நெஞ்சை அள்ளும் இளங்கோவடிகளின் உரைநடை சிலப்பதிகாரம்’
நாகரத்தினம் கிருஷ்ணா
‘ நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பேச்சிலும் எழுத்திலும் பாரதியின் பாடல்வரியை மேற்கோள் காட்டும் பலர் அம் மகாகவியைப்போல இளங்கோவடிகளின் படைப்பை சுவைத்திருப்பார்களா ? எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் பேரிலக்கியங்களில் ஒரு மலைத்தேன். மலைத்தேனைப்போலவே காவியச்சிலம்பும் கடும் முயற்சியின்றி மாந்தக்கூடிய தீஞ்சுவை அல்ல. காலத்தாலும், கற்றோர் தொழும் மொழியாலும் பாமரர்க்கு எட்டாத உயரத்தில், கட்டப் பட்டத் தேன்கூடு அது. இளங்கோவடிகள் எனும் தேனீ, தமிழ் நிலத்தின் காடுமேடெல்லாம் அலைந்து, அழகியல் பூக்களைத் தேடி மோந்து, அவற்றின் சுவைதரும் மதுரத்தை புலன்களில் சுமந்து ஒராயிரம் தேனிக்களின் பணியை தான் ஒருவனாக கலை நயத்துடன் கட்டி எழுப்பிய தேன்கூடு சிலப்பதிகாரம். இன்றைக்கிந்த மலைத்தேன் குடத்தை, முடவர்களாக அண்ணாந்துபார்த்துக்கொண்டிருந்த நம் கைகளில் தந்து எளிதாக மாந்துவதற்குரிய நற்காரியத்தைச் செய்திருக்கிறார், பேராசிரியர்.
பேராசிரியர் க. பஞ்சாங்கம் இந்நூலைக்குறித்து எனதுக் கருத்தை எழுத்துவடிவில் கேட்டிருந்தார். அக்கருத்தை அணிந்துரை என்றபெயரில் அழைப்பதென அவர் தீர்மானித்திருந்தாலும் எனக்கதில் உடன்பாடில்லை. சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தை – மூல ஆசிரியரின் கவிதைமொழியை, உரைநடை மொழியாக உருமாற்றம் செய்யும் துணிவும் ஆற்றலும் எல்லாருக்கும் ஆகிவராது. இவரோ சிலப்பதிகாரத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்டுள்ள தீராத காதலினால், விரும்பி இப்பணியைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இவருக்கு பல முகங்கள் உண்டு : தமிழ்ப் பேராசிரியர், படைப்பிலக்கிய நிலத்தின் நஞ்செய், புஞ்செய்களான தொன்மம் நவீனம் இரண்டிலும் ஆழமான அறிவும் தேர்ச்சியும் பெற்றவர், கவிஞர், கட்டுரையாளர், புனைகதையாளர் அனைத்துக்கும் மேலாக நெஞ்சில் கோடாமையை நிறுத்திய திறனாய்வாளர் எனத் தமிழுலகம் ஏற்றுக்கொண்ட மனிதர், பெரியர், செயர்க்கரிய செயல்களைச் செய்வார். நான் சிறியன், இத்தகையை முயற்சியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூட போதாதவன். அறிந்ததெல்லாம் தற்கால இலக்கியங்கள் மற்றும் புனைவுலகம். எனவே இது முன்னுரை அல்ல ஒரு சராசரி படைப்பிலக்கிய இரசிகனின் கருத்து.
இம்முயற்சியில் மூன்று கூறுகள் இருக்கின்றன. முதலாவதாக உரைநடைமொழிக்குப் பேராசிரியர் தேர்வு செய்த நூல் ; அடுத்து தம் முயற்சியைத் திருவினையாக மாற்றிய உரைநடை ஆசிரியரின் ஆற்றலும், உழைப்பும் ; இறுதியாக இந்நூல் தரும் வாசிப்புப் பலன். இம்மூன்றும் இந்த நூலைக்குறித்த எனது கருத்தைத் தெரிவிக்க உதவியவை.
படைப்பிலக்கியத்தின் வடிவம் என்கிறபோது கவிதை , உரைநடை என்ற இரண்டு சொற்களும் நம் கண்முன் நிற்கின்றன. இரண்டும் உடன்பிறந்தவை என்கிறபோதும், குணத்தால் பங்காளிகள்: கவிதை என்ற சொல் இன்றைக்கும் புதிராகவும், எளிதில் விளங்கிக் கொள்ள இயலாததாகவும், பண்டித மொழிக்குரியதாகவும், அதனால் கற்றறிந்த மேலோரின் அறிவுப் புலனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இலக்கிய பண்புகளைக் கொண்டதாகவும், படைப்பாளியின் நெஞ்சை வெகு அருகில் நின்று புரிந்துகொள்ள உதவும் ஊடகமாகவும் இருக்கின்றது. மாறாக உரைநடை என்ற சொல் மகிழுந்தில் பயணிப்பதல்ல, பேருந்தில் பயணிப்பது, அன்றாடம் நீங்களும் நானும் உரையாடும் மொழியில், பெருவாரியான மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய மொழி. அடர்த்தியும் சொற் சிக்கனம், இவற்றிலிருந்து விடுபட்டு வாசிப்பவருடன் நெருக்கம் காட்டும் மொழி. உலகெங்கும் படைப்பிலக்கிய மொழியாக கவிதையே தொடக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. முடியாட்சி அரசியலில் இலக்கிய சமூகத்தில் கவிதைமொழி மேட்டிமை அடையாளத்தைப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள், இல்லையெனில் நம்மில் பலரும் சபை நடுவே நீட்டு ஒலை வாசியாத, குறிப்பு அறியமாட்டாத நன் மரங்களாக மட்டுமே இருந்திருப்போம். முடியாட்சியை மக்களாட்சியாக மாற்றுவதற்கு நடத்திய புரட்சியை ஒத்ததுதான் அந்த நாளில் இலக்கிய வெளியில் கவிதை சிம்மாசனத்தில் உரைநடையை உட்காரவைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும். கவிதை உரைநடை வடிவத்திற்கு உட்படாமல் இருந்திருந்தால், கல்விப்புலத்திலும், கருத்துப்புலத்திலும் இன்று நாம் கண்டிருக்கிற நுட்பமான வளர்ச்சிகள் இல்லையென்று ஆகியிருக்கும். இலக்கண பண்டிதர்கள் பெருகி இருப்பார்கள், இலக்கிய படைப்பாளிகள் சுருங்கி இருப்பார்கள். பேராசிரியர் க. பஞ்சாங்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
குறளாரின் மூதுரைக்கிணங்க இன்றைய படைப்புலகின் முதன்மை மொழியில், எழுதியிருக்கிறார். ‘ 20ம் நூற்றாண்டு என்பது உரைநடைத் தமிழின் எழுச்சி காலம்’ என்பதற்கொப்ப இயங்கியுள்ளார். கவிதை மொழியை உரைநடைமொழியில் கொண்டுவந்திருக்கிற இப்பணி, நகல் அல்ல அசல். சிலம்புக்கு நிகரானதொரு காவியம் உலகில் எழுத்துவடிவில் எங்குமில்லை. குடிமக்களை காவிய மாந்தர்களாக உயர்த்திய பெருமை, கதைமாந்தர்களின் கலை இலக்கிய ஈடுபாட்டினையும் நுண்நோக்கி எழுத்தில் சேர்த்த அருமை, படைப்பினத் தொடங்கும் உத்தி, கதை சொல்லும் பாங்கு, இயற்கையின் ஊமை வினைகளை சொல்லோவியமாகத் தீட்டும் திறன் என சிலப்பதிகாரத்தை எழுதிய படைப்பாளிக்கும், நிகராக அவர்காலத்தில் ஒருவருமில்லை.
இத்தகைய சீர்மை மிக்கதொரு நூல் பெருவாரியான மக்களைச் சென்றடையவேண்டும் அதன் பெருமையை அவர்கள் தாமே வாசித்து உணரவேண்டும் என்ற நோக்குடன், படைப்பாளியை மேலும் கொண்டாடும் வகையில் பேராசிரியர். க பஞ்சாங்கம் உழைத்திருக்கிறார். கணியன் பூங்குன்றனாரின் ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்ற பாடலையொத்து துஞ்சலின்றி, அயர்வின்றி, தமிழ்கூறும் நல்லுலகிற்கென எடுத்துக்கொண்ட முயற்சி. முயற்சியின் பொருண்மையை அவரது முன்னுரை கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு சொல்லையும், அச்சொற்களை சுமக்கும் பாடல் வரியையும், அவற்றின் சுவை குன்றாமல் நயம் குலையாமல் ‘ செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.’ என்ற குறளுக்கிணங்க, உரைநடை காப்பியமாக எழுதியிருக்கிறார். தான் செயல்பட்ட விதம், முன்னோடிகள் முயற்சிக்கும் இவருடைய முயற்சிக்கும் உள்ள வேறுபாடு, எழுதியகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் என தம் முன்னுரையில் இளங்கோவடிகளின் சிலப்பதிகார உரைநடை படைப்பாளி பகிர்ந்துகொண்டுள்ளவற்றை நண்பர்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டும். இன்றைய இலக்கியத் தேவைக்கேற்ப காலம்கருதி இளங்கோவடிகளே இவருள் புகுந்து, இதனை எழுதியிருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு.
« இந்த நூற்றாண்டு வாசகன் தன் நெஞ்சிற்கு நெருக்கமாக, இதம் தரும் ஒன்றாக உரைநடைத் தமிழை உணர்வதில் எந்த வியப்புமில்லை » என நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல இப்படைப்பும் வாசகர் நெஞ்சிற்கு நெருக்கமாக இதம்தரும் உரைநடை சிலப்பதிகாரமாக உணரப்படும், இளங்கோவடிகளின் புகழோடு இணைத்து நூலாசிரியரும், நூலும் பேசப்படுவார்கள் என்பது உறுதி.
இளங்கோ அடிகளின் ” சிலப்பதிகாரம்”
பேராசிரியர் க பஞ்சாங்கம்
அன்னம் பதிப்பகம்,மனை எண் -1, தஞ்சாவூர்.