I can’t Breath
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழையத் திரைப்படப் பாடல்.
சகமனிதனை நேசிக்க ஒரு காரணம் இருக்கிறதெனில் வெறுக்கவும் எதோ ஒரு வெண்டைக்காய் காரணம் இருக்கவே செய்கிறது. வெள்ளையர்களுக்கு ஆப்ரிக்க மக்கள்மட்டுமே கறுப்பர்கள் அல்ல நாமனைவருமே கறுப்பர்கள். என்னுடைய பிரான்சு அனுபவத்தில் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். பல அலுவலங்களில் அவர்கள் முக குறிப்பு தெரிவிக்கும் செய்தியை அறிந்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த இலங்கை நண்பர் ஒருவரின் மகன் பிரெஞ்சுப் பெண்ணொருத்தியை காதலித்து மணம் முடித்தார். திருமண வரவேற்பில் மகனின் பெற்றோரை அவர் சார்ந்த குடும்பங்களை அவருடைய வெள்ளையர் சமப்ந்தி குடும்பம் எப்படி நடத்தினர் என்பதை அத்திருமணத்தில் கலந்துகொண்டவகையில் நானறிவேன்.
ஒரு எல்லையை நிர்ணயம் செய்துகொண்டு கை குலுக்குவார்கள். இதை வெள்ளையரின் பொதுவான குணம் என முடிவுக்கு வரலாமா ? இயலாது. அமெரிக்க கறுப்பர் போராட்ட த்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் நடந்த போராட்ட த்தில் ஐரோப்பிய இனத்தவரும் பங்கேற்றனர் (இங்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கறுப்பரின இளைஞர் கைதுசெய்யப்பட்டபோது மரணித்திருந்தார், அச்சம்பவத்தை அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கு இணையாகப் பார்க்கின்றனர் இளஞரின் குடும்பமும் அவர் ஆதரவாளர்களும்).
வெள்ளையர்களின் நிறவெறி ஒருபக்கம் இருக்கட்டும், நாம் எப்படி ? நமது சாதிப்பிரிவினைகள் நமது சமூகத்தில் அனைத்து மக்களையும் சரிசம மாய் நத்துகிறதா ? இங்கே வெளியில் மார்க்ஸியம் பேசுபவர்கள், பெரியாரியம் பேசுபவர்களில் எத்தனைபேர் சொந்த வாழ்க்கையில் அக்கொள்கைக்கு நேர்மையாக நடந்துகொண்டிருக்கின்றனர் ? அவன் நம்மவன் என்றுதான் இங்கு காய்கள் நகர்த்தப்படுகின்றன. அவர்களின் குற்றமும் அல்ல, மனிதர் குண த்தின் இயல்பு அது. விதிவிலக்கில்லையா ? எப்படி இல்லாமல் போகும். ஐந்து அல்லது பத்து விழுக்காட்டினர் உண்மையாகவும் இருக்கலாம். முரண்களை நம்பியே உலகம் இயங்கு கிறது.
அண்மையில் la Tresse என்றொரு பிரெஞ்சு நாவலைபடித்தேன்.Laetitia Colombani என்ற பெண்மணி எழுதிய நாவல். நாம் இந்தியாவிலிருந்துகொண்டு அமெரிக்க கறுப்பினத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது போன்று அவர் ஸ்மிதா என்ற தலித் பெண்ணை மையமாக வைத்து பிரான்சிலிருந்துகொண்டு இந்தியாவைச் சாடுகிறார், இந்தியாவில் எதுவும் சரியில்லை என்கிறார். அந்நாவலில் ஸ்மிதா அன்றி இரண்டு பெண்ள் வருகிறார்கள். ஒருத்தி ஜூலியா இத்தாலியைச் சேர்ந்தவர், மற்றவர் சாரா கனட நாட்டைச் சேர்ந்தவர். ஜூலியாவையும் சாராவையும் பிரச்சனைகளியிலிருந்து மீள முடிந்த பெண்களாக சித்தரிக்கும் நூலாசிரியர் இந்தியத் தலித் பெண்ணை(பகல் பூர், உத்திரபிரதேசம்) இந்திய சமூக அமைப்பின்படி கைகளால் நாள் முழுக்க மலம் அள்ள பிறந்தவள், ஊருக்குள் நுழைகிறபோது, அவளைக்ண்டு மற்றமக்கள் ஒதுங்கி க் கொள்ள வசதியாக காக்கையின் இறகை தலையில் அப்பெண்மணி சொருகிக் கொள்வது கட்டாயம், தலித் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாது, அவ்வாறு பள்ளிக்குச் சென்ற ஸ்மிதாவின் பெண்ணை பிராமண ஆசிரியர் பிரம்பால் அடித்து பள்ளியிலிருந்து துரத்திவிடுகிறார். இப்படியல்லாம் கதை நீளும். மூன்று பெண்களின் வாழ்க்கையைத் தலைமயிர் பிணைப்பதாக வரும் புனைவில் ஜூலியாவின் இத்தாலி சமூக அமைப்பு குறித்தும் சாராவின் கனடா நாட்டு சமூக அமப்புக் குறித்தும் விமர்சனங்கள் இல்லை. ஆனால் இந்தியா என வருகிறபோது, ஆசிரியரின் கை நீளுகிறது, இழிவான விமர்சனங்கள்.
இந்தியாவில் நலிந்த பிரிவினர் படும் அவலம் ஊரறிந்த சத்தியம். மறுப்பதற்கில்லை. ஆனால் கதையாசிரியரின் எழுத்தில் ஒருவகை sadism இருந்தது. பிரெஞ்சு மொழியில் நூலை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினேன் பல பிரெஞ்சு நண்பர்களுக்கு அனுப்பியும் வருகிறேன். இந்நிலையில் எனக்குள் வேறொரு கேள்வியும் எழுகிறது.
அமெரிக்க கறுப்பரினத்திற்கு தாராளமாக குரல்கொடுப்பதிலுள்ள நியாயம் புரிகிறது. ஆனால நம்முடைய மனிதர்களை சரி சமமாக நடத்துகிறோமா ? என என்னை நானே கேட்டுக்கொண்டேன். la Tresse ஆசிரியர் போன்று மான்களிடம் கருணைகாட்டும் சைவப் புலிகள் நம்மிலும் பலர் இருக்கிறார்கள். கொத்தடிமைகளாக செங்கற் சூளைகளிலும், தொழிற்சாலைகளிலும் பணிசெய்துகொண்டு, சாலையோரம், கழிவுநீர்க் கால்வாய்கள் ஓரம் குடிசைகளில் இந்தியாவெங்கும் வாழும் சமூகத்தின்நலிந்த பிரிவினரரின் கழுத்தை மிதித்திருப்பது நம்முடைய கால்கள் இல்லையா, அவர்கள் « we can’t breath ! » என்பது நம் காதில் விழுவதுண்டா ? ஆணனவக்கொலைகள் தெரிவிக்கும் அறம், கறுப்பினத்திற்கு எதிரான வெள்ளையரின் நிறவெறி அதிகாரத்திற்கு எந்த வகையில் குறைந்தது ?
பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் தமிழ்த்திரை ஜாம்பவான்களும், திராவிடத்தை சிவப்புத் தோல் நடிகைகளிடம் அடகுவைக்கும் அரசியலும் இனமானமும் தெரிவிப்பதென்ன? இரண்டு தமிழ் பெண்களுக்கு கறுப்பு வண்ணத்தை அடித்து , தமிழிலக்கியத்தையும் அவமதித்து, « எங்கிட்டயும் இரண்டு பெண்கள் இருக்குப் பழகிக்குங்க » என வெடகமின்றி கிடைத்த கூலிக்கு மாரடிக்கும் தமிழறிஞர்களைப் பெற்ற தேசம் நம் தேசம். அதையும் வெட்கமின்றி ரசித்தோம். இங்கு யாருக்கும் வெட்கமில்லை என்பதுதான் உண்மை.
சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா? உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?