சென்னையில் பிறந்த ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சு நிர்வாகத்தில் உள்ளூர் மக்களின் தலைவராக, துபாஷாக ஆட்சியாளர்களை பின்னிருந்து இயக்கிய கர்த்தாவாக மாறுவதற்கு முன்பாக புதுச்சேரி வரலாற்றைச் சுருக்கமாக அறிவது நண்பர்களுக்கு உபயோகமாக இருக்குமென நினைக்கிறேன்.
புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் வரலாறு என்பது ஆனந்தரங்கப்பிள்ளையின் வரலாறு என்றால் அது மிகையில்லை. பதினேழாம் நூற்றாண்டில் சென்னையும் புதுச்சேரியும், மதுரையைப் போலவோ தஞ்சையைப்போலவோ வரலாற்றுத் தலங்கள் அல்ல, நெடிய வரலாற்றினை கொண்டவையும் அல்ல. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரரர்கள் வசம் புதுச்சேரியும் அதனைச் சூழ்ந்த கிராமங்களும் வருவதற்கு முன்பாக வெகுகாலம் அவை செஞ்சி குறுநில மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கிடையில் ஆசிய நாடுகளை வணிக நோக்கில் கைப்பற்றுவதில் போட்டிகள் நிலவின. பிரெஞ்சுகாரர்களின் முதல் வணிகக்கிடங்கு ஔரங்கசீப் அனுமதியுடன் கி.பி.1666 ஆம் ஆண்டு சூரத் அருகே உருவாயிற்று. 1672ம் ஆண்டில் பிளாங்க்கே தெ லா ஹயே (Blanquet de la Haye) கோல்கொண்டா ராணுவத்தைத் தோற்கடித்து சென்னை சாந்த்தோமை கைப்பற்றுகிறார். செஞ்சி அதன் கட்டுப்பாட்டிலிருந்த வலிகொண்டாபுரம்(பெரம்பலூர் அருகிலுள்ள) பகுதிகளில் ஆட்சியிலிருந்த ஹைதராபாத் நிஜாமின் பிரதிநிதிகள் பிரெஞ்சு ராணுவம் தங்களுக்குப் பக்க பலமாக இருக்குமெனக் கருதி புதுச்சேரி மற்றும் பறங்கிப்பேட்டையில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள(கி.பி1673) அனுமதிக்கின்றனர். பின்னர், நிறுவனத்தின் முதல் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் பிரான்சுவா மர்த்தேன்(François Martin). பிரெஞ்சு ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்யும் நோக்குடன் வணிக முயற்சியோடு இவர் ஆதிக்க அரசியலிலும் கவனம் செலுத்துகிறார். வலிகொண்டபுர ஹவில்தார் ஷெர்கான் லோடியிடமிருந்து பணம்கொடுத்து புதுச்சேரியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் வரிவசூலிக்கும் உரிம ம் பெறுகிறார். செஞ்சி ஆட்சி கைதராபாத் நிஜாம் பிரதிநிதிகளிடமிருந்து மாராட்டியர் கைக்குப் போகிறது. அவர்களிடமும் அன்பளிப்பாக 50000பகோடாக்களை (ஒரு பகோடா – அக்காலத்திய 3 ரூபாய்க்குச் சமம்.) கொடுத்து பிரான்சுவா மர்த்தேன் வரி வசூல் செய்துகொள்ளும் உரிமத்தை உறுதி செய்துகொள்கிறர். தொடர்ந்து கோட்டைக் கட்டிக்கொள்ளவும் அனுமதி பெறப்படுகிறது. இதற்கிடையில் செஞ்சி ஹவில்தார் பணமுடை காரணமாக புதுச்சேரியை டச்சுகாரர்களுக்கு விற்றுவிட, அவர்களால் முற்றுகை இடப்பட்ட புதுச்சேரி கோட்டை இடிக்கபட்டு, கவர்னரும் சிறைபிடிக்கபட்டார். ரிஸ்விக் ஒப்பந்தம் புதுச்சேரியையும் கவர்னரையும் பிரெஞ்சுக்காரர்கள் திரும்பப் பெற காரணமாகிறது. மீண்டும் ஒரு கோட்டையைப் புதுச்சேரியில் ழுப்பிய பிரான்சுவா மர்த்தேன் 1706ல் புதுச்சேரியிலேயே மரணமடைந்தார். நம்முடைய ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கைச் சரித த்தை இங்கேதான் தொடங்க வேண்டியுள்ளது.
பிள்ளையின் பிறப்பும் புதுச்சேரி வருகையும் :
அதிகம் அறிதலின்றி நிகழும் ஒரு மனிதரின் பிறப்பு பெருமை அடைவது ஊரறிய தனது இறப்பை அது முடித்துக்கொள்கிறபோதுதான். ரா. தேசிகன் பிள்ளையின் ஆனந்த ரங்கப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்பின்படி சருவதாரி வருடம் (கி.பி 1709) பங்குனி மாதம் 21 ந்தேதி (மார்ச் மாதம் 30) பிள்ளை சென்னை பெரம்பூரில் பிறந்தார். ஆந்தரங்கப்பிள்ளையின் தந்தை திருவேங்கடம்பிள்ளை வணிகம் செய்து பொருளீட்டி வந்தவர். பொருள்தேடி புலம்பெயரவேண்டிய நெருக்கடிகள் எதுவும் அக்குடும்பத்திற்கு சென்னையில் இல்லை. இதேவேளை பிள்ளையின் தந்தை திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர் நைனியப்ப ப்பிள்ளை என்பவர் சென்னையிலிருந்து வணிகம் செய்வதற்கென்றே புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்திருந்தார். அங்கு தொடங்கப்பட்டிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி, தன் வணிக அறிவுக்கு உரிய பலனைத் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
உள்ளூர் (இந்திய) மொழி அறிவற்ற பிரெஞ்சுக்கார்களுக்கு உள்ளூர் வணிகத் தொடர்புகட்கு குறிப்பாக பருத்தி நெசவு அது சார்ந்த உற்பத்திப்பொருட்கள், மேற்கத்திய நாடுகளில் கீழை நாடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் பொருட்கள் அல்லது அங்கு விலைபோகக்கூடியவை இவற்றை பேரம்பேசிவாங்கவும், உரியகாலத்தில் ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யப்படும் மேற்குலப் பொருட்களை இந்திய வணிகரிடத்தில் விற்கவும் முதலான பணிகள் நிமித்தமாக உள்ளூர் மனிதர்களுடன் தொடர்புகொள்ள, புதுச்சேரி நிலப்பகுதி சார்ந்த ஆட்சியாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோருடன் தங்கள் வணிகத்திற்கு பிரச்சனைகள் வராது காத்துக்கொள்ளும் வகையில் இணக்கமான உறவினைப் பேண நம்பிக்கைக்கு உரிய, கூர்மையான அறிவும் பக்குவமான அணுகுமுறையும்கொண்ட, பிரெஞ்சு மொழியும் தமிழ் மொழியும் நன்கு அறிந்த இடைத் தரகர்கள் தேவைபட்டனர். அவர்கள் இரு மொழிகள் அறிந்தவர்கள் என்பதால் துபாஷிகள் – அக்காலத்தில் இப்பகுதி இஸ்லாமியர் ஆதிக்கத்தின் கீழிருந்தது காரணமாக இருக்கலாம், தோ பாஷா, துபாஷி – நைனியப்ப பிள்ளைக்கும் துபாஷ் ஆகும் யோகம் வாய்த்தது. பிரெஞ்சுக் காரர்களின் வணிபத்திற்கு உதவியதோடு, தங்கள் சொந்த வாணிபத்தையும் இவர் வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் எல்லாவற்றையும், தாம் ஒருவரே கவனிக்க முடியாத நிலையில் சென்னையிலிருந்த நெருங்கிய உறவினர் திருவேங்கடம்பிள்ளையை தமக்குப் பணிகளில் துணையாக இருக்க புதுச்சேரிக்கு அழைக்கிறார். திருவேங்கடம்பிள்ளையும் அதனை ஏற்று மைத்துனருக்குத் துணையாக புதுச்சேரி வருகிறார். ஆனால் நைனியப்ப பிள்ளைக்கு வேறுவிதமான முடிவை விதித் தீர்மானித்து வைத்திருந்த து. எந்த பிரெஞ்சு அதிகாரத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களையும் வளர்த்து தன்னையும் வளர்ந்துக்கொண்டாரோ அதே பிரெஞ்சு கம்பெனியின் தலைமையால் சிறையில் அடைக்கப்பட்டு, மாளவும் வேண்டியிருந்தது.
« அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். »
அதிகார கட்டிலில் இருப்பவர்களுடன் பழகுகிறபோது நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும் அதிகமாக நீங்கிவிடாமலும் பழகவேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனந்த ரங்கப்பிள்ளையின் யின் உறவினரான நைனியப்ப பிள்ளை கவனமாக இருந்திருக்கலாம். தலைமை என்பது ஒற்றைச் சொல் அல்ல அது பல்வேறு பல்வேறு பண்புகளின் கொலாஜ்.சம தளத்தில் நடக்கிறபோது சங்கடங்கள் அதிகமில்லை. ஆனால் மலையேறுகிறபோது எச்சரிக்கையுடன் கால் வைக்கவேண்டும்.
நைனியப்ப பிள்ளைக்கு நேர்ந்த முடிவு
பிரான்சுவா மர்த்தேனுக்குப்பிறகு கியோம் ஆந்த்ரே எபேர் என்பவர் பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகியாக ஆனார். அப்போது முத்தியப்ப முதலியார் என்பவர் தரகராக அதாவது துபாஷாக பணிபுரிந்தார். முத்தியப்ப முதலியாரின் தரகுப் பணியைச் சந்தேகித்த எபேர் அவரை நீக்கிவிட்டு அவருக்குத் துணையாக பணிபுரிந்த நைனியப்ப பிள்ளையை1708 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய தரகராக அதாவது துபாஷாக நியமித்தார். ஆனால் நைனியப்ப பிள்ளையின் தரகர் நியமனத்தை புதுச்சேரி கிறித்துவ மதகுருமார்கள் ஏற்கவில்லை, கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே பிரெஞ்சு முடியாட்சி எபேரை நீக்கிவிட்டு முதல் அதிகாரியாக பியர் துலிவேர்(Pierre Duliver) என்பவரை நியமனம் செய்கிறது. துபாஷ் நைனியப்ப பிள்ளைக்குப் பதில் ஒரு கிறிஸ்துவரை நியமிப்பது என்றும் முடிவாயிற்று. ஆலோசனை சபையில் நைனியப்ப பிள்ளை நீக்கம் குறித்து விவாதிக்கபட்டது. « அவர் தரகரகராய் அமர்ந்தது முதல், மொகலியர்களால் ஏற்பட்ட சகல சங்கட ங்களிலிருந்து , புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார் » என்றும் « பிரஞ்சு சங்கத்தின் உள் விஷயங்களையும் வெளி விஷயங்களையும் நன்கறிந்தவரான படியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளும் பிராந்தியத்தில் குடியேறி தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன் , மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தை த் தேடிவிடுவார். » என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவருடன் ஒரு கிறித்துவரை துணை தரகரகராக நியமனம் செய்து பிரச்சனையைச் சமாளிக்கலாம் என முடிவெடுத்து நைனியப்ப பிள்ளையுடன் சவரி முதலியார் என்ற கிறிஸ்துவரையும் தரகராக நியமித்தனர். இக்காலக் கட்டத்தில்தான் நைனியப்ப பிள்ளை தம் உறவினர் திருவேங்கடம் பிள்ளையை (ஆனந்தரங்கப்பிள்ளையின் தந்தையை) புதுச்சேரிக்கு வருமாறு அழைத்தது நிகழ்ந்தது.
ஒரு துபாஷ் இருக்கவேண்டிய இட த்தில் இருவர். இருவரையும் ஒரு நுகத்தடியில் கட்டி பிரெஞ்சிந்திய கம்பெனி சவாரி செய்ய நினைத்தது. பின்பற்றிய சமயத்தால் வேறுபடினும் இரண்டுபேரும் தமிழர்கள். அவர்கள் விலங்குகள் அல்ல மனிதர்கள். நைனியப்பிள்ளையின் திறமையும் சாமர்த்தியமும் சகித்துக்கொள்ளக்கூடியதா ? அடுத்த் தெருவில் இருப்பவன் வளர்ந்தால் கொண்டாடுவோம், அண்டைவீட்டுக்காரன் வளர்ச்சியை மனிதர்கள் அங்கீகரிப்பது எப்படி ? அதுவும் தமிழராய் இருந்துகொண்டு. நைனியப்ப பிள்ளை முதல் துபாஷ், சவரி முதலியார் துணை சுபாஷ் என்பது எத்தனை நாளைக்கு ? தவிர, சவரி முதலியார் அதற்கு முன்பாக சுபாஷ் பதவியிலிருந்து விலக்கிவைக்கப்பட்ட முத்தியப்ப முதலியாரின் மருகர்.
பிரெஞ்சு வணிப நிறுவனத்தின் முதல் அதிகாரியாக இருந்த எபேர் மகன் புதுச்சேரி நிர்வாக சபையின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று புதுச்சேரி வந்தவர், கிறித்துவ மத குருமார்களின் தூண்டுதலால் தன் தகப்பனார் கொடுத்த தரகுவேலையைத் தவறாகப் பயன்படுத்தி நைனியப்பப் பிள்ளை பொருள் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டி, அப்படிச் சம்பாதித்த தொகையை த் தம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென கட்டளையிட்டார். பொய்யான வழக்கை ஜோடித்து வழக்கின் முடிவில் 50 சவுக்கடிகள், மூன்றுவருஷம் சிறைதண்டனை, 8888 வராகன் கம்பெனிக்கு நஷ்டை ஈடு, 4000 வராகன் அபராதம், சிறை தண்டனை முடிந்து நாடுகடத்தல் என தீர்ப்பாகிறது. இந்நிலையில் நைனியப்ப பிள்ளைக்கு நேர்ந்த நெருக்கடியால் திருவேங்கடம்பிள்ளை சென்னை திரும்புகிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் நைனியப்ப பிள்ளையைச் சிறையில் அடைக்கிறது. புதிய துபாஷாக முத்தியப்ப முதலியாரின் மகன் கனகராய முதலியார் நியமனம் ஆகிறார். சிறையிலேயே நைனியப்ப பிள்ளை இறக்கவும் செய்கிறார்.
நைனியப்ப பிள்ளையின் மூத்தமகன் குருவப்பா பிள்ளை என்பவர் தன் தகப்பனார் குற்றமற்றவரென்றும், அவருக்கு எதிராக பொய்சாட்சிகளை உருவாக்கினார்கள் என்பதையும் பிரான்சு சென்று அரசரிடம் முறையிட அவர் தந்தை மீதான் வழக்கு மறுவிசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுகிறது. இறந்த பிள்ளையிடம் அபராதமாக பெற்ற தொகையை கம்பெனி வட்டியுடன் கொடுக்கவேண்டுமென்றும், அதுபோல குற்றம் சாட்டிய எபேர் குடும்பம் பிள்ளையின் குடும்பத்துக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பாகிறது. நன்றிக்கடனாக குருவப்பாபிள்ளை கிறிஸ்துவ மத த்தைத் தழுவுகிறார். குருவப்பிள்ளை துபாஷ் ஆகிறார். திருவேங்கடம்பிள்ளை சென்னையிலிலிருந்து திரும்பி பிரெஞ்சுகிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றுகிறார். தந்தையுடன் வந்த ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் கம்பெனியின் அதிகாரிகளுடன் நெருக்கம் எற்படுகிறது. குருவப்ப பிள்ளையின் இறப்பிற்குப்பிறகு (கி.பி. 1725) தரகராக அதாவது துபாஷ் ஆக கனகராயமுதலியார் நியமனம் ஆனபோதும் திருவேங்கிடம்பிள்ளையையும் அவர் இறப்பிற்குப் பிறகு (கி.பி.1726) உடன் பணியாற்றிய அவருடைய மைந்தர் ஆனந்த ரங்கப் பிள்ளையின் திறமையையும் ஆற்றலையும் அருகிலிருந்து பார்த்த கம்பெனியின் அப்போதைய முதன்மை அதிகாரி லெனுவார் (Le Noire Pierre Christope(1721 – 1735) பதினேழே வயதான பிள்ளைக்கு பரங்கிப்பேட்டையில் கம்பெனிக்காகவும் சில்லறை வியாபாரங்களுக்காகவும் ஒரு நெசவுச் சாலையையும் , சாயக் கிடங்கையும் ஏற்படுத்தி அவற்றீர்க்கு தலவராக்கினார்.
ஆனந்த ரங்கப்பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து புதுச்சேரி வரலாறு காத்திருந்திருந்தது. பிள்ளையின் வருகைக்குப் பிறகு அவர் காலத்திய நிர்வாகிகளால் புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உயர்வுற்றதைப்போலவே, அவர் காலத்துக்குப்பின் « ……..தேய்ந்து கட்டெறும்பும் ஆனது ». «ஆய வாழ்வு உற்றாருடன் போம்’ » என்ற அவ்வைக் கூற்றுக்கு இணங்க ‘ஆனந்தரங்கப்பிள்ளையோடு பிரெஞ்சிந்திய கம்பெனியின் பெருமைபோய்ச் » சேர்ந்தது எனலாம்.
(தொடரும்)
உதவிய நூல்கள் :
- புதுவை வரலாறு, ஆசிரியர் க. நாராயணசாமி, பிருந்தா பதிப்பகம், புதுச்சேரி
- தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும், முனைவர் சு. தில்லைவனம் சிவசக்திபதிப்பகம், புதுச்சேரி
- ஆன ந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, தொகுதி 1 கலைபண்பாட்டுத் துறை, புதுவை அரசு.
____________________________________________________________