தமிழா தமிழா….நாளை ?
நேற்று காற்றுவெளி வைகாசி மின்னிதழில் : ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம், என்கிற சிறுகதையை வாசிக்கக் கிடைத்தது ஒரு வார்த்தையில் சொல்வதெனில் அபாரம். எனக்கு இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்த கலை அல்ல, மனித மனத்தையும் சமூகத்தையும் உள்வாங்கிக்கொண்டு சொல்லப்படவேண்டும். சிறுகதை ஆசிரியர் மு. தயாளன் அப்படி எழுதியிருக்கிறார். பாராட்டுகள்.
கதைக்குள் போவதற்கு முன்பாக கதையை முன்னிட்டு என்னுள் விளைந்த கருத்தை, பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன்.
இராமன் எத்தனை இராமனடி பாடலுக்கு எதிர்பாட்டு, ஏற்றப்பாட்டுக்குத்தான் எதிர்பாட்டிருக்க வேண்டுமென்பதில்லை.
இரண்டு பிரெஞ்சு பேராசிரியர்கள் : ஒருவர் தமிழர், மற்றவர் பிரெஞ்சுக்காரர். இருவரும் சந்திக்கின்றனர். அவர்கள் உரையாடும் மொழி என்னவாகயிருக்கும் ? நிச்சயம் பிரெஞ்சு மொழி, அது இயல்பு. காரணம் இருவருக்கும் தெரிந்த பொது மொழி பிரெஞ்சு. மாறாக இரண்டு தமிழ் அறிஞர்கள் : ஒருவர் தமிழர் மற்றவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் சந்திப்பு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள் ? பொதுமொழியான தமிழில்தானே இருக்கவேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. அதை நிராகரித்துவிட்டு தமிழறிந்த இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவர். காரனம் நம் தமிழ் அறிஞருக்கு தமக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதைப் பறைசாற்றவேண்டும். தமிழ் அறிஞரான பிரெஞ்சு காரருக்குள்ள பிரச்சனை நடைமுறை தமிழில் சரளமாக உரையாடுவது.
தமிழில் பல ஆய்வுகள் செய்தவர், சங்க இலக்கியங்களப் பிரெஞ்சுமொழியில் மிகச் சிறப்பாக உள்வாங்கி மொழி பெயர்த்தும் இருப்பார். ஆனால் தமிழில் பேசுவதற்கு அப்பிரெஞ்சு தமிழ் அறிஞருக்குத் தடுமாற்றம். காரணம் இங்கு சென்னைதமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ், கோயம்புத்தூர் தமிழ், மதுரை தமிழ், சேரித் தமிழ், ஜஃப்னா தமிழ் என பல தமிழ்கள். போதாதற்கு செட்டியார் தமிழ், நாடார் தமிழ், பிள்ளைமார் தமிழ், தெலுங்கர் தமிழ், பிராமணர் தமிழ், சினிமாதமிழ், தொலைக்காட்சி காம்பையர் தமிழ் என தசரதனைப்போல தமிழுக்கும் ஏகப்பட்ட பத்தினிகள். இதில் அஃப்சியல் பத்தினி யாரோ ? உலகில் வேறு மொழிகளுக்கு இத்தனை சாளரங்கள் கொண்ட அந்தப்புரம் இல்லை.
ஒரு முறை, மலையாளம் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி, தமிழ் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி இருவரும் மொழிபெயர்ப்பில் கூடுதல் பயிற்சிபெற சென்னை வந்து இறங்குகிறார்கள்.( ஏற்கனவே இதுகுறித்து எழுதியிருக்கிறேன்.) காதில் வாங்கிய தமிழைக் கேட்டு வந்த வேகத்தில் தமிழ் கற்ற பெண்மணி இது சரிப்படாது என பிரான்சு திரும்புகிறார். மலையாளம் கற்ற பிரெஞ்சு பெண்மணியோ தொடர்ந்து இயங்குகிறார். பிரெஞ்சு எடிட்ட ர்களால் அங்கீகரிக்கபட்ட பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் இன்றில்லை. அதன் விளைவு என்ன என்பதை சொல்லவேண்டியதில்லை.
‘இன்று’ எனப்படித்துவிட்டு இண்னைக்கு, இண்னைக்கி இன்னிக்கி என பேசுவதும் எழுதுவதும், பிறப்பால் தமிழரலாதவர்களுக்கும், தமிழ் நிலத்தில் வசிக்காத தமிழ் கற்கும் புதியவர்களுக்கும் மருட்சியை ஏற்படுத்தும் என்பதை உணரவேண்டாமா. இன்றைய நவீன இலக்கியங்கள் பெரும்பாலும் வட்டார வழக்கில் வருகின்றன. ஐம்பது சொற்களைத் திரும்ப திரும்ப உபயோகித்து சிறுகதையை முடித்துவிடுகிறோம். இங்கே நாவல் எழுதக் கூட ஐநூறு சொற்கள் போதும் பலமுறை அவற்றை உபயோகித்து படைப்பை முடித்துக்கொள்ளலாம்.
எனது பிரெஞ்சு மொழி பெயர்ப்புகளைத் திருத்திக்கொடுக்கும் பிரெஞ்சு பெண்மணி திருமதி Lliliane என்பவர் இன்றைக்கும் எதாவதொரு பிரெஞ்சு படைப்பை வாசிக்க நேருகிறபோது அகராதியை புரட்டாமல் வாசிக்க முடிவதில்லை என்கிறார். இந்த ஒரு காரணங்கூட பிரெஞ்சு படைப்புகள் அதிகம் நோபல் பரிசு பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நம்மிட ம் அகராதியைத் தேடவேண்டிய நெருக்கடியை உண்டாக்குகிற நவீன தமிழ் இலக்கியங்கள் உண்டா ? அப்படியே உபயோகித்தாலும் அந்நெருக்கடியைச் சமாளிக்க வருடந்தோறும் நவீன சொற்களை உள்வாங்கிய புதிய அகராதிகள் உண்டா ? ஆனால் கறிக்குதவாத ஏட்டுசுரக்காய் தமிழ் விழாக்களுக்கு நம்மிடத்தில் பஞ்மே இல்லை.
இனி சிறுகதைக்கு வருகிறேன்.
ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்.
கொரோனா தொற்று, ஐரோப்பா, புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம், ஊரடங்கு, இப்பிரசினைகளைக்கொண்டு, ஈழத்தமிழில் சொல்லபபட்ட ஒரு சிறுகதை.
கொரோனாவுக்கென படைக்கபட்ட இரு முதியவர்கள். அவர்கள் மகன் கோபி, மனைவி இரு பிள்ளைகள் கொண்ட இங்கிலாந்து வாழ்க்கைத்தரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பம். கோபி ஓர் இந்திய கட்டிட வேலை முதலாளியிடம் ஊழியம் பார்க்கிறவன். முறைப்படி அரசுக்குத் தெரிவித்து அவர் அவனை வேலைவாங்கவில்லை. இதனால் முதலாளி தொழிலாளி இருவருக்கும் இலாபம். முதலாளி அரசுக்கு செலுத்தவேண்டிய சில வரிகளை ஏமாற்றலாம். தொழிலாளி தனக்கு வேலையில்லையென சம்பந்தப் பட்ட அரசு நிறுவங்களிடம் உதவித் தொகை கேட்டுப் பெறலாம்.
இருந்தும் கொரோனாவால் தமிழ்க் குடும்பம் தள்ளாடுகிறது. களவாய் செய்த வேலை இல்லைஎன்றாகிவிட்ட து. ஒரு மாதமல்ல மூன்றுமாதத்திற்கு பிரச்சனை நீளும் என்கிறபோது அவர்கள் என்ன செய்ய முடியும். இதற்கிடையில் கொரோனாவைக் கோடிட்டுக் காட்டும் இருமல் கிழவர். கணவன் மனைவி இருவருடைய உரையாடலும் அதிகம் புலம் பெயர்ந்த குடும்பங்களில் கேட்க கூடியதுதான் :
« ஏனப்பா சோசல் காசு வரும் தானே ? » என்று திவ்யா கணவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.
« அது வந்தென்ன பிரயோசனம். அப்பிடியே கொண்டுபோய் சீட்டுகட்டச் சரி » என்றான் கவலையோடு.
« ஓமப்பா, அது வேறை கிடக்குது. அது எப்பையப்பா முடியுது ? »
« இரண்டு சீட்டும் முடிய இன்னும் ஆறுமாதம் கிடக்குது »
« நீங்கள் அணடைக்குச் சீட்டு எடுக்கேக்கையே சொன்னனான். இப்ப அவசரப்படவேண்டாமெண்டு. நீங்கள் கேட்டால் தானே. அவசர அவசரமாய் தங்கச்சிக்கு எடுத்தனுப்பினியள். இப்பக்கிடந்து மண்டையைப்போட்டு உடைக்கிறியள். »
மேற்கண்ட உரையாடலைக்காட்டிலும் கிழவரின் இருமல் சத்தத் திற்குப்பிறகு தம்பதிகளுக்கிடையே நடக்கும் கீழ்க்கண்ட உரையாடலில் கதை பிரகாசிக்கிறது.
« இந்த நேரம் பார்த்து இந்த மனிசனும் இருமித்தள்ளுது »
……………………………………..
………………………………………
அவன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை.
« இஞ்சரப்பா பிள்ளையளை அவரோட விளையாட விடாதையும். »
« ஏனப்பா, அது சும்மா இருமல்தான். »
« அது எனக்குத் தெரியும். எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லது தானே. »
« ஓமப்பா அதுவும் சரிதான். அவர் வாழ்ந்து முடிச்சவர். »
இத்துடன் கதை முடிவதில்லை எல்லா வறிய குடும்பங்களிலும் நடப்பதுபோலவே அப்போதைய தேவைகளைச் சமாளிக்க உண்டியலை உடைத்து 35 பவுண்களுடன் தமிழ்க் கடைக்குச்செல்கிறான், கோபி. கொரோனவை முன்வைத்து இலாபம் பார்க்கும் கடைக்காரனை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறான். பட்டியலில் இருந்த அனைத்தையும் வாங்க இயலவில்லை. முதியவருக்கு இருமல் மருந்தை வாங்க வேண்டிய கட்டாயம். பொருட்களுடன் திரும்பவந்தபோது அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டெதிரே முதியவரை அழைத்துபோக ஆம்புலன்ஸ்.
சிறுகதையின் கடைசி வரி மிகவும் முக்கியம். நான் அதைச் சொல்லப்போவதில்லை. நீங்கள் வாசிக்கவேண்டும்.
_________________________________________________