( இக்கட்டுரை வல்லமை இதழ் வெளியிட உள்ள மதிப்புரைபோட்டி கட்டுரைகள் தொகுப்பு நூலுக்கு அண்மையில் எழுதப்பட்ட முன்னுரை )
பிழையின்றி நான்கு வாக்கியங்கள்எழுத முடிந்தால், சுற்றமும் நட்பும் ‘சூப்பர்’ ‘அருமை’ எனபரஸ்பர ஆதரவைப் பரிமாறிக் கொள்ளமுடிந்தால்‘எழுத்தாளன்’என்ற அடையாளத்தைப் பெறும் நிகழ் காலத்தில் இன்று நாம் இருக்கிறோம். இத்தகைய சூழலில் நேர்மயான விமர்சனம் நவீனத் தமிழ்இலக்கியத்திற்கு ஒருகட்டாயத்தேவை.
ஓலைகளில் எழுத்தாணிகளைக் கொண்டு படைத்தகாலம் போய், காகிதங்களும் பேனாவும் கைகொடுக்க, எழுத்துலகத்திற்கு விசா வழங்கியப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கண்கடுக்கக் காத்திருந்து, நூலாசிரியர் தகுதியை பெறமுடிந்த காலம் கடந்தகாலம். இன்றுகாத்திருப்புகள்இல்லை, எழுதக் கணினியும், கையில் கொஞ்சம்பணமும் இருந்தால்போதும் அமேஸான்கள்காத்திருக்கிறார்கள். எழுத்தாளன் அந்தஸ்தை எளிதாகப் பெறலாம்.
இன்று அசல் எழுத்தாளன் யார் ?அவனைஅடையாளம் காணும் கூட்டல் கழித்தல்கள் எவை ?என்கிற தேடலுக்கு எழுத்தாளர்களின் முந்தைய படைப்புகள், பதிப்பகங்கள், அங்கீகரிக்கபட்ட இலக்கியவிருதுகள், பரிசுகள்எனப் பட்டியலுண்டு. இவற்றுடன் நேர்மையான நியாயமான விமர்சனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழில் கூடுதலாக அம்மான் பட்டம், நாத்தனார் பட்டம்போல எழுத்தாளர் மாப்பிள்ளையைஅல்லது பெண்ணைஅலங்கரிக்க சிலகூடுதல் பட்டங்கள் இருக்கின்றன. வணிக உலகில் சரக்கைவிட சரக்கை சுற்றியிருக்கிற ஜிகினாக்கள் கண்ணைக் கவரவேண்டும், இவை பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன : « பாவப்பட்டஎழுத்தாளன் », « குடும்பம் வறுமையில் இருக்கிறது », « நம்மஆளு » எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா… இந்தஜிகினாக்கள்மத்தியில், முதலீட்டிற்கு உரிய இலாபத்தைக் கணிசமாகத்தரும் எத்தனையோ தொழில்களிருந்தும் வாசகர்களுக்கு இலக்கிய அனுபவத்தைத் தருவதற்குச் சிலபதிப்பகங்களின் கருணையால் நல்லநூல்கள் வரத்தான் செய்கின்றன. அவற்றை பிரபலங்கள் எழுதியிருக்கவேண்டும் என்பதில்லை, புதியமுகங்களின் நூல்களாகக்கூட இருக்கலாம்.
சாலைப் பயணத்தில் அலங்காரமாக ஒளியூட்டப்பட்டு திறந்துவைத்துள்ள உணவுவிடுதிகளே, பிறசாப்பாட்டுக் கடைகளைக்காட்டிலும் கவனம்பெறுகின்றன. இத்தகைய நிலமையில்தான் புத்தகச் சந்தைகளும் உள்ளன. வியாபார உலகில் புத்தகச் சந்தைக்கும் வெளிச்சம்அவசியம். தண்டோரா கட்டாயம். இருந்தும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாடிக்கையாளர்களை பெற்றதுஎப்படி ? யாரோ ஒருவர் சுவைத்து, அறிந்த ருசியை மனமுவந்து பகிர்ந்துகொள்ள அது செவிவழிச் செய்தியாகப் பரவி கூட்டம் பெருக காரணம் ஆயிற்று. நல்ல புத்தககத்தை வாசகர்களிடம்கொண்டு சேர்க்கும் உயரியப் பணிக்கும் இருட்டுக்கடை அல்வாவை ருசிபார்த்த அன்பர்போல ஒருநல்ல நடுநிலையான விமர்சகர் தேவை.
தமிழில்மதிப்புரைகள் :
இந்நூலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் மதிப்புரைகளுக்கானபோட்டியில் பெற்ற கட்டுரைகள் என்று தெரியவந்தபோது, ஆச்சரியமாக இருந்தது. மதிப்புரைகளுக்குள்போட்டியா, அதை எப்படிநடத்தியிருப்பார்கள், எதன் அடிப்படையில்தேர்வுசெய்திருப்பார்கள், என்ற குழப்பம் எனக்கு இருந்தது. தேர்வுசெய்தவர் தமிழில் தேர்ந்த விமர்சகர் என்று அறியப்பட்ட வெங்கட்சாமிநாதன் என்பதால் தேர்வுசரியானதாகஇருந்திருக்கும் என்பதென் ஊகம். இன்று தமிழில் நவீன இலக்கியத்தை ஊக்குவிக்கின்றவகையில் நிறைய பரிசுகளையும், விருதுகளையும் அறிவிக்கிறார்கள். படைத்தவர் எழுத்து பரிசுகளால் கூடுதலாக விற்பனை ஆகிறதோ இல்லையோ அவர் உழைப்பு அங்கீகரிக்கபட்டிருக்கிறது என்கிற மனநிறைவு சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கிறது. சிலநண்பர்களுடன் சேர்ந்து திறனாய்வு நூலொன்றுக்கு பரிசளிக்கின்ற வகையில் பஞ்சு பரிசில் என்ற ஒன்றை நாங்களும் அறிமுகப்படுத்தியுள்ளோம். எனினும் எங்கள் எண்ணத்திற்கு முன்னோடியாக 2014லேயே ஆரோக்கியமான மதிப்புரைகளை ஊக்குவிக்கின்ற வகையில் இப்போட்டியை நடத்திய வல்லமை இதழுக்கும், உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும் பாராட்டுகள். அடுத்து இப்போட்டியில் நான் வியந்த விடயம் புத்தக மதிப்புரைகள் என்றதுமே வழக்கம்போல அவை சிறுகதை தொகுப்பு, நாவல்கள் குறித்து இருக்குமென சந்தேகித்தேன். சிற்றிதழ்கள் கூட இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து மற்றவைகளை நான்கைந்து வரிகளில் அறிமுகப்படுத்தி முடித்துக் கொள்வார்கள். மாறாக ,இப்போட்டியில் கலந்துகொண்ட நண்பர்கள் வாழ்க்கை வரலாறு, சுயமுயற்சி கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என வாசிப்புகளத்தை விரிவாக அமைத்துக்கொண்டு கட்டுரைகளை அளித்திருக்கிறார்கள்.
மேற்கு நாடுகளில் நூல்கள் மதிப்புரை எழுதுவதற்கென இலக்கிய சஞ்சிகைகளிலும் முக்கிய இதழ்களிலும் தொழில்முறை விமர்சகர்கள் உண்டு. அவர்கள் படைப்பாளிகள் அல்ல. (ஒருபடைப்பாளி சமதளத்தில் இருக்கிற மற்றொரு படைப்பாளியை அங்கீகரித்த வரலாறு உலக அளவில் இல்லை, சிம்மாசனம் பறிபோய்விடும் என்கிற பயம் உண்டு). தொழில்முறை விமர்சகர்கள் இதழ்களின் அரசியலுக்கேற்ப படைப்புகள்மீதான பார்வையை வைக்கிறவர்கள், இரத்தின சுருக்கமாக எழுதப்பட்ட கறாரான நடுநிலை விமர்சனங்களாக அவைஇருக்கும். நூலாசிரியர்களைச் சீண்டுவதும்அரிதாக நடப்பதுண்டு. அதற்காக விமர்சகர்களைக் கண்டித்து கைகலப்பில் இறங்குகிற நாகரீகம்இல்லை. பொதுவில் மேற்குலகில் படைப்பாளி எவ்வளவு பெரியகொம்பனாக இருந்தாலும் விமர்சகர்களிடம் அஞ்சவே செய்வார். உதாரணமாக பிரெஞ்சு இலக்கிய உலகில் பெர்னார் பிவோ( Bernard Pivot), பிரான்சுவா புய்னெல் (François Busnel) போன்ற விமர்சகர்களின் நூல்களைப் பற்றிய பேச்சுக்கும் எழுத்துக்கும் தனி மரியாதை.
தமிழில் தொழில்முறை விமர்சகர்கள்இல்லை. நடுநிலையான விமர்சனங்களை எழுதுபவர்கள் ஆக மிகவும் குறைவு. நூலாசிரியர் தெரிந்தவர்- வேண்டியவர் அல்லது நூலை வெளியிட்ட பதிப்பகம் கேட்டுக்கொண்டது என்ற அடிப்படையில் மதிப்புரைகள் இங்கு பெரும்பாலும் எழுதப்படுகின்றன. எனவே நியாயமான மதிப்புரைகளுக்கு வாய்ப்பில்லை. வாசிக்கிறபோதே உபயோகித்திருக்கிற சொற்களைக்கொண்டே மதிப்புரைகளின் தரத்தை எடைபோடமுடியும். புத்தக விற்பனையும் (முதல்பதிப்பு இரண்டாம்பதிப்பு என மார்தட்டிக் கொண்டாலும்) பதிப்பாளர் கட்டிக்காக்கும் தேவரகசியமாக இருக்கிறசூழலில், ஏதோ எழுதி புத்தகங்களை நாலுபேருக்குக் கொண்டுபோகின்றார்களே என்ற அளவில்தான் நம்முடைய விமர்சனங்களை ஏற்கவேண்டி இருக்கின்றன. அடுத்து தமிழில் மதிப்புரைகள் எழுதுவதென்றால், பழங்கால சினிமா பாட்டுப் புத்தகங்களில் கதைச்சுருக்கம் சொல்வதுபோல படத்தின் மொத்தக் கதையையும் தெரிவித்துவிடும் கோட்பாடுஉண்டு. பாட்டு புத்தகத்திலாவது முடிவை வெண்திரையில் காண்க, எனச் சொல்லப்பட்டிருக்கும், நமது விமர்சகர்களோஅதையும் எழுதி, புத்தகத்தை வாங்க நினைக்கும் ஒன்றிரண்டு வாசகர்களையும் வாங்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். ஆதியோடந்தமாக படைப்பைச் சுருக்கிச் சொல்வது விமர்சனம் ஆகாது. சரி விமர்சனத்தை அல்லது மதிப்புரையை எப்படி எழுதலாம், மேற்கண்ட இருகுறைகளையும் தவிர்த்து எழுதும் முயற்சியேகூட நல்லமதிப்புரைக்கு வித்திடலாம்.
விமர்சகர்யார்?
அ. வாசிப்பு அனுபவத்தை எழுதுவதுவேறு, விமர்சனம் எழுதுவது வேறு. விமர்சகருக்கு எதை விமர்சசனம் செய்ய அல்லது மதிப்பிட நினைக்கிறாரோ அதுபற்றிய ஞானம் வேண்டும். சிற்பக் கலையின் நுட்பங்களை அறியாது ஒருசிற்பியை அவன் வடித்த சிற்பத்தை மதிப்பிட முனைவது அபத்தம். கலை இலக்கியத்தின் எந்தபடைப்புக்கும் இதுபொருந்தும். தவறினால் உண்மை நிறைகுறைகளை அறியத்தவறி மொக்கையாக நான் மெய்சிலிர்ந்தேன், கண்ணீர் மல்கினேன் என்று கூற வேண்டிவரும் அல்லது எடுத்துக்கொண்ட நூலை மறந்து மனைவி(அல்லதுகணவர்) கொடுத்த காப்பியையோ முந்திரிபருப்பு பக்கோடாவை பற்றிய விமர்சனமாக மாறும் ஆபத்துமுண்டு.
ஆ. நூலாசிரியருக்கோ, பதிப்பாளருக்கோ தான் எழுதவில்லை, நூலை அறிந்திராத வாசகருக்கு எழுதுகிறோம் என்றஎண்ணத்துடன் கலைஇலக்கியத்தை மதிப்பிடுகிறவரே, ஒரு நல்ல விமர்சகர்ஆவார்.
இ. படைப்பு பூஜைக்குரியதும் அல்ல படைத்தவர் எம்பெருமானும் அல்ல எனவே விமர்சகர்கள் தங்களை அர்ச்சகரிடத்தில் வைத்து ஆராதனை செய்யாமல், படைப்பு என்ற பணியை படைப்பாளி என்ற சேவகர் எப்படி செய்திருக்கிறார் அப்பணி தங்கள் எதிர்ப்பார்ப்பிற்கும், திருப்திக்கும் ஏற்றவகையில் முடிக்கப்பட்டிருக்கிறதா என நினைக்கும் எஜமானர் இடத்தில் தங்களை நிறுத்தி விமர்சகர்கள் இயங்கவேண்டும்.
ஈ. கைகட்டிஅல்ல, கைநீட்டிச் சொல்லப்படுவது விமர்சனம் என்பதை நண்பர்கள் மறக்கவேண்டாம். அதற்காக ஏகவசனத்தை உபயோகிக்கவேண்டும் என்பதுபொருளல்ல, உங்கள் ரசனைக்கு உடன்படாதவை இருப்பின் நாகரீகமாக படைத்தவர் மனம் புண்படாதவாறு சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
உ. எழுதுகிறவர் கோட்பாடுகளை முன்வைத்து எழுதுவதில்லை. மாறாக நவீனவிமர்சகர்களுக்கு இன்றையபடைப்பையும் படைப்பாளிகளையும் அணுக ஆழமாக புரிந்துகொள்ள நவீனஇலக்கியகோட்பாடுகள்பற்றிய ஞானம் : மார்க்ஸ்சியம், பெண்ணியம், பெரியாரியம், எதார்த்தவாதம், மிகைஎதர்த்தம், பின்நவீனத்துவம், அமைப்பியல் போன்றவற்றைக் குறித்த தெளிவான அறிவும் வேண்டும். அவை ஆசிரியரையும் நூல் முன்னெடுக்கும் கருத்துக்களையும் அலகிட விமர்சகருக்குஉதவலாம்.
விமர்சனம் அல்லது மதிப்புரை எழுதுவதற்கென பொதுவில் சிலஒழுங்குகளை கடைபிடிக்கிறார்கள் அவற்றில் முக்கியமானவை :
அ. வாசிப்பு
மதிப்புரை எழுத சராசரி வாசிப்புபோதாது. கவனமான வாசிப்பு தேவை. நூலில் ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், ஆசிரியர்கூற்றும், குறுக்கிடும்சம்பவங்களும், உரையாடல்களும்முக்கியம்.
ஆ. நூலும் நூலின்பொருளும்
நூலின் தலைப்பும், நூலின் மையப்பொருளும் பிரதியை முன்னிலைப் படுத்திருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். நூலை முதன்முறை வாசித்துமுடிந்ததும் அமைதியாக அமர்ந்து நூல்சார்ந்த விஷயங்களைஅசைபோட்டுபார்க்க, முக்கியமானவை நம்மனதின் மேல்தட்டில் படிந்திருப்பதைஉணரமுடியும். அவ்வாறே, நூலின் மறுவாசிப்பு ஆசிரியருக்கும் நமக்குமான இடைவெளியைக் குறைத்து கூடுதலாகப் படைப்பையும் படைப்பின் பொருளையும்புரிந்துகொள்ளஉதவலாம். நூலாசிரியர் தன்னுடைய எழுத்துகொண்டு எதைச்சொல்ல நினைக்கிறார். அதைச்சொல்வதற்கு அவர் கையாண்டுள்ள எடுத்துரைப்பு, கதைசொல்லும்முறை, உத்தி, சொல்லாடல்கள், தொனி, கதைமாந்தர்கள் தேர்வு அவர்களுக்கிடையிலான உரையாடலை அமைத்துக்கொண்டிருக்கிறபாங்கு, சம்பவங்களின்கோர்ப்பு, சம்பவிக்கும்காலம், நூலின்தொடக்கம், முடிவு முதலானவை நூலுக்குப்பலம் சேர்த்திருக்கிறதாஇல்லையா என்பதையும் மதிப்புரையில் சொல்லவேண்டும்.
மதிப்புரை எழுத சராசரி வாசிப்புபோதாது. கவனமான வாசிப்பு தேவை. நூலில் ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், ஆசிரியர்கூற்றும், குறுக்கிடும்சம்பவங்களும், உரையாடல்களும்முக்கியம்.
இ. மொழியும்அழகியலும்
கலையும்இலக்கியமும்அழகியல் சார்ந்தபடைப்பு. பேராசிரியர் க. பஞ்சாங்கம் கூறுவதுபோல «இலக்கியம்எ ன்பதுமொழிவிளையாட்டு » குறிப்பாக புனைவுகளில் மொழி கூடுதல் பங்களிப்பைத் தந்து வாசிப்பை சுகமாக்குகிறது. சொற்கள் தேர்வு, வாக்கியத்தில் அவற்றுக்கானஇடம், கலைச்சொற்கள், பேச்சுமொழி, வட்டாரமொழிகளின்உபயோகம், பிறமொழி சொற்களை ஆசிரியர்கையாளுவது ஏன்எதற்காக, அதற்கான அவசியம்தான் என்ன என்பதையெல்லாம் நுட்பமான வாசிப்பின்மூலம் கண்டறியலாம். நூலில் இடம்பெற்ற சுவையான வரிகளையோ, பத்திகளையோவிமர்சனத்தில் எடுத்தாண்டு, இரசனையைப்பகிர்ந்துகொள்ளலாம்.
ஈ. நூலைக்குறித்தமுடிவு
நூலைக்குறித்து நேர்மறையான அல்லது எதிர்மறையான விமர்சகர்களின் கருத்தும்முக்கியம், இரண்டுமே மிகையற்றுஇருக்கவேண்டும்.
எழுத்தைப் போலவே விமர்சனப்பார்வையும்தொடர்ந்துஎழுத செம்மைபெறும். போட்டிக்குவந்த கட்டுரைகளில் பலகட்டுரைகள்நன்றாக எழுதப்பட்டுள்ள்ளன. பெரியவர்வெங்கட்சாமிநாதன்போட்டியின்முடிவைத்தீர்மானித்திருப்பது, நல்லஆரம்பம். எழுத்தைப்போலவே மதிப்புரை எழுதவும் நண்பர்கள் ஆர்வம்காட்டவேண்டும். நவீனத் தமிழ் இலக்கியக்கொடி படர்ந்துதழைக்கஅதுஉதவும். . ————————————————————————————-