அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட …….
நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. ” நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்’ என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு Michelin என்ற சொல் குறிப்பாக என்னைப்போல ருசி கண்டவர்களுக்கு ( எங்க அம்மா வழி தாத்தா, உண்ணு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் உருப்படப்படமாட்டான் ன்னு அடிக்கடி சொல்லுவார்) நன்கு அறிமுகமான சொல். இந்த மிஷலன் என்கிற நிறுவனம் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்கும். அவர் யார், எப்போது வருவார், அவர் எப்படி இருப்பார் என்கிற எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை. வாடிக்கையாளர்களுள் ஒருவராக வந்துபோகும் அம்மனிதர் (அல்லதுமனிதி) உணவு விடுதியின் சூழல், வாடிக்கையாளர்களை வரவேற்கும் முறை, அவர்களை நடத்தும் விதம், உணவின் தரம், பரிமாறும் விதம் முதலான கூறுகளின் அடிப்படையில் முடிவுகளை ஒன்று இரண்டு மூன்று என நட்சத்திர எண்ணிக்கையில் மதிப்பிடுவார்கள். இந்த நட்சத்திர மதிப்பீடு ஓட்டலின் தரத்தை நிர்னயிக்கும்.
நண்பர் க.பஞ்சாங்கம் பேராசிரியர் என்றோ, முனைவர் என்றோ கவிஞர் என்றோ, திறனாய்வு திலகர் என்றோ அல்லதுவேறு பட்டுக்குஞ்சலங்களாலோ, தன்னை அலங்கரித்துக்கொண்டு படைப்புக்களை அணுகுவதில்லை. (நூலட்டை அதற்குச் சாட்சி). அதுபோலவே படைப்புக்களின் தரத்தை எழுதியவரின் பாலினம், எத்தனைமுறை தன்னை வந்து பார்த்தார், அவருடைய பின்புலமென்ன என்று அணுகுவதில்லை. பிரான்சு மிஷலன் நிறுவனத்தைப்போலவே அவருடைய இதயமும் திடமானது. « அசல் நெய்யினால் தயாரிக்கப் பட்டது » என்பதுபோன்ற படைப்பாளிகளின் முன்னொட்டுச் சான்றிதழ்கள் உதவாது. நூலில் இடபெற்ற கவிஞர்கள் க. பஞ்சாங்கத்தால்விரும்பி வாசிக்கப்பட்ட வர்கள். நூலாசிரியர் நண்பர் க.பஞ்சாங்கத்தையும் நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்.
ஆ. கட்டற்ற சுதந்திரம் ( Liberalism) என்கிற காட்டாறு
அண்மையில் படித்த நூல் பிரெஞ்சு எழுத்தாளர், வரலாற்றாசிரியர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களுடன் அண்மையில் மறைந்த Max Gallo – மாக்ஸ் கலோ- என்பவரின் « Le regard des femmes » ( பெண்களின் அவதானிப்பு)என்கிற நாவல். பார்த்த திரைப்படம் « Partir » ( திரைக்கதையைக்கொண்டு ‘ஓடுகாலி என்பது தமிழில் சரி). நாவலுக்கும் திரைப்படத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் அதிகம் : ஆண்பெண் – உடல் சேர்க்கை – மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கை முறை சமூகப்பாதையில் இந்த இருகோடுகளுக்குள் நிகழும் திசைமாற்றம், தடம் புரளும் குடும்ப இரயில் என லென அந்த ஒற்றுமைகளை வகைப்படுத்தலாம்.
Le regard des femmes (பெண்களின் அவதானிப்பு ) நாவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் பிலிப் அவருடைய இளம் மனைவி லிசா இடையிலான உறவுகள் ; பிலிப்பின் தாய், தந்தை இருவரின் குடும்ப வாழ்க்கை அதில் ஏற்படும் விரிசல் ஆகியவற்றைப் பெண்களின் பார்வையில் விவரிக்கிறது. பிலிப்பும் அவர் தந்தையும் அவர்களுடன் குடும்பம் நடத்திய (என்று சொல்ல இயலாது, கூடி வாழ்ந்த என்று சொல்வது சரி )பெண்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் விமரிசனத்திற்கு உள்ளாகின்றனர். தங்களின் பிற ஆண்களுட னான உறவுக்கு அல்லது எல்லை மீறலுக்கு தங்கள் உடல் உள்ளம் இரண்டையும் புரிந்துகொள்ளாத பிலிப்பும் அவர் தந்தையும் குற்றவாளிகளென வாதிட்டு பிற ஆண்களுடனான படுக்கைப் பகிர்வுகளை இப்பெண்கள் நியாயப்படுத்துகிறார்கள்.
Partir ( ஓடுகாலி) : இத்திரைப்படத்தை அண்மையில் Arté என்கிற பிரெஞ்சு தொலக்காட்சிஅலை வழியாகக் காண நேர்ந்த து. கத்ரின் கொர்சினி (Catherine Corsini) இயக்கத்தில் வெளிவந்த படம் . ஒரு மருத்துவர் அவர் மனைவி, இரண்டு வளர்ந்த பிள்ளைகள். மருத்துவர்,தமது பிசியோதெராப்பிஸ்ட் மனைவிக்கென்று ஒரு பணி அறையை தனது வீட்டில் ஏற்படுத்த முனைந்து, ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அவர்கள் ‘இவான் ‘ என்றொரு தொழிலாளியை அனுப்பிவைக்கிறார்கள், இவான் ஒரு முன்னாள் சிறைவாசி. ஒரு நாள் சுஸானும், தொழிலாளியும் சில பொருட்களை வாங்க கடைக்குச் சென்று திரும்புகையில் கார் விபத்துக்குள்ளாகிறது. இவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். சுஸான் விபத்துக்குத் தானும் ஒருவகையில் காரணமென்று கொண்ட அனுதாபம் தொழிலாளி மீது தணியா மோகத்தில் முடிகிறது. சமூகத்தில் கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிற கணவர் மீதான அன்பு, வளந்த இருபிள்ளைகள் மீதான பாசம் இரண்டையும் ஒதுக்கிவிட்டு உடல் இச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி அன்றாடக் கூலியுடன் படுக்கிறாள். முடிவில் இந்த வேட்கையை ஆற்றிட கணவனைக் கொலை செய்கிறாள்.
மேற்கண்ட இரண்டிலும் சொல்லப்பட்ட இன்றைய எதார்த்தம், « பண்பாடு பண்பாடு » என்று கூச்சல் போடுகிற இந்தியாவிலும் நடப்பதுதான். நடுத்தரவயது பெண்மணியின் இன்னொரு ஆணுடனான ‘Passion’ (அதி தீவிர காதல் ) திரைக்கதைக்கான மையப்பொருள் என்ற வகையிலும், திரைப்படம் ஓரு காட்சி ஊடகம் என்பதாலும், அதனை அழுத்தமாக தெரிவிக்க ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உடலுறவு காட்சிகள். ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுபவன் எனவைத்துக்கொண்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அழுதுவதைக்காட்டினால் கோபம் வராதா. இயக்குனரின் கற்பனை பஞ்சம் எரிச்சல் ஊட்டியது. கதையோ கட்டுரையோ எழுதும்போது திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உபயோக்கும் படைப்பாளிகளைப்போன்று
சுற்றுச்சூழல் மட்டுமல்ல பண்புச் சூழலும் நடைமுறை உலகில் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. உதாரனத்திற்கு இன்று ஐரோப்பியர்களிடையே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சிக்காக, குடும்பம் என்ற பாரத்தை சுமக்க அல்ல. விளைவாக பிள்ளைகள் வேண்டுமா ? இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாடகை த் தாயை ஏற்பாடு செய்துகொள்ளலாம்( இந்திய மருத்துமனைகளில் சில உடல் உறுப்புகள் வியாபாரத்தில் அக்கறைகாட்டுவதைபோலவே, வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனவாம். மேகத்திய நாடுகளைக்காட்டிலும் மிகவும் மலிவாக வாடகைத் தாய்மார்களை அமர்த்திக்கொள்ளலாமாம்) என்கிற எண்ணம் வலுபெற்றுவருகிறது,
கர்ப்பம் தரிப்பதும் குழந்தையைப் பாராமரிப்பதும் மேற்கத்திய தம்பதிகளின் வாழ்க்கைக்கு இடையூறு தருகிறதாம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இது நிகழலாம்.
மேற்கத்திய நாடுகளில் அரசியல் கட்சிகள் பொதுவில் வலது சரிகள் x இடதுசாரிகள் என இருவகையாக பிரித்துபார்க்கப்படுகின்றனர். (இதனை முற்போக்கு x பிற்போக்கு என்கிற அபத்தபார்வையில் பொருள்கொள்ளகூடாது.) வலதுசாரிகளும் இடதுசாரிகளைபோலவே சுதந்திரச் சிந்தனை கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதாவது வலதுசாரிகளும் பழமைவாதிகள் அல்லர், முற்போக்குவாதிகளே. பின் பிரச்சினை எங்கே எழுகிறது. கடைப்பிடிக்கும் சுதந்திரத்தின் பார்வையில் உள்ளது. மேற்குலக வலது சாரிகள் தன்னல சுதந்திரத்தில் (personal interests ) அக்கறை கோண்டவர்கள். மாறாக (மேற்குலக) இட து சாரிகள் கூட்டுச் சுதந்திர த்தை (collective interests. )முன் நிறுத்துபவர்கள். அதாவது முன்னவர்களுடையது அதிகம் தனி நலம் சார்ந்த து , பின்னது பொது நலன் சார்ந்த து. இத்தன்னல சுதந்திரத்தை எதிர்மறை சுதந்திரம்(Negative liberty) என்றும் பொதுநலனை அடிப்படையாக்கொண்ட மேற்கத்திய இதுசாரிகளின் சுதந்திரத் தேர்வை நேர்மறை சுதந்திரம் என்றும், (Positive liberty) கருதுகிறார்கள். சுதந்திரத்தை கூறலாம். தயவு செய்து இதனை இந்திய முற்போக்கு பிற்போக்குடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
நேர்மறை சுதந்திரம் : கட்டுப்பாடுடை யது. ஒரு மனிதனை, சமூகத்தை கட்டுக்குள் வைத்து அனைவருக்கும் பொதுவான இலக்கினை அடைவது. ஒரு தேசம், சமூகம் ஆகியவற்றின் நலனில் அக்கறைகொண்டது. நேர்மறை சுதந்திரம் கரையுடைய ஆறுபோல முறையான பாசனத்திற்கு வழிவகுப்பது அல்லது பொது நன்மைகருதி போக்குவரத்து விதிகளை மதித்து விரும்பிய ஊர் போய்ச்சேர உதவுவது. சிற்சில பாதிப்புகள் தனிமனித சுதந்திரத்திற்கு உண்டென்கிறபோதும் சமூகத்தின் நன்மை கருதி அச்சமூகத்தில் நாமும் ஒருவர் என்ற உண்மையினால் ஏற்கிறோம்.
எதிர்மறை சுதந்திரம் : தன் சுதந்திரம்பற்றி மட்டுமே அக்கறைகொண்டு பிறரை, பிறவற்றைக் கூடாதென்பது. காட்டாறு போன்றது, நீரென்றாலும் பயனாளிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம் இதிலுண்டு. பொதுநன்மைக்காக விதிக்கபட்ட போக்குவரத்து விதிகளை மீறுவேன் என்கிற எதிர்மறை சுதந்திரத்தில் போகவேண்டிய ஊருக்குப்பதிலாக எமலோகத்தில் நம்மை கொண்டு சேர்க்க கூடிய வாய்ப்புகள் அதிகம். globalisation வேண்டும் என்பவர்கள் வலியுறுத்தும் சுதந்திரம். பொருளியலில் Liberal economy அல்லது negative economy என்பது இதுதான். விற்பவர் சாமர்த்தியம் வாங்குபவன் சாமர்த்தியம் இடையில் ஒருவரும் குறுக்கிடக்கூடாது, அரசாங்கம் சட்டம் எதுவும் வேண்டாம். மாறாக Social economy பொருளாதாரம் வணிகம் ஆகியக் கொள்கைகளில் சமூகத்தின் நன்மைகருதி, பெருவாரியான மக்களின் நலன் பொருளியல் நடவடிக்கைகளில் அரசு குறுக்கிடவேண்டும் என்கிறது.
Marquis de Sade என்கிற பத்னெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு பிரமுகரை அநேக மாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உடலுறவில் மிருகத்தனமான இச்சைகளுக்கு அடித்தளமிட்டவர், ‘Libertin’ என்கிற சுதந்திரமான உடல் இச்சை இயக்கத்தின் மூலம் வக்கிரமான ஆசாபாசங்ககளுக்கும் அடித்தளமிட்டவர். அகராதியில் Sadism, Sadiste சேர்க்கபட காரணமானவர். எதிமறையான சுதந்திர த்திற்கு நல்லதொரு உதாரணம்.
அமிர்தம் மட்டுமல்ல சுதந்திரமும் அளவுக்கு மிஞ்சினால் உயிரைக்குடிக்கூடியதுதான் என்பதெல்லாம் தெரிந்தும் நாம் மீறத்தான் செய்கிறோம். வாழ்வியல் போக்குவரத்தில், பெண்களைக்காட்டிலும் விதிமீரல்களில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் உண்மையில் ஆண்கள். « கவனக்குறைவு »எனக்கூறி ஆண்கள் தப்பிக்க முடியாது. குடும்பப் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்களான மனைவியர் இந்த சால்ஜாப்புகளை நம்புவதில்லை. அவர்களுக்கு அபராதத் தொகையை எப்படிப்பெறுவதென்பது தாய்வீட்டுச் சீதனம்.
———————————————————————–