‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற உண்மையை உணர்ந்து, நிலக்குடத்தை நிரப்ப வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும் உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற நதியென்னும் அற நூல். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின் இவ்வினையையே நாம் ஆறு, புனல், நதியென அழகு தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.
பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும் மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம். மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.
காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் » என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம், நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.
பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி, பண்புகளின் கண்ணாடி, கலை இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த மெசொபொத்தோமியா ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு.
இன்றைய மனிதர்கள் நீரைத்தேடி எதற்காக நாம் போக வேண்டும், அது ஆட்சியாளர்கள் உறங்கினாலும், அண்டைமாநிலமும் கைவிரித்தாலும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவாவிட்டாலும், வானம் கருணைகாட்டும், தன் வாசல்தேடி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். ஆனால் அன்றைக்கு, தன்னைத் தேடி நீர் வராதென்ற நிலையில் தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது. அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிற மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும் வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .
பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி
மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி
தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்
கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !
காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை
தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி
தாணு தெற்பை சிறுபீளை சாடிணை
வெங்கோரை பொருதலை வெள்ளமே !
என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால் நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.
நதியைக் கண்ட தும் நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே தங்கலாயினர். ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ; அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும் என்று நம்பினான், அன்றிலிருந்து நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.
எனவேதான்,
பூவார் சோலை மயில் ஆல
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி !
என்று காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில் இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது.
உழவர் ஓதை, மதகோதை
உடைநீர் ஓதை, தண்பதங்கொள்
விழவரோதை, சிறந்தார்ப்ப
நடந்தாய், வாழி காவேரி !
காவிரிக்கரையில் காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.
உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்
பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை, இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம். அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில் செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்ட தோர் வையை பொருனைநதி-என
மேவியாறு பலஓடத்- திரு
மேனி செழித்த தமிழ்நாடு !
என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும் ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில் இந்த ஐந்து அல்லாது பல நதிகளின் பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.
தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும் நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில் « …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது. அவ்வாறே துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.
‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள
நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘
‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’
என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம், நீர் நிலம் என்பதால்.
ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும் அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.
ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து.
நல்குடிப்பிறந்தோர், தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும் அடுத்தவர் கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.
தமிழே தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால் மிகையில்லை.
குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான வைகையும் இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும் பின்னிப்பிணைந்தவை. காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.
நீராடல் நீர் விளையாட்டு வேறு என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, « நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும் தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல். நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும் ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு. புதுப்புனல்விளையாட்டில் பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி, நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த கதையை
“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. « கன்னியர் ஆகி நிலவினில் ஆடிக் களித்த தும் இந்நாடே- தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே ! » என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர் விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும் வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய கவலை.
————————————————————————-
Reblogged this on கடம்பூர்ச்சோழன் and commented:
நதிகுறித்த நீரின் அருமை குறித்த நல்ல கட்டுரை!
உங்கள் பின்னூட்டத்தைத் தாமதமாகவே படிக்க நேர்ந்தது, மிகவும் நன்றி.