அண்மையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திலிருந்து ‘ உலகத் தமிழறிஞர்களுக்கான விருதுகள்’ -2018 என்ற அறிவிப்பின் கீழ் ஒரு கடிதம் வந்தது. அதில் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என்று குறிப்பிட்டிருந்த தோடு விண்ணப்ப படிவத்தையும் அனுப்பியிருந்தார்கள். படிவத்தில் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, பெயர், எழுதிய நூல்கள் (ஒவ்வொன்றிலும் ஒரு படியை அனுப்பவேண்டும்) . தவிர விண்ணப்பதாரர் தமக்குத் தேவையான விருதையும் குறிப்பிடவேண்டும் எனச்சொல்ல்லப்பட்டிருந்தது. இதுதான் முதன் முறையல்ல
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் எனக்கு இம்மடல் கிடைக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நான் விணப்பிக்கவில்லை. கடந்த ஜனவரியில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுடனான சந்திப்பில் நண்பர் முருகேசப்பாண்டியன் முன்னிலையில் பேசிய அருமை நண்பர் முனைவர் பசும்பொன்,, 2018 ஆ ஆண்டு விருதுக்கு எனக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருமிருந்தார். இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நான் விண்ணப்பிக்கவில்லை.
விருதின் மீதும், விருதளிக்கும் நண்பர்கள் மீதும், அரசுமீதும் குறைகூற ஒன்றுமில்லை. விருதைபெறும் நண்பர்களையும் குறைத்து மதிப்பிட இல்லை.
இருந்தும் எனக்கு தனிப்பிட்ட வகையில் சில நெருடல்கள் இருக்கின்றன :
அ) முதலாவதாக 5 நாவல்கள், 5 சிறுகதைதொகுப்புகள்,9 கட்டுரைதொகுப்புகளும் ; மொழிபெயர்ப்புகளில் : பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 நூல்களையும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பை சிறுகதை தொகுப்பையும் செய்துள்ளேன் ; மாத்தாஹரி நாவல் பிரெஞ்சிலும், சிறுகதைகளில் சில Short Edition, Bonnes nouvelles, ஆகியவற்றிலும் வந்துள்ளன. இவற்றில் எல்லால் ஒரு படியை அனுப்புவதென்பது இயலாத காரியம்.
ஆ) இரண்டாவதாக விருதுக்காக விண்ணப்பம் செய்வதும், இந்த விருதுக்கு நான் தகுதியானவன் அதைக்கொடுங்கள் என யாசிப்பதும் சரியல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. சம்பந்தப்பட்டவர்களே தகுதிக்குரியவர்களை தேர்வு செய்து மகிழ்ச்சி தரும் செய்தியை எதிர்பாராமல் திடீரென்று பெறும் இன்பத்திற்கு ஈடேது ?
இ. நான் தமிழ் அறிஞன் இல்லை, எழுத்தாளன். பல தமிழ்ப் பேராசியர்களைக் காட்டிலும் தமிழை நன்றாக எழுதுவேன், அவ்வளவுதான். எங்களைப்போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, உள்ளூரிலேயே பல தமிழ் அறிஞர்பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போற்றுங்கள், நாங்களும் இங்கு தலை நிமிர்ந்து வாழ்வோம்.
இந்நிலையில் விருதுக்கு விண்ணப்பிப்பதும், எனக்கு இந்த விருதைத் தாருங்கள் என கேட்டுப் பெறுவதும் முறையல்ல என்பதென் தாழ்மையான கருத்து.
இரண்டு முறை எனது நாவல்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் கிடைத்தன. அவை விண்ணப்பித்து பெற்றவை அல்ல. தாமாக கிடைத்தவை, அப்படியே பிறவற்றையும் எதிர்பார்க்கிறேன். விண்ணப்பித்துத்தான் பேறவேண்டுமென்றால் எனக்கு வேண்டாம்.
அண்மையில் மதுரையில் ஆயர் விருது(விண்ணப்பமின்றி), எனக்குக் கிடைத்தது. சாதி அடையாளம் தாங்கிய அவ்விருதை வாங்கச் சங்கடப்பட்டேன். விருதினை பெறும் முன் நண்பர் பஞ்சு, சந்தியா நடராஜன், தமிழ்மணி, பத்திரிகையாளர் பாண்டியன் ஆகியோரிடம்என் மன நிலையைப் பகிர்ந்துகொண்டேன், நண்பர்கள் தவறில்லை என்றார்கள். தவிர விருதை வழங்கியவர்களின் அன்பிற்கும், என்மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கும் அவ்விருதைப்பெறுவது நியாயமாகப் பட்டது.
ஒவ்வொரு நாவலுக்கும் குறைந்தது ஐந்து மதிப்புரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவாளர்கள் க.பஞ்சாங்கம், அ.ராமசாமி,ந.முருகேசபாண்டியன், கி.அ. ச.ச்சிதானந்தம் ரெ.கார்த்திகேசு, வே.சபா நாயகம் என பலர் எழுதியிருக்கின்றனர். இவர்களின் அங்கீகாரம்தான் விருது. இவ்வெழுத்து விருதுகள் கேட்டுப்பெற்றவையுமல்ல. ஓராண்டிற்குமுன்பு இதுவரை நான் சந்தித்தே இராத இலண்டனிலிருந்து கிரிதரன் என்பவர் நீலக்கடல் குறித்து ஒரு தொடரையும், அண்மையில் திரு நெல்வேலியிலிருந்து ஜிதேந்திரன் என்ற முன்பின் கண்டிராத குற்றவிசாரணை என்ற மொழிபெயர்ப்பு நாவல் குறித்தும், ரணகளம் நாவல் குறித்தும் எழுதியிருக்கிறார்கள். இவைதான் விருது.