சுவர்கள்: பெர்லின் முதல் உத்தபுரம்வரை
(இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு முன் பு எழுதப்பட்டவை யுகமாயினி இதழிலும், பின்னர் நூலாகவும் வெளிவந்தவை)
அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள வேலி. அதிகாரமும், நீதியும் உங்கள் கையிலிருப்பின் நத்தம், புறம்போக்கு, அனாதீனங்களை உடமையாக்கிக்கொள்ளவும் வேலிபோடலாம். கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதற்கான சாமர்த்தியமுண்டு. அமைச்சரில் ஆரம்பித்து, கிராம நிர்வாக ஊழியர்வரை அவரவர் செல்வாக்கிற்கேற்ப பொதுநிலத்தை அபகரிப்பதென்பது ஒரு கலையாகவே இங்கே வளர்ந்திருக்கிறது. ஒருவரும் விதிவிலக்கல்ல. இவர்கள் எல்லோருக்குமே சட்டம் தமது கடமையைச் செய்யுமென்று நன்றாகத் தெரியும். நடிகனென்றால் தமிழ்நாட்டில் அரசு பொது நோக்கிற்காக கையகப்படுத்திய நிலத்தைக்கூட கேட்டு வேலிபோட முடியும். ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பவர்களில்லையா? அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள மாத்திரமல்ல, அரசு எந்திரங்களின் ஆசீர்வாதத்தோடு பொதுசொத்தை அபகரிக்கவும், அப்பாவி தமிழ் அகதிகளை பட்டியில் அடைக்கவும் வேலிக்கு உபயோகமுண்டு. இந்த வேலிக்கு இன்னொரு வடிவமும் உண்டு பெயர்: சுவர்.
பிரிவினையென்றால் தடுப்புச் சுவர் எழுப்பி வாழப் பழகுவதென்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, காலங்காலமாய் மனிதர் இரத்தத்தில் கலந்தது. ஆற்றோரங்களை மனிதரினம் தேடிப்போனபோது ஏற்பட்டிருக்கலாம். தமக்கென்று ஒரு குடிசைவேண்டுமென கலவி முடித்த ஆதாமும் ஏவாளும் யோசித்திருப்பார்கள். சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம். அவரவர்க்கு கிடைத்த கற்களைக்கொண்டு சுவர் எழுப்புவது மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச் சுவருக்குளே உட் சுவர்களும் உண்டு. வெங்காயம்போல உரித்துக்கொண்டுபோனால் தனிமைச் சுவரில் அது முடியும். ஒருவகையில் அது நான், எனதென்ற சுயமோகத்தின் உச்சம். ‘பிறர்’ என்ற சொல்லின் மீதான அச்சம். ஆனாலும் சுவர்கள் நிரந்தரமானதல்ல என்பதும் வாழ்வியல் தரும் உண்மை. அடைப்பட்டுக்கிடந்தவன் அலுத்துபோய் ஒரு நாள் சன்னலைத் திறக்கிறான், பிறகொருநாள் கதவைத் திறக்கிறான். ஆனாலும் ஒருவன் கதவினைத் திறக்கிறபோது உலகின் ஒரு மூலையில் இன்னொருவன் கதவினை அடைத்துக்கொண்டு எனக்கு ஒருவரும் வேண்டாம் என்கிறான். இன்னாதம்ம இவ்வுலகம் இனியது காண்பர் அதன் இயல்புணர்ந்தோர், என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.
கடந்த வாரம் நவம்பர் 9ந்தேதி பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது ஆண்டுகள் முடிந்த தினத்தை கோலாகலமாக ஜெர்மன் நாடு தமது நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டாடியது. அந்த வெற்றிக்குப்பின்னே மிகப்பெரிய சோகம் ஒளிந்துகிடக்கிறது. நாஜிகள் செய்தபாவத்திற்கு ஜெர்மன் மக்கள் மிகமோசமாக தண்டிக்கப்பட்டனர். ஸ்டாலின் அரக்க மனம் ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஹிட்லராவது தனது ஆட்சிகாலத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னினத்தையும் நேசித்தான். ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல. இன்றைய இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களைப்போலவே பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒவ்வொரு ஜெர்மானிய குடும்பத்திலும் உயிரிழப்புண்டு, போரின் வடு உண்டு. நாஜிப்படைகளுக்கு தரத்தில் ஓர் இம்மி அளவும் செம்படைகள் குறைந்தல்ல. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் வீழ்ந்து 1945ம் ஆண்டு சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். அடுத்து இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு உதவியமைக்கு நன்றிக்கடனாக இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை சோவியத் ரஷ்யாவே வைத்துக்கொள்ளலாமென சம்மதிக்க பெர்லின் நகரம் பாட்டாளிகளின் அரசு என்றபெயரில் 1945ம் ஆண்டு ஜூலைமாதம் காம்ரேட்டுகள் வசமானது. கிழக்கு ஜெர்மனியில் தங்கிய சோவியத்படை உள்ளூர் காம்ரேட்டுகள் துணையுடன் நடத்திய அராஜகத்தில் பாதிக்கக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேல். அவர்களில் சம்பவத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்துக்குமேல். நடந்தகொடுமைகளை வெளியிற் சொல்ல அருபது ஆண்டுகள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நாஜிகள் வீழ்ச்சிக்குப்பிறகு அதன் தலைவர்கள் விசாரணக்குட்படுத்தபட்டு தண்டித்தது நியாயமெனில் அதே போர்க்கால குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் மேற்கத்திய படைளிலும், சோவியத் படைகளிலும் பலர் இருந்தனர் ஆனால் அது நடக்கவில்லை. சரித்திரம் ஜெயித்தவனை நியாயவானாக ஏற்றுக்கொள்கிறது, குற்றங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறது.
மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஓரளவிற்கு வளத்துடன் இருப்பதாக நம்பப்பட்ட கிழக்கு பெர்லினிலிருந்து நாள் தோறும் மக்கள் வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் (1948க்கும் -1961ற்குமிடையில் மேற்கு ஜெர்மனிக்குக் புலம்பெயர்ந்த கிழக்கு ஜெர்மனியர்கள் 2.7மில்லியன்பேர்கள்), கம்யூனிஸ நாடுகளில் பாலும் தேனும் பாய்ந்தோடுகிறது என்ற பிரசாரத்தைக் கேலிகூத்தாக்கியது. கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க நினைத்த கிழக்கு ஜெர்மன் அரசு சுவர் எழுப்ப தீர்மானித்தது. மேற்கத்தியர்கள் பணம்கொடுத்து கிழக்குஜெர்மனியர்களை விலைக்கு வாங்குவதாகவும், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காகவே சுவர் எழுப்பப்படுவதாகவும் கிழக்கு ஜெர்மன் அரசுதரப்பில் விளக்கம் சொன்னார்கள். 165 கி.மீ நீளமும் 302 காவல் அரண்களும், குறிபார்த்து சுடுவதில் வல்ல காவலர்களும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியும், தானியியங்கி துப்பாக்கிப் பொறுத்தப்பட்ட காவல் தூண்களுங்கொண்ட சுவர் 1961ல் பெர்லினை இரண்டு துண்டாக்கியது. தாயின் மார்பிலிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்ததுபோல உறவுகள் பிரிக்கபட்டனர். கடுமையான காவலையும் மீறி உயிரை பணயம்வைத்து சுவரைக் கடக்க நீர், நிலம், ஆகாயமென அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள் உண்டு, கைது செய்யப்பட்டவர்கள் உண்டு; எனினும் முயற்சி தொடர்ந்தது. அதிகாரத்தையும், பொய்யான பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி மார்க்சியத்தை செயல்படுத்திவந்தவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்தபோது நிலைமை கைமீறிவிட்டது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரோடு ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸமும் இடிந்து விழுந்தது. மேற்கத்திய ஐரோப்பியநாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதுகாறும் நிகழ்ந்துவந்த நிழல் யுத்தமும் பனிப்போருங்கூட அத்துடன் முடிவுக்குவந்தன.
1989 பெர்லின் சுவர் இடிக்கபட்ட அந்த ஆண்டில்தான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தபுரமென்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவரொன்றை எழுப்புவதற்குக் காரணங்களைத் தேடியிருக்கிறார்கள். தேடியவர்கள் உயர்சாதிமக்கள் என்று சொல்லிக்கொள்கிற வேற்று சாதியினர். பிரச்சினை ஒருபக்கம் அரசமரம், மற்றொருபக்கம் முத்தாலம்மன் கோவில். முத்தாலம்மன் பக்தர்களான சாதியினருக்கு அரசமரம் சுற்றும் சாதியினர் அருகில் வரக்கூடாதாம். அரசமரத்துக்கும் முத்தாலம்மனக்கும் இடையே பத்தடிதூர இடைவெளியை அவர்கள் இரு சாதிகளுக்கான இடைவெளியாகக் கணக்கிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. சாதிச்சண்டைவளர்ந்து, அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் பலம் வாய்ந்தவன்பக்கம் என்ற நீதிப்படி உருவான ஒப்பந்தத்தை ஏற்கும்படி தலித்மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 1989ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இரு சாதியினருக்குமிடையில் நடந்த மோதலில் சாதிக்கு இரண்டென உயிர்ப்பலிகளை முத்தாலம்மனுக்கும் அரசமரத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக 300 மீட்டருக்குத் தடுப்புச் சுவர். தண்ணீர்த் தொட்டி, ரேஷன்கடை, பள்ளிக்கூடம் தலித்துக்கென்று தனியே ஒதுக்கி தமது உயர்சாதியினர்(?) குணத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கள ஆய்வில் இறங்கிய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் உண்மை வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் சுவரை எழுப்பிய பொதுவுடமைத் தோழர்கள் உத்தபுர தீண்டாமைச் சுவரை இடித்தாகவேண்டுமென்று புறப்பட்டது காலத்தின் கட்டளை. 61ல் எழுப்பட்ட பெர்லின் சுவரை இடிக்க 1989 வரை ஜெர்மன் மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது 1989ல் காந்தி தேசத்தில், பெரியாரை போற்றும் மாநிலத்தில் தலித் மக்களுக்கெதிரான உத்தபுர சுவரை முழுவதும் இடிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ? பாலஸ்தீன மக்களைத் தடுத்து அவர்கள் நிலப்பரப்பை கையகப்படுத்தி 2005 ஆண்டில் உலநாடுகளின் எதிர்ப்பை துவம்சம் செய்து இஸ்ரேலியர்கள் கட்டிக்கொண்டிருக்கிற சுவரையும் இங்கே அவசியம் நினைவு கூர்தல்வேண்டும்.
லூயி தெ பெர்னியே என்ற எழுத்தாளர் தமது நாவலொன்றில் ‘சரித்திரத்திற்கு ஆரம்பமென்று ஒன்றில்லை என்பார். அவரைப் பொறுத்தவரை இன்றைய நிகழ்வு நேற்றைய சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளைக்கு நடக்கவிருப்பதின் காரணியாக இருக்கலாம். வரலாறு வெற்றிபெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதல்ல, ஒடுக்கப்பட்டவர்களாலும் எழுதப்படுவது, என்ற நம்பிக்கை எனக்குமுண்டு. அவ்வப்போது எழும் முனகலுங்கூட உரத்து ஒரு நாள் ஒலிக்குமென நம்புகிறவன். உலகமே எனதுகையிலென்று கொக்கரித்த பலரும் கேட்பாரற்று செத்து மடிந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழனமோ, பாலஸ்தீனமோ, உத்தபுரமோ ஒடுங்கிவிடாது. அவர்களுக்கான காலம் வரும் வேலியோ, சுவரோ எடுபடும், இடிபடும். சரித்திரம் அவர்களது வெற்றிக்கெனவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.
——————————