அஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன், பெயருக்கேற்ப நல்ல உயரம், அதற்கேற்ப உடல்வாகு, ஈரத்துடன் மினுங்கும் கண்கள், கூரிய மூக்கு, அதை உதட்டிலிருந்து பிரிப்பதற்கு நெய்பூசி நீவியது போல, உதட்டோரம் இருபுறமும் உறையிலிட்ட வாள்போல மீசை. தலையில் மகுட த்தைச் சூட்டினால் சோழர் குல வாரிசென்பது நிச்சயம். எழுத்திலும் இந்த கம்பீரமும் மிடுக்கும் அப்படியே குறையாமல் இருப்பதுதான் அதிசயம்.
இராசேந்திர சோழனை நிகழ்காலத்திற்கு அழைத்து, நிலைக்கண்ணாடி முன்பாக நிறுத்தினால் அதில் நா. பார்த்தசாரதியோ, ஜெயகாந்தனோ தெரிந்தால் வியப்புமல்ல. அதிலும் பின்னவரைப்போல தனது இருத்தலை உறுதிசெய்ய உரத்து குரலெழுப்பும் அரசியல் இவருக்கு வராது என்கிறபோதும், அடித்தட்டு மக்களின் குமுறலை, ஆற்றாமையை கதைபடுத்துகிறவர். வாய்பேசாத மக்களுக்கு வக்காலத்து வாங்குகிற வழிமுறையில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு.
இராசேந்திர சோழன்போல கம்பீரமானதொரு எழுத்தாளரை நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல யாருமில்லை. அவருடைய சிறுகதையொன்றில் . « தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார் » என்று ஒரு வரியைப் படித்த நினைவு. அதுபோலத்தான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்தார். அன்று எழுத்தாளர் பிரபஞ்சனும் நானுமாக புதச்சேரி கடற்கரையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம். தலைமைத் தபால் நிலையத்திற்கு எதிரே சரியாகச் சொல்ல வேண்டுமெனில், மத்திய தொலைபேசி இணைப்பக அலுவலகத்திற்கு எதிரில், AITUC கொடிக்கம்பத்திற்கு அருகில் அவரைச் சந்தித்தேன். ஒரு தொழிற்சங்கவாதிபோலவே இருந்தார். கணிரென்ற குரல். பிரபஞ்சன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டொரு நிமிடங்கள் உரையாடியிருப்போம்,பின்னர் அவர் கிழக்கு திசையிலும், நாங்கள் மேற்கு திசையிலுமாக நடந்தோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் ஹைக்கூ தமிழ் மணி, மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர் ஆகியோர் உதவியால் மயிலத்தில் அவருடையை இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனிய குடும்பம், அன்பான உபசரிப்பு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் அதுவுமொன்று.
2017 இரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு.மேற்குலகையும் அமெரிக்காவையும் வீழ்த்த மாசேதுங்கின் சீனா தனியுடமையை சுவீகாரம் எடுத்துக்கொண்டிருக்க, லெனின் அறைகூவலில் கிளர்ந்தெழுந்த சோவியத் மண்ணில் சோஷலிஸம் இன்று நேற்றய சரித்திரம். பனிப்போரை மறந்து, உலகமயமாக்கலுக்கு உரமூட்டுவதெப்படி என்ற விடயத்தில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு பேதமின்றி நாடுகள் கைகோர்த்துள்ள 21ஆம் நூற்றாண்டு. அல்பெர் கமுய்யில் ஆரம்பித்து இராசேந்திர சோழன்வரை பொதுவுடமை ஸ்தாபனத்தின் மீதும், அதன் அபிமானிகளிடத்திதிலும், கொண்ட கோபமும் குமுறலும் நியாயமானவை என்பதை வரலாறு உறுதிசெய்துள்ள காலகட்டம். இத்தகைய சூழலில் இராசேந்திர சோழனைப் பற்றி எழுதுவதும் பொருத்தமானதுதான்
கம்பீரத்தில் இராசேந்திர சோழன் ஒரு ஜெயகாந்தன் எனில் எளிமையில் அவர் மற்றுமொரு சு. சமுத்திரம். மூவருமே கலையும் படைப்பிலக்கியமும் மக்களுக்காக என வாதிடும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். தங்கள் படைப்புக்களை அத்தகைய கண்ணோட்ட த்துடன் படைத்தவர்கள். மனித வாழ்க்கையின் அலங்காரத்தை மட்டுமின்றி அவலங்களையும் தமது படைப்பில் சொல்லப்வேண்டிய கடமை படைப்பிலக்கியவாதிக்கு இருக்கிறது. அறுபதுகள் வரை நவீன தமிழ் இலக்கியம் மேலை நாடுகளில் ஆரம்பத்தில் எழுதப் பட்டதைப்போலவே மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறையை, வாழ்க்கைப் பார்வையை படைப்பில் மையப்படுத்தி அல்லது அவைகளை மையமாக வைத்து, விளிம்பு நிலை மக்களை முற்றாக நிராகரித்து இதுதான் தற்கால தமிழர்களின் வாழ்வியல், சமூக நெறிகள் என்று சொல்லப்பட்டன. கர்நாடகச் சங்கீதம், அலுவலகம், வற்றல் குழம்பு, சந்தியா வந்தனம் அத்திம்பேர், பட்சணங்கள் புனைவுகளிலும், சிறுகதைகளிலும் சாகாவரம் பெற்றிருந்தன. இவற்றிலிருந்து முரண்பட்டு ஜெயகாந்தன் சேரி மக்களுக்கு இலக்கியத்தில் இடம் அளித்திருந்தார். அவரும் பொதுவுடமை ஸ்தாபனத்தின் பிரதிநிதி என்றபோதிலும் எஜமான் தொனியில் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். விளிம்பு நிலை மக்களை புரிந்துகொள்ள அவரெடுத்த முயற்சிகள் எல்லாம், பரிசோதனை முயற்சிகள். அவர்களில் தன்னை ஒருவராகக் கண்டு எழுதியதல்ல. ஆனால் சு. சமுத்திரம் போன்றவர்கள் தாங்களும் அந்த அடித்தட்டு மக்களில் ஒருவர் என்ற உணர்வுடன் படைத்தவர்கள். அத்தகைய பண்பை நமது இராசேந்திர சோழனிடம் காண முடிந்தது. அதேவேளை எழுத்தாற்றல்,கதை சொல்லும் திறன் இரண்டிலும் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறார். இது இராசேந்திர சோழனுடைய பலம் மட்டுமல்ல பலவீனமும் ஆகும்.
இராசேந்திர சோழன் சிறுகதைகள்
முனைப்பு : தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்ற உணர்வில் எழுதப்பட்ட கதை. தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டிய மாநாட்டில் சிறுகதை நாயகனும் கலந்துகொள்கிறான். நண்பகல் இடைவேளையின்போது வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தைப் பிரித்தவண்ணம் :
« அதே பேச்சாளர்கள் அதேபேச்சு இப்படி மாநாடு நடத்திக்கினு இருந்தா எப்பத்தான் விடிவு காலமோ… » என்கிறான். « நம்மகிட்ட என்ன செயல் திட்டம் இருக்கு அதை நடைமுறை படுத்த. அது இல்லாத வரைக்கும் சும்மா வாயாலேயே பேசிக்கினு இருக்க வேண்டியது தான் » என்ற நண்பரின் பதிலுக்கு, « எல்லாரையும் ஒரு சேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அதைத் தாண்டி வேற என்ன ? » என்பது அவன் அங்கலாய்ப்பு. தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிப்பது எனத் தீர்மானித்து அவன் படும் சங்கடங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லிக்கொண்டு போகிறார். இன்றைக்கு உலகமெங்கும் தம்ழ் மாநாடுகள் என்ற பெயரில் அரங்கேறும் கூத்துக்களை படைப்பிலக்கியவாதி அவருக்கே உரித்தான தொண்டை மண்டல வட்டாரத் தமிழில் சொல்லியிருக்கிறார்.
சூரப்பன் வேட்டை : பெயரைக்கொண்டே சட்டென்று நம்மால் எதைப்பற்றி ஆசிரியர் பேசுகிறார் என்பதைச் சுலபமாக விளங்கிக் கொள்கிறோம். நாட்டின் அத்தியாவசிய பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்ப அன்றைய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியே வீரப்பன் வேட்டை என்பதை த் துணிச்சலுடன் சொல்லும் கதை. நேர்மையான சமூக உணர்வுள்ள எழுத்தாளனுக்கு வரும் கோபத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்திலும் இராசேந்திர சோழன் தமது வழக்கமான எள்ளல் மொழியைக் கையாள மறப்பதில்லை. ஏமாளிதேசம், ஏமாற்று தேசம் வஞ்ச்சகப் பேரரசு, சூரப்பன், தடாலடிப்படை என்ற உருவகப்படைப்பில் ஒளிந்திருப்பவர்கள் யார் என்பதை விளங்கிக்கொள்வதில் அதிக சிக்கல்களில்லை. இக்கதையில் :
« தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப்பகுதியில் வீசும் மெல்லிய இளங்க்காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர் நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத் தலைவர்……. இது காட்டு விலங்குகள் விட்டதாகவே இருக்க முடியாதென்றும், அதே வேளை இது பருப்பு, சாம்பார், காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி….உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும்…..தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியமென்றும், எனவே சூரப்பனோ அல்லது அவர் கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியுமென்றும் சொன்ன அவர் இதை உறுதிச் செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அயிட்டத்தை ஆய்வுக்காக கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுனர் முடிவுக்கு அனுப்பியுள்ளதாகவும் ….உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார் » என்பது எள்ளலின் உச்சம்.
சவாரி :
இராசேந்திர சோழனின் சிறுகதைகளில் நான் மிகவும் விரும்பி வாசித்த சிறுகதை. கி மாப்பசானை நினைவூட்டும் மொழி நடை.
த.கு கட்சியின் தலைமைக் குழு கூட்டம். « அஜண்டாவைச் சொல்லுங்க தோழர் » என்கிறார், உறுப்பினர்களில் ஒருவர். « வழக்கமான அரசியல் போல அறிக்கை எல்லாம் வேணாம். இண்ணையக் கூட்ட த்துலே ஒரே ஒரு சப்ஜெக்ட் தான், குதிரைப் பிரச்சினைன்னு அது மட்டும் போதும், அதுலியெ உட்பிரிவா அ.முகம், ஆ.வயிறு, இ.கால்கள், ஈ. வால், உ. சூத்துன்னு அத மட்டும் போட்டுக்குங்க போதும் », என்கிறார் மற்றவர். « இயக்கப்பணிகள் பொருட்டு தலைமைக்குழு தோழர்கள் அவ்வப்போது வெளியூர் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு இடர்ப்பாடு…இச்சிக்கலைத் தீர்க்க கட்சிக்கு குதிரை ஒன்று வாங்குவது என்றும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் த.கு தோழர்கள் இக்குதிரையைப் பயன்படுத்திக்கொள்வது என்றும், த.கு.வில் முடிவு செய்து » தலைமைகுழுப் போட்ட தீர்மானத்தை மாவட்ட வட்ட குழுக்களும் வழிமொழிகின்றன. பிறகு வழக்கமான அரசியல் கூத்துகள். ஒரு நல்ல சாதிக்குதிரையை வாங்க ‘குதிரை நிதி’ திரட்ட அது குறித்த ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று நீளும் கதையில் நாம் செய்தித் தாள்களில் வாசிக்கிற அத்தனை அசிங்கங்களும் அரங்கேறுகின்றன. நல்லதொரு அரசியல் நையாண்டி கதையை படித்த மகிழ்ச்சி.
பிரார்த்தனைகளும் பிரசாதங்களும் :
மறுபடியும் மா நாடுகளைப் பகடி செய்யும் கதை. அரசியல் மா நாடு என்றில்லை, பொதுவாக இங்கு அனைத்துமே கிடைத்த நிதியை செலவு செய்ய அரங்கேற்றும் காரியங்கள். எவனோ செத்திருப்பான், ஈமச் சடங்குகளில் தங்கள் தங்கள் உறவுக் காரர்களுக்கு தலைக்கட்டுதல் கன ஜோராக நடைபெறும். அதன் மாற்று காட்சிதான் இந்த மா நாடுகள். இந்த லட்சணத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு அடுத்தவன் முதுகில் அழுக்கைத் தேடுவார்கள். மா நாட்டின் முடிவில் என்ன உருப்படியாக நடந்தது, எனத் தேடினால் ஒன்றுமிருக்காது.
« என்னப்பா மா நாடெல்லாம் எப்படி » என நண்பனைக் கேட்கிறான் மா நாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத கதை நாயகன்.
« ரொம்ப சிறப்பா இருந்தது. மூன்று நாளும் என்.வி. தான். மொத நாள் மீன் குழம்பு. ரெண்டாம் நாள் சிக்கன், மூணாவது நாள் மட்டன் கூடவே வட பாயாசம் வேற » என்கிறான் சினேகிதன். இவன் சிரித்து « ஏம்பா அதையா கேட்டேன் மாநாடு எப்படி இருந்த துன்னா » என் கிறான். « எல்லாம் வழக்கம் போலத்தான் » என்கிறவன், « மா நாட்டிலே எல்லாருக்கும் பஞ்ச்சாமிர்தம் கொடுத்தாங்க. நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்டுல வெல அமபது ரூபா. நம்ப தோழர்களுக்கு பத்து ரூபா சலுகை » என இராசேந்திர சோழன் எழுதுகிறபோது, சோரம் போகாத எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் எக்காலத்திலும் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்.
விசுவாசம் :
தெரு நாய் ஒன்றின் விசுவாசம் பங்களா நாயாக மாறியதும் இடம் மாறும் அழகு மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ள து. தெரு நாய்தான் கதை நாயகன் அல்லது கதை நாய்கன். நாய், குரைப்பு, அதனை அறிந்த மனிதர்கள் என்று மூன்று தரப்பினருக்கிடையே நிகழும் சம்பவக் கோர்வை ஆழமான சமூக பார்வையுடன் கதையாகச் சொல்லப்படுகிறது. இராசேந்திர சூழன் படைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள், சிறுகதை எழுத ஆர்வமுள்ள இளைஞர்கள் கட்டாயம் படித்துப் பார்க்கவேண்டிய கதை.
இராசேந்திர சோழனின் நெடுங்கதைகள்
தமிழினி வெளியீடான இராசேந்திரசோழன் குறுநாவல்கள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளை இங்கே குறிப்பிடவேண்டும். அவற்றில் மூன்றினை எழுத்தாளுமைக்கு, வெவ்வேறுவகையில் படைப்பை எழுத்தாளர் அணுகும் முறைமைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.
அ. பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்
‘முச்சந்தி இலக்கிய பாணி’யில் எழுதப்பட்ட நெடுங்கதை. சமகால எழுத்தாளர் ஒருவரை அல்லது ஒட்டுமொத்தமாக பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையை பகடி செய்திருக்கிறார் எனலாம். பரதேசி எழுத்தாள்ரின் பிரம்மச்சர்ய வாழ்க்கையை முடித்துவைத்த திருமணம், இல்லறத்தில் இணைந்துகொண்ட புதுமனையுடனான ஊடல், தாம்பத்ய கடமைகள், திருவிருக்கையில் சாய்ந்து கைகளைதலைக்கு மேலே தூக்கிப்போட்டு பின்னிய கோலத்தில் கதையைத் தேடும் முயற்சிகள் நக்கல் மொழியில் இராசேந்திர சோழன் என்ற எழுத்தாளரின் இன்னொரு பரிமாணத்தை த் தெரிவிக்கின்றன.
எழுத்தாளர் பரதேசியாரைப்போல எழுத்துவாழ்க்கையை அமைத்துக் கொண்ட பரிதாப எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். இராசேந்திர சோழன் சொல்வது போல ‘மனம் லயிக்காமல், உணர்வு ஒன்றாமல், ஏதோ கடமைக்கு என்று எழுதி, எழுத்தும் இலக்கியமாகாமல், மனசுக்கும் திருப்தியில்லாமல்’ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் ‘எழுதாமல் இருப்பது உத்தம ம்’ என்று முடிவெடுப்பின் படைப்புலகிற்கு நல்லதுதான்.
ஆ. 21 வது அம்சம்
எழுபதுகளின் மத்தியில் அமலான நெருக்கடி நிலையையும், அப்போதைய மத்திய அரசின் இருபது அம்சத் திட்டங்களையும் பரிகசிக்கும் கதை. இக்கதை பிரச்சினையுள்ள காலத்தில் வெளிவரவில்லை என்று தெரிகிறது. வந்திருந்தால் எழுதியவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும். சுப்பராயன் என்ற ஏழை குடியானவனுக்கு கரம்பாக க் கிடக்கும் நிலங்களை உழுது பயிரிட கடனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று முனைப்புடன் ஆசிரியர் பணியிலிருக்கும் ராமச்சந்திரன் என்பவர் எடுக்கும் முயற்சிகளையும், அவருடன் சுப்பராயனும் அவன் தகப்பனும் ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கி படும் துயரங்களையும் ஆசிரியர் சொந்த அனுபவம்போல சித்தரிக்கிறார். இப்பிரச்சினைக்கிடையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குறியீட்டை எட்ட அறுவைச் சிகிச்சைக்கு ஆட்களைப் பிடிக்க ஆசிரியர்கள் பட்ட வேதனைகளையும் பார்க்கிறோம். வாசக்டமி என் கிற ஆண்களுக்கான அறுவைச் சிகிச்சைக்குக் கிழம் கட்டைகளையெல்லாம் ஏமாற்றி அறுவைச் சிகிச்சை செய்த கதைகள் ஏராளம்.
இ. சிறகுகள் முளைத்து :
அக்காள், அம்மாள் என பாஸ்கரன் என்ற இளைஞனுக்கு ஆதரவாக இருந்த பெண்கள் இருவரும் அவர்கள் சேர்ந்த சமூகம் எதிர்பார்க்கிற அல்லது விதித்திருக்கிற நெறிமுறைகளை மீறுகிறார்கள். சாம்பசிவம் வாத்தியார் என்ற பிம்பம் அவன் கண்முன்னே வெடித்துச் சிதறுகிறது. இம் மெய் நிகழ்வினை ஏற்றுக்கொள்ள திரானியின்றி மனதில் ரணத்துடன் நாட்களைக் கழிக்கிற இளைஞன் வாழ்க்கையில், ஆறுதலாக இளம்பெண் ஒருத்தி குறுக்கிடுகிறாள். இவனும் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மறந்து காதல் வயப்படுகிறான். ஊடலின் உச்சம் காதலர்களுக்கிடையே பிரிவினையை எழுப்புகிறது. அழுதகண்ணீரும், சிந்திய மூக்கும் என்கிற வாய்ப்பாடுகளை மறந்து, எளிமையான மொழியில் சொல்லப்பட்டநேர்த்தியான கதை.
இராசேந்திரன் சோழன் என்கிற படைப்பு பிரம்மனை உறுதி செய்யும் நெடுங்கதை. இவரது படைப்புக்கே உரிய அடிதட்டுமக்கள், அதனை உறுதி செய்து காட்சிகள். தொண்டைமண்டலப் பகுதிக்குரிய நாட்டார் வழக்குச் சொற்கள், வெள்ளந்தியான உரையாடல்கள் என கதையின் தடிப்பையும் பொருண்மையின் வரைபடத்தையும் எழுத நமக்கு வார்த்தைகள் போதா. மேட்டுக்குடியினர் அபிநயகூத்தாக அமைத்துக்கொள்ளும் பொய்யான வாழ்க்கை முறை, அடித்தட்டு மக்களின் வயிற்றுக்கும் வாழ்விற்கும் விடையாக அமைந்து, திக்கின்றி கூனிக்குறுகி எதார்த்த த்தோடு இணங்கிப்போகும் அவலம் பச்சையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஓர் சமூக பிரக்ஞையுள்ள எழுத்தாளன் என்று அவருக்குப் படைப்பிலக்கியம் பரிவட்டம் கட்டுகிறது, இக்கதைகொண்டு. பாஸ்கரன் என்ற புள்ளியைச் சுற்றி வட்டமிடும் மாக்கோலம் அழகு. அவன் அக்காள், தாய் ரஞ்சிதம், தேவானை, வடிவேலு, மல்லிகா, சங்கரலிங்கம், ஏன் மரவள்ளிக்கிழக்கு ஆயா உட்பட சமூகத்தின் பரிதாபத்திற்குரிய உயிர்களைக்கொண்டு, இரத்தமும் சதையுமாக படைக்கபட்ட கதை.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடையாளப்படுத்த சொல்வண்ணம்கொண்டும் தீட்டும் ஒவியங்கள் ஒன்றா இரண்டா ?
« குளித்து முடித்து தலை பின்னிகொள்ள உட்காரும்போது அவள் முகத்தில் படிந்திருந்த கலவரம், ரசம் போன ஓட்டைக் கண்ணாடியில் வெளிறித் தோன்றியது »
« அவன் உள்ளே நுழைந்தான், வீடு சின்ன வீடு. கொஞ்சம் வேகமாக ஓடிவந்தால் தாண்டி விடுகிற அகலம். அதைப்போல ஒண்னரை மடங்கு நீளம். சுற்றிலும் இடுப்புயரம் சரிந்து மெலிந்த மண் சுவருக்குமேலே மக்கிய கீற்றுவரிசைகள். ஓரத்தில் நைந்துபோன கயிற்றுக் கட்டில். மேலே அழுக்கடைந்த கோரைப்பாய். எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய உறையில்லாத தலையணையுடன் கீழே ஒரு முக்காலி. சுவர் நீளத்துக்கு இழுத்துக் கட்டிய தேங்காய் நாரினால் தரித்த ஒரு கொடிக்கயிறு. மடித்துப்போட்ட அழுக்குச் சேலைகளும், கழற்றிப்போட்ட ரவிக்கைகளும்…மூலையில் ஓர் அடுப்பு »
« பிசுபிசுப்பு ஏறிய கரிய பெஞ்சுகளில் ஈக்கள் மொய்த்தன. மேசைமேல் யாரோ குடித்துவைத்துவிட்டுப் போன கிளாஸ் ஒன்றில் ஈ ஒன்று விழுந்து இறந்து போயிருந்த து. கடைப்பையன் வந்துகிளாசுகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் அழுக்கடைந்து வெள்ளையாய் தெரிந்த நீரில் அப்படியே போட்டுக் கழுவிக்கொண்டிருந்தான். வெற்றுடம்பில் வியர்வை வழிய புழுக்கமும் கசகசப்பும் நிறைந்த இத்தில் நின்று மாஸ்டர் டீ போட்டுக்கொண்டிருந்தான். »
எளிய மக்களின் வெள்ளந்தியான உரையாடல்களும், மல்லிகா, பாஸ்கரன் என்ற மனித உயிர்களுக்கிடையேயான பாலின ஈர்ப்பு பரிபாஷைகளும் ஆசிரியர் குரலாக ஆங்காங்கே ஒலிக்கிற வரிகளும் முக்கியமானவை :
« … மனுஷன வாழ வக்யறதே இந்தக் கவலைதான்… அதுதான் மனுஷன் வாழறதுக்கேத் தூண்டுது. என்னா. யாரபத்தியும் எதப்பத்தியும் கவலைப்படாதவன் எதுக்குப் பயப்படுவான் சொல்லு… ஒண்ணுத்துக்கும் உதவமாட்டான்… அதனால்தான் சொல்றது ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதாவது ஒரு கவல அவசியம் இருக்கணம்… என்னா… »
« இந்த சிஸ்ட்டத்துல வாழர ஒவ்வொரு மனுஷனும் …உழைப்பை மட்டுமா விக்றான் கருத்தை விக்றான்… மனசாட்சிய விக்றான்… தன்மானத்த விக்கிறான்… தன்னையே விக்றான். எல்லாரும் விரும்பியா விக்றான்… அவனவனும் தன் தேவையை முன்னிட்டுதான் விக்கிறான் … இப்படி நாட்டுல எத்தனை விபச்சாரங்கள் »
கதை மக்களுக்காக :
படைப்பாளியின் குடும்பம் மற்றும் சமூகச் சூழல், கல்வி, அக்கல்வியைக்கொண்டு அவர் வளர்த்துக்கொண்ட சிந்தனை, அலுவலகம், அவர் தெரிவு செய்த நண்பர்கள், வாசித்த நூல்கள் அனைத்திற்கும் படைப்பை உருவாக்கியதில் பங்கிருக்கின்றன. ஒரு பக்கம் அதிகாரம் அ நீதி, அறசீற்றம் என வெகுண்டெழும் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை என்ற ‘ யாக அவிற்பாகத்திற்கு’ வரிசையில் நிற்பதை காண்கிறோம். இராசேந்திர சோழனின் சிறுகதைகள் ஆகட்டும், நெடுங்கதைகள் ஆகட்டும் இரண்டுமே அவரை சமூக உணர்வுள்ள மனிதராக, சகமனிதன் கரையேற கைகொடுக்கும் மனிதராகச் அடையாளப்படுத்துகின்றன. இவர் படைப்புகள் கலைக்கானவை என்பதோடு மக்களுக்காகவும் என்ற என்ண்ணத்துடன் படைக்கபட்டுள்ளன.
அண்மையில் (2018 பிப்ரவரி மாதத்தில்) மூன்றாவது முறையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது, பேராசிரியர் க. பாஞ்சாங்கம், தமிழ்மணி, நாயகர், செல்வபெருமாள் என நாங்கள் ஐந்துபேரும் ஒரு பிற்பகல் வேளை அலுப்புடன் சாய்ந்திருந்த நேரத்தில் மயிலத்திற்குச் சென்றிருந்தோம். குறுகலான தெரு ; உழைப்பு, வியர்வை, சினிமா, அரசியல் சங்கேதச் சொற்களில் பல்லாங்குழி ஆடும் மக்கள். எங்களை எதிர்பார்த்ததுபோல எழுந்துவந்தார். ஆசனங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் எங்களுடன் அமர்ந்தார். எழுத்தாளன் தனிமை என்பது : எடைகற்களைத் தொலைத்த தராசு. ஒளியைத் துறந்த தீபம், புரை குத்தியும் உரையாதபால்.
அறிமுகம் சுருக்கமாக முடிந்தது. இலைமறைகாயாக முகத்தில் கண்சிமிட்டும் சந்தோஷம். மீசையில் விரைப்பு இல்லை. திறந்த விழிகளுக்குள் விலைமதிக்கமுடியாதக் கோமேதக் கற்கள். தனிமைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவும் மொழியும் எங்கள் சந்திப்புக்காக காத்திருந்தனபோலும். நண்பர் சீனு தமிழ்மணி எழுத்தாளர் பற்றிய தொகுப்பினைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்றைய தலைமுறைக்கு நேற்றைய தமிழ் எழுத்தினால் என்ன சொல்லமுடியும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தொகுப்பு இருக்கவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த்தார். மயிலம், இளமைக்காலம், ஆசிரியப்பணி, மார்க்சிய அபிமானம் ஆகியவற்றைக் குறித்த நண்பர்கள் பஞ்சு, சீனு தமிழ்மணி ஆகியோரின் வினாக்களுக்கு ஒரு குழந்தையின் ஆர்வத்துடன தமது கடந்தகாலத்தைப் பகிர்ந்து கொண்டார். அதை விவரிக்கிறபோது உதட்டசைவிற்க்கு ஏற்ப கட்டைவிரலுடன் கருத்துமோதலில் குதித்ததுபோல ஆள்காட்டிவிரல் அசைகிறது. கடந்தகாலத்தில் பயணிக்கிறபோது சந்தோஷ குளத்தில் முங்கிக் குளிப்பதை பரவசம் சொட்டும் விழிகளில் கண்டோம். பஞ்சுவும், தமிழ்மணியும் அளவளாவ அரைக்கண்மூடி தியானிப்பதுபோல நானும், நாயகரும் செல்வபெருமாளும் கேட்டு மகிழ்ந்தோம். இக்கட்டுரைரயை எழுதிக்கொண்டிருக்கிறபோதும், அக்காட்சி நெஞ்சத்திரையில் நிழலாடுகிறது.
————————————————————————
உதவியவை :
- http://www.sirukathaigal.com
- இராசேந்திர சோழன் குறு நாவல்கள், தமிழினி , சென்னை 14
—————————————————