கடந்த 19 நவம்பர் அன்று சித்தூர் அரசு கல்லூரி, பிறழ் சர்வதேச ஆய்விதழ் இருவரும் இணைந்து நடத்திய ஒப்பீட்டுக் கோட்பாடுகள் அடிப்படையிலான எனது உரை தலைப்பு புனைகதை உலகம் : கிழக்கும் மேற்கும்.
அ. கோட்பாடுகள்
உரையில் ஓரிடத்தில் கோட்பாடுகள் தேவைவையில்லை என – ( ஒப்பீடு கோட்பாடு அடிப்படையில் உரையை அமைத்துக்கொண்டிருந்தும்) – ஓரிட த்தில் குறிப்பிட்டேன். இது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த விளக்கம்.
1. நிகழ்ச்சியில் பங்கெடுத்த பிற பேராசிரிய பெருமக்கள் அடிப்படையில் ஆய்வறிஞர்கள், கோட்பாடுகளை முன்வைத்து தங்கள் உரையை அமைத்துக்கொண்டார்கள்.
நான் ஆய்வாளன் அல்லன், ஒரு கலைஞன் எழுத்தாளன், நிகழ்ச்சியின் உரைப்பொருளுக்கு ஏற்ப எனது தலைப்பை தேர்வுசெய்தாலும் அதை ஒட்டியே பேசினாலும், கோட்பாடுகள்பற்றிய எனது கருத்தை சொல்லும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டேன். உரையைக் கேட்ட நண்பர்களும் அது சார்ந்த கேள்வியை எழுப்பவில்லை, இருந்தபோதும் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருப்பதால் இச்சிறு விளக்கம்.
கோட்பாடுகள் பற்றிய ஞானம் தேவையா ?
தேவை தேவை. திறனாய்வாளர்களுக்கு மட்டுமல்ல இலக்கியவாதிகள், படைப்பாளிகள் அனைவருக்கும் தேவை.
அடிப்படையில் நான் படைப்பாளி. அது பற்றிய ஞானம் எனக்கும் வேண்டும். யாப்பிலக்கணம் இல்லாமலும் இன்று கவிதை எழுதலாம் என்கிறபோதும், யாப்பிலக்கணம் பற்றிய புரிதலை இன்றைய கவிஞன் கொண்டிருப்பதில் தவறு இல்லை. யாப்பிலக்கனத்துடன் எழுதும் மரபுக் கவிதயோ, யாப்பிலக்கணத்தை வேண்டாமென்று ஒதுக்கிய புதுக் கவிதையோ, எதுவாக இருப்பினும் அதில் கவிதைப் பண்பு இருக்கிறதா, . கலைப்படைப்புக்குரிய நுட்பங்களும் நேர்த்திகளும் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
கோட்பாடுகளை பொத்தாம் பொதுவாக நிராகரிக்க இல்லை. ஒரு படைப்பாளியின் நிலைப்பாடாக வேண்டாமென்றேன். ஒட்டுமொத்த படைப்பாளிகளையும் கலந்து ஆலோசித்து அவர்களின் பிரதிநிதியாக இதை தெரிவிக்க இல்லை. இது எனது சொந்தக் கருத்து, இதில் ஒரு சிலர் உடன்படலாம் , சிலர் மறுக்கலாம்.
கோட்பாடுகள் அரூப தொழில் நுட்ப கருவிகள். இவ்வியங்கியல் அலகுகள் மனிதர் வாழ்வின் ஒட்டுமொத்த நகர்வை சீராக முன்னெடுத்துச்செல்ல ஓர் ஒழுங்கைப்பேண நிச்சயம் தேவை. ஆனால் கலையும் இலக்கியமும் அறிவியல் அல்ல அதற்கு ஒழுங்கு அவசியமற்றது. அதை கோட்பாடுகள் என்ற பட்டியில் எதற்காக அடைக்கவேண்டும் என்பதென் கேள்வி.கோட்பாட்டிடம் ஒப்படைக்கும் மனம் சர்க்கஸ் விலங்காக மாறும் அபாயம் உள்ளது. கோட்பாட்டின் சாட்டைக்கு அஞ்சி சேட்டைகள் செய்யக்கூடிய நெருக்கடி உள்ளது. கலையும் இலக்கியமும் தளைகளின்றி சுதந்திரமாக சொல்லப்படவேண்டும் என்ற ஆதங்கத்தில் தெரித்த வார்த்தைகள் அவை.
கோட்ப்பாடுகள் பற்றி தெளிவாக புரிந்துகொண்டது பஞ்சுவின் நூல்களால். அதன் பின்னர்தான் மேற்கத்திய நூல்களை வாசித்தேன்.
குறிப்பாக மேலை நாட்டு படைப்பாளிகள் பலரும் தங்களுக்கு முந்தைய காலத்து கோட்பாடுகளை நிராகரித்தவர்கள் என்ற உண்மையும் என் வாத த்திற்குத் துணைசெய்கிறது
அல்பெர் கமுய் அபத்தவாத கோட்பாட்டிற்கு வக்காலத்து வாங்கியவர். அவர்தான் இப்படி எழுதுகிறார்.
« நம்முடையத் தனித்தன்மையை விலக்கிக்கொண்டு எப்போது கொள்கை அல்லது சித்தாந்தத்திடம் முழுமையாக நம்மை ஒப்படைத்து விடுகிறோமோ அக்கணத்தில் குற்றம் தன்னை நியாயப்படுத்த முனைகிறது அதுவே ஒரு நியாயமாக உருப்பெறுகிறது » ‘
நோபல் பரிசு கூறித்து பிறகு எழுதுகிறேன்..