சாலையின் தனித்து நட க்கிறபோது வழியில் கிடக்கும் கல்லை பலர் பார்க்க எடுத்து, ஓரமாகப் போடுகிறான் ஒருவன், அவனுடைய பொது நல சேவையை வியக்கிறோம், கைத்தொலைபேசியில் அக்காட்சியைப்பிடித்து முகநூலில் பதிவுசெய்து, « நீங்கள் மானமுள்ள தமிழனாக இருந்தால் பாராட்டுங்கள் ! » என பண்பான வேண்டுகோளை வைக்கிறோம். அந்தப் பொதுநல சேவகனே மறுநாள் செய்தி த் தாளில் கலகக்காரனாக அவதாரம் எடுத்கிறான், சிலையை உடைக்கிறான். தனி மனிதனாக இருக்கிறபோது வெளிப்பட்ட அவனுடைய நல்ல பண்பு கூட்டத்தில் கலந்தபோது எங்கே போனது?
மூன்று கிழமைகள் விடுமுறைக்கு பாரீலிருந்து மகன் குடும்பம் வந்திருந்தது. பேரனுக்கு 8 வயது. பேர்த்திக்கு 2 வயது. அவ்வப்போது பிள்ளைகளுக்கு இணக்கமான இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தது. அதன் ஒர் பகுதியாக எங்கள் ஊரிலிருந்து இருநூறு கி.மீ தொலைவில் இருந்த அம்னேவீல் (Amnéville) விலங்குக் காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். ஓரிடத்தில் வெள்ளை நிற புலிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஓரளவு பெரிய நிலப்பரப்பு, சிறிய நீர்த்தேக்கம் பாறைகள், அடர்ந்த புற்கள், ஒன்றிரண்டு மரங்கள் இயற்கைவேலிகள் என்ற சூழலில் பார்வையாளருக்கென்று தடித்த கண்ணாடியாலானத் தடுப்பு. மனிதர் இயல்புப்படி யாருமற்ற கண்ணாடியைப் பகுதியைத் தவிர்த்துவிட்டு பார்வையாளர்கள் குவிந்திருந்த இடத்தை நெருங்கி, அவர்கள் பார்வைக் குத்திட்டிருந்த செயபடுபொருளைக் கூட்டத்தின் இடுக்கில் தேடியபோது பரணொன்றில் துணிப்பொதி போல விலங்குக் கிடந்தது. அசைத்த வாலைத் தவிர விலங்கென்று சொல்ல எதுவுமில்லை, வாலையே விலங்கென்று சாதித்தால் சொல்கின்ற ஆளைப்பொருத்து நம்புவதற்கு கூட்டமுண்டு, குழந்தைகள்? கொஞ்சம் நன்றாக பார்க்கலாம் என்றால், ஆசைக்குத் தடையாக மனிதர் வேலி, சரீரத் திரை. நான் பார்க்கிறேனோ இல்லையோ என் பேர்த்திக்கு நான்குகால் மனிதனைக் காட்டவேண்டுமே, « ஓ புலி மாமோய், (மனசுக்குள்தான்) ! » எனச் சோலைக்கொல்லை வள்ளிபோல கூவி அழைத்தேன்,பலனில்லை. கைவிரலைப் பிடித்திருந்த பேர்த்திமீது தற்போது கவனம் சென்றது. அவள் என்ன செய்வாள் என்று தெரியும், அவளுக்கும் மொத்தக் கூட்டமும் அதிசயிக்கிற துணிப்பொதியைப் பெரிதுப்படுத்திக் காட்ட வேண்டும். தவறினால் கையை உதறிவிட்டு ஓடுவாள். அவள் பொதுவாகவே ஓரிடத்தில் நிற்கமாட்டாள். ஓடிக்கொண்டே இருப்பாள். ஓடியதும் சிறிது நின்று நாம் பின்னால் ஓடி வருகிறோமா என்று பார்ப்பாள். நாம் வருவது உறுதியானதும், ஓடுவதைத் தொடர்வாள். நாம் பின் தொடரத் தவறினால் அவள் ஓடுவதில்லை என்பதையும் ஒன்றிரண்டு முறைக் கண்டிருக்கிறேன். எனினும் அந்த அனுபவத்தைச் சோதித்துப் பார்க்க எங்களுக்கு அச்சம். அன்றும் கையை உதறினாள், ஓடினாள். வழக்கம்போல அவள் மீதான பார்வையை அகற்றாமல் வேகமாய்த் தொடர்ந்தேன். பார்வையாளர்கள் இன்றி காலியாகவிருந்த பக்கம் சட்டென்று நின்றவள் கையைக் காட்டினாள். அங்கே பிரார்த்தனைபோல ஒரு மரத்தருகே இன்னொரு புலி. ஐரோப்பிய சரீரங்களின் அழுக்கு வாசத்திற்கிடையில் சற்றுமுன்பு தேடிய புலிபோல அன்றி, இப் பெண்புலி( ?) « நான் வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றேன் பார்த்துக்கோங்க ! » என்பதுபோல நின்றிருந்தது, அது மட்டுமல்ல முற்பிறவியில் மாடலிங் தொழிலில் இருந்திருக்குமோ என்னவோ போனஸாக அப்படி இப்படி catwalkம் செய்துக் காட்டியது. இன்னொரு பக்கம் ‘அதோ அங்க’ , ‘இல்லை இல்லை அங்க’ எனச் சொற்கள் உதவியுடன் சிக்காதப் புலிக்குத் தூண்டில்போடுவதில் கூட்டம் ஆர்வமாக இருக்க, இங்கே நானும் பேர்த்தியும் ஒரு சில நிமிடங்கள் தனித்து விஐபி தரிசனமாக புலிவரதரைக் கண்டு மெய்சிலிர்க்க முடிந்தது.
அசலான வாழ்க்கையிலும் நமக்கு நேர்வது இநத்தகைய அனுபவமே. கூட்டம் வழிநடத்துகின்ற ஏதோ ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். உண்மை மலைபோல நின்றாலும் கவனிப்பாரற்றுப்போக வாய்ப்பிருக்கிறது. கூட்டம் பாதுகாப்பைத் தரும் என்பது நம்பிக்கை. தனிமனிதனாக அடைய முடியாதப் பலனை கூட்டம் பெற்று தரும் என்பது கருத்து. குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களைக்கொண்ட ஒரு குழு சேதங்களைக் கொடுப்பதுமில்லை, கொள்வதுமில்லை. கல்வி, ஏற்ற தாழ்வற்ற பலன்கள் பரிமாற்றம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவை, இக்குழுவின் பண்பை ஒழுங்குபடுத்துகின்றன.
நமக்குச்சிக்கல் பெரும் எண்ணிக்கையிலான மனிதர் கூட்டம் : ஒன்று கட்டுக்கடங்கிய கூட்டம் மற்றொன்று கட்டுக்கடங்கா கூட்டம்.
கட்டுக்கடங்கிய கூட்டம் : நியதிகளின் அடிப்படையில் , தலைவர்கள் தொண்டர்கள் என்கிற ஆகம விதியின் கீழ் எஜமானும் – அடிமைகளும் இணைந்து செயல்படும் கூட்டம். இருதரப்பும் பலன்களை முன்வைத்து விசவாசம் காட்டுபவர்கள். இவர்களின் ஒற்றுமை எதிரிகளின் வலிமையையும், அடையும் பலன்களின் அளவையும் பொருத்தது. பிறமைகளுக்கு அதிக சேதம் இவர்களால் நேர்வதில்லை.
கட்டுக்கடங்கா கூட்டம் : வதந்திகள் உருவாக்கும் கூட்டம். பைத்தியக்கார மனநிலை. இக்கூட்டம் எதிரிகளுக்கு மாத்திரமல்ல, தனக்கும் சேதம் விளைவித்துக்கொள்ளும்.
பொதுவில் கூட்டம் என்கிற தனிமனிதர்களின் குவியல் விநோதமான பண்புகளைக்கொண்டது. ஐந்து தலை 21 கண்கள், 12 கைகள் 38 கால்கள் என்றொரு உயிரை கற்பனை செய்து பாருங்கள். கூட்டமும் அப்படியொரு விலங்கு. கடைகள், விழாக்கள், அலுவல் நேரங்களில் பேருந்துகள், இழவு வீடுகள், வீதிகளில் ஊர்வலங்கள் எங்கென்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூடும் இடங்களில் தனிமனிதன் தன்னுடைய அடையாளத்தைத் தொலைத்து கூட்ட த்தின் பண்பை உள்வாங்கிக்கொள்கிறான். அப்பொதுப்பண்பு மகிழ்ச்சியாக இருக்கலாம், துன்பமாக இருக்கலாம், சத்தம் போட்டுப்பேசலாம், கல்லெறியலாம், கலகலவென சிரிக்கலாம் வீச்சரிவாளை எடுக்கலாம். தனிமனிதனும் சொந்த விருப்பத்தை ஒதுக்கிவிட்டு கூட்ட த்துடன் சேர்ந்து இரங்கல் தெரிவிக்கவேண்டும், வெடித்து சிரிக்கவேண்டும், கலகலப்பாக இருக்கவேண்டும், கல்லெறிய வேண்டும். கற்ற கல்வியை, அறிந்த ஒழுங்கை, தொலைத்து எடுப்பார் கைப்பிள்ளையாகும் அவலம் கூட்டத்தால் நிகழ்கிறது.
எல்லோரும் பார்க்கிறார்கள் நாமும் பார்ப்போம், எல்லோரும் ஓடுகிறார்கள் நாமும் ஓடுவோம், அட்சய திதிக்கு நகைக் கடைக்குப் போகிறார்கள், போகிறோம், அத்திவரதர் முன்பாக மண்டி இடுகிறார்கள், செய்கிறோம் . தரிசித்துவிட்டு வருகிறபோது ஒருவர் விழுகிறார், மிதிபடுகிறார் அதனாலென்ன நமக்கு முன்னே ஓடுகிறவர் மிதிக்கிறார் மிதிக்கிறோம், தனிநபராக இருந்தபோது ஏதோ ஒரு பெயரில் அறியப்பட்ட நான் இருளென்கிற கூட்டத்தில் புதையும்போது யாரோ, இலட்சக்கணக்கான மனிதர்கூட்டத்தில் ஒருவன் என்ற குறியீட்டைத்தவிரத் தன்னைச் சுட்ட எதுவுமில்லை. கூட்டம் என்ற முகமூடி சாட்சிகளை, நீதியைக் குழப்பிவிடும் என்பதால் துணிச்சல். பாதையில் கிடக்கும் கல்லால் சக மனிதனுக்கு ஆபத்து நேருமென்று கல்லை அகற்றிய அவனே கூட்ட த்தில் கலந்ததும், அக்கல்லைக் கொண்டே தாக்குதல் என்கிற வினையை அரங்கேற்ற ஒரு எதிரியைத் தேடுகிறான். செய்த தனிமனிதனைக் காட்டிலும், அவனைச் செய்யத் தூண்டிய கூட்டத்திற்குப் குற்றத்தில் எப்போதும் பெரும்பங்கு இருக்கிறது.
—————————————————————————