கடந்த காலத்தின் குரல் – ஜிதேந்திரன்

கடந்த காலத்தின் குரல்

  • ஜிதேந்திரன்

  நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘இறந்த காலம்’ நாவல் சந்தியா பதிப்பகம் வெளியீடாக டிசம்பர், 2018-இல் வெளிவந்திருக்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். நீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி, ரணகளம் முதலிய ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ‘இறந்த காலம்’ அவருடைய ஆறாவது நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் வரலாற்றுப் பின்புலத்திலேயே தன்னுடைய படைப்புகளை அமைத்துக் கொள்கிறவர். புதுச்சேரியிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசிப்பதனால், பிறந்த தேசத்தைப் பற்றிய வரலாற்றைத் தன்னுடைய படைப்புகளில் வரைந்து கொள்கிறார். புதுச்சேரி வரலாற்றைப் பேசுபவை பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள். புதுச்சேரியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் அதே திசையில், ஆனால் மாறுபட்ட கதைசொல்லல் திறமையில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய பிரதிகளைச் செய்கிறார். இவருடைய நீலக்கடல் நாவல் பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்கத் தீவு மொரிஷியஸ் பற்றியது. மாத்தா ஹரி நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டவள். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் புதுச்சேரி மற்றும் செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்கிறது. காஃப்காவின் நாய்க்குட்டி நாவல் புதுச்சேரியிலிருந்து பிரான்சு, செக் குடியரசுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியது. ரணகளம் நாவல் தமிழக அரசியல் பற்றியது.

மிரா அல்ஃபஸ்ஸா (அன்னை) புதுச்சேரி வந்த 1914 முதல் புதுச்சேரி அரசு இந்திய அரசுடன் இணைந்த 1954 வரையிலான அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது இந்நாவல். புதுச்சேரி நகர உருவாக்கமும், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையும் இதில் இருக்கின்றன. ஆரோவில் ஒரு கண்ணியாகவும், புதுச்சேரி விடுதலை மற்றும் புலம்பெயர் அரசியல் மறு கண்ணியுமாக நாவல் அமைகிறது. இரண்டையும் இறுதியில் இணைக்கும் லாவகம் சிறப்பு.

மனிதன் இறந்த காலத்திலிருந்து மீள முடியாது. இறந்த காலம் அவனைத் தொடர்ந்து கொண்டிருக்கும், அவனுக்குள் மனமாக. சுற்றியிருப்பவர்களும் அவனை அவனது இறந்த காலத்தின் நீட்சியாகவே காண்கிறார்கள். தனது நேற்றைய சம்பவங்களை; நேற்றைய தவறுகளை; அவமானங்களை தனிமனிதன் மறக்கலாம். ஆனால் அவனைக் குறித்த அந்நிகழ்வுகளை மற்றவர்கள் மறந்துவிடுதில்லை. அதிலும், வரலாற்றுத் தவறுகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற வேளையில்தான், பிரெஞ்சிந்திய விடுதலைச் சிக்கலும் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில்  பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த புதுச்சேரியின் நிலை தர்மசங்கடமானது. வேறு வழியில்லாமல் அவர்களும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. நாவலில் அரவிந்தர் ஆஸ்ரமத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆரோவிலியன்களாவது என்பது ஏமாற்று வேலை. எந்த மனிதனும் முழுமையாகப் புனிதனாகிவிட முடியாது. ஆரோவில் குழுமத்தில் இணைபவர்கள் சில காலம் புனிதர்களாக நடிக்கலாம். தவம், தியானம் செய்கிறவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகப் பாலியல் சிக்கலுக்குள் தத்தளிக்கின்றனர். உலகின் எந்தத் தியான ஆஸ்ரமும் பாலியல் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் இருந்ததில்லை. ஓஷோ கம்யூன், நித்யானந்தா ஆஸ்ரமம் உட்பட, வட இந்தியச் சாமியார்கள் பட்டியல் பெரிது. காலங்காலமாக மனிதன் காமத்திலிருந்து விடுபட முடியாதா? என்ற சிக்கல் இருக்கிறது. ஏன் விடுபட வேண்டும்? ஓஷோ ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்கிற வழியைக் காட்டுகிறார். தியானம் செய்கிறவர்கள் காமத்தை அடக்குவதன் மூலம் தங்களுக்குள் மனப் பிளவுகளை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனை அடக்குவதன் மூலம் பாலியல் சிக்கல் வெறி கொண்டதாகிறது.

குருவால் ஈர்க்கப்பட்ட சீடர்கள் தங்கள் சொத்துக்களை தாங்களாகவே ஆஸ்ரமத்திற்கு எழுதி வைத்து விடுகின்றனர். அல்லது வசியத்தால் சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டலாலும்கூட. இங்கு அவர்கள் சீடர்கள் அல்ல; பொதுமக்கள். ஆஸ்ரமத்திற்கு வெளிநாட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, பணம் சேர்கிறது. ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விலைக்கு வாங்கி, ஆஸ்ரமத்தை விஸ்தரித்துக் கொண்டே போகிற யதார்த்தத்தைப் பார்க்க முடிகிறது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சுற்றியுள்ள மக்கள், சுற்றுச்சூழல் துறை, வனத்துறைகளின் குற்றச்சாட்டுகள் உண்டு. அப்படித்தான் ஆரோவில்லும். “இந்த நகரத்தை (ஆரோவில்) உருவாக்க 50 வருடங்களுக்கு முன் சொற்ப விலைக்கு மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குவித்தனர். கொஞ்ச நாட்களில் வாங்கிய இடம் போதவில்லை என்பதால், கிராமப் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து ஆரோவில் இடமாக மாற்றிக் கொண்டனர். ஆரோவில்வாசிகள் யாரும் ஆரோவில்லில் இடம் வாங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆரோவில்வாசிகள் பலரும் ரகசியமாக இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். தொழில் தொடங்குவதற்காகச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் 133 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்து வாய்க்கால், ஏரி, கோயில் நிலம், விளையாட்டு மைதானம் என ஒன்றையும் விட்டு வைப்பது இல்லை” (ப.180).

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஆரோவில் அமைப்பிற்கு உள்ளது என்று விவரிக்கிறார் நாவலாசிரியர். வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியப் பெண் ஆரோவில் நகரத்தில் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட செய்தி, ஆரோவில் நகர விரிவாக்கம் ஆகிய இரண்டும் சமீபத்திய உண்மைச் செய்திகள். ஆனால், ஆரோவில் உருவாகும்பொழுது சொல்லப்பட்ட நோக்கத்திற்கு எதிரான திசையில் இப்போதைய ஆரோவில் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டைத்தான் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் முன்வைக்கிறார்.

நில அபகரிப்பு என்பதில் ஆரோவிலுக்கு பிரெஞ்சு அரசாங்கமே குறைந்த விலையில் நிலத்தைக் கொடுத்தது என்பதும் அடங்கும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆஸ்ரமவாசிகள் / ஆரோவிலியன்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்கிற உண்மையை நாவல் விவரிக்கிறது. ஆரோவிலின் ஆன்மீக சோஷலிஸம் என்பதே ஏமாற்றுத் தந்திரம். புளி ஏப்ப ஆன்மீகவாதிகள், பசி ஏப்ப ஆன்மீகவாதிகள் உண்டு என்கிறார் நாவலாசிரியர். தங்கம் பூசப்பட்ட மாத்ரி மந்திர் கோளம் ஆன்மீகத்திலிருந்து விலகிய நிலை. வெளிநாட்டிலிருந்து வந்து தங்குகிற ஆஸ்ரமவாசிகள், ஆரோவிலுக்கு வெளியே வாழும் புதுச்சேரி ஏழை மக்கள் எனப் பெரும் பிளவுகளைக் கொண்டிருக்கிறது ஆரோவில் நகரம். ஆரோவிலுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, ஆரோவிலுக்கு உள்ளேயே எடுபிடி வேலை பார்க்கும் ஏழை மக்களும் இருக்கிறார்கள்.

நர்மதா குடும்பத்திடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்ட ஆல்பர்ட், நர்மதாவைக் கற்பழித்த ஆல்பர்ட், ஆரோவிலுக்கு வருகிற பெண்களைச் சீரழிக்கிற துய்மோன் என ஆரோவில் நகரக் களங்கத்திற்கு உருவகமாக இரண்டு கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து வருகிற ஜெஸிக்கா, பிரான்சிலிருந்து வருகிற மீரா இருவருமே ஆரோவில் நகரில் கற்பழிக்கப்படுகிறார்கள். ஜெஸிக்கா எந்தப் புகாரும் அளிக்காமல், நாடு திரும்புகிறாள். மீரா காவல் நிலையத்தில் புகாரளித்தாலும், சாட்சியங்கள் இல்லையென்று கூறி, காவல்துறை புகாரை ஏற்க மறுக்கிறது. மீரா ஜெஸிக்காவைத் திரும்ப அழைத்துவந்து, அஸ்ஸாமிற்குச் செல்கிற துய்மோன், ஆல்பர்ட் இருவரையும் குழந்தை கடத்துபவர்களாகச் சித்திரித்து, அங்கு வைத்து அவர்கள் இருவரும் கொல்லப்படும் சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

அன்னை, அரவிந்தரின் நல்ல நோக்கம் தற்போதைய நிகழ்வுகளால் அடிபட்டுப் போகிறது. ‘ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃபஸ்ஸாவுமல்ல’ (ப.103). ஆரோவிலுக்கு எதிரான கருத்துக்கள் மாதவன் வழியாகச் சொல்லப்படுகின்றன. நாவல் முழுக்க அன்னை, அரவிந்தருக்கு எதிரான பார்வை இருக்கிறது. அன்னை, அரவிந்தரின் நிலைப்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. “முடிகொட்டிய நரைத்த தலைக்கு ஒரு சல்லடைத் துணியை முக்காடிட்ட சூன்யக்காரி போல ஒரு மூதாட்டி” (ப.39) என்கிற அன்னையின் முகத் தோற்றத்தைச் சொல்லும் வரிகள் அன்னையின் பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தரும். அன்னையின் கண்கள்தான் பிரசித்தமானவை. மாறாக, இந்த நாவலில் அன்னையின் ‘குரல்’ பேசுகிறது. பிரான்சிலிருக்கிற மீராவை (நாவலின் நாயகி) இந்தக் குரல்தான் தொந்தரவு செய்கிறது. நாவலின் தொடக்கத்தில் வருகிற அந்தக் குரல், இறுதியில் மீரா கற்பழிக்கப்பட்டபின்தான் வருகிறது. மீராவை இங்கு அழைத்து வந்த குரல், ஆரோவிலின் பெருமைக்குக் களங்கம் செய்கிறவர்களை அழிக்க விரும்பும் குரல்.. அவள் கற்பைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘இறந்த காலம்’ நாவல், அன்னையின் கடந்த (இறந்த) கால வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுகிறது. துய்மோன், ஆல்பர்ட் கொல்லப்பட்ட பிறகு, ஆரோவில் களங்கங்களைப் போக்கிய பிறகு,  அன்னையின் இந்தக் குரலில் அமைதி ஏற்படுவதாக நாவல் முடிகிறது.

நாவலின் மற்றொரு தளம் – புதுச்சேரி அரசியல். இறந்த காலம் – புதுச்சேரியின் கடந்த காலம். புதுச்சேரியிலிருந்து பிற நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தோ சீனாவிற்குப் (சைக்கோன்) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் சொல்கிறது. சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட, சமத்துவ உரிமையைப் பெற விரும்பி பிரெஞ்சு தேசத்தின் காலனி ஆதிக்க நாடுகளில் வாழும் மக்கள் ‘ரெனோன்சியாசியோன்’ (La renonciation) எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு மாறியவர் ‘ரெனோன்சான்’ (காலனிவாசி) எனப்படுகிறார். சுப்பராயன் அப்படி ரெனோன்சானாக, ஃபெலிக்ஸ் சுப்பராயனாக மாறிக்கொண்டார். சிங்காரவேலர் எதுவார் என்று மாறிக்கொண்டார். இவர்கள் சிப்பாய்களாக பிரெஞ்சு தேசத்திற்காகப் போர்க் களத்தில் உயிரைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதாவது ரெனோன்சானாவதற்கு இது ‘இரத்த வரி. ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தை மட்டுமே அறிந்திருந்த தமிழ்ச் சூழலுக்கு இந்தப் பிரெஞ்சிந்தியக் காலனியாதிக்கச் சிக்கல்கள் புதிது. பிரெஞ்சு தேசத்தில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். பூர்வீகப் பிரெஞ்சு மக்கள், கிரேயோல் மக்கள் (தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் ஐரோப்பியர்), ரெனோன்சான் மக்கள். இவர்களில் ரெனோன்சான் மக்கள் சரிசமமாக நடத்தப்படுவதில்லை. பதவி, வேலை, ஆடம்பர வாழ்க்கை, சாதியத் தடைகளிலிருந்து விடுதலை என ஆசை வார்த்தைகாட்டி, இந்தோ சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட புதுச்சேரி மக்களின் நிலையை சுப்பராயன், சிங்காரவேலர், வேதவல்லி வழி நாவலாசிரியர் புலப்படுத்துகிறார். அதே காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பிரெஞ்சிந்தியப் புதுச்சேரியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விளக்குகிறார். சைக்கோனின் நிகழ்வுகளை வேதவல்லியும், புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளை அவரது தம்பி சதாசிவமும் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்கள் மூலமாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

புதுச்சேரி நிகழ்வில் அரவிந்தர் ஆஸ்ரமம் அமைத்தது, ஆரோவில் உருவாக்கப்பட்டது, காந்தியின் புதுச்சேரி வருகை, அரவிந்தரைச் சந்திக்க காந்தி தூது அனுப்பியபோதும் அரவிந்தர் மறுப்பு தெரிவித்தமை, இந்தோ சீனா வங்கி, புதுச்சேரி அரசியலின் நாயகன் ‘வி.எஸ்’ எனப்படுகிற வ. சுப்பையாவின் அரசியல் போராட்டங்கள், பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம், சவானா மில், ரோடியர் மில், கெப்ளே மில் தொழிலாளர்களின் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு, 12 பேர் உயிரிழப்பு, கவர்னர் எதுவார் குபேர் என்பவரின் அரசியல் மீதான விமர்சனம் எனப் பல பக்கங்களை நாவலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்ததை, தற்போதைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த உணர்வெழுச்சியோடு பொருத்தி எழுதியிருக்கிறார்.

வரலாற்றுப் புனைவை எழுதும்போது, நிகழ்வை எழுதுகிற அதேநேரத்தில், கற்பனையும், படைப்பாற்றல் மிக்கவராகவும், தனித்த பாத்திரங்களை உருவாக்கி, ரசனை குன்றாமல் நாவலை எழுதிச் செல்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தனித்திறமையே கதைசொல்லும் உத்திதான். கதையில் ஏற்படுத்துகிற சுவாரஸ்ய முடிச்சுகள், வாசகர்கள் கண்டுபிடிக்கிற அளவில் ‘பொடி’ வைத்து எழுதுகிற எழுத்து நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுடையது. இந்த நாவலில் மட்டுமல்ல, அவரது எல்லாப் படைப்புகளிலும் இந்தத் தனித்திறனைப் பார்க்கலாம். நாள், தேதியிட்டு காலத்தை மாற்றி மாற்றி எழுதும் உத்தி இவருடைய பொதுவான தன்மை. கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்குமாக இவரது மொழி, கதை சொல்லும் உத்தி மாறி, மாறிப் பயணிக்கும். காலத்தை இணைக்கும் புள்ளியைக் கூர்ந்த அவதானிப்புடன் செய்கிறார். நிகழ்கால அரசியலை; சம்பவங்களை; அரசியல்வாதிகளைக் குறிப்பால் உணர்த்தும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்.

மீரா, ஜெஸிக்கா, மாதவன் தவிர பிரான்சிலிருக்கும் மீராவின் தாய் இஸாபெல், அவரது இரண்டாவது கணவர் லூயிஸ், புதுச்சேரியில் மாதவனின் குடும்பம், மீரா தங்கும் வீட்டில் ஆல்பர்ட்-தேவகி, ஆரோவிலியன் துய்மோன், நர்மதா, கலைவாணி முதலியோர்தான் கதாபாத்திரங்கள். அரூபப் பாத்திரங்களான வேதவல்லி, சதாசிவம் கடிதங்களின்படி மாதவனும், மீராவும் திருமண முறை உறவினர்கள். இந்த முடிச்சை அவிழ்ப்பதில்தான் நாவலின் சுவாரஸ்யம் இருக்கிறது. வேதவல்லியின் மற்றொரு தம்பி சிங்காரவேலர் புதுச்சேரியிலிருந்து இந்தோ சீனாவிற்குச் சென்று, அங்கு வியட்நாமியப் பெண்ணை மணம் செய்து, அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்வதாகச் சொல்கிறது வேதவல்லியின் கடிதம். மீரா தன்னுடைய தாத்தா பற்றிக் குறிப்பிடும்பொழுது, இதே குறிப்பைச் சொல்கிறாள். கதாபாத்திர உறவுகளை சஸ்பென்ஸாக வைத்து, வாசகர்கள் கண்டுபிடிக்கும்படியான எழுத்து முறை இவருடைய மற்ற நாவல்களிலும் காணப்படுகிறது. மீராவின் தாய் இஸாபெல்லும் புதுச்சேரியில் வல்லுறவுக்கு ஆளாகிறாள். மீராவின் தந்தை யாரென்றே தெரியாத சூழலில், துய்மோனாக இருக்கலாம் என இஸாபெல் கூறுகிறாள். துய்மோன் – இந்தப் பெயர் ஏன்? 1735ஆம் ஆண்டு கவர்னராகப் புதுவைக்கு வந்தவர் துய்மா. இவர் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரைக் குறிப்பிடும் விதமாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறதோ என ஐயம் தோன்றுகிறது.

ஆசிரியர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வீணாக்கவில்லை. சாதாரணமாக ஒருமுறை டிராப் செய்கிற டிரைவர்கூட இறுதியில் மறுபடியும் வருகிறார், மணிகண்டனாக. மீராவின் திட்டங்களுக்கு உறுதுணையாக. மீராவை ஆரோவில் நகரில் சைக்கிளில் பின்தொடர்கிற பத்திரிகையாளர், விமான நிலையத்தில் தற்செயலாகப் பக்கத்தில் அமர்பவர் நாவலின் இறுதியில் மீண்டும் வருகிறார்கள். முதலில் ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி. அதற்கு நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் விடை என்கிற ரீதியில் நாவலின் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

அண்மையில் தமிழகத்தில் குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தவர்களைக் குழந்தை கடத்தல் கும்பலென அடித்துக் கொன்ற (உண்மை) செய்தியை, இரண்டாகப் பிரித்து, முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தை சாக்லேட் பெறுவது குற்றமாகப் பார்க்கும் நாடு இது என்று ஒரு பகுதியிலும், குழந்தை கடத்துபவர்கள் எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, இருவரையும் ஊர் மக்கள் அடித்துக் கொலை செய்கின்றனர் என்பதை இறுதிப் பகுதியிலும் அமைத்திருக்கிறார்.

‘இறந்த காலம்’ நாவல் புதுச்சேரியில் பெரிய கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமவாசிகளால் இந்த நாவல் நிச்சயம் விமர்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

*****

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s