ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6

 

          பிள்ளையின் சொல்வன்மை :

 

« கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். »  என்பது குறள்.

சொல் என்பதைப் போகிறபோக்கில் ஓசையும் மொழியும் சார்ந்த விடயமாக, மொழியின் ஒரு கூறாக கருதி கடந்து செல்வது அறியாமையின் குறியீடு. அதிலும் குறிப்பாக தலைமைப் பண்பை வேண்டுவோருக்குச் சொல்தான் பல நேரங்களில் அவர் எண்ணித் துணிகின்ற கருமத்திற்கு ஒளியூட்டுகிறது, எதிர்பார்த்த பலனை அவர் தந்த உழைப்பிற்கு, அந்த உழைப்பை கோரிய நிறுவனத்திற்கு உரிய பயன்பாட்டை அள்ளி வழங்குகிறது.  சொற்கள் நாம் பிறருட ன்  உறவாட உருவானவை.  சரியாக உபயோகித்தால் பெருங்கூட்ட த்தை உங்கள் பின் தொடரவும் செய்யும், தவறினால் உங்களை அனாதை ஆக்கவும் கூடும். கட்டளை, வேண்டுகோள், ஆலோசனை, அறிவுரை, தூண்டுரை, கருத்து  எனச் சொற்களுக்கு பன்முகத்தன்மை உண்டு.  உச்சரிக்கப்படும் தொனியைபொறுத்து, காலத்தைப் பொறுத்து, உச்சரிப்பவர் உள்வாங்கிகொள்பவர் இருவரின் மனநிலை, பட்டறிவு சார்ந்து அகன்ற பொருள் தரும் வல்லமை பெற்றவை சொற்கள், எனவேதான் அவற்றைக் கவனமாகச் கையாளக் கடமை பட்டுள்ளோம்.

எல்லா ஆளுமைகளையும்போலவே ஆனந்தரங்கப்பிள்ளையின் தொழில்திறனிலும் சொற்கள் அளப்பரிய பங்கினை வழங்கியுள்ளன.  எதிர்கொள்ளும் மனிதர்களை எளிதாக ஈர்க்கும் உருவத்தை ஆனந்தரங்கப்பிள்ளை பெற்றிருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் – திடகாத்திரமான உடல்,  முறுக்கிய மீசை, நெற்றியில் சூரணம், கிரீடம்போல ஒரு தலைப்பாகை.  உடலை மறைக்க விலாவில் முடிச்சிட்ட வெள்ளை வெளேரென்று ஓர் அங்கி, இடையில் ஒரு குறுவாளென்று அம்மாமனிதரின் தினசரியை அணிசெய்த கம்பீரமான தோற்றம், அவர் பெயரை உச்சரிக்கும் தோறும் கண்முன் நிற்பவை.   தோற்றத்தால்  அவர் பேச்சுக்கு வரவேற்பு கிடைத்ததா அல்லது  சாதுர்யமானப் பேச்சு அவர் தோற்றத்திற்கு பொலிவையும் வலிமையையும் அளித்ததா என்பது விடைகாண இயலாத கேள்வி.

« அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்க, மானம் உடைய தரசு »என்ற குறள் தரும் நீதியை முற்றாக நிராகரித்தவை  முடியாட்சிகள். பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய அரசுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டமும் நீதியும் ஆள்வோரின் நலத்திற்காக என நம்பப்பட்ட காலம், எனவே அவர்களுக்கு ஊழியம் பார்த்தவர்களும் அதை உணர்ந்து பணி ஆற்றவேண்டிய நெருக்கடி.

பிள்ளையின் காலத்தில், புதுச்சேரி அருகில் பல சிற்றரசுகள் இருந்தன. எங்கும் அரசுக்கட்டில் யாருக்குச் சொந்தம் என்பதில் பலத்தப்  போட்டி.  தில்லியில் மொகலாய அரசு பலவீனமடைந்த நிலையில் ஹைதராபாத் நிஜாம் வாரிசுகளிடையே யுத்தம்.  இந்த வாரிசுரிமைப் போட்டி அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பரவிற்று. ஆற்காடு அதிலொன்று. விளைவாக கர்னாடக யுத்தம், தொடர்ந்து தொண்டைமண்டல பிரச்சனைகள், மராத்தியர் படையெடுப்பு, ஆற்காடு, செஞ்சி அரசியல் மாற்றங்கள், இவர்களை ஆட்டுவித்த ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கிடையில் உருவான போட்டிகள்  என்பது அப்போதைய அரசியல் சூழல்.

நிர்வாகிகளின் சொந்த விருப்பு வெறுப்புகள், அரசியல் இலாபம், பொருளாதாரப் பலன்கள் என்கிற பின்புலத்தில் ஓர் அரசு மற்றொரு அரசின் நட்பைக் கோருவதும், தவறினால் யுத்தம் நத்துவதும், முறையான  யுத்த த்திற்கு வாய்ப்பில்லை என்கிறபோது  திடீர் தாக்குதலை நடத்துவதும், எதிரி அரசின் எல்லைக்குள் பிரவேசித்து  குடிமக்களின்  உடமைகளைப் பறிப்பதும், சூறையாடுவதும்  சமூகச் சூழல்.

இவ்வாறான அரசியல் சமூக சூழலில் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்கு, அதனுடைய  நிர்வாகிகளுக்கு, அவர்களின் கீழிருந்த குடிகளுக்கு, எதிரிகளுக்கு, நண்பர்களுக்கு எல்லோரிடத்திலும் நம்பிக்கைக்குரியவராக பிள்ளை திகழ அவருடைய சாதுர்யமான பேச்சும் உரையாடலும், நலன் விசாரிப்பும், பெரும் மாயையை நிகழ்த்தின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

குருவப்ப பிள்ளையின் அகால மரணத்திற்குப் பிறகு அவருடைய உறவினரான ஆனந்தரங்கப்பிள்ளை துபாஷியாக நியமனம் ஆகியிருக்கவேண்டும். அவருக்கு ஏன் துபாஷி பதவி கிடைக்கவில்லை, அவருக்குப்  பதிலாக கனகராய முதலியார் தலைமைத் துபாஷியாக நியமனம் ஆனது எப்படி என்ற கதைகளையெல்லாம் வாசக நண்பர்கள் அறிவீர்கள்.  கனகராய முதலியார் இறந்தபின்னராவது இப்பதவி  உரிய காலத்தில் ஆனந்தரங்கரை வந்தடைந்ததா  என்றால் அதுவுமில்லை. கனகராய முதலியாரின் இறப்புக்குப் பிறகு அவருடைய சகோதரர் தானப்ப முதலியார் நேரிடையாகவும், பிறமனிதர்கள் மூலமும் துபாஷி உத்தியோகத்திற்கு முயன்றார். அவர் கிறித்துவர் என்ற ஒரு தகுதியைத் தவிர வேறு தகுதிகள் இல்லை என்பதால் வணிக நிறுவன அதிகாரிகளால நிராகரிக்கப்படுகிறார். அதேவேளை நிர்வாகிகளின் ஏகோபித்த ஆதரவு பிள்ளையின் பக்கம் இருந்தும், கிறித்துவ குருமார்களின் ஆதரவைப் பெற இயலாத  நிலையில் பிள்ளையில் தலைமைத் துபாஷி நியமனம் தள்ளிப்போகிறது. இத்தகைய சூழலில் பிள்ளையின் நெருங்கிய சினேகிதர் போசே  (M de Bausset)  அழைப்பின் பேரில், ஆனந்தரங்கப் பிள்ளை அவரைச் சென்று பார்க்கிறார்.கடன் பத்திரமொன்றில்  நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க பிணையாகத் தன் கையொப்பத்தை இட்டபின்,  இருவரும்  அன்றைய தகவல்களின் அடிப்படையில்  விவாதிக்கிறார்கள் : எலிஸபெத் என்கிற கப்பல் பற்றிய செய்தி,  கப்பல் நிறுத்தவிருக்கும் காரைக்கால் துறைமுகம், இறக்குமதியாகவிருக்கும் வெள்ளிகட்டிகள், துறைமுகத்திற்கு அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளென்று  நீளும் உரையாடலுக்கு இடையில், ‘போசே’ பிள்ளையிடம் அவருக்கு வரவேண்டிய தலைமை துபாஷி உத்தியோகம் தள்ளிப்போக காரணமென்ன ? எனக் கேட்கிறார். அதற்கு  ஆனந்தரங்கப்பிள்ளை அளிக்கும் பதிலும், அப்பதிலைக் காதில் வாங்கிய போசே பிள்ளையைப்பற்றித் தெரிவிக்கும் கருத்தும் நமது ஆய்விற்கு உரியவை.

« எனக்கென்னத்துக்கு அந்த உத்தியோகம், இப்போது எனக்கு என்ன மரியாதை தாட்சியாயிருக்கிறது (குறைவாக இருக்கிறது) ; அரிகை (வெகுமானம்) நடக்கிறது. பல்லக்கு நடக்கிறது. துரை அவர்களுடைய தயவு பூரணமாயிருக்கிறது. சகல மேன்பாடும் நடக்கிறது. அப்படியிருக்க எனக்கு அந்த உத்தியோகம்(பற்றிய) கவலையில்லை…இதல்லாமல் வர்த்தகம் பண்ணிக்கொண்டிருக்கிதற்குச் சமானமில்லை » என்பது பிள்ளையின் பதில்.  இப்பதிலை முன்வைத்து போசே தெரிவித்ததென்று  பிள்ளை தமது நாட்குறிப்பில் நாம் அறிவது : « இதற்கு ஏன்  நீ விதண்டாவாதமாய்ப் பேசுகிறாய். அப்படிப் பேசாதே. பலவந்தமாய் வந்தால் ஏன் வேணாமென்று  சொல்லுகிறாய். உன்னத்தனை சமர்த்தன் ஒருத்தருமில்லை. …….. சின்ன முதலி (கனகராய முதலியார் சகோதரர்) ஆனால் இந்த உத்தியோகத்துக்கு கப்பாசல்ல(தகுதி அல்ல). கிறித்துவரிடையில் மட்டுமின்றி  தமிழரிலேயும்  கெட்டிக்காரர் நீ ஒருத்தர் தவிர வேறேயில்லையென்று துய்மா நாளையிலேதானே நேமிக்கபட்டு சொல்லப்பட்டிருக்கிறது. இப்பவும் முசே துய்ப்ளேயும் அப்படியே சொல்லியிருக்கிறார். கோன்சேல்காரர் (ஆலோசனை சபையினர்) அத்தனைபேரும் உனக்கு இந்த இடம் வரவேணுமென்று சுவாமியைபார்த்து பிரார்த்திக்கிறார்கள் ஏனென்றால், நீ அவரவர் மனது வர நடந்துகொள்ளுகிறபடியால் அவரவர்கள் உமக்கு இந்த இடம் வந்தால் அவரவர் காரியங்களெல்லாம் செய்து கொடுப்பீரென்றுஅவரவர்க்குத் தார்ப்பரியமாயிருக்கிறார்கள். »

இந்த உரையாடலில் இரண்டு விடயங்கள் தெளிவாக இருக்கின்றன. முதலாவதாகத் பிள்ளை தன்னிடத்தில் கொண்டுள்ள அளவுகடந்த நம்பிக்கை.  இரண்டாவதாக,  ஒட்டுமொத்த பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகிகள் பிள்ளையிட த்தில் கொண்டுள்ள நன்மதிப்பு. « எனக்கு அரிகை நடக்கிறது, பல்லக்கு நடக்கிறது »  எனவே துபாஷி பதவியால் புதிதாகப் பெறுவதற்கு ஒன்றுமில்லை என ஆனந்தரங்கர் பெருமிதம்கொள்வதில் நியாயமுண்டு, காரணம்  «  இசைமுழக்கோடு பல்லக்கில் பயணிக்கவும்,கவர்னர் மாளிகைவரை  போகவும், தங்கப்பிடிபோட்ட கைத்தடி வைத்திருக்கவும், மிதியடியோடு அரசாங்கத்து அலுவலங்களில் தடையின்றி நுழையவும் அவர் உரிமை பெற்றிருந்தார் » என ரா தேசிகம் பிள்ளை பதிவு செய்துள்ளார்.

தலைமைத் துபாஷியாக ஆவதற்கு முன்பாகவும் ஆன பின்னாலும் எங்கெல்லாம் அவர் தேவைக்கு அவசியம்  நேர்ந்ததோ அங்கெல்லாம் நமது ஆனந்தரங்கர் இருந்தார். வணிகராக, தரகராக, ஆளோசகராக, மகாநாட்டாராக சினேகிதராக, குடும்பத் தலைவராக, புரவலராக அவதாரம் எடுக்கும் பாத்திரத்திற்கேற்ப அவருடைய பேச்சாற்றல் ஆலோசனைகளை முன்வைக்கவும், கருத்தைக் கூறவும், பஞ்சாயத்து செய்யவும், சமாதானம் பேசவும், தீர்ப்பு வழங்கவும் உதவிற்று. கவர்னர் முதற்கொண்டு கனகயாய முதலியார் குடும்ப்பிரச்சனைகள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஆனந்தரங்கர் உதவி வேண்டியிருந்தது.

« ஆனந்தரங்கப் பிள்ளை நாட்டு மக்களிடையே ஏற்படும் தகறாறுகளை தீர்த்துவைப்பதுண்டு. நாள்தோறும் ஊர்ப்பொதுச்சாவடிக்குச் சென்று அவ்விடத்தில் ஆராய்ச்சிக்கு வருகிற இத்தகைய வழக்குகளை அவர் நன்றாக பரிசீலனைசெய்து தீர்ப்பளித்துவந்தார். அவர் செய்யும் தீர்ப்புகள்  எல்லாம் இரு திறத்தாலும் பாராட்டப்படுவையாக இருந்தன » என ரா. தேசிகம் பிள்ளை எழுதுகிறார். « முதல் அதிகாரி முதற்கொண்டு கடைசி சிப்பந்ந்தி வரையில் எல்லோரிடத்திலும் சம அன்பைக் காட்டி வந்தவர் ஆகையால் யாவரும் பதிலுக்கு முழு நம்பிக்கை வைத்து தங்களுக்குத் தெரிந்ததை ஒளியாமல் அவர்களும் சொல்லிவந்தார்களென்றும் அதனால் அரசியல் ரகசியங்கள் முதற்கொண்டு தனிப்பட்டவர்கள் குடும்ப விஷயங்கள் வரையில் யாவற்றையும் அறிந்து ஒரு தீர்மானத்துக்கு வர முடிந்தது » என்பது   ஞானு தியாகு என்பவர் தெரிவிக்கும் செய்தி.

இங்கிலாந்தில் அரசியலில் ஏற்பட்ட குழப்பமும், ஆஸ்த்திரியா வாரிசுரிமைப்போரும், பிரான்சுநாட்டுக்கு ஆதாயமாகவும், எதிரிகளான  இங்கிலாந்து  மற்றும் அங்கேரி நாடுகளுக்கு பெரும் இழப்பில் முடிந்ததாகவும் புதுச்சேரிக்கு  செய்தி வருகிறது. இந்த நிலையில் ஆனந்தரங்கர் வழக்கம்போல  கவர்னர் மாளிகைக்குச் செல்கிறார். அலுவலக கணக்காயர் மத்தியே (Mathieu)  என்பவர் ஆனந்தரங்கரைக் கண்டதும், « ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கும் செய்தியைக் கேள்விபட்டீர்களா ? » எனக் கேட்கிறார். அதற்கு, « நான் கேட்ட சமாச்சாரமெல்லாம் பொய்யாயிருக்கும், சிறிது சரிப்படாது. தேவரீர் அவர்கள் வாக்கினாலே மெய்யென்று சொன்னேன். இப்போது கச்சேத்(gazette) படித்துபார்த்துச் சொல்லுகிற படியினாலே யார் சொன்னாலும் மெய்யாயிருக்குமென்றும் அல்லாமல் பொய்வராது »என்பது ஆனந்தரங்கரின் பதில். உண்மையில் நமது ஆனந்தரங்கருக்கு இத்தகவல் முன்னதாக தெரிந்திருக்கிறது, அத்தகவல் உண்மையானது என்பதும் பிள்ளைக்குத் தெரியும். இருந்தும் அவருக்கு கிடைத்த தவலை உறுதி செய்துகொள்ளவும், அரசாங்க செய்தி என்பதாலும் மிகவும் எச்சரிக்கையாக வார்த்தைகளைக் கையாளுகிறார். பிள்ளையின் பதிலில் இடம்பெறும் பொய், மெய் என்ற இரு சொற்களும் அவற்றோடு இணைந்த எழுவாய்களும், இறுதியாக  அதிகாரபூர்வமான செய்தியில் பிள்ளை வைக்கும்  நம்பிக்கையும், பேச்சாளரின்  சொல்வன்மைக்குச் சிறு உதாரணம்.

எல்லோராலும் கொண்டாடப்பட்ட ஆன ந்த ரங்கப்பிள்ளையை விரும்பாத ஒரு கூட்டம் இருந்த து, அக்கூட்டம் கிறித்துவல்லாத ஒரு மனிதர் பிரெஞ்சு நிர்வாகத்தில் இவ்வளவு பெரிய செல்வாக்கினை பெற்றிருப்பதை அசூயையுடன் கவனித்தக் கூட்டம். அவர்களில் முதன்மையானவள் கவர்னர் துய்ப்ளேயின் மனைவி ழான் என்பவள். அவள் தீவிர மதவாதி. பிள்ளைக்குக் களங்கம் கற்பிக்க முன் நின்று உழைத்தவள். அவரது காரியம் யாவற்றையும் சந்தேகிப்பவள். கோள்சொல்பவள். ஆனந்தரங்கப்பிள்ளை தனக்கெதிரான அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், அவளுடைய கணவரின் உதவியுடனே வெகு எளிதாக உடைத்து நொறுக்கினார் என்பதையும் நாளேட்டின் குறிப்புகள் ஊடாக அறிகிறோம்.  ஆகத் தமது பேச்சுதிறந்தாலே பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்குத் தெம்பூட்டியவர் ஆனந்த ரங்கர். புதுவருட வாழ்த்துக்களை ஒவ்வொரு வெள்ளைக்கார அதிகாரியையும் தேடிச்சென்று தெரிவித்த பண்பு, முதலாவது கர்னாடக யுத்த த்தின் போது, ஆற்காடு அரசியலை புரிந்துகொண்டு பிரெஞ்சு கவர்னரை வழிநடத்திய சானக்கிய திறன்,  தேவனாம் பட்டணம் துறைமுகத்தை கைப்பற்ற இயலவில்லையே என புதுச்சேரி கவர்னர் சோர்வுற்றபோது தெம்பூட்ட தேர்வு செய்த சொற்கள்,  என அவருடைய பெருமைகளைக்கூற  பல உதாரணங்கள் இருக்கின்றன.

எந்த் ஐரோப்பியரிடம் அவர் ஊழியம் செய்தாரோ, அவர்களைப் பற்றி இப்படியும் ஒரு விமர்சனத்தை வைக்கும் துணிச்சலையும் நாம் பிள்ளையைதவிர வேறொருவரிட த்தில் காண இயலாது.  ஒரு பிரச்ச்னையில், பிறர் கூறிய தகவலை தீரவிசாரிக்காமல் பிளேசான்ஸ் (M Plaissance) என்கிற அதிகாரி அறிக்கை ஒன்றை தயாரித்து கவனருக்கு அனுப்பிவைத்ததை,  அவரும் ஏற்றுக்கொண்டு பிள்ளையிடம் அதுபற்றி விசாரிக்க :

«  என் மனதிலே தமிழர் விவேகமில்லாத மடையர், சொன்னதை மெய்யாக எண்ணுகிறவர்கள்.  எரோப்பியர்கள் அப்படியல்ல, எதிலும்  பகுத்தறிவு  உண்டு என்று நான் சிறிது நாள் எண்ணியிருந்தேன். இப்போ பார்க்கப்போனால் வெள்ளைக் காரரிலே முசியே பிளேசாண்சை யொத்த அநேகம்பேர் தமிழரைப்பார்க்கிலும் மடையராகவும், கழுதையாகவும் இருக்கிறார்கள். »

(தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s