ஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு

காத்திருக்கிறேன். ஆவல், அச்சம், சடங்கு, சங்கடம், எதிர்பார்ப்பு, பதற்றம் என்ற பல முகத்திற்குரிய காத்திருப்பில், எந்த ஒன்று எனது முகத்திற்குப் பொருந்தும் எனபது பற்றிய அக்கறை இன்றி காத்திருக்கிறேன்.

கடும் வெயிலில் நிழல் சில்லுபோலவும், முன்னிரவில் தடித்த தொரு கரும்புள்ளிபோலவும்  காட்சி தரினும் பலவேளைகளில் கரு நீல இறக்கைகளும், பொன்வண்டு கண்களும், மிளகளவுத் தலையில் உறிஞ்சுகுழலும், உணர்வுக்கொம்புகளுமாக இரண்டொரு கிழமைகளில் ஆயுள் முடியவிருக்கும் எனக்கு  காத்திருக்கும் இத்தருணம் முக்கியமானது. காலை கண்விழித்ததிலிருந்து, வெக்கை படர்ந்திருக்கும் மாலையின் இப்பகுதிவரை   இடைக்கிடை வயிற்றுப்பசிக்குப் பறந்து அலுத்து, அது மீண்டும் நடக்காதாதாவென்று சில நாட்களகவே  காத்திருக்கிறேன், இம்முறை அது 30 நிமிடங்களுக்கு மேல் கடந்துவிட்ட து என்பதால் கூடுதலாகப் பதற்றமும் அச்சமும்.  சற்றுதூரத்தில் நகராட்சியின் நீளமான மர இருக்கையில் அமர்ந்து தொண தொணவென்று ஒய்வின்றி முதுமையை உரசும் வயதில் தம்பதியர் இருவர் பேச ஆரம்பித்த கணத்திலிருந்து என்று தோராயமாகத் தெரிவிக்க முடியும். சூரியன் மேற்கை நெருங்க நெருங்க  அச்சமும் கவலையும் சேர்ந்துகொள்ள எனது இறக்கைகள் ஒன்றோடொன்று  ஒட்டிப் பிரிகின்றன, உடல் நடுங்குகிறது.

கடந்த சில நாட்களைபபோலவே, இன்றும் இவ்விடத்தில் வேறு வண்ணத்துபூச்சிகள் இல்லை. இதுபோன்ற வேளைகளில் இதே இடத்தில்  என்னைப்போலவே பல வண்ணத்துப் பூச்சிகள் காலை தொடங்கி இருள் சூழும்வரை மரமல்லி பூக்கள் போதாதென்று பிற பூக்களைத்தேடி பறந்திருக்கலாம். அவற்றைக் கண்ட  மகிழ்ச்சியில், இருக்கையை இதழ்களில் காலூன்றி உறுதிபடுத்திக்கொண்டு பிற உயிர்களின் நடமாட்டம், எழுப்பும் அரவம் போன்றவைக்குறித்த கவலையின்றி, தமது காரியத்தில் அவை கவனமாக இருந்திருக்கலாம், தேனுண்டு மகிழ்ந்திருக்கலாம்.  மாறாக அதுபோன்ற எதுவும் தற்போதில்லை என ஆகிவிட்டது. இங்குவந்த நாள்முதல் எங்கு சென்றாலும் ஒற்றையாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு என் சுற்றத்தாருக்கு நேர்ந்தது இங்கும் நேர்ந்திருக்குமோ ?

போன கிழமை முழுவதும் பூங்காவின் மேற்குப் பகுதியில் வாழ்க்கை. வயிற்றுக்கு எவ்வித குறையுமின்றி பொழுதுகள் கழிந்தன.  பெற்றோர், சுற்றத்தார், உடன்பிறந்தார், என்று கூடிவாழ்ந்த காலம் அது. எனது சகோதரிகளில் ஒருத்தி   ஒரு நாள் புதிர் போட்டுப் பேசினாள். வயிற்றுக்காக பூக்களைத் தேடிப்பறப்பதும், இனவிருத்திக்காக ஆண்வண்ணத்துப்பூச்சிகளை கூடுவதும் என்ற  இந்த வாழ்க்கை அலுக்கவில்லையா ? எனத் தொடங்கினாள்.  நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா ? என அவள் கேட்க நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புரியவில்லை என்பதாய் தலையை ஆட்டினோம். யோசித்துப்பாருங்கள் மண்டூகங்களா எனத் தலையிலடித்துக்கொண்டு பறந்து சென்றாள். அதற்கான காரணத்தை தெரிவிப்பாள் என்று காத்திருந்த  நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. நகராட்சி ஊழியர் எதையோ முதுகில் சுமந்துவந்து பீய்ச்ச அடுத்த சில நிமிடங்களில் அவ்வளவுபேரும் அவரவர் அமர்ந்திருந்த இடத்தில் பூவிதழ்களைப்போல இறக்கைகள் உதிர்ந்து எலிப்புழுக்கைகளாக உறைந்து கிடந்தார்கள்.  நான் மட்டும் உயி தப்பினேன்.

சுற்றத்தை இழந்து தனித்திருந்த  உயிர் வாழ்க்கைச் சுற்றில் இரண்டாம் நாள்  முதன்முதலாக அச் சம்பவம் நிகழ்ந்தது. சூரியகாந்தி பூவொன்றில் அமர்ந்து பசிஆறிக்கொண்டிருந்தவேளை, சேர்ந்திருந்த எனது  இறக்கைகள் இரண்டிலும் மெத்தென்ற  அழுந்தம். இரு பிஞ்சு விரல்களின் பிடியில் சிக்கியிருந்தேன். நெஞ்சு தட தடவென அடித்துக்கொள்கிறது. வயிறு பெருத்து சுருங்குகிறது. ஆணுடல் ஒன்றுடன்கட்டுண்டு கிடகிற அதே அனுபவம். தலைச்சுற்றல். கிறக்கம். அனைத்துமே நீடித்த கணம் என்பது ஓரிரு நிமிடங்கள்.  இறக்கைகளின் இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்த மறு நொடி மெலிதாக ஒரு கைத்தட்டல். சலங்கை குலுங்குவதுபோல ஒரு சிரிப்பு. திரும்பினேன், சிறுமியொருத்தியை அவள் தாயென்று நினைக்கிறேன், முதுகில் தட்டி கணுக்கையை இறுகப்பற்றி இழுத்துச் செல்கிறாள். நீர் கோர்த்த கண்களுடன்  தயங்கியபடி சிறுமி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வை, பெற்றவள் அவளை விசுக்கென்று  தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டபோதும் தொடர்கிறது.   ஏமாற்றத்துடன் திரும்பிப் பறந்து அருகிலிருந்த குத்துச் செடியில் அமர்ந்தேன். « நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா ? » என சில நாட்களுக்கு முன்பு என் சகோதரி கேட்டது நினைவுக்கு வந்தது.

சிறுகுழந்தையின் தீண்டல் ஓர் ஆண் வண்ணத்துப் பூச்சியுடனான சேர்க்கையைக் காட்டிலும் கூடுதல் இன்பம் தரக்கூடியதென்பதை என் உடல் உணர்த்திய அக் கணத்தில்தான், சிறுவருக்கான விளையாட்டுத் திடலொன்று கண்ணிற்பட்டது. அருகில் சிறியதொரு நீர் நிலை, மத்தியில்  எதிரெதிர் கரைகளை இணைப்பது போல படிகள், பெணொருத்தி குட த்தை சாய்த்துப் பிடித்திருப்பதுபோல ஒரு சுதை உருவம் நீர் நிலையை ஒட்டி நாதசுவர அணைசுபோல கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் மரமல்லி, விரல்விரலாய் இதழ்கள்  சுண்டி இழுக்கும் மணம், மரத்தைச் சுற்றி பராமரிப்பிற்குத் தப்பிய அல்லது பராமரிப்பை அறியாத தான் தோன்றித்தனமாக வளர்ந்து, மண்டிக்கிடக்கும்கோரைகள், குத்துச்செடிகள், பச்சையும் மஞ்சளுமாய் அருகம்புற்கள். தமாதிக்காமல் குடிபெயர்ந்துவிட்டேன்.

அன்று ஜூன்மாத இறுதி நாளொன்றின் பிற்பகல். மாலை முடிந்திருந்தது. ஆனாலும் இரவு வெகு தூரத்திகிருந்தது.வெக்கை அதன் உச்சத்தைதொட்டு தணிந்திருந்த நேரம்.  மெலிதானக் காற்று அவ்வப்போது இலைகளை அசைத்துப்பார்க்க போதுமானது என்பதைப்போலவே என்னையும் சில கணங்கள் அமைதியாக இருக்கவிடாமல் எழுந்தலையச் செய்தது. உணர்வுக்குழல்களில் ஒட்டிக்கிடந்த மகரந்தத்தை இரண்டொரு  முறை ஒன்றோடொன்று தேய்த்து  உதிர்த்து  மேல் எழுந்து  திரும்பவும் புதரில் நீண்டு முன்பக்கமாக வளைந்திருந்த கொம்பொன்றில் அமர்ந்து அக்கம்பக்கத்தில் கவனத்தைச் செலுத்தினேன்.

அண்மையில் மணமுடித்திருக்கவேண்டும்(?). – இரட்டையராகப்பிறந்து  உடல் ஒட்டிவாழ சபிக்கப்பட்டவர்களைப்போல- ஒரு ஜோடி கடந்து சென்றது. ஆண், பெண்ணிடம் ஏதோ கூற காலதாமதமாக அதன்பொருளை உணர்ந்தவள் போல, உதட்டை ஓர் மலர்ந்த பூப்போல பிரித்து நிறுத்தி புருவத்தை உயர்த்தி ‘ஓ’ என்றாள். அவன் தலையில் குட்டுவதுபோலக் கையை எடுத்துச் சென்ற கையை பின் வாங்கி, அவன் தோளைத் தொட்டு  தள்ளுவது போல பாவம் காட்டிச் சிணுங்கினாள்.  அவர்கள் சென்ற கால்மணி நேரத்திற்குப் பிறகு நான்கு பையன்கள், முகத்தில் மண்டிக்கிடந்த தாடியைவைத்து இளைஞர்களென ஊகிக்க வேண்டியிருந்தது. ஒருவன் கைக்குட்டையை முக்கோணமாக நெற்றிப்பொட்டை மறைத்து தலையில் கட்டி இருந்தான். மற்ற மூவரும் அதனையே முன்கையில் மணிக்கட்டை ஒட்டிச் சுற்றியிருந்தனர். சற்று முன்பு மது அருந்தி இருக்கவேண்டும், சென்னை திரும்பும் அவசமில்லை என்பதுபோல பூங்காவிற்குள் நுழைந்திருக்கிறார்கள், ஆயி மண்டபத்தில் பார்வை இருந்தது. ஆபாசமாக எதையோ கூற நண்பர்கள் கைத்தட்டி உரத்துச் சிரிக்கிறார்கள். ஓர் ஐரோப்பியர் நாயை இழுத்துக்கொண்டு சைக்கிளில் சென்றார். எனது கவலையெல்லாம் சறுக்கு மரம், ராட்டினமென்று மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்  சிறுவர் சிறுமியரில் ஒருவராவது தங்கள் கவனத்தை  என்பக்கம் திரும்பமாட்டார்களா என்பதைப் பற்றியதாக இருந்தது.

மனதைத் தேற்றிக்கொண்டு நம்பிக்கையை தளரவிடாமல் கவனத்தை   தற்போது மரத்தாலான நீள்  இருக்கையொன்றில் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டிருந்த பெண்மணிகள் பால் திருப்பினேன். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம். விளையாடும் சிறுவர்கள் கூட்டத்தில் அவர்களுடைய பேரனோ பேர்த்தியோ இருக்கலாம். எதைப்பற்றிப்பேசுவார்கள். சாமர்த்தியமற்ற மருமகள், மோசமான வேலைக்காரி, தராசை சரியாக பிடிக்காத காய்கறிகாரன், சாப்பிட்ட இலையை தங்கள் வீடுமுன்பாகப் போடும் அண்டைவீட்டுக்காரி, முன்னாள் ஊழியை என்பதை ஏற்கமறுக்கும் அலுவலகம், அன்றையதினம் பார்த்திருந்த தொலைக்காட்சித் தொடர்கள், இரண்டு நாட்களுக்குமுன்பாக அண்டைவீட்டுக்காரன் மகளை பீச்சில் எவனுடனோ பார்த்தது, ஆக பேசுவதற்கு நிறைய இருக்கின்றன.  பேச்சின் சுவாரஸ்யத்திலும் என்னைக்கடந்து, இருவரில் ஒரு பெண்மணியின் பார்வை, சன்னற் கதவுகளை  படாரென்று திறந்து எட்டிப்பார்ப்பதைபோல, சட்டென்று  விளையாட்டில் தீவிரமாக இருக்கும் பிள்ளைகளிடம் சென்றது.

–  டேய் செல்லக்குட்டி போகலாமா ?

பெண்மணியால் செல்லக்குட்டி என்றழைக்கப்பட்ட த்த சிறுவன் அல்லது சிறுமி அக்கூட்ட த்தில் யாராக இருக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆவல்.

– ஆயா ! இன்னும் கொஞ்ச  நேரம் விளையாடிட்டு வரட்டா ?  – வாயைத் திறந்தது ஒரு சிறுமி.

–   நான் செல்லங்குடுத்து உன்னைக் கெடுத்துட்டன்னு ஓங்கம்மா சொல்றாளாம். ரமேஷ் பாட்டி, இப்பத்தான் கதைகதையா சொன்னாங்க. ஒங்கப்பன் சரியா இருந்தா எனக்கு ஏன் இந்த கதி. கிளம்பு கிளம்பு.

விருப்பமின்றி விளையாட்டு நண்பர்களைப் பிரிந்துவந்து  சிறுமி பாட்டியின் கையைப் பிடித்த மறுகணம் தற்செயலாகத் திரும்புகிறாள். என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்க்கிறாள். மடல்கள் உயர, விழிவெண்படலம் வியப்பில் நிரம்புகிறது. அவள் கண்மயிர் எனது இறக்கைகள் போலவே இரண்டொருமுறை படபடத்து அடங்குகின்றன. பிடித்திருந்த பாட்டியின் கையை உதறிவிட்டு என்னிடம் ஓடிவருகிறாள். நான் அசையவில்லை. வட்டமான முகம், பாப் வெட்டப்பட்டதலைமுடி ; முன் தலையின் மயிற்கால்கள், நெற்றி, காதோரம், முன் கழுத்தின் இறக்கம், எங்கும் நிறமற்ற வியர்வையின் தடம். இத்தருணத்திற்காகத்தானே கடந்த ஒரு கிழமையாக காத்திருக்கிறேன். நின்று என்னை தன் கண்களால் படம் பிடிக்க நினைத்தவளைப் போல சிறுமி பார்க்கிறாள். நான்கைந்து வயதிருக்கவேண்டும். விழி மடல்களிரண்டும் சுருங்கிப்  புருவத்துடன் ஒட்டிக்கொள்ள  குறுகுறுவென்று கண்மணிகளை அசைக்காமல் என்னை நோக்கிச் சிரிக்கிறாள். அவளுடைய அடுத்தக்கட்ட நகர்வுக்கு இணக்கம் தெரிவிப்பதுபோல இறக்கைகளை திரும்பத் திரும்ப ஒட்டிப் பிரிக்கிறேன். இறக்கைகளை மட்டும் அசைத்து, அச்சமின்றி அந்த இடத்தைவிட்டு அகலாமல் இருந்த என் இருப்பு, சிறுமிக்குத் தைரியத்தை அளித்திருக்கவேண்டும். வலதுகையை தாமரை மொக்குபோல குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும்அதிலிருந்துபிரித்து குறடுபோல குறுக்கிக்கொண்டு என்னை நெருங்கினாள். சிறுமியின் செயலுக்கு இசைவாக திரும்பி பக்கவாட்டில் உட்கார்ந்தேன்.

– பட்டாம் பூச்சியை பிடித்து விளையாட இது நேரமில்லை, மணி ஆறுக்கு மேலாகிறது, வா வா !

– கொஞ்சம் பொறு ஆயா

– சொன்னா கேட்கனும் அடுத்த முறை வரும்போது பிடிச்சுக்கலாம், எங்கியும் போவாது. இங்கதான் எங்கனாச்சும் பறந்துகிட்டு இருக்கும்

பெண்மணி கூறிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் விரலிரண்டும் என் இறக்கைகளை ஒன்று சேர்த்து அழுந்தப்பிடித்து பின்பு தளர்ந்தன. கால் கள் பின்வாங்கி விலகி, பெண்மணியின் புடவையை ஒட்டி நிற்கின்றன. என்னைத் திரும்பிப்பார்த்த சிறுமி தன் பாட்டியிடம் :

– அடுத்த முறை   நேரா இங்கத்தான் கூட்டிக்கிட்டு வரணும், எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சுவிளயாடணும்.

– அதற்கென்னடா கண்ணு வந்தாப்போச்சு

——————————————————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s