நண்பர்களுக்குப் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பேராசிரியர் க பஞ்சாங்கத்தின் மிகச் சிறப்பான அணிந்துரையுடன் சந்தியா பதிப்பக வெளியீடாக புதிய நாவல் வெளிவருகிறது. அணிந்துரையை விரைவில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்வேன்.
நாவலிலிருந்து……
.- புதுச்சேரி பற்றிய உன் முதல் அபிப்ராயமென்ன?
மாதவன் வழக்கம்போல கேள்வியை வீசினான். அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சமாதி தரிசனத்தில் சில நிமிடங்களை செலவிட்டபின் வெளியில் வந்த மீராவுக்கு இரண்டாவது முறையாக மாதவனை அப்பெண்ணுடன் சேர்த்துப்பார்த்தபோது மனதில் ஒருவித கசப்பை உணர்ந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெஸிக்காவுடன் இருந்தபோது, மாதவனைத் தனது இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்து இறக்கிய அப்பெண்ணின் முகபாவமும் வெறுப்பை உமிழ்கின்ற வகையில் ஸ்கூட்டியை வேகமாகத் திருப்பிச் சென்றதும் நினைவிற்கு வந்தது. ஜெஸிக்காவிடம் விசாரித்திருக்கலாம். அவளுக்கு இவர்களைப் பற்றி கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. சிலவேளைகளில் அவர்களுக்குள் ஆயிரமிருக்கும் அதை நாம் தெரிந்து ஆவதென்ன என்று இவளைத் திருப்பியும் கேட்டிருப்பாள். தன்னை இங்கிதமற்றவள் எனக் கருதி அவள் ஒதுங்கவும் சந்தர்ப்பமுண்டு. அந்தகைய சூழலைச் சந்திக்க மீரா தயாரில்லை. மாதவனே ஒரு நாள் வாய் திறந்து சொல்லும்வரை இப்பிரச்சினையை எழுப்புவதில்லையென்று முடிவுசெய்தாள்.
ஆஸ்ரமத்தைவிட்டு வெளியில்வந்த பின், இவள் திட்டமிட்டிருந்தபடி மணக்குள வினாயகர் கோவிலுக்கு மாதவன் அழைத்துப்போனான். இவளுடைய ஒரு ரூபாய் நாணயத்திற்கு கோவில் யானை தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்தது. அதன்பின் தங்கள் காலணிகளை அவற்றின் பாதுகாப்பிடத்தில் கழற்றி ஒப்படைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தார்கள். கோவிலுக்குள் மூன்று ஐரோப்பியர்கள், ஆர்வத்துடன் சுவரிலிருந்த சுதைச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து, மேலே சென்றார்கள். மாதவன் இவளை நடக்கவிட்டு பின்னால் வந்தான். அவள் விருப்பத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளட்டும் என்பது காரணமாக இருக்கலாம். மூலவரைப் பார்க்க நின்ற வரிசையில் அதிகக் கூட்டமில்லை. பார்க்கப் போகிறாயா எனச் சைகை செய்தான். அவள், நீ எனக் கேட்டாள்? அங்கிருந்த ஒரு மூதாட்டிக் குறுக்கிட்டு, “உள்ளேபோய் பாரும்மா, சக்தியுள்ள பிள்ளையாரு கேட்டதெல்லாம் கொடுப்பாரு” என இவளுக்குச் சிபாரிசு செய்தார். மாதவன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னான். அவள், “ உனக்கு சம்மதமென்றால் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுப் போகலாம்” என்றாள். கோவில் பிரகாரத்தில் சில பக்தர்களைப்போல இவர்களும் உட்கார்ந்தார்கள். ஏன் அவள் உட்கார விரும்பினாள் என்பதை அர்ச்சனைத் தட்டுடன் உட்கார்ந்திருந்த தம்பதிகள் மீது படிந்திருந்த பார்வைத் தெரிவித்தது. மாதவன் அவள் கண்களைப் பார்த்தான், பிற்பகலும் அல்லாத காலையுமல்லாத பகல் நேர ஒளிப்பொட்டொன்று மீராவின் கரு நீல விழியில் ஈரத்துடன் மினுங்கியது. அதன் ஈரமண்டலத்தில் சிறு நிழல்களாக தம்பதியும் ஒரு குழந்தையும். மீராவின் பார்வையைத்தொடர்ந்து இவன் பார்வையும் மெல்ல அடியெடுத்துவைத்து தம்பதிகளிடத்தில் முடிந்தது. இளம் வயது தம்பதிகள். அவர்கள் மடியில் பாவாடைச் சட்டையில் ஒன்று அல்லது இரண்டு வயது மதிக்கத்தக்கப் பெண் குழந்தை. அவள் எழுந்திருக்க முயற்சிக்க தாய் அவளை வலிந்து மடியில் நிறுத்தினாள். சில நிமிடங்கள்தான், வயிற்றில் அணைத்திருந்த கைகளின் பிடி தளர, குழந்தை சட்டென்று குதியாட்டம் போட்டுக்கொண்டு மீராவை நோக்கி ஓடிவந்தத து. குழந்தையை மடியில் இருத்தி உன்பெயரென்ன, என்று கேட்டாள். அது, ‘ தாதா’ என்றது. பின்னர் இவள் மடியிலிருந்து திமிரிக்கொண்டு, முதுகில் சுமந்திருந்த பையை இழுத்தது. மீரா அப்பையை முதுகிலிருந்து கழற்றி அதிலிருந்துசாக்லேட் பாரொன்றில் ஒரு துண்டை உடைத்துக் கொடுத்தாள். கடித்துத் தின்ற குழந்தை மறுபடியும் கைநீட்டியது. சட்டென்று எழுந்த தாய் குழந்தையின் முதுகில் தட்டி, தூக்கி மடியில் இருத்திக்கொள்ள, குழந்தை இவளையேப் பார்த்துக்கொண்டிருந்தது. மீரா சாக்லேட்பாரைக் குழந்தையிடம் நீட்டினாள். தாய் இடை மறித்து, “வேண்டாங்க கெட்ட பழக்கம்! யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கிறா!“, என்றாள். மீரா புரியாமல் மாதவனைப் பார்த்தாள். “பிறகு சொல்றேன், போகலாம்!” என்று எழுந்து நடந்தான். இவளும் எழுந்து அவனைப் பின் தொடர்ந்தபோது, சந்தித்த குழந்தையின் பார்வை மனதைப் பிசைந்தது. வெளியில் வந்ததும், கைப்பையிலிருந்த கேமராவைக்கொண்டு ஆனையுட னும் ஆனையின்றியும், நுழைவாயிலை ஒட்டிய கடையையும், பாத அணிகளை பாதுகாத்த பெண்மணியையும் படம்பிடித்தாள்.
அருகிலிருந்த உணவு விடுதியொன்றில் மதிய உணவைச் சாப்பிட்டார்கள். தென் இந்திய உணவை முதன் முதலாக கையால் சாப்பிடுவது மீராவைப் பொறுத்தவரை சுகமான அனுபவம். அதன் பின்னர் காலனிகால வெள்ளையர் பகுதியில் கால் போனபோக்கில் நடந்தார்கள். கடற்கரையில் காந்தி சிலையிலிருந்து துய்ப்ளே சிலைவரை இருவருமாக நடந்து திரும்பியபின், பழைய கலங்கரை விளக்கிற்கெதிரே இருந்த சிமெண்ட் கட்டையில் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். இதுவரை சராசரி மனிதர்களைப் போலவும் வழிகாட்டிப்போலவும் ஆஸ்ரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதிப்பூங்கா, ஆயி மண்டபம், கவர்னர் மாளிகை, இந்தோசீனா வங்கி யுகோ வங்கியாக மாறிய கதை கடற்கரை ஓரமிருந்த தேவாலயம்.என்று அறிமுகப்படுத்திக்கொண்டும் இடைக்கிடை குட்டிகுட்டிக் கேள்விகளுக்குப் பதில் தெரிவித்துக்கொண்டுமிருந்த மாதவன், இருவரும் உட்காரக் காத்திருந்ததுபோல, “ புதுச்சேரி பற்றி உன் அபிப்ராயமென்ன?” என்று கேட்டான்.
சிலநொடிகள் தாமத த்திற்குப் பின் பதில் வந்தது.
– எந்தப் புதுச்சேரி பற்றி என்னுடைய கருத்தைச் சொல்ல. மேற்கின் எச்சங்களாகத் தங்கிப்போன வீதிகள், காலனி ஆதிக்க வரலாற்றுச்சின்னங்கள் ஆகியவற்றிற்கிடையே கடந்த நான்கு மணி நேரமாக நான் கண்ட கடற்கரை, ஆஸ்ரமம், இந்துக்கோவிலென்றிருக்கிற கிழக்குப் புதுச்சேரியைப் பற்றியா அல்லது பேருந்துநிலையம், காளான்கள் போன்ற புறநகர்பகுதிகள் என்றிருக்கும் மேற்குப் புதுச்சேரி பற்றியா? இவை இரண்டில் உனது தேர்வு எது? என்னைக்கேட்டால் காலையில் உன்வீட்டிற்கு வருவதற்கு முன்பாக பார்த்த மேற்கு புதுச்சேரி அழகு. அது இயற்கையாக இருக்கிறது. சரண்யா, மாதவன், ரங்கநாயகி அம்மா, ஈஸிசேரில் ஒரு அப்பா என்றிருக்கிற குடும்பத்தைப்போல. உன் அம்மாவையும், சரண்யாவையும் எங்கள் வீட்டிற்கு கடத்திப் போகலாமா என்றுபார்க்கிறேன். என் அம்மாவிற்கும் ரங்கநாயகி அம்மாள் பற்றி ஒரு மின்னஞ்சல் எழுதும் எண்ணமிருக்கிறது. அபிப்ராயம் புதுச்சேரி என்ற ஊரைப்பற்றியது என்றால் அவரவர் ஊர், அவரவருக்கு அழகு. உனக்குப் புதுச்சேரி அழகெனில். அமெரிக்கா ஜெஸிக்காவிற்கு அவள் பிறந்த பசடீனா அழகு. அந்தவகையில் பாரீஸ் எனக்கு அழகு. பாரீஸை மறந்துவிட்டு புதுச்சேரியியின் அழகைப்பேசு என்றால் ஆரோவில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பார்த்த பேருந்து நிலையம் அழகு, ஆட்டோவில் வந்தபோது விநோதமான குழல் வாத்தியமும், டமடம மேளமுமாக, கொத்தாக இலைகளை பிடித்துக்கொண்டு மஞ்சள் ஆடையில் நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடியபடி நடந்த பெண்மணி அழகு. கோணிப்பையை விரித்து, வெற்றிலைச் சாறை துப்பிய வேகத்திலேயே கொத்தமல்லி புதினாவென்று கூவி விற்ற பெண்மணி அழகு, வெத்திலை எச்சிலை காலில் வாங்கிய மனிதர் முகம் சுளித்தது அழகு, அவர் மீது மோதிக்கொண்ட சிறுவன் அழகு, Tiens! எப்படி அதைச் சொல்ல மறந்தேன், கோவிலில் பார்த்த குழந்தைகூட அழகுதான். புதுச்சேரியைக் காண என்பதைக்காட்டிலும் புதுச்சேரி மனிதர்களைப் பார்க்க வந்தேன் என்று சொல்வதுதான் சரி. மனிதர்கள் மூலமாகத்தான் ஒரு நகரம் அழகைப் பெறுகிறது. உண்மையில் புதுச்சேரியைத் தேடி வந்தேன் என்று சொல்வது இன்னும் கூட பொருத்தமாக இருக்கும். பாரீசில் இல்லாத சில புதுச்சேரியில் இருக்கின்றன. புதுச்சேரியில் கிடைக்காத சில பாரீசில் கிடைக்கலாம். மனிதர்கள் பயணம் செய்யும் நோக்கமே இங்கே இல்லாதவை அங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். அரவிந்தர் தோழி புதுச்சேரிக்கு வந்தது அவருக்குப் பாரீஸில் கிடைக்காத அரவிந்தரைத் தேடி. அரவிந்தரால் அவர் தோழிக்குப் புதுச்சேரி அழகு. எனக்கும் நான் தேடும் பொருள் கிடைக்கும் இடமெல்லாம் அழகுதான். கோவிலில் சட்டென்று அந்தப்பெண், குழந்தையை என்னிடமிருந்து ஏன் பறிக்கவேண்டும். எனக்கு சங்கடமாகப் போய்விட்ட து. நானென்ன குழந்தையைக் கடத்திபோய்விடுவேன் என நினைத்தாளா, குழந்தைக்குச் சாக்லேட் கொடுக்க ஆசைப்பட்டது தப்பா?
– ஆமாம் தப்பு. நீ சொல்வதுபோல குழந்தையைக் கடத்தவே சாக்லேட் கொடுக்கிற, என்று அந்தப்பெண் நினைத்திருந்தாலும் எனக்கு வியப்பில்லை. இங்கே குழந்தை கட த்தல் என்ற செய்தியை அடிக்கடி தினசரிகளில் படிக்கிறார்கள். அதனால் முன் பின் தெரியாதவர்களிடத்தில் குழந்தை என்கிறபோது தாய்க்குச் சந்தேகம் வருகிறது. எங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மாணிக்கம், பிரான்சில் இருக்கிறார் தனக்கேற்பட்ட அனுபவமென்று ஒரு பிரச்சினையை கூறினார். ஒரு முறை சாலையில் நடந்து போகிறபோது, கனமானதொரு பையுடன், ஒரு வயதானப்பெண்மணி படியேறுவதைப் பார்த்திருக்கிறார். அவளை நெருங்கி, என்னிடம் கொடுங்கள், நான் மேலே கொண்டுவந்து தருகிறேன் எனக்கூறி பையைத் தொட்டிருக்கிறார். அந்த மூதாட்டி என்னப் புரிந்துகொண்டாரோ, “திருடன் திருடன்” என்று கூச்சலிடவும், கூடிய மக்கள் காவல்துறையை அழைக்கவும். ஒரு பிற்பகலை காவல் நிலையத்தில் அவர் கழிக்கவேண்டியிருந்ததாம். அவர்களுக்குப் புரியவைப்பதற்குள் போதம் போதுமென்று ஆகிவிட்டதாம். உதவின்னு போனாலே பிரச்சனைகளை சத்திப்பது எனக்கும் நடந்திருக்கிறது. பொது இடத்தில் பெரும்பாலும் பிரச்சனை இல்லை. தனியாக இருக்கிறபோது அதுபோல நடந்துகொள்ளாதே. இங்கு குழந்தைக் கட த்தல் புரளிகள் அதிகம், அதிலும் பெண்குழந்தைகள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். முன்பெல்லாம் எங்கள் அண்டைவீட்டு பர்வதம் அக்காள் மகளைத் தூக்கி விளையாடுவதுண்டு. இப்போதெல்லாம் அப்படிச்செய்வதில்லை.
– ஏன்?
– பாலியல் குற்றங்களைப்பற்றிய செய்திகளை அதிகமாக நாளேடுகளில் வாசிக்கிறோம். தப்பு செய்தவனைத் தண்டிப்பது நியாயம். செய்யாத ஒருத்தனை செய்தவனாகச் சித்தரித்து தண்டிக்கவும் வாய்ப்புகள் உண்டு. நீ சின்ன வயதாக இருந்து உனக்கோ, உனக்கு வேண்டப்பட்டவர்களுக்கோ என்னைப் பிடிக்கலைன்னு வச்சுக்க என்மேல ஒரு புரளியைக் கிளப்பி சுலபமா தண்டிக்கலாம். உண்மை, ஆதாரம் போன்றவைக்கெல்லாம் அவசியமில்லை. மேடையை நீதிமன்றம்போலவும் தம்மை நீதிபதியாகவும் நினைத்துக்கொண்டு, தண்டனை வழங்கும் மக்கள் எங்கள் நாட்டில் அதிகம்.
– ஏதோ இங்குமட்டும் நடக்கிறமாதிரி சொல்ற. பிரான்சுல கூட இதுபோன்றதொரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவள் என்று நம்பப் பட்ட சிறுமி வளர்ந்து பெரியவள் ஆனதும் அந்த வயசுலே புரியாம குற்றம் சாட்டிட்டேன் என்று சொல்ல பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குபின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டக் கதையுண்டு. அதற்காக என்ன செய்ய முடியும்?
– தவறான சாட்சியங்கள் அடிப்படையில் விதிவிலக்காக அப்பாவிகள் தண்டிக்கப்படுவது நடக்கக் கூடியதுதான். அது கூடாதென்பதற்காகத்தான் நீதிமன்றங்களில் பல அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் சந்தேகத்தின் பேரில், வதந்திகளின் அடிப்படையில், ஒருவனை அல்லது ஒருத்தியை குற்றம்சாட்டுவதும், தங்கள் கருத்தை விசாரணையில் திணிப்பதும் தீர்ப்பின் போக்கை மாற்றிவிடும். அதுமாதிரியான சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம், அதனால் இங்கு கவனமாக நடந்துகொள். எப்போது கல்லெறிவார்களென்று சொல்ல முடியாது. எங்கள் மக்களுக்கு வேடிக்கையும் கல்லெறிவதும் ஒரு பொழுதுபோக்கு. உன்னிடம் கேட்கவேண்டுமென்று நினைத்து பிறகு மறந்து விடுகிறேன், மீரா என்ற பெயர் உனக்கு எப்படி?
– காலையில் ஜெஸிக்காவும் போன் செய்தபோது, திடீரென்று இக் கேள்வியை எழுப்பினாள். ஒருவகையில் எனக்கும் பூர்வீகம் புதுச்சேரிதான். 1920களில் என் அம்மாவழித் தாத்தா பிரெஞ்சு ராணுவத்தில சேர்ந்து இந்தோசீனா போயிருக்கிறார். இரண்டாவது உலகயுத்தத்தின்போது தாத்தாவும் அவருடய வியட்நாமிய மனைவியும் தங்கள் ஒரே மகளை அழைத்துக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பிஇருக்கிறார்கள். தாத்தாவுக்கு இந்தியா பூர்வீகம் என்பதால் எனக்கு மீரா என்று பெயர் வைத்திருக்கலாம். சரி உனக்கென்ன ஆரோவில் என்ற பெயர் மேல அப்படியொரு கோபம்.
– எங்க வீட்டுக் கூடத்தில் மாட்டியுள்ள படத்தில் இருக்கிற தாத்தாவைத் தெரியுமில்லையா? இந்தக் கோபம் அவர்கிட்டே இருந்து எனக்கு வந்திருக்கலாம். காந்தி அபிமானி. பிரிட்டிஷ் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவிற்கு இங்கே பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்கிறவர். இங்கு போராட்டமென்று நடந்ததெல்லாம் கலவரம் என்பது அவர் கருத்து. தியாகிகள்னு சொல்லனும்னா ஆலைத் தொழிலாளிகளைத் தான் சொல்லனும் என்பார். அவருடைய பங்காளிவீட்டுல ஒரு குடும்பமே அதனாலப் பாதிக்கப்பட்டதென்கிற வருத்தம் அவருக்கு. நீ தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாய் எனில் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆரோவில்லில் இருக்கும் உங்களுடைய ஆட்கள் பலருக்கும் தாங்கள் உயர்ந்த இனமென்கிற எண்ணம் நிறைய. அக்கம்பக்கத்திலிருக்கிற ஏழைத் தமிழர்களை காலனிகால கூலிகளாகப் பார்க்கிறார்கள்.
காலனி ஆதிக்கத்தின்போது புதுச்சேரி நகரத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்கென உங்கள் மக்கள் ஒதுக்கிக்கொண்டார்கள். பிறகு அரவிந்தரோடு மிரா அல்ஃபஸ்ஸா சேர்ந்துகொள்ள பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஆன்மீக ஜோடிக்கு, கேட்டவரத்தையெல்லாம் கொடுத்தது. வெள்ளையர் பகுதிகளெல்லாம் ஆஸ்ரமத்தின் கைக்கு வந்தன. இதன் அடுத்த கட்டமாகத்தான் ஆரோவில்லைப் பார்க்கவேண்டும். பெருகும் அபிமானிகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஆஸ்ரமத்தை விரிவாக்க ஆரோவில், அரவிந்தரின் தோழிக்குத் தேவைப்பட்டது. உலகமெல்லாம ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிபடையில் சமயமில்லை, எல்லையில்லை, பொருள் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆரோவில்லில் தற்போதைய நிலமை என்ன? பணமில்லாதவர் உள்ளேநுழையமுடியாது. சுதந்திரம் சமத்துவம் என்ற உங்கள் தேசத்து வார்த்தைகளெல்லாம் இங்கும் உச்சரிக்கப்பட்டன. அரசியல் மார்க்ஸியம் எப்படியோ இந்த ஆன்மீக மார்க்ஸியம் கண்டது என்னைப் பொறுத்தவரை தோல்வி. சமத்துவத்தை நிலைநாட்ட ஆசைபட்டால் சுதந்திரத்தைத் துறக்கவேண்டும், சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவத்திற்கு வாய்ப்பேஇல்லை. இரண்டையும் இணைப்பது எப்படிச் சாத்தியம்? சமயம் பாமர மக்களை அடிமைப்படுத்த என்றால், ஆன்மீகம் அறிவாளிகளை அடிமைகொள்ள. ஜெஸிக்காவை சந்தித்ததுபோல பிரான்சுவாஸ், செலின், எதுவார், கிற்ஸ்டோபர் என ஆரோவில் மனிதர்களை சந்தித்துப் பேசு, ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவகையான ஆரோவில் கனவு இருப்பது புரியும். அதுபோல அக்கம்பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் பேசிப் பழகு. நீ புரிந்துகொள்ளவேண்டிய இன்னொன்று, ஆரோவிலியன்கள் எல்லோருமே அரவிந்தருமல்ல, மிரா அல்ஃப்ஸ்ஸாவுமல்ல. வாழ்க்கையின் முதிர்ச்சியில், வயதின் முதுமையில், அவர்கள் கண்ட கனவுலக வீட்டின் கதவைத் தட்டுகிறவர்களெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்திராத மனிதர்களாக இருப்பது பெரும்பிரச்சனை. இங்கு வருகிறவர்கள் கர்ம யோகிகள் அல்ல, வாழ்க்கை போகிகள், சராசரி மனிதர்கள். தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். ஊர்கூடி தேர் இழுக்கிறபோது, மொத்தபேருக்கும் எந்த திசையில் தேர் போகவேண்டும், எங்கெங்கு ஆராதனைக்கு நிற்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். சில நல்லது நடந்திருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விடியல் நகரம் இன்னும் வைகறையைக்கூடகாணவில்லை, மூச்சுவிடாமல் பேசிக்கொண்டுபோன மாதவனை அமைதிப் படுத்தாவிட்டால், இவளுக்குத் தலை வெடித்துவிடும் ஆபத்திருந்தது.
– மீன் பிடி படகென்று நினைக்கிறேன், அதன் தலைக்குமேலே எவ்வளவு கடற்காகங்கள் பார். இறக்கை முளைத்த மேக க்கூட்டம் போலில்லை, என்று வியந்து அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றாள்.
– என்ன நீண்ட நேரம்பேசி, போரடிச்சிட்டேனா?
– இல்லை. எல்லாவற்றையும் இன்றைக்கே முடிச்சுட்டா, வரும் நாட்களில் என்னிடம் சொல்ல எதுவும் இருக்காதில்லையா, அதற்காக. தவிர நானும் புறப்படவேண்டும். இப்போதே கிளம்பினால்தான் எட்டுமணிக்குள்ளாக என் குடியிருப்புக்குத் திரும்பமுடியும், என்று சங்கடத்துடன் அவள் புறப்பட்டபோது, “வீட்டிற்கு வா, எனது இரு சக்கரவாகனத்தில் உன்னை அழைத்துபோகிறேன்”, என்றான். ஆரோவில் பற்றிய மாதவனின் கருத்தில் சோர்ந்திருந்த மீராவுக்கு, அவனுடைய இந்த உதவி தேவைப் பட்டது.
இருவருமாக மாதவன் வீட்டிற்குத் திரும்பியபொழுது, வீட்டில் நுழைந்தவுடன் பலநாள் பழகியள்போல சரண்யா சிறுகுழந்தைபோல ஓடிவந்து மீராவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். மாதவன், “மெதுவா.. மெதுவா! அவங்கக் கையை பிய்ச்சு எடுத்துடப்போற! “என்றான். மாதவன் தந்தையாக இருக்கவேண்டும் கூடத்தில் சாய்வு நாற்காலியில் நாளிதழ் ஒன்றை முகத்தை மறைத்து பிடித்தபடி வாசித்துக்கொண்டிருந்தார். நாளிதழின் பக்கத்தை உயர்த்திப் பிடித்திருந்த அவர் விரல்களை மீரா பார்த்தாள். மாதவன் விரல்களைப்போலின்றி மிகவும் மெலிதாகவும் நீளமாகவும் இருந்தன. காலடிகளின் சப்தமும், தொடர்ந்து அண்ணனும் தங்கையும் எழுப்பிய குரல்களும் அவரது கவனத்தைத் திருப்பி இருக்கவேண்டும். நாளிதழை பாதிமடித்தபடி “வணக்கம்மா! பிரான்சுன்னு சொன்னாங்க, எங்கே பாரீஸா?”, எனக்கேட்டுவிட்டு, “சரண்யா லைட்டைப்போடு, அந்தப்பெண்ணை உட்காரவைத்துப் பேசு!” எனக் கட்டளையிட்டுவிட்டு மீண்டும் மடித்த தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினார்.
மாதவன்,” வாயாடிகிட்ட பேசிக்கிட்டிரு, வருகிறேன் !” என்றவன் வீட்டின் பின்பக்கம் போனான். சரண்யா, “ கைடு சர்வீச ஒழுங்காகச் செய்தானா, இல்லைப் பேசி அறுத்தானா? அவன் கிட்ட நீங்க தள்ளி உட்கார்ந்து பேசனும். காதுல பஞ்சு அடைச்சுக்கனும். வார்த்தைகளாலேயே மிதிச்சுடுவான். ஏழை பணக்காரர்கள், தொழிலாளிகள் முதலாளிகள்,சுரண்டல் வர்க்கபேதம் என பேச ஆரம்பிச்சிடுவான்”, என்று கூற, மீரா “ ஏன் இந்த வயசுல அப்படித்தான் இருக்கனும், அதிலென்ன தப்பு.” என்றாள். அதைக் கேட்ட மாதவன் தந்தை ‘க்கூம்’ எனக் கனைத்தார். “ஸ்ஸ்…மெதுவாய்ப்பேசுங்க. அப்பா காதில் விழுந்தால் வம்பு,” என்றாள் சரண்யா, விரலை வாயில் வைத்து, பிறகு மெதுவாக இவள் காதில், “ அவருக்கு ஆங்கிலம் பேச வராதே தவிர , நாம் என்ன பேசறோம் என்பது புரியும்.” என்றாள். தொடர்ந்து”இன்னொரு நாளைக்கு இதைப்பத்திப்பேசலாம். ஏதாச்சும் குடிக்கிறீங்களா?”, எனக்கேட்டாள். “பக்கத்தில் தானே இருக்கிறேன், இன்னொரு முறை வீட்டிற்கு வருவேன். உங்கள் அண்ணன் வந்தால் புறப்பட்டு விடுவேன்”, என்று தெரிவித்த மீரா, “எங்கே அம்மாவைக் காணோம்”, என்று ரங்கநாயகி அம்மாளைப்பற்றி விசாரித்தாள். “அம்மா கோவிலுக்குப் போயிருக்கிறார்கள்”, என்பது சரண்யாவின் பதில். பின்வாசலுகுக்குச் சென்றிருந்த மாதவன் திரும்ப வந்தான், “அம்மா வர லேட்டாகும், அவள் இருந்தால் உன்னை இரவு உணைவை சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவாள்”, என்றான். “இல்லை இப்போதே ஆறரைக்கு மேல் ஆகிவிட்டது”. என்ற மீராவின் பதிலுக்குபிறகு, மாதவன் காத்திருக்கவில்லை. தனது இருசகரவாகனத்தை நடையிலிருந்து தெருவில் இறக்கினான்.
படி இறங்குகையில் சரண்யாவிடம், “எனாக்குத் தமிழ் கற்றுதருவாயா” என மீரா கேட்டாள். “நீங்கள் பிரெஞ்சுக் கற்றுதர சம்மதித்தால் சந்தோஷமாக கற்றுக்கொடுப்பேன்”, என்பது சரண்யாவின் பதில். அவள் காதைப்பிடித்து செல்லமாக க் கன்னைத்தைத் விரல்களால் தட்டிவிட்டு, குடும்பத் தலைவரிடமும் சொல்லிக்கொண்டு மீரா புறப்பட்டாள்.
இருபது நிமிட ஓட்டத்திற்கு பிறகு ஆரோவில் நகரில் மீரா தங்கியிருந்த குடியிருப்பை நெருங்கியபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விளக்குகள் அணைந்திருந்தன. சுற்றிலும் இருட்டு. மாதவனே கூட நிழலுருவாக மாறியிருந்தான். உடலில் மெல்ல அச்சம் படர்வதை உணர்ந்தாள். இது போன்ற அனுபவங்கள் புதிதில்லை என்றாலும் அந்நிய நாட்டில், அதிகம் மனிதர் நடமாட்டமில்லாத காடுபோல வளர்ந்திருக்கும் மரங்களுக்கிடையில், ஓர் இளைஞனுடன், இது முதல் அனுபவம்.
– என்ன நடந்தது? எனக்கேட்டாள்.
– நான் பதில் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலா என்ன? மின்சாரத் தடை என்பது எங்களுக்குப் புதிதல்ல. இனி ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ ஆகலாம். அல்லது இரவு முழுக்க மின்சாரம் வராமல் போனாலும் போகும். இப்போது இரண்டு பேர் உங்களைக் கடத்த வருவார்கள்.அவர்களிடம் உன்னை ஒப்ப்டைத்துவிட்டு நான் கிளம்பவேண்டும். இதற்கெல்லாம் தயாராத்தான் பிரான்சுல இருந்து வந்திருப்பீங்க இல்லையா? என்று பரிதாபக் குரலில் கேட்க, மீராவுக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.
– உன் தங்கை சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. விளையாடும் நேரமா இது. ஆரோவில்லில் சூரிய ஒளி மின்சாரத்திற்காக அனேக இடங்களில் பேனல்களைப் பார்த்தேனே.
– அது போதிய மின்சாரத்தை அளிக்கிறதென்று சொல்ல முடியாது. மின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கமெனில், மின்சார பராமரிப்பு குறைகளும் உண்டு. சரி உட்காரு, இன்னும் கொஞ்சம்தூரம் தான் போயிடலாம்.
மாதவன் கூறியதைப்போலவே இவள் விருந்தினராகத் தங்கியுள்ள ஆல்பர்ட் – தேவகி வீட்டை ஐந்து நிமிட ஓட்டத்தில் அடைந்தனர். தேவகி வீட்டுவாசலில் நின்றிருந்தார். மீரா, இரு சக்கரவாகனத்திலிருந்து இறங்கிய மறுகணம், “இனி பிரச்சினையில்லை. பிறகு பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு மாதவன் புறப்பட்டான். காத்திருந்த தேவகியை நெருங்கியதும் தடைப்பட்டிருந்த மின்சாரப் பிரச்சினை முடிந்ததுபோல, விளக்குகள் எறிந்தன. இவள் கையைப் பிடித்த தேவகி:
– இருட்டுவதற்குள் வரப் பார், அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் இங்குநடக்கின்றன, என எச்சரித்து உள்ளே அழைத்து போனார்.
———————————————————————————