இதனை மேலே படிப்பதற்கு முன்பாக நான் இடைச்சாதியை சேர்ந்தவன் எனச் சொல்லிவிடுகிறேன். தற்காப்புக்காக. உண்மையில் சொந்தநாட்டைவிட்டு ஏதேதோ காரணங்களை முன்னிட்டு புலம்பெயர்ந்த பலரும் சாதி சமயத்தை மறந்துதான் வாழ்கிறார்கள், கமலா ஹாரீஸ் அதன் விளவுதான். எனக்குப் புதுச்சேரிக்கு வந்தால்தான், என்னைத் தேடிவரும் உறவினர்களால் தான் சாதி நினைவுக்குவரும். இங்கு வந்தால் மறந்துபோகும். நல்லெண்ணத்தோடு என்னை பெருமைபடுத்தவந்த சாதிக்கார ர்களை தவிர் த்த துண்டு. நான் பெற்ற அறிவு அப்படியொரு நிலைபாட்டில் என்னைத் தள்ளியது.
அம்பை நான் மதிக்கின்ற மூத்த எழுத்தாளர், அவர் எழுத்துக்களில் ஒருவாசகனாக எழுத்தாளனாக அனுகி பிரமித்திருக்கிறேன். அவர் எங்கிருந்து வந்தார் அவர் நதிமூலம் ரிஷிமூலமென்ன என்பது எனக்கு முக்கியமல்ல. அவருடைய எழுத்து முக்கியம்.
தமிழை உண்மையில் நேசிப்பவர்கள் படைப்பின் அழகியலையும் நுட்பத்தையும் உணந்தவர்கள் சாதி சமயத்தை தூக்கிப்பிடிக்க மாட்டார்கள். அம்பை தன்னை பாசிஸ்டு என ஒரு சிலர் விமர்சிப்பதாக வருத்தபட்டார். நான் அதை ப்பொருட்படுத்தவேண்டாம் என்றேன். பாரதியோ, உ.வே சாமிநாதய்யரோ இன்றிருந்தால் அவர்களையும் பாசிஸ்டு என நாம் சொல்லியிருப்போம்
பிராமண சாதியில் ஒரு சிலர் தவறிழைத்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த இனத்தையும் வசைபாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் அனைவருமே எந்த சமயத்தைச் சார்ந்தவராயிலும், எந்த சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் 100 விழுக்காடு அசல் நெய்யினால் படைக்கப்பட்டவர்களல்ல என்பது என் தாழ்மையான கருத்து. பிரான்சு நாட்டிலும் வீட்டை பூட்டிவிட்டுத்தான் வெளியில் செல்ல வேண்டியிருக்கிறது, இந்தியா வந்தாலும் வீட்டை பூட்டிவிட்டுத்தான் வெளியில் செல்ல வேண்டியிருகிறது. அதற்காக ஒட்டுமொத்த பிரெஞ்சுகாரர்களும் அல்லது இந்தியர்களும் கள்ளர்கள் எனமுடிவுக்கு வருவதைக் காட்டிலும் வேறொரு அபத்தம் இருக்கமுடியாது.
நீங்கள் தமிழுக்காகவும் அதன் பெருமைக்காகவும் உழைப்பவர் எனில் உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன், தவறிழைத்தவர் யாராயினும் அதற்காக குரல்கொடுக்கும் மனங்களை என்னால் புரிந்து கொள்ளகொள்ள முடிகிறது. இவன் நம்ம ஆளு அதனால லைசென்ஸ் இருக்கு, அவன் எதிரி எனவே எழுந்தாலும் தப்பு உட்காந்தாலும் தப்பு என்பது உங்கள் கருத்தாக்கம் எனில் உங்களிடமிருந்து விடைபெற விருப்பம்.
எனக்கு எதிர்பார்ப்புகளில்லை என்பதால் எடுத்த முடிவு.