குறையொன்றுமில்லை

(கணையாழி ஜூன் மாத இதழில் வெளியான சிறுகதை)

 

 

குளிரூட்டப்பட்ட சபா. மனிதர்கூட்டத்தின் வெப்பத்தினால் வியர்த்து, திணறிக்கொண்டிருந்தது. மண்டபத்தை தன் நிறத்திற்கு உருமாற்றியிருந்த மின்சார ஒளி, தங்கத்தை மா ஆக்கி மண்டபமெங்கும் தூவியதுபோல மினுங்கிற்று. ஆடைகளின் மணத்தையும், தலைகளின் சொடுக்கையும், கண்களின் சிமிட்டலையும், ஈறுண்ணிகளில் பிடிபட்டிருந்த பற்களின் கூத்தையும், சமிக்கைகளில் முடிந்த வார்த்தைகளையும், கைகளின் வீச்சையும், கால்களின் தயக்கங்களையும் அவற்றின் உரிமையாளர்களையும் முகர்ந்து திருப்தியுறும் கணந்தோறும் இசையின் அதிர்வுகளையும், நாதத்தின் எடையையும், தாள கதியையும் துல்லியமாக அளந்து பழகிய மனம் அதில் இழையோடும் அபசுரத்தின் வலியில் துடித்தது.

 

« இந்த மாதிரியொரு கூட்டத்தை நம்ம சபாவில் இதற்குமுன்ன பார்த்த தில்லைய்யா ! » என நெருங்கிய சினேகிதரும், பாடகருமான  சாம்பசிவம் காதில் கிசுகிசுத்த கையோடு தோளில் தட்டிவிட்டுச்  சென்று இருக்கையில் அமர்கையில் இவருக்குப் பெருமைபிடிபடவில்லை. சினேகிதரின் பார்வையிலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சொற்களிலும் தோளைத் தட்டிய கையிலும் வெக்கை இல்லாமலில்லை. இருந்தும் அதைபொருட்படுத்தவில்லை, பொருட்படுத்தியிருந்தால் இந்த அளவிற்கு அவர் வளர்ந்திருக்க முடியாது.

 

தமது ஒரே பிள்ளையின் கர்னாடக இசை அரங்கேற்றம். மேடையில் ஜமுக்காளம் விரித்து பக்கவாத்தியங்கள் காத்திருக்கின்றன. விழா நாயகன் தேவகுமாரன் அகலக்கரை போட்ட ஜரிகைவேட்டி, ஜிப்பாவில் ஒருவரும் ஞாபகம் வைத்திராத பல்போன பாடகர் ஒருவருடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தான். அந்த மனிதர்மீது எப்போதும் திரிந்த பால் வாசம் வரும், பாரீஸிலிருந்து தருவிக்கபட்ட வாசனை தைலங்களில் மணக்கிற பலரிருக்க மகன் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதருடன் உரையாடுவதுகண்டு முகம் சுருங்கியது. தமிழ் நாடே அரங்கிற்குள் குவிந்திருந்தது. இதைக் காட்டிலும் வேறென்ன பெருமை வேண்டும். எழுந்து நின்று  அரங்கை ஒருமுறைப் பார்க்கவும் செய்தார். மனதைப் பிரதிபலிப்பதுபோல சபா ஓளியால்  நிரம்பி சன்னமான அதன் அலைகளில் மகாமகத் தீர்த்தவாரிபோல மனிதத் தலைகள்.  பெருமிதம் அபரிதமாகவே சுரந்து தொண்டையை நிரைத்து, முடிவில் வாயில் கசந்தது. பெருமிதம் செரிமானம் ஆகாததற்கு என்ன காரணமென யோசித்தார். ஏதேதோ காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போயின.எதையும் பிரச்சினையோடு முடிச்சுபோட இயலவில்லை. இறுதியில் « அதுவாக இருக்குமோ ? »- என்று மனதில் ஒரு சிறு சந்தேகம். « அடட ! எப்படி இதை அலட்சியப்படுத்தினேன்»? » என  நினைத்தவர், பின்னர் « ஆம் அதுவாகத்தான் இருக்கும் » எனத் தம்மைச் சமாதானப் படுத்திக்கொண்டார். பிரச்சினையின் வேரைக் கண்டதினால் கூடுதலாக வலித்தது.

சற்றுமுன்புதான் மண்டபத்தின் வாயிலில் நின்று கண்ணுக்கெட்டியவரை காசாம்பு தெரிகின்றாளா என்று  வீதியைப் பார்த்தார். தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காத்திருந்தபோது, மணிகண்டன் ஓடிவந்தான். இவருக்குக் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கடம் வாசிக்கிற செங்கல்வராயனின் மகன். இளைஞன், கஞ்சிரா கலைஞன். முக்கிய விருந்தினர்களை வரவேற்கும் பொறுப்பை அவனிடம் விட்டிருந்தார். ஒவ்வொரு மூறையும் அப்படியாரேனும் வரும்போது, இவருடைய கைபேசி சிணுங்கும், சுதாகரித்துக்கொண்டு எழுந்து, வந்த பிரமுகரை எதிர்கொண்டழைத்து உதவியாள் தாம்பாளத்தில் நீட்டும் சால்வையைப் போர்த்தி, இரண்டொரு சம்பிரதாய வார்த்தைளில் இரத்தின சுருக்கமாக வரவேற்றுவிட்டு, பிரமுகருக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அவரை அமர்த்திவிட்டு இவர் ஒதுங்கிக்கொள்வார்.

« ஐயா நீங்க போங்க, அந்த அம்மா வந்தா நான் அழைச்சு உள்ளே உட்கார வைக்கிறேன், நீங்க எதுக்காக சிரமப்படனும், முக்கியமானவங்கல்லாம் உள்ளே இருக்காங்க, நீங்க அவங்களைப் போய்ப்பாருங்க. கவர்னர் வரும்போது சபா செகரட்ரியோட நீங்க இங்க இருந்தால் போதும் ! » என்றான் மணிகண்டன். அவனுக்கே எரிச்சலாக இருந்தது. முதலில் பிரமுகர்கள் வாயிலில் நுழைகிறபோது தாம் முன்னிருந்து வரவேற்பது நல்லதென்று நினைக்கிறாரோ என  நினைத்தான். அப்படி நினைப்பதில் உள்ள நியாயமும் அவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் இந்தியா மட்டுமல்லாது, ஐரோப்பா, அமெரிக்கா மேடைகளிலும் இந்தியச் சங்க்கீதத்தின் பெருமையை உலகறியச் செய்துவரும், பத்ம விபூஷன், சங்கீத சாம்ராட் விருதுகளுக்கு உரியவருமான ஒர் இசை சக்கரவர்த்தி கேவலம் வீட்டில் சமையற்காரியாக இருந்த பெண்மணி ஒருத்தியின் வரவுக்காகத் தவிப்பது அநாகரீகமாகப் பட்டது. நாளை யாராவது எதையாவது எழுதிவைத்தால், இது நாள்வரை அவர் சேர்த்துவைத்த பேரும் புகழும் என்ன ஆகுமென யோசித்தபோது கோபம் கோபமாக வந்தது. « சே ! எத்தனை பெரிய மனிதர், இப்படியா இருப்பார் ?  அப்படியொரு அசிங்கம் இருந்தால்கூட அதை வெளியில் காட்டிக்கொள்ளலாமா ? » என்றெல்லாம் மணிகண்டன் யோசித்தான். « ஐயாவின் மகனுக்கு இந்த கண்றாவியெல்லாம்  தெரிந்திருக்குமா? தெரிந்து என்ன செய்வது, பெரிய மனுஷனென்பதால் இதுபோன்ற அசிங்கங்களுக்கு அவர்களும் பழகிக் கொண்டிருப்பார்களோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? » எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

மணிகண்டன் வார்த்தையை ஏற்று, அரங்கிற்குள் திரும்ப நுழைந்தார். இருபக்க இருக்கைகளுக்கு இடையில் அமைந்திருந்த பாதையில் செருப்புக்கு  நோகக்கூடாதென்பது போல நடந்தார். பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு சிலர் புன்னகைத்தனர். சிலர் எழுந்திருக்க முயன்றனர். அவர்களைக் திரும்பவும் நாற்காலியில் அமரும்படி சைகையால் கேட்டுக்கொண்டார். அவர்கள் பட்டும்படாமல் இருக்கைகளில் அமர்ந்து காட்டிய வித்தையை ரசிக்கும் மனநிலையில் அவரில்லை. மெல்ல நடந்து பிரபல நடிகருக்கு அருகில் காலியாகவிருந்த  நாற்காலியில் உட்கார்ந்தார்.

– நான் இரண்டொரு கீர்த்தனைகளை கேட்டுவிட்டு கிளம்பனும்.  கவர்னர் வந்ததும் நிகழ்ச்சியைத் ஆரம்பிச்சிடுவீங்க இல்லையா ?

« தொடங்கித்தான் ஆகனும் . »  என்ற இவரின் சுரத்தில்லாதப் பதிலைக்கேட்டு நடிகர் சங்கீத சாம்ராட்டின் முகத்த்தைப் படிக்க முயன்று தலையைத் திருப்பிக்கொண்டார்.  இவர் எழுந்து  நின்றார், தலையைத் திருப்பி ஐந்தாவது  மண்டபத்தை பார்த்தார், ஒவ்வொரு தலையாகப் பார்த்தார். காசாம்புவின் தலை தெரியவில்லை.  அவளுடைய தலை அசாதரனமானதொரு தலை. சோளக்கொல்லைப் பொம்மை பானைபோல உடலுக்குப் பொருந்தாத தலை. இழுத்து முடித்த கொண்டை, காதிலணிந்துள்ள மாட்டலையும் தோட்டையும் அதிகம் மறைக்காமல் காதை உரசிக்கொண்டிருக்கும். கைப்பிடி அளவு காதுகளிரண்டும், கன்னத்திடம் விவாகரத்து பெற்றவைபோல, ஒதுங்கியிருக்கும். தரையில் குதித்துவிடுவோம் என்பதுபோல கண் இரப்பைகளில் முட்டிக்கொண்டு நிற்கும் விழிவெண்படலங்கள்.

காசாம்புவைத்தவிர அழைத்தவர்கள் எல்லோரும் ஒருவர் பாக்கியின்றி வந்திருக்கிறார்கள்: அரசியல் வாதிகள், நடிகர்கள்,  தொழிலதிபர்கள். கர்நாடக இசை உலகின் சக்கரவர்த்திகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், குடிமக்கள். பத்திரிகையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மொத்தபேரும் வந்திருக்கிறார்கள். இன்னும் சற்று  நேரத்தில் கவர்னரும் வந்துவிடுவார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காசாம்பு இவர்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தாள். வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது, ஒழித்து வைத்திருக்கிற பத்துபாத்திரங்களைத் தேய்த்து, கிணற்றடியில் குவிந்திருக்கும் துணிகளையும் சோப்பு போட்டு துவைத்து அலசி காயவைத்துவிட்டு, போய்விடுவாள். துவைக்கிற வேலையில்லாத நாட்களில் மார்க்கெட்டிற்குச் சென்று கறிகாய்களையும் வாங்கிவருவாள். சமையலறைக்குள் நுழைய இவருடைய மனைவி உயிரோடு இருந்தவரைஅவளுக்கு அனுமதியில்லை. மகனுக்கு ஐந்து வயது இருக்கையில் காய்ச்சலில் படுத்த மனைவி திடீரென்று இறந்ததும், என்ன செய்வதென்கிற கலக்கம்.  காரியமெல்லாம் முடிந்ததும், ஆறுதல் கூறிய உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரவர் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். மாமியார் மட்டும் போகாமல் பேரனைப்பார்த்துக்கொண்டு வீட்டில் தங்கியிருந்தார். அந்த அம்மாள் அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக இருக்க, ஒரு மாதம் கழித்து வந்திருந்த மாமனாருடன் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். உறவினர்களும் நண்பர்களும் மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள். சங்கீதம் ஒன்று போதும் வேறெதுவும் தனக்கு வேண்டாமென்றார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வழக்கம்போல வேலையை முடித்து  வீட்டுக்குக் கிளம்பிய காசாம்புவிடம் :

– உனக்கு சமையல் தெரியுமா ?- எனக்கேட்டார்.

அவளிடமிருந்து பதிலில்லை, மாறாக நிலை வாயிற்படியைத் தாண்டி கால்வைக்காமல், திரும்பியவள் வரவேற்பறையைக் கடந்து அடுக்களைக்குள் நுழைந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சாம்பார், ரசம், மோர், அவரைக்காய் பெரியல், உருளைக்கிழங்க்கு வறுவல் என சாப்பாட்டு மேசையில் பரப்பியிருந்தாள். மாமியார் போனதிலிருந்து ஓட்டல் சாப்பாட்டில் அலுத்திருந்தவர், இப்படியொரு விருந்தை எதிர்பார்க்கவில்லை. மகனும் இவருமாக மேசையில் அமர்ந்ததும் காத்திருந்ததுபோல பரிமாறவும் செய்தாள். சோற்றைப்பிசைந்து சிறியதாக உருண்டைபிடித்து மகனுக்கு ஊட்ட முனைந்தபோது, அவள் முந்திக்கொண்டு ஊட்டவும் செய்தாள். சிறுவன் தேவகுமாரன் முதலில் தயங்கினான். சோற்றை நாவில் புரட்டி உமிழ் நீரோடு மெல்ல ஆரம்பித்தபோது பையன் கண்களில் நீர் கோர்த்து புரை எறியது. இவர் தண்ணீர் தம்ளரை எடுக்கச் சென்றபோது தடுத்துப் பையனுக்குத் தண்ணீரைக்கொடுத்து, தலையை இலேசாகத் தட்டி முதுகில் தடவிக் கொடுத்தாள்.

– « காரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துகொள் ! », என்றார். அவள் தலையாட்டினாள். இரவுக்கு அன்று பொங்கலையும் தேங்காய் சட்டினியையும் தயாரித்துவைத்துவிட்டு புறப்பட்டபோது, கையெடுத்துக் கும்பிட்டு :

–   « நான் இசைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறேன், தேசாந்திரி வாழ்க்கை. என் மகனைப் பசியின்றி பார்த்துக்கொண்டால் போதும். மற்றதையெல்லாம் என் உதவியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் ». – என்றதற்கும் அவளிடமிருந்து பதிலாகக் கிடைத்தது தலையாட்டல்தான். மாதத்தில் பதினைந்து நாட்கள் விமானத்தில் பறந்தார். கொழும்பு, இலண்டன், பாரீஸ், நியூயார்கென கச்சேரி செய்துவிட்டுத் திரும்புவார். மகனின் பிறதேவைகளைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் இருந்தபோதும், ருசியாய் சமைத்து அவனுடைய வயிற்றுப்பசி தேவையைப் பூர்த்திசெய்ததுதி காசாம்பு.

அந்த நாள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அக்டோபர் மாதம்.  மகன் அவன் பாட்டி வீட்டுக்கு செங்கல்பட்டுவரை போயிருந்தான். வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. சென்னைவந்திருந்த மும்பை சபா செகரட்ரி வீட்டிற்கு வந்திருந்தார், அவருடன் சேர்ந்து வழக்கத்திற்கு அதிகமாக மது அருந்தியிருந்தார்.  நண்பரை வழியனுப்பிவைத்துவிட்டு அமர்நதவரை, வெளியில் பெய்த மழையும் தனிமையும் வாட்டியது. இவருடைய நாட்டைக்குறிஞ்சியில் கரைந்துபோகும் ரசிகையைக் கைப்பேசியில் தொடர்புகொண்டார், கிடைக்கவில்லை.  நிதித் துறை செயலராக இருக்கும்  பெண்மணி ஒருத்தியையும் தெரியும், தொலைபேசியை எடுத்தவள் அமைச்சருடன்  தில்லியில் இருப்பதாகத் தெரிவித்தாள். வெறுப்புடன் கைபேசியைத் தூக்கி எரிந்துவிட்டு சோபாவில் வெறுப்புடன் அமர்ந்தார். முதுகில் ஈரத்தை உணர்ந்ததும், சன்னற்கதவுகள் சாத்தப்படாமலிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. எழுந்து சென்று அதனைச் செய்து முடித்துவிட்டு, சோபாவில் திரும்ப உட்கார்ந்த போது. தெருக்கதவு தட்டப்படும் சத்தம். எழுந்து சென்று கதவைத் திறந்தார். வாட்சுமேன் ஏகாம்பரம்.  « காசாம்பு வந்திருக்காங்க, பத்திரிகை கொடுத்துட்டு போகனுமாம். » – என்றான். ஏகாம்பரத்தின் முதுகுத் திரையை  விலக்கியவளாக வெளிப்பட்ட காசாம்புவை உள்ளே வர தலையாட்டிவிட்டுக் கதவைச் சாத்தினார்.  நூல்புடவையின் உட்காருமிடத்தில்  நிறம் மங்கியும், முந்தானையில் எண்ணெய் பிசுக்குமாக பார்த்துப் பழகிய காசாம்பு இல்லை. குங்கும நிறத்தில்ஒரு ஜார்ஜெட் புடவை, அதற்குப் பொருத்தமாக ஒரு இரவிக்கை, அவளுடைய பெரிய தலையில் தாழம்பு கலந்த கனகாம்பரம், நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு. பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

கையிலிருந்த பையிலிருந்து ஒரு சிறிய தாம்பாளத்தட்டை எடுத்தாள். அதில் அதே பையிலிருந்து, ஒரு சீப்பு வாழைபழத்தையும் வெத்திலைப்பாக்கு, தேங்காயையும், இறுதியாக உறையுடன் ஒரு திருமண அழைப்பிதழையும் வைத்து  நீட்டியபடி :

–   மகனுக்கு கல்யானம் குதிர்ஞ்சிடுச்சி, அண்ணன் மவதான். பொறுமையா முடிக்கலாம்னு இருந்தோம். சின்னஞ்சிறிசுக அவசரப்பட்டுட்டாங்க. வடபழனியிலே வச்சிருக்கோம், என ஒரேமூச்சில் சொல்லி முடித்தாள்.

அவளுடைய இருபது ஆண்டுகால வேலையில் இரண்டு வாக்கியம் முழுதாக அவள் பேசிக் கேட்க நேர்ந்தது அன்றைக்குத்தான்.  ஜண்டைவரிசைபோல ஒப்பித்தவவற்றை அவள் உடல் மீது படிந்திருந்த கண்களை அகற்றாமல் கேட்டுக்கொண்டவர் :

–   உள்ளே போ ! டவல் ஏதாவது கிடக்கும் தலையைத் துவட்டிக்கோ !- என்றார்.

– இன்னும் இரண்டு வீடுகள்தான், அதை முடிச்சுட்டா வீட்டுக்குத் திரும்பிடுவன், பிரச்சினையில்லை. நீங்க பத்திரிகையை எடுத்துக்கொண்டு என்னை அனுப்பனும் ! – இவருடைய முகத்தைப் பார்க்காமல் அவளிடமிருந்து வார்த்தைகள் வந்தன.

அவசரத்தைப்புரிந்துகொண்டவர் போல அவளுடைய மணிக்கட்டைப் பற்றினார். இவர் முகத்தைப் பார்க்காமலேயே காசாம்பு, பிடித்த அவருடைய கையை மெல்ல விலக்கினாள். தொடர்ந்து அழைப்பிதழையும் பிறபொருட்களையும் அங்கிருந்த சிறு கூடையில் எந்திரகதியில் வைத்தபின், கதவைத் திறந்துகொண்டு போனவள் திரும்ப வரவில்லை. அழைப்பிதழுக்கு மரியாதை கொடுத்து அவள் மகன் கல்யாணத்திற்குப் போயிருக்கவேண்டும். காசாம்புவின் முகத்தைப் பார்க்க இவருக்குத் தயக்கமாக இருந்தது. போகவில்லை.

சம்பவம்  நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்திருந்தன. இவருடைய மகனுக்கு இசை அரங்கேற்றம். காசாம்புவை கூப்பிட வேண்டிய நியாயம் இருந்தது. அழைப்பிதழை மூன்றாவது நபரிடம் கொடுத்தனுப்புவதும் சரியல்ல என நினைத்து, கார் போக முடியாத சந்தில், அரைகிலோமீட்டருக்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு, சாரதி தடுத்தும் பிடிவாதமாக காசாம்புவை நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருந்தார்.

மெல்ல நடந்து சபா வாயிற்பகுதிக்கு வந்தார். நுழைவாயிலையொட்டி அரங்கிற்குள் விருந்தினர்களை வரவேற்க ஏதுவாக சிறிய கூடம். மேசைபோட்டு வெள்ளித் தட்டுகளில் ரோஜா பூக்கள், பன்னீர் சொம்பு, சந்தணக்கிண்ணம், குங்குமப் பரணி சகிதம் காத்திருந்த பெண்கள், தங்கள் பணியை மட்டுமல்ல, தங்கள் செயற்கை முறுவலையும்  பேசிவைத்துக்கொண்டதுபோல சட்டென்று  நிறுத்திக்கொண்டு  இவரைப் பார்த்தனர். அவர்களில் ஒருத்தி, தலையில் மல்லிகையோடு இரண்டு ரோஜாக்களும் இருந்தால் அழகுதானே என்று நினைத்து  எடுத்துச் சொருகியிருந்தாள்.  இவரைக் கண்டதும்  சட்டென்று அவற்றை எடுத்து கைப்பிடியில் மறைக்க முயன்றாள். அருகிலிருந்த மற்றொருத்தி வாயைமூடி கமுக்கமாகச் சிரிக்கவும், இவர் அவர்களைப் பார்க்காதவர்போல வாயிலைக் கடந்து வெளியில் வந்தார்.

இரு சக்கர வாகனத்திலும், காரிலுமாக அழைத்தவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருதார்கள். அரைமணி  நேரத்திற்கு முன்பாகப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரி இடைக்கிடை கசங்கிய கர்ச்சீப் ஒன்றால்  கழுத்தையும் முகத்தையும் அழுந்த துடைத்தபடி இன்னமும் பெட்டிக்கடையில் புகைத்துக்கொண்டு  நிற்கிறார். இவரைப் பார்க்கவில்லை, பார்த்திருந்தால் சிகரெட்டை அணைக்காமல் தூக்கி எரிந்திருப்பார். சற்றுமுன் அப்படித்தான் செய்தார். சற்றுத் தள்ளி கும்பலாக  ஒரு இன்ஸ்பெக்டரும் காவலர்களும். எல்லோருமே கவர்னருக்காக காத்திருக்கிறார்கள், அவர் வந்துபோனதும் கரைந்துவிடுவார்கள். சாலையில் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் மனிதர்களும் இவரைப் பற்றிய பிரக்ஞையின்றி கடந்துபோகிறார்கள். சபாவிற்குள் திரும்ப நுழைந்தவர் மணிகண்டனை அழைத்தார் :

– துக்கடாவில் ‘குறையொன்றுமில்லை’ யை சேர்க்கவேண்டாம்னு என் மகனிடம் சொல்லிடு, என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s