அண்மைக்காலமாக பிரான்சு நாட்டில் சில உளவியல் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு நல்ல நூல்களைச் சிபாரிசு செய்கிறார்கள். சிறைகள் மருத்துவமனைகளில் நூல் நிலையங்களைத் திறந்திருக்கிறார்கள், எழுத்தாளர்களை, அவர் தம் படைப்புகளை மருத்துவமனைகள், சிறைச்சாலைகளுக்கு அழைப்பதும்ன் அதனைக் கைதிகளுக்கும் நோயாளிகளுக்கும் அளிக்கும் சிகிச்சைகளில் ஒன்றாகப் பார்க்கும் போக்கும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் சூழலில் அலெக்ஸாந்ரு ழெஃபென் (Alexandre Gefen) என்பவரின் புதிய நூல் கவனம் பெற்றுள்ளது.
அலெக்சாத்ரு ழெஃபென் நவீன பிரெஞ்சு இலக்கிய உலகின் முன்னணி திறனாய்வாளர்களில் ஒருவர், இளைஞர், பிரெஞ்சு தேசிய ஆய்வகத்தில் நவீன இலக்கிய பிரிவு இயக்குனருங்கூட. அவருடைய சமீபத்திய நூல் « Réparer le monde : la littérature française face aux xxi siècle » (உலகைச் சரிசெய்தல் : இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தை முன்வைத்து)
அவரின் கருத்துப்படி நவீனப் பிரெஞ்சு இலக்கியங்கள் (குறிப்பாக எண்பதுகளிலிருந்து) வடிவம், இலட்சியம், அழகியல் இவற்றிலிருந்து விடுபட்டு தனிமனிதன், சமூக மேம்பாட்டிற்குச் சிகிச்சையை முன்வைப்பவை. அல்பெர் கமுய் கூட, தான் பிழையென்றுணர்வதை படைப்பு மூலம் ஒரு கலைஞன் திருத்த முற்படுகிறான், எனக்கூறியிருக்கிறார்.
மேம்போக்கான பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து தம்மை வெகுவாக அந்நியப்படுத்திக்கொண்டிருக்கும் நவீன இலக்கியங்கள் நம்முடைய மனநிலை கட்டமைப்பின் மேம்பாடு, அறம் குறித்த ஆழமான கேள்விகள், வருங்காலம் பற்றிய ஐயங்கள், வாழ்க்கை நெறியிலுள்ள குழப்பங்கள் ஆகியவற்றிர்க்கு விடைகாணச்சொல்லி சில கணக்குகளைத் தருகின்றன என்பது மட்டும் நிச்சயம்.