Corona mandates, we comply.
படைத்தல், காத்தல் மூர்த்திகள் ஓய்வெடுத்துக்கொள்ள அழித்தல் பொறுப்பில் மும்முரமாக கொரோனா மூர்த்தி. பதவியேற்றது முதலே எக்காளம். வல்லரசு, வல்லற்ற அரசுகள் பம்பை உடுக்கையுடன், “சந்தி “ கட்டிக்கொண்டிருக்கி ன்றன. பண்டாரத்தின் விபூதிக்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருபக்கம் . தீர்த்தத்தை எதிர்பார்க்கிறவர்கள் இன்னொருபக்கம், இவர்களில் பொறுமையற்றவர்கள் பெருமாளைத் தேடி திருப்பதி செல்வதாகச் செய்தி.
வந்த பாதையில் திரும்பிச் செல்வோம். மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரம்- தற்காலிக ஊரடங்கு என்கிற முத்திரையுடன் உலகெங்கும் மனிதர் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடமாக்கப்பட்ட நேரம். புதுச்சேரியைச் சேர்ந்த நண்பர் பசுபதி தமது முகநூல் பதிவில் ஊரடங்கு நாட்களில் அதன் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் வெளியில் சுற்றித் திரியும் மனிதர்களைக் கண்டித்திருந்தார். அவரது கோபம் நியாயமானது என்பதை கோயம்பேடு உறுதி படுத்துகிறது. மேற்கு நாடுகள் குறிப்பாக நான் வாழ்கின்ற பிரான்சு நாடுபோன்றவை படும் இன்னல்கள், விலக்க இயலா பொல்லாங்கான சூழல்கள் உலகறிந்தவை. ஊரடங்கு உத்தரவை பிரகடன படுத்துவதற்கு முன்பாக அன்றாட உணவுக்கு தினக்கூலியை அல்லது தினசரி வருவாயை மட்டும் நம்பியுள்ள மனிதர்களுக்கு அரசுகள் உதவி தாமதமாகத்தான் கிடைத்தன. கொரோனா தொற்று ஊரடங்கை வற்புறுத்த, ஊரடங்கா மனநிலைக்கு பசிப்பிணி சிலரைத் தள்ளுகிறது என்பதும் உண்மை.
நண்பர் முக நூல் பதிவைக் காண்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு (பிரான்சு நாட்டில்) எனக்கேற்பட்ட அனுபவம் சுவாரசியமானது. ஒருவாரத்திற்கு மேலாக வீட்டில் அடைந்துக்கிடந்த சூழலில் சில அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லவேண்டியிருந்த து. வெளியிற் செல்வதற்கான அனுமதி அத்தாட்சியை பதிவிறக்கம் செய்துகொண்டு குடியிருப்பைவிட்டு வெளியில் வந்தபோது காலைச் சுற்றிய ஒரு கருப்பு பூனை என்னை வியப்பில் ஆழ்த்தியது.
ஊரடங்கு உத்த்ரவை மீறி அப்பிராணியாக என் கால்களில் வீழ்ந்த அண்டைவீட்டுப் பிராணியை இன்று போய் நாளை வா எனக் கூறத் தயங்கினேன். அதன வாடிய முகம் மனதைச் சங்கடப்படுத்தியது. கடைக்குச் சென்று திரும்பும்வரை ஏதேதோ கற்பனைகள். தமிழ் பிரெஞ்சு இரு மொழிகளிலும் « கொரோனா பூனை» என்றொரு சிறுகதையை எழுதினேன். இரண்டையும் பிரசுரத்திற்கு அனுப்பிவைத்தேன்.
தமிழில் சிறுகதை காலச்சுவடு மே மாத இதழில் வெளிவந்துள்ளது. பிரெஞ்சு மொழியில் இச்சிறுகதை Short edition ல் வந்துள்ளது. கீழ்கண்ட இணைப்புகளில் இரண்டும் வாசிக்கக் கிடைக்கும்.
தமிழில்:
https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE
பிரெஞ்சு மொழியில்:
https://short-edition.com/fr/oeuvre/nouvelles/corona-chat