கடந்த ஜனவரி ஐந்து அன்று பிரான்சிலிருந்து வந்தேன். ஒரு மாதம் வெகு எளிதாக ஓடிவிட்டது. புதுச்சேரி நண்பர் சீனு தமிழ்மணி. மூன்று மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் ராசேந்திர சோழன் குறித்து ஒரு தொகுப்பு கொண்டுவர இருப்பதாகவும் அதற்கு கட்டுரையொன்றை தரமுடியுமா எனவும் கேட்டார் அக்கட்டுரைக்காக அவருடைய சிறுகதைகளை மீள் வாசிப்பு செய்தேன். எழுத்தாளரை சில வருடங்களுக்கு முன்பு சந்தித்திருக்கிறேன்.
நான் அதிகம் எழுத்தாளர்களைச் சந்திப்பதில்லை. பெயரைப்பார்த்து எழுத்தினுள் பிரவேசிக்கும் குணமுமில்லை. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சுமொழியில் பெயருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் எழுத்தை அணுக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லாததது ஒரு குறை. தமிழில் புதிதாக எழுதவருகிறவர்களின் எழுத்துக்களை மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக வாசிக்கிறேன். இளம்தலைமுறை எப்படி புனைவுகளை அணுகுகின்றது, என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை.
எனது சந்திப்பை சுமையாகக் கருதாத நண்பர்களைப் பார்க்கிறேன், பழகுகிறேன். அவர்களில் ஒருவர் எழுத்தாளர் இராசேந்திர சோழன். அவர் எழுத்தையையும், அவர் நிஜவாழ்க்கையையும் அறிந்தவர்களுக்கு மக்கள் இலக்கியவாதி. அவருடைய சமூகப் பிரக்ஞை, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, அரசு எந்திரங்களால் பந்தாடப்படும் உயிர்கள் மீதுள்ள கரிசனமென நம்மை ஈர்க்கும் கணுக் கரும்புகள் அவரிடம் ஏராளம்…ஏராளம்.
ஒருவாரத்திற்கு முன்பு இரண்டாவது முறையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது, உபயம் இரண்டாவது முறையாக நண்பர் சீனுதமிழ்மணி. நண்பர்கள் பஞ்சு, தமிழ்மணி, நாயகர், பஞ்சுவின் மாணாக்கரும் நாயகரின் நண்பருமான பேராசிரியர் செல்வபெருமாள் என ஐந்துபேரும் ஒரு பிற்பகல் வேளை அலுப்புடன் சாய்ந்திருந்த நேரத்தில் மயிலத்திற்குச் சென்றிருந்தோம். குறுகலான தெரு ; உழைப்பு, வியர்வை, சினிமா, அரசியல் சங்கேதச் சொற்களில் பல்லாங்குழி ஆடும் மக்கள்.
எங்களை எதிர்பார்த்ததுபோல எழுந்துவந்தார். ஆசனங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் எங்களுடன் அமர்ந்தார். எழுத்தாளன் தனிமை என்பது : எடைகற்களைத் தொலைத்த தராசு. ஒளியைத் துறந்த தீபம், புரை குத்தியும் உரையாதபால்.
அறிமுகம் சுருக்கமாக முடிந்தது. இலைமறைகாயாக முகத்தில் கண்சிமிட்டும் சந்தோஷம். மீசையில் விரைப்பு இல்லை. திறந்த விழிகளுக்குள் விலைமதிக்கமுடியாதக் கோமேதக் கற்கள். தனிமைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவும் மொழியும் எங்கள் சந்திப்புக்காக காத்திருந்தனபோலும். நண்பர் சீனு தமிழ்மணி எழுத்தாளர் பற்றிய தொகுப்பினைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்றைய தலைமுறைக்கு நேற்றைய தமதெழுத்தினால் என்ன சொல்லமுடியும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தொகுப்பு இருக்கவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த்தார். மயிலம், இளமைக்காலம், ஆசிரியப்பணி, மார்க்சிய அபிமானம் ஆகியவற்றைக் குறித்த நண்பர்கள் பஞ்சு, சீனு தமிழ்மணி ஆகியோரின் வினாக்களுக்கு ஒரு குழந்தையின் ஆர்வத்துடன தமது கடந்தகாலத்தை கொண்டார். அதை விவரிக்கிறபோது உதட்டசைவிற்க்கு ஏற்ப கட்டைவிரலுடன் கருத்துமோதலில் குதித்ததுபோல ஆள்காட்டிவிரல் அசைகிறது. கடந்தகாலத்தில் பயணிக்கிறபோது சந்தோஷ குளத்தில் முங்கிக் குளிப்பதை பரவசம் சொட்டும் விழிகளில் கண்டோம். பஞ்சுவும், தமிழ்மணியும் அளவளாவ அரைக்கண்மூடி தியானிப்பதுபோல நானும், நாயகரும் செல்வபெருமாளும் கேட்டு மகிழ்ந்தோம்.
——-