையை உருவாக்கப்பட்டால் அது உற்பத்தி, படைப்பு அல்ல. அவனும் கலைஞனல்ல தொழிலாளி. நிர்ப்பந்தமின்றி தன்னார்வத்துடன் ஒரு கலைஞனால் பிறப்பெடுக்கும் படைப்பு அப்படைப்பைக் காண்பவர், கேட்பவர், சுவைப்பவர், இரசிப்பவர் எவராயினும் அவரவர் புரிதலுக்கொப்ப, சுவைக்கொப்ப அக்கணத்தில் மாத்திரமின்றி தொடரும் கணத்திலும் புரிதலையும் சுவையையும் அளித்து மகிழ்விக்க கூடியது. இந்த வரையரைகள் இலக்கியக் கலைக்கும் பொருந்தும். அழகியல் சார்ந்த எழுத்தாக அமைந்து, வாசிப்பவருக்கும் வாசகருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது அதன் முதல் நோக்கம் :
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
என பல நூற்றாண்டுகளுக்கு எழுதப்பட்ட குறள் தரும் சுவையும்
« இன்னபடி இவ்விடம் யாவரும் எவையும்
க்ஷேமமென்றன் நிலையோ என்றால்,
‘இருக்கின்றேன்; சாகவில்லை’ என்றறிக. »
கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட பாரதிதாசன் பாடலும் வாசிக்கும் கணத்திலும் வாசித்தபின்னும் சுவைதரக்கூடியவை.
சாஸ்திரிய சங்கீதம் மெல்லிசையாக பரிணமித்து இராகம் ஸ்வரம் அக்கறையின்றி சராசரி மனிதன் முணுமுணுப்பதைப்போல இலக்கிய கலையும் இன்று பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. படைப்பிலக்கியத்தின் வடிவம் என்கிறபோது கவிதை , உரைநடை என்ற இரண்டு சொற்களும் நம் கண்முன் நிற்கின்றன. இரண்டும் உடன்பிறந்தவை என்கிறபோதும், குணத்தால் பங்காளிகள்: கவிதை என்ற சொல் இன்றைக்கும் புதிராகவும், எளிதில் விளங்கிக் கொள்ள இயலாததாகவும், பண்டித மொழிக்குரியதாகவும், அதனால் கற்றறிந்த மேலோரின் அறிவுப் புலனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இலக்கிய பண்புகளைக் கொண்டதாகவும், படைப்பாளியின் நெஞ்சை வெகு அருகில் நின்று புரிந்துகொள்ள உதவும் ஊடகமாகவும் இருக்கின்றது. மாறாக உரைநடை என்ற சொல் மகிழுந்தில் பயணிப்பதல்ல, பேருந்தில் பயணிப்பது, அன்றாடம் நீங்களும் நானும் உரையாடும் மொழியில், பெருவாரியான மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய மொழி. அடர்த்தியும் சொற் சிக்கனம், இவற்றிலிருந்து விடுபட்டு வாசிப்பவருடன் நெருக்கம் காட்டும் மொழி. உலகெங்கும் படைப்பிலக்கிய மொழியாக கவிதையே தொடக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. முடியாட்சி அரசியலில் இலக்கிய சமூகத்தில் கவிதைமொழி மேட்டிமை அடையாளத்தைப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள், இல்லையெனில் நம்மில் பலரும் சபை நடுவே நீட்டு ஒலை வாசியாத, குறிப்பு அறியமாட்டாத நன் மரங்களாக மட்டுமே இருந்திருப்போம். முடியாட்சியை மக்களாட்சியாக மாற்றுவதற்கு நடத்திய புரட்சியை ஒத்ததுதான் அந்த நாளில் இலக்கிய வெளியில் கவிதை சிம்மாசனத்தில் உரைநடையை உட்காரவைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும். கவிதை உரைநடை வடிவத்திற்கு உட்படாமல் இருந்திருந்தால், கல்விப்புலத்திலும், கருத்துப்புலத்திலும் இன்று நாம் கண்டிருக்கிற நுட்பமான வளர்ச்சிகள் இல்லையென்று ஆகியிருக்கும். இலக்கண பண்டிதர்கள் பெருகி இருப்பார்கள், ஆக இன்றைய இலக்கியகலை பெரும் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறது. நாட்டுப்புற பாடல்களும், எற்றப்பாட்டும், வட்டாரவழக்கும், இலக்கியமாக ஏற்கப்பட்டுள்ள காலம். இலக்கண அணிகளை நிராகரித்து ஒதுக்கி எளிமையைப் போற்றும் காலம். கற்பனையுடன் அதிகம் கைகோர்த்த காலம் போய், எதார்த்தத்தை இலக்கியங்கள் தோளில் சுமக்கும் காலம். சமயத்திற்கும் ஆட்சியாளருக்கும் அஞ்சியவைகளாக இருந்த இலக்கிய கலை, இன்று ஆட்சியாளர்கள், சமூகம் என எதைப்பற்றியும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கும் கலை ஊடகமாகவும் வளர்ந்துள்ளது.
(தொடரும்)