குளிரகாலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி ஒருவாரம் ஆகிறது, கடந்த சில நாட்களாகவே இரவுபகலாக பனிபொழிந்து கொண்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரையில், என்னைப்போன்ற பாவப்பட்ட மனிதர்களை வாட்டுவதெற்கென அவ்வப்போது பூமியின் துருவப் பகுதிகள் அனுப்பி வைப்பதாக நம்பப்படுகிற கடுங் குளிர்காலப் பனி. தொலைகாட்சி வானிலை அறிவிப்பாளர்கள் – அதிலும் பெண் அறிவிப்பாளர்கள் என்றால், அவள் சொல்வதை எங்கே காதில் வாங்கமுடிகிறது – எச்சரித்தும், உடுத்தவேண்டியவற்றை உடுத்தத் தவறி வெளியில் கால் வைக்கிறபோதுதான், அதன் வீரியத்தை உணரமுடிகிறது. திறந்த வாசற்கதவை அடைத்துவிட்டு, திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்து குளிரைச் சமாளிக்கப் பொருத்தமாக ஒரு கம்பளிச்சட்டை, ஒரு கம்பளி ஸ்கார்ஃப், ஒருகம்பளிச் ஜாக்கெட், என்று வெளியில் வந்தேன்.
குடியிருப்புகளின் கூரைகள், இலைகளை உதிர்த்த மரங்கள், மோட்டார் வாகனங்கள், சாலைகள், நடைபாதைகளென, திறந்தவெளியில் வானத்தின் கண்காணிப்பில் இருந்தனவற்றில் விதை நீக்கிய பஞ்சை உலர்த்தியதுபோல, எங்கும் பனி. போதாதென்று, ‘பனி’ வெண் சாம்பல் தூவலாக காற்றில் அலைந்து பூமியைத் தேடிக்கொண்டிருந்தது. மழைத்தூறல்கள் தங்கள் பாட்டுக்கு விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் வினையில் குறுக்கிடக்கூடாது எனப் பனிப்பொழிவு எச்சரிக்கப்பட்டிருக்கவேண்டும், மழைத்தூறல்களுக்கு இடையூறின்றி சாதுர்யமாகத் தப்பித்து,காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுத்து, காற்பந்தாட்ட வலைக்குள் பந்தைப் போட்ட ஆட்டக்காரரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள, பிற வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக தாவிவிழுந்து அவரை மூடிமறைப்பதுபோல, சீவல்களாக உதிரும் பனித்துகள்கள் ஒன்றின்மீது ஒன்று விழுந்துகொண்டிருக்கன. வாகனங்கள், வளர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியன மட்டுமின்றி ; திக்கற்ற புழுக்கள், வண்டுகள், சிறு சிறு பூச்சிகளின் உயிர்வாழ்க்கையும் நசுக்கப்படுவதை எதார்த்தமாக கருதிக்கொண்டு படி இறங்கினேன். திரையிடாத என் முகத்தில் உறைந்த நீரை வாரி இறைத்த துபோல பனிக்காற்று தாக்குகிறது. முகத்தை நனைத்தக் காற்றை வழித்து எரிந்த பின், குடியிருப்பு அருகில்போடப்படிருந்த படிகளைக் கவனத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டு , காலெடுத்துவைத்தபோது, மிதிபடும் பனி, சப்பாத்துகளில் பிதுங்கி மனித அழுக்கின் அடையாளம் பாதச்சுவடுகளாகப் பின் தொடர்வதை ரசித்தவன், நேரத்தின் நெருக்கடியை உணர்ந்தவனாய் நடந்தேன்.
வாகனத்தை எடுக்க குடியிருப்பின் பின்பகுதிக்கு வரவேண்டும். பனியைத் தரித்திருந்த ஊசியிலை மரங்களுக்கு இடையே, சிலுசிலுவென்று குறுக்கிடும் காற்றுத் திரைகளை விலக்கி, தரையெங்கும் கொட்டிப் பரப்பியிருந்த பனியை மிதித்து துவைத்தபடி, காரஜ் எண்ணை மனத்திரையில் சரிபார்த்துக்கொண்டு நடந்து எதிரில் நின்றேன். குடியிருப்புகளின் பின்புறத்தில், எனக்கு இடது பக்கமாக நிற்கும் இலைகளை உதிர்த்து நிற்கும் ஒக் மரங்களின் மீது எனது பார்வை சென்று முடிந்தது.
இதேவேளையில் பிறகாலங்கள் எனில் சிட்டுக் குருவிகள் பெருங்கும்பலாகக் கூடி அப்பகுதியைக் கடந்து செல்கிற எந்த மனிதரையும் திரும்பவைக்கிற வகையில் ‘க்ரிக்..க்ரிக்’ என சத்தமிடும், குறிப்பாக பத்து அல்லது பதினோருமணிக்கு. அவைகளுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கும்போல : சற்றே பெரிதான தடித்த கிளையொன்றில் இருகுருவிகள் உட்கார்ந்திருக்க, கீழும் மேலும், எதிரிலும் பக்கவாட்டிலும் கிளைகள்,கொம்புகளில் வாதி, பிரதிவாதி, சாட்சிகள், ஜூரிகள் என்று ஒரு நீதிமன்ற காட்சி கச்சிதமாமாக அரங்கேறும். கனம் நீதிபதி அவர்களே என ஆரம்பித்து வாதிடும் பறவைகளின் தொனியைக்கொண்டு, வழக்கை ஊகிக்க முயன்று, குழப்பத்துடன் கிளம்பிச்சென்றது அதிகம். `முதல் நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குருவிக்கு மறு நாள் என்ன நேர்ந்திருக்கும் என யோசிப்பதுண்டு. அதை விளங்கிக்கொள்ள, மரத்தில் அமர்ந்திருக்கும் குருவிகூட்டத்தில், அப்பறவையைத் தேடி அலுப்புற்றிருக்கிறேன். ஒருமுறை அப்படியொன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளை, எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் குடியிருக்கும் பெண்மணி, முகத்தில் பல கேள்விகளைத் தேக்கிக்கொண்டு என்னைப் பார்ப்பது மட்டுமல்ல, அதுமுதல் எப்போதேனும் என்னைக் கடந்து செல்லவேண்டிய இக்கட்டு உருவாகிறபோதெல்லாம், கால்கள் பின்னிக்கொள்ளத் தடுமாறுகிறாள், தம் குழந்தைகளை சேர்த்தணைத்தபடி முகத்தைப் பராக்கு பார்ப்பதுபோல வைத்துக்கொண்டு அச்சத்துடன் நடந்து, சில அடிதூரம் சென்றபின் திரும்பிப் பார்க்கிறாள்.
காலை பத்து முப்பதுக்கு நீதிமன்றத்தில் இருக்கவேண்டும் என்பது நினைவுக்கு வந்த து. சம்பந்தப்பட்ட வழக்கு பத்து நாற்பத்தைந்திற்கோ, பதினொன்றிற்கோ தொடங்கலாம், எனினும் அரசாங்கம் தரும் மொழிபெயர்ப்புக்கான கட்டணத்தைப் பெறுகிறபோது, அவர்கள் கோரிக்கை கடிதத்தின்படி பத்து முப்பதுக்கு விசாரணை மண்டபத்தில் இருப்பதுதான் நியாயமாக இருக்க முடியும். வாகனத்தை எடுத்துக்கொண்டு பிரதான சாலையில் ஊர்ந்தவேளை, பனிப் பொழிவு நின்று சூரியனை அனுமதித்திருக்க, சாலையோரங்களிலும், நடைபாதையிலும், கட்டிடங்களின் கூரைகளிலும் விழுந்து கரையாமலிருந்த பனிகளில் பொன் நீலத்தில் சூரிய ஒளி நட்சத்திரங்களாக பிரகாசிப்பதும் மறைவதுமாக இருந்த அழகை ரசிக்க நேரமின்றி சாலையில் கவனம் செலுத்தினேன். சாலைகள், வீதிகள், திருப்பங்கள் நன்கு பழகியவை என்கிறபோதும், சரியானவற்றை இருமுறை தவறவிட்டதற்கு, வழக்கமாக காண்கிற குருவிகள் விசாரணை, இல்லை என்றானது காரணமாக இருக்கலாம்.
வாகனத்தை இடம் பார்த்து நிறுத்தி, இடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த எந்திரத்தில் வாகன எண்ணைப் பதிவுசெய்து, கடனட்டையை நுழைக்க, எவ்வளவு நேரத்திற்கு என்ற கேள்வி. குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்படும். நிறுத்தியுள்ள வாகனங்கள் நேரத்திற்குரிய தங்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனவா எனச் சோதித்துக்கொண்டு செல்லும் நகரசபை ஊழியர்களைப் பார்த்ததும், அவர்கள் திரும்ப இப்பக்கம் வருவது இப்போதைக்கில்லை , அதற்குள் வாகனத்தை இங்கிருந்து அகற்றிவிடமுடியும் என்று கணக்கிட்டு, அவர்கள் போகட்டுமெனக் காத்திருந்து, எவ்வளவு குறைவாகச் செலுத்த முடியுமோ அக்கட்டணத்தைச் செலுத்தி, இரசீதை காரில் வைத்தபின் கையிற் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன், மணி 10.15.
நீதிமன்றத்தில் நுழைந்தபோது எனக்கு முன்பாக ஐந்துபேர் சோதனைக்கு உட்பட காத்திருந்தார்கள். பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகியபின் எல்லா இடங்களிலும் சோதனைக்குப் பின்னரே அனுமதி என்றாகிவிட்ட து. எனது முறைக்குப் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. குளிருக்கென போட்டிருந்த ஜாக்கெட், வாலெட், கைத்தொலைபேசி மூன்றையும் கன்வேயர் பெல்ட்டில் வைத்துவிட்டு சோதனைகளை கடந்து முதற்தளத்தில் அழைத்திருந்த விசாரணைக் கூடத்தைக் கண்டுபிடிக்க கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தேவைப் பட்டன.
பத்து முப்பதுக்கு விசாரணை மன்றம் எண் 13ல் இருக்கவேண்டும். என் கைக்கெடிகாரம் பத்து முப்பத்தைந்தைக் காட்டியது. மண்டபத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. தயக்கத்துடன் கதவைத் தட்டினேன். வரலாம் என்ற அனுமதிக் குரலைக் காதில் வாங்கியபடி உள்ளே நுழைந்தேன். எனக்கு நேர் எதிராக போடப்பட்டிருந்த மேசையின் பின்புறம் நீதிபதி, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி பக்கவாட்டில் மிகச்சிறிய தட்டச்சு எந்திரத்துடன் பெண்செயலர். அவருக்கு எதிரில் ஆசனங்களில் வழக்கறிஞர்கள். நீதிபதி என்ற பொருளுக்குச் சமனாக வைத்த எடைகற்கள்போல அவருக்கு எதிரே நாற்காலிகளில் வரிசைக்கு இரண்டொருவர் என அமர்ந்திருக்கும், அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள். எல்லோருடைய பார்வையும் என் முகத்தில் இருந்தது. தாமதத்திற்கு விளக்கம் என்றபேரில் விரயம் செய்யப்படும் வார்த்தைகளில் சலிப்புற்று அமைதியாய் நின்றேன். வழக்கறிஞர் பெண்மணிகளில் ஒருவர், தனது கைக்கெடிக்காரத்தைப்பார்த்தார். நீதிபதி பெண்மணி என்னிடம், « முன்வரிசையில் உட்காரலாம். குற்றவாளியைக் காவலர்கள் அழைத்துவரும் தோம் » எனச்சொல்லவும், காலியாகவிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தேன்.
பெண் செயலருக்குப் பின்புறமிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு இரு காவலர்கள், நடுத்தர வயது மனிதர் ஒருவரை அழைத்துவந்தனர். அழைத்துவந்த மனிதரின் கைவிலங்கை அகற்றி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், காவலர் இருவரும் பக்கத்திற்கொருவராக நின்றகொண்டனர். அவருடையை ஐரோப்பிய நிறம், உயரம், எனது மொழிபெயர்ப்பு வழக்கிற்கு உரியவரல்ல எனபதைத் தெரிவித்தன. அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதில்களைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுககம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில் விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிர்குரிய பணத்தை, பொய்த் தகவல்களின் அடிப்படையில் வங்கியில் பெற்ற கடனட்டைகள்,காசோலைகளில் செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது.
குற்றவாளியிடம் கேட்கும் வழக்கமானக் கேள்விகளைக் கேட்டு அதற்குண்டான பதில்களைப் பெற்றுமுடிந்த பின் பெண்நீதிபதி தம் கையிலிருந்த பேனாவை கோப்பு அருகே வைத்தார், நிமிர்ந்து உட்கார்ந்தார், ஏதோ முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை காண்பதுபோல புருவத்தைக் குறுக்கிச் சில கணங்கள் அவர் முகத்தைப் பார்த்தார்.பார்வைக்கான விளக்கத்தைக் குற்றவாளிக்கும் எங்களுக்கும் தரமுற்பட்டவர்போல :
– உங்களைப்பார்க்கிறபோது குற்றவாளியாகத் தெரியவில்லை பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள். எப்படி இக்குற்றங்களை தொடர்ந்து செய்கிறீர்கள் இதிலிருந்து விடுபட நினைத்த தில்லையா ? – என்று கேட்டார்.
நீதிபதியின் கேள்வி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது. குற்றவாளியின் முகத்தை சற்று கூர்ந்து கவனித்தேன். செய்த குற்றத்தின் அறிகுறிகளின்றி, பால்போல தெளிவான முகம், படிய வாரியத்தலை, அணிந்திருந்த கண்ணாடியும், மூக்கின் கூர்மையும், உடைகளில் செலுத்தியிருந்த அக்கறையும் சந்தேகிக்க முடியாதவைதான். என்ன பதில் சொல்லப் போகிறார் என நீதிபதியைப் போலவே அனைவரும் காத்திருக்கிறோம். பதில் அவர் நெஞ்சுக்கும், உதட்டிற்குமிடையில் எங்கோ தயங்கி நிற்பதுபோல எனக்குப் பட்டது. அதற்கு முகவுரைபோல மெலிதாக அவிழ்ந்த சிரிப்பு அவர் உதடுகளைக் கடக்க, பார்வயாளர்கள் மத்தியிலும் இலேசாகச் சிரிப்பு. நீதிபதி எரிச்சலுற்றார். குற்றவாளியின் வழக்கறிஞர் ஏதோ சொல்ல முற்பட்டார். அவரைத் தடுத்த நீதிபதி, « தற்போது குற்றவாளி எதற்காகச் சிரிக்கிறார் என்பதை அவர் வாயால் சொல்லட்டும் »- என்றார்.
அவையில் நிசப்தம். குற்றவாளி மௌனத்தை கலைத்துக்கொண்டவர்போல மெலிதாகத் தொண்டையைக் கனைத்து அதற்கு ஐரோப்பிய வழக்கப்படி சம்பிரதாய மனிப்பும் கேட்டார், பின்னர் :
– உங்க கேள்வியிலேயே பதிலிருக்கு மேடம், உண்மையில் நல்லவர்கள்போல இருப்பதால் குற்றம் இழைப்பது எளிதாகிறது, சுலபமாக மற்றவர்களை ஏமாற்றவும்முடியும். என் பிரச்சினை உங்களுக்குப் புரிகிறதில்லையா ? – என்று கேட்டு பெண் நீதிபதியின் முகத்தைப் பார்த்தார்.
நீதிபதிப் பெண்மணி பதில் கூறுவதைத் தவிர்த்து, தம் முன்பிருந்த கோப்பு காகிதங்களின் முனைகளை மடிப்பதும் பிரிப்பதுமாகத் பதற்றத்தைக் தணித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.
– மேடம், நான் என் பதிலை முடிக்கவில்லை, உங்கள் அமைதி, எனது பதிலில் உள்ள நியாயத்தினால் என நினைக்கிறேன். இன்னொரு கேள்வியும் எனது பதிலோடு கேட்க இருக்கிறது, அதையும் கேட்டுவிட்டால் மனதுக்கு நிம்மதி !
குற்றவாளியின் குரல் நீதிபதியின் சேட்டைகளை சட்டென்று முடிவுக்குக் கொண்டுவந்தன. கண்களை அகல விரித்து, தலையைச் சொடுக்கியவர், ஒரு சடங்குபோல எதிரிலிருந்த எங்களை ஒரு நொடி பார்த்தார், பின்னர் குற்றவாளிப் பக்கம் கண்களைத் திருப்பியவர், « சொல்லுங்க கேட்கிறேன் » என்பதுபோல தலையைக் குலுக்கினார்.
– நீங்க உட்படஇங்கே இருக்கிறவங்க அனைவருமே பார்வைக்கு நல்ல மனிதர்கள்போலத்தான் இருக்கிறோம். விதிவிலக்காக குற்றத்தைக் கூடுதலாகத் துரத்துவதும், பதிலுக்குத் தண்டனை என்னைத் துரத்துவதும் ஒருவித போதை விளையாட்டாகிப்போனது. அது சுகமாகவும் இருக்கிறது . பெரும்பான்மை மனிதர்களைப்போல அளவாகப் பழகிக் கொள்ள எனக்குத் தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால் பார்வையாளர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கலாமில்லையா ?
நீதிபதி தலையை பதில் எதையும் கூறாமல், தலையைத் திருப்பி பார்வையாளர்களைப்பார்த்தார்.அரசு வழக்கறிஞர், தமது காரியதரிசி என்று அவர் பார்வை ஓடி, கடைசியாக குற்றவாளியினுடைய வழக்கறிஞரிடத்தில் முடிவுக்கு வந்தது. காரணத்தைப் புரிந்துகொண்டவர்போல குற்றவாளியின் வழக்கறிஞர் இருக்கையைவிட்டெழுந்து, பார்வையாளர்களுக்கும் நீதிபதிக்கும் இடையில் நின்று இருதரப்பினரையும் தமது வாதம் ஈர்க்கவேண்டும் என்பதை உணர்ந்து, சொற்களுக்கேற்ப குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் தரப்பு வாதத்தை வைத்தார். தொடர்ந்து குற்றவாளிக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், கடைமைக்காக என்றிருந்தது. எனது மொழிபெயர்ப்புக்குரிய குற்றவாளியை அழைத்தபோது மணி பதினொன்றரை. முடிவாகக் குற்றவாளிகளின் தண்டனைக் குறித்த தீர்ப்புகளை வழங்க நீதிபதி முப்பது நிமிடம் எடுத்துக்கொண்டார்.
காலை பன்னிரண்டு முப்பது. நீதிபதியின் பெண்காரியதரிசி, என்னை அழைத்து அன்றைய பணிக்கான ஊதியப் படிவத்தை அளித்து, உங்கள் ஒன்றரை மணி நேரத்தை இரண்டு மணி நேரமென்று போட்டிருக்கிறேன் மகிழ்ச்சிதானே என்கிறார். குற்றவாளிகள் தரப்பில் வாதிட வந்த வழக்கறிஞர்கள், குற்றவாளிகளைச் சூழ்ந்து தெம்பூட்டிக்கொண்டிருந்தனர், அவர்களுக்கு விலங்குபூட்டக் கைகளில் விலங்குடன் காத்திருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க நினைத்தவர்கள்போல நீதிபதிகள் முதல் பார்வையாளர்கள்வரை அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்தோம்.
நன்றி : மலைகள் இணைய இதழ்
——————————————-