கொச்சின் சீனா(Cochinchine) – இந்தோ சீனா(Indochine) – சைகோன்
அ. இந்தியாவின் மறுபெயர் கொச்சின்
ஆங்கிலேயருக்குப் பதிலாக போர்த்துகீசீசியர் இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டிருந்தால் அனேகமாக இந்தியா கொச்சின் என்றே அழைக்கப்பட்டிருக்கும். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிகத்துறைமுகமாக பெரிதும் உதவிய கொச்சின் பெயராலேயே இந்தியாவை போர்த்துகீசியர்கள் அழைத்தனர். அதாவது அன்றைய போர்த்துகீசியர்களுக்கு கொச்சின் என்பது இந்தியா. இந்த நிலையில் சீன மற்றும் இந்தியப் பண்பாட்டின் தாக்கமிருந்த சயாம் (இன்றைக்கு தாய்லாந்து), லாவோஸ், கம்போடியா, தொங்க்கன், அண்னம் பகுதிகள் அடங்கிய தூரகிழக்கு பகுதிகளை தொடக்கத்தில் மேற்குலகும் கொச்சின்சீனா என்றே அழைக்கத்தொடங்கி பின்னர் இந்தோ-சீனா ஆனது. பிரெஞ்சுக் காரர்களின் கைவசம் சயாம் நீங்கலாக பிறபகுதிகள் வந்தபோது, கொச்சின் சீனா என்ற பெயரில் ஒரு பிரதேசம் உருப்பெற்று, அதனுடன் தொங்கன், அண்ணம், லாவோஸ்,கம்போடியா இணைக்கப்பட்டு(Indochine française)நூறாண்டுகள் பிரான்சுநாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன(1954 வரை). 1950 களில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கம்யூனிஸம் வலுப்பெற அதன் தாக்கம் இந்தோ சீனாவிலும் எதிரொலித்தது. சீனாவை ஒட்டியிருந்த தொங்க்கன் பகுதியில் பொதுவுடமை வாதிகள் வியட் மின்கள் வலுப்பெற்றார்கள். இந்தோ சீனாவில் வியட் இனத்தினர் தங்கள் அடையாளத்தை இழந்துவருகிறோம் என்கிற உணர்வில் இருக்க அதற்குத் தலமையேற்ற ஹோ சி மின் வியட்னாம் பொதுவுடமைக் கட்சியைத் தொடங்கி தாக்குதலை ஆரம்பித்தாார். பிரெஞ்சுகார ர்களுடன் நடந்த போரின் இறுதியில் அல்ல து முதல் இந்தோ சீனா யுத்தத்தின் முடிவில் வடவியட்நாம் கம்யூனிஸ்டுகளின் கையிலும், தென் வியட்நாம் மேற்கு மற்றும் அமெரிக்க ஆதவுடன் அரசாண்ட ஆட்சியாளர்கள் கையிலும் போனது. பின்னர் இருப்பந்த்தைந்து ஆண்டுகால போரின் முடிவில் 1975 ல் அமெரிக்கா வரலாறுகாணாத ஒரு தோல்வியைச் சந்திக்க வியட்நாம் பொதுவுடமை வாதிகளின் கைவசம் வந்த து. வியட்நாம் கம்யூனிஸப் படையிடம் “தியன் பியன் பூ(Diên Biên Phu) யுத்தத்தில் (1954்) பிரெஞ்சுக்காரர்கள்சந்தித்த தோல்வியும் அவர்களால் ஜீரணிக்க கூடியதல்ல. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். பதினோராயிரம் கைதிகள் வியட் மின்களின் பிடியில் சிக்கியதாகவும் அவர்களில் சில ஆயிரம் கைதிகளையே உயிருடன் திரும்ப பெற முடிந்த தாகவும் வரலாறு. பிரெஞ்சு ராணுவத்தை பொறுத்தவரை உயர் அதிகாரிகளைத் தவிர பெரும்பாலான படைவீரர்கள் பிரெஞ்சுக் காலனிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் சமபங்கு உள்ளூர் வியட்நாமிய கத்தோலிக்கரும் இருந்தனர்.
ஆ
. புதிய நாவல்
புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருந்தபோது, வறிய மக்கள் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து சைகோனுக்குப் போகிறேன் என்பார்கள். பிரெஞ்சு ராணுவத்தில் காலனிய படைப் பிரிவு பிரசித்தம். இவர்கள் அன்றைய கொச்சின் சீனாவிலிருந்த சைகோனுக்கு (தற்போதைய பெயர் ஹோசிமின் ) புதுச்சேரியிலிருந்து கப்பலில் சென்றார்கள். தொடக்கத்தில் இந்தோ சீனாவின் பாதுகாப்பு பணியிலிருந்த இவர்கள் பின்னர் வியட் மின்களுடன் போரிலும் பங்கேற்றனர். வியட்னாம் பிரெஞ்சுக் கார ர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின் இப்புதுச்சேரி மற்றும் காரைக்கால ராணுவ வீர ர்கள் பிரான்சு நாட்டில் குடியேறினர், சிலர் புதுச்சேரிக்குத் திரும்பினர். இவர்களில் பலருக்கு வியட்நாமில் ஒரு குடும்பம், இந்தியாவில் ஒரு குடும்பம் என்ற இரட்டை வாழ்க்கை உண்டு.
இந்த சைகோன் புதுச்சேரிவாசிகளின் வாழ்க்கையை புதுச்சேரி மற்றும் இந்தோ சீனா (வியட்நாம்`)பின்புலத்தில் கதையை விரிப்பது என் நோக்கம் கதைக்களன் காலம் 1930 – 1954.
—————————————-