அண்மைக்காலங்களில் குறிப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு ஆணையம் ஏற்பட்ட பிறகு புலம் பெயர்தல் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. பன்னாட்டு அரசியலில், பொருளியல் நோக்கில், உள்ளூர் அரசியலில், ஊடகங்களில் புலம் பெயருதல் இன்று விவாதத்திற்குரிய பொருள். சென்னை புழல் சிறையைக் காட்டிலும் , பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் தரும் புலம் பெயர் வலி கொடியது. இன்றைக்கல்ல, என்றைக்கு விலங்கினங்களும், மனிதரினமும் தோன்றியதோ அன்றையிலிருந்து வெகு ஜோராக புலம்பெயர்தல் நடந்துகொண்டிருக்கிறது. கால்கள் இருக்கிறபோது நடந்துதானே ஆக வேண்டும், ஓரிடத்தில் மரம்போல வேருன்றி நீரையும், உயிர்ச்சத்தையும் பெற முடியாதபோது இடம்பெயரத்தானே வேண்டும். ஆக இயல்பிலேயே மனிதன் புலம் பெயரும் உயிரினம். குகையில் – வெட்டவெளியைக் காட்டிலும் குகை பாதுகாப்பானது – உயிர்வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இடம் பெயராதிருந்தால் இன்றைக்குக் “கோபல்ல கிராமங்கள்” ஏது, நகரங்கள் ஏது. உலகமெங்கும் விவாதிக்கப்படுகிற பன்முக கலாச்சாரம்தான் ஏது.
நடந்துதான் போகவேண்டும் என்றிருந்த காலங்களில் கால்களும் மனங்களும் அனுமதித்த தூரத்தை, இன்றைய தினம் புலம்பெயரும் மனிதர்களின் பொருளாதாரமும், பயண ஊர்திகளும் தீர்மானிக்கின்றன. புலப்பெயர்வின் துணைக் கூறுகள் இவை.. கற்கால மனிதன் உயிர்வாழ்க்கையின் ‘அடிப்படைத் தேவை’க்குப் புலம் பெயர்ந்தான். நிகழ்கால மனிதர்களுக்கு அடிப்படைதேவையைக் காட்டிலும் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ முக்கியம். பருவம் பொய்த்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஊர்போதல் வெகு காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் விவசாயக்கூலிகளாக, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடியது போதும், “பட்டணம் போகலாம், பணம் காசு சேர்க்கலாம்” எனப் பட்டணம் சென்று, கொத்தவால் சாவடியில் மூட்டைத்தூக்கி பொங்கலுக்கு கிராமத்திற்குத் திரும்பி, கிராமத்தில் கம்பத்தம் எனக்கொண்டாடப்படுக்கிற பெருந்தனக்காரர்களுக்கு புரோ நோட்டின்பேரில் கடன் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே படிப்பதற்கும், படித்தபின் உரிய வேலைதேடி நகரங்களுக்கும் மனிதர்கள் பயணிப்பதை இன்றும் காண்கிறோம். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போகிறவர்கள், மேற்குலகில் குடியேறுகிறவர்கள் பிறநாடுகளுக்குப் புலபெயர்கிறவர்களில் அநேகர் ‘பணம் காசு சேர்க்கலாம்’ எனப் புலம் பெயரும் இனம். பணத்தோடுகூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிப் போகிறவர்கள். இது தேவை தரும் நெருக்கடியால் ஏற்படும் புலப்பெயர்வு. இப்புலப்பெயர்வு போகும் தூரத்தையும், சேரும் இடத்தையும் தீர்மானிக்க கால அவகாசத்தை இவர்களுக்குத் தருகிறது.
கோபல்ல கிராம மாந்தர்களின் நெருக்கடி :
நவீன யுகத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதற்கு, பிறந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்படுவதற்கு வேறு மாதிரியான நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இதுதான் நாம் பிறந்த மண், இப்படித்தான் என் வாழ்க்கை, இங்குதான் என் கட்டை வேக வேண்டும் எனத் தீர்மான மாக ஓரிடத்தில் வாழ்க்கையை நடத்துகிற ஒரு சிலரின் வாழ்க்கையில் காட்டாறுபோல சம்பவங்கள் திடீர்ப்பெருக்கெடுத்து இவர்கள் திசையில் பாய தட்டுமுட்டு சாமான்களுடனும், குஞ்சு குளுவான்களுடனும் தம்மையும் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, விதியை நொந்து, திக்கு திசையின்றி, மயக்கமானதொரு வெளியை நோக்கி ஒரு நாள் ஒரு கணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் மரணத்தைப் போல புலம்பெயரும் மனிதனின் பயணம் தொடங்குகிறது. இடையில் எதுவும் நிகழலாம், எங்கேயும் நிகழலாம் என்ற கையறு நிலையில் வேதனை, விரக்தி, சோர்வு, கொசுறாக சிறிது நம்பிக்கை என்ற பிரித்துணர முடியாத சகதியில் காலூன்றி, வாழ்க்கை முழுவதும் தவிக்கச் சபிக்கபட்ட மக்கள். இந்த இரண்டாம் வகைப் புலம்பெயர்தலும் அதற்கான நிர்ப்பந்தமும் ‘கொடிது கொடிது’ வகையறா.
வடக்கே தெலுங்கு தேசத்தில் அமைதியாகவும் செல்வாக்குடனும் வாழ்க்கையை நடத்திய மக்களின் வாழ்வில் சூராவளிபோல வீசிய நெருக்கடி, கள்ளம் கபடமற்ற ” கம்மவர், ரெட்டியார் , கம்பளத்தார், செட்டியார், பிராமணர் , செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர்….இப்படி எத்தனையோ மக்களை ” (பக்கம் 36, கோபல்ல கிராமம்) வேருடன் பெயர்த்து தெற்கே வீசிவிடுகிறது. « இவர்கள் இங்கு புறப்பட்டு வந்ததற்கும் காரணங்கள் எத்தனையோ. தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள். முஸ்லீம் ரஜாக்களுக்கு பயந்துகொண்டு வந்தவர்கள் » என கோபல்ல கிராமத்திற்கு ஆசிரியர் கோடிட்டுக்காட்டுவது இரண்டாவது காரணம்.
« கும்பினியான் எந்த இடத்திலும் நம்முடையப் பெண்டுகளைத் தூக்கிக்கொண்டு போனதாகவோ , பிடித்து பலாத்காரமாகக் கற்பழித்ததாகவோ அவர்களுக்குச் செய்திகள் இல்லை. இந்த ஒரு காரனத்துக்காகவே அவர்களுக்குக் கும்பினியான் உயர்ந்து தோன்றினான் ! » (பக்கம் 135, கோபல்ல கிராமம்) என்கிற ஒப்பீடு புலப்பெயர்ந்த மக்களின் ஆறாமனப் புண்ணிற்குப் பூசும் களிம்பு.
கோபல்ல கிராமம் பிறந்த காரணத்தை சென்னாதேவி என்ற பெயரும் பெயருக்குடையவளும் தருகிறார்கள். நாம் பார்த்திராத அந்த புவியுலக அப்ஸ்ரஸை கி.ரா எனும் விஸ்வ கர்மா வார்த்தைகளால் பிசைந்து கண்முன்னே நிறுத்துகிறார் :
« சென்னா தேவி இருக்குமிடத்தில் அவளுக்கு அருகே அவளைச் சுற்றி ஒரு பிரகாசம் குடிகொண்டிருக்கும், அவள் நிறை பௌர்ணமி அன்று பிறந்த தினாலோ என்னமோ அப்படியொரு சோபை அவளுடைய முகத்தில் »
« அவளுடைய குரல்தான் என்ன இனிமை என்கிறாய் ! அவள் பாட ஆரம்பித்தால் இந்தப் பிரபஞ்சமே ஒலியடங்கி மௌனமாகிவிடும். காற்று அசைவதை நிறுத்திவிடும். கொடிகள் ஆடாமல் நிற்கும். பூமியில் நம்முடைய பாரம் லேசாகி அப்படியே கொஞ்சமாக மேலே கிளம்பி காற்றில் மிதப்பது போல் ஆகிவிடும். பெருங்குளத்தின் நிறை தண்ணீரைப்போல ஆனந்தம் தாங்காமல் தத்தளிக்கும் நம்மனசு »
«அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொருதரம் அப்படி சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பில்தான் எத்தனைவிதம் !
கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும் !
கடைகண்ணால் சிரிப்பது. முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. தரையைப் பார்த்து சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலேயே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி – பறவையாடவிட்டு- ஒரு சிரிப்புக் காட்டுவாள் ( அப்போது கண்கள் ஜொலிக்கும்) சிலசமயம் சற்றே மூக்கைமட்டும் விரித்து மூக்கிலும் சிரிப்பை வரவழைப்பாள் !
உதடுகள் புன்னகைக்கும்போது வாயின் அழகு பல மடங்கு அதிகமாகிவிடும் சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும்போதுஅவைகள் இளஞ்சிவப்பின் எல்லையைத்தாண்டி குருவி இரத்தம் போல செஞ்சிவப்பாகிவிடும்.
அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான் ! புல்லாக்கில் அப்படியொரு முத்தைக் கோத்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஓர் ஆசாரிக்குத் தோணியிருக்கே. அது எப்பேர்பட்ட ரசனை !! (பக்கம் 31,32 கோபல்ல கிராமம்) »
ஆசாரியின் ரசனையைபற்றி கி.ரா சிலாகிப்பதிருக்கட்டும், நமக்கு கிரா.வின் ரசனைதான் இங்கு முக்கியம். இப்பகுதியை வாசித்தபின் நமக்கே சென்னாதேவி மேல் ஓர் ‘இது’ வந்துவிடுகிற நிலையில் துலுக்க ராஜாவைக்குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. கேள்வி ஞானத்தினாலேயே பெண்ணை அடைய நினைக்கிறான். துலுக்க ராஜாவின் ஆட்களில் ஒருவன் பெண்ணை உள்ளது உள்ளபடியே வர்ணிக்கப்போதுமான சொல்ல்லாற்றலைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது ‘ கோபல்ல கிரமத்தின்’ பிரதியில் ஒன்றை கொண்டுபோய் கொடுத்திருக்கவேண்டும். (பெண்களை வர்ணிக்கவே அவரிடம் பாடம் எடுத்துக்கொள்ள ஆசை, கதை எழுதத்தான் நண்பர்கள் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது)
சென்னாதேவியின் முடிவு மட்டுமல்ல அவளைச் சேர்ந்தவர்களின் முடிவுங்கூட மாணிக்கமாலை வடிவத்தில் வந்தது. பெண்ணுக்கு மாணிக்க மாலை செய்து போட்டுப்பார்க்க நினைத்த பெற்றோர்கள் வீட்டிலுள்ள கெம்புக் கற்களை விலைபேச ரத்தின வியாபாரிகளை அழைக்கிறார்கள். வந்தவர்கள் ரத்தினவியாபாரிகள் அல்ல துலுக்க ராஜாவின் ஆட்கள். பெண்ணின் அழகைத் தங்கள் ஆட்கள் மூலமாக அறிந்த ராஜா அவளை அடைய முயன்றதில் ஆச்சரியமில்லை. அவனிடமிருந்து தப்பிக்க அதிலும் வெட்டிய பசுமாட்டின் தலை சமையலுக்கென காத்திருக்க, அலறி அடித்துக்கொண்டு சொந்த மண்ணிலிருந்து புறப்படவேண்டியிருக்கிறது. பயணம் அவ்வளவு எளிதானதல்ல. ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு அனுபவத்தை, நல்லதங்காள் கதையைப் போல நச்சென்று சுருக்கி கிரா :
« நடந்து நடந்து கால்கள் வீங்கி பொத்து வெடித்து வடிந்து புண்களால் அவதிப்பட்டோம். எங்களோடு வந்த இரண்டு குழந்தைகளும் மூணு வயசாளிகளும் நோய்ப்பட்டு தவறிப்போய்விட்டார்கள். அவர்கள் இறந்துபோன துக்கம், மேலும் பலர் நோய் அடைந்த கஷ்டம்….
அனுபவித்திராதப் பட்டினி, காலம் தாழ்ந்து கிடைக்கும் அன்னம், உடம்பு அசதி, மனத்தின் சோர்வு , கூட வருவோரிடம் காரணமற்ற மனக்கசப்பு, மௌனம், குறைகூறல் இப்படியெல்லாம் துன்பப்பட்டோம் . » (பக்கம் 59, கோபல்ல கிராமம்), என்கிறார்.
கல்விக்காகவும், பொருளுக்காகவும், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மற்றொரு மாநிலத்திற்கு, மற்றொரு நாட்டிற்கு, மற்றொரு கண்டத்திற்கு விரும்பியே அதாவது போகின்ற இடம் எதுவென்று அறிந்தே புலம்பெயர்கிறவர்கள் ஒருவகை. மொழி, இனம், மதத்தின் அடிப்படையில்; சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட; இன்னதிசை, இன்ன நாடு, இன்னகண்டம் என்று அறியாமல் புலம்பெயர்கிறவர்கள் , இரண்டாவது வகை. கோபல்ல கிராமத்தின் பூர்வீக க் குடியினர் இரண்டாவது வகையினர். எந்த சென்னாதேவிக்காக புலம்பெயர்ந்தார்களோ, அந்தச் சென்னாதேவியை வழியிலேயே இழக்கிறார்கள். புலம் பெயர்தல் இழப்புகளின் கோர்ப்பு
புலம்பெயர்தலின் வலியும் வாழ்வும் :
இக்கட்டுரையின் முற்பகுதியில் இருவகை புலப்பெயர்வைக் குறிப்பிட்டிருந்தேன். பழமரத்தைத் தேடும் பட்சிகளுக்கு பிரச்சினையில்லை, குறிக்கோளில் தெளிவிருப்பதால் அதற்குரிய மரங்களை அடைவதில் அலைச்சல் சில வேளைகளில் கூடுதலாக இருப்பினும், பயனடைவது உறுதி. இளைப்பார மரம் கிடைத்தால்போதும், பசியாற கனிகள் வேண்டுமென்பது அடுத்தக்கட்டம் என பறந்தலையும் பட்சிகளின் அனுபவம் சிக்கல்கள் நிறைந்தவை.
« நாங்கள் இதுவரை பார்த்திராத மரங்கள், செடிகொடிகளையெல்லாம் பார்த்தோம். எத்தனை மாதிரியான அதிசயப்பூக்கள், வாசனைகள் ! மனிதர்களின் ஜாடைகூட மண்ணுக்கு மண் வித்தியாசப்படும் போலிருக்கிறது. » ( பக்கம் 59 கோபல்ல கிராமம் )
புதிய பூமி, புதிய மனிதர்கள், புதிய இயற்கை என அதிசயித்த மறுகணம் புதியச் சூழலோடு தம்மைப் பொருத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டும். மலேசியநாட்டிற்குச் சென்ற தமிழர்கள், மொரீஷியஸ் தீவுக்குச் சென்ற தமிழர்கள் என்ன செய்தார்களோ அதைப்போலவே சென்ற இடங்களில் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணி கலங்கிடாமல், அரவணைத்த பூமியைத் திருத்துகிறார்கள், உழுகிறார்கள், கிணறுவெட்டுகிறார்கள், வெள்ளாமை செய்து ஓய்ந்த நேரங்களில் பிறந்த மண்ணை நினைத்து அழவும் செய்கிறார்கள்.
« மழைக்காலங்களில் கொஞ்சம் நிலங்க்களை ஆக்கித் திருத்தலாம் என்றால் அது அவ்வளவு லேசில் முடியாது போலிருந்த து. அவர்கள் சோர்ந்துபோனார்கள் . கள்ளிச்செடிகளை தரையோடு தோண்டி வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெரிய வேண்டியிருந்தது. தோண்டும்போது பெயறும் பாறைக்கற்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது . பெரிய்ய கற்கள் பெயர்ந்த இடங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சமப்படுத்த வேண்டும். »(பக்கம் 78 கோபல்ல கிராமம்)
« சிற்றெறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக வேலையில் இறங்கினார்கள்….அவர்கள் முதலில் நினைத்ததுபோல் அவ்வளவு சுலபமாகவும், அவ்வளவு சீக்கிரமாகவும் அந்தப்பரப்பு பூராவையும் நிலமாக்கிட முடியவில்லை. பூமியிலுள்ள கற்பாறைகள் இவைதவிர மண்ணுக்குக் கீழே எரியமுடியாமக்ல் நின்றுபோன மரங்களின் கனமான வேர்கள் இவைகளெல்லாம் அவர்களுடைய வேலைகளுக்குத் தடங்கலாக இருந்தது. பரப்பு அவ்வளவு நல்ல நிலங்களாய் ஆகப் பல வருடங்கள் பிடித்தன. » (பக்கம் 88 கோபல்ல கிராமம்)
புலம் பெயருதல் என்பது புதிய பூமிக்கு வாழ்க்கைப்படல். பெண்ணாய் பிறந்தவளுக்குப் பிறந்தவீடு முக்கியமல்ல புகுந்தவீடுதான் முக்கியம் என்பார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கும் சொல்லப் படுவது அதுதான். நாள்முழுக்க புகுந்த வீட்டிற்கு உழைத்து அந்தி சாய்ந்ததும் பிறந்த வீட்டின் நினைப்பில் வாடுகிற பெண்ணின் கதைதான் புலம்பெயர்ந்தவர் வாழ்வு. பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி இயங்கவும், பின்னர் இணையவும் சாத்தியத்தினை அளிக்கவல்ல, மனித உயிர்களுக்கு இடையேயான பிரிவுகள் அவை. ஆட்டை வளர்த்தேன், கோழியை வளர்த்தேன், என ஐந்தறிவு விலங்கிடம் செலுத்தும் அன்பிற்கு நேரும் இழப்பினைக்கூட காலம் நேர்செய்துவிடும். ஆனால் மண்ணைப் பிரிவதென்பது, உயிர் மெய்யைப் பிரிவதற்கு சமம். மெய்யைத் திரும்பவும் பெறுவதற்கான முயற்சியில் உயிர்தான் இறங்கவேண்டும்.
கறந்த பால் முலைக்குத் திரும்புமா? திரும்பவேண்டுமே என்பதுதான் நமது கனவு. பொழுதுசாய்ந்தால், சொந்தகூட்டுக்குத் திரும்பலாமென்கிற உடனடி நம்பிக்கைக்கானது அல்ல புலம் பெயர்தல், என்றேனும் ஒரு நாள் திரும்பலாமென்கிற தொலைதூர நம்பிக்கைக்கானது. பூமி உருண்டை என்பது உண்மையென்றால் புறப்பட்ட இடத்திற்குப் போய்த்தானே சேரவேண்டும். அந்த நம்பிக்கையில் பூத்த கனவினை நுகர்ந்தவாறே, புலம்பெயர்ந்தவன், நினைவுப்பொதிகளை சுமந்தபடி தனக்கென விதிக்கப்பட்ட வாழ்க்கைத் தடத்தில் நடக்கவேண்டியிருக்கிறது., வேதனைகளும் வலிகளும் அதிகம், இறக்கிவைக்க சுமைதாங்கிகளுக்குத்தான் பஞ்சம். எந்த மண்ணில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணே புலம் பெயர்ந்தவனின் முதல்வீடு-தாய்வீடு: கண் திறந்தபோது காத்திருந்த வீடு. தாலாட்டு கேட்டு உறங்கிய வீடு. உதிர உறவுகள் உலவிய வீடு. வளையும் மெட்டியும் வாய்திறந்து பேசிய வீடு. காதல் மனையாள் நாவின் துணையின்றி பார்வையும் பாங்குமாய் குசலம் விசாரித்த வீடு, வெட்கச் செம்மையும், சிறுபதட்டமும் கொண்டு அவள் சிணுங்கிய வீடு, தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்கண்ட வீடு. தன் ஆயுளில் குறைந்தது, கால்நூற்றாண்டை கண்ட ஆரம்பகால வீட்டை மறக்க அவனென்ன உணர்வற்ற உயிரா ?
« இந்த நீண்ட வேடுவ வாழ்க்கையில் அனைவருமே சந்தோஷம்கொண்டு திருப்தி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாது ஒரு சிலர் தங்கள் பிறந்த மண்ணை நினைத்து நினைத்து ஏங்க ஆரம்பித்தார்கள். அப்படி ஏக்கம் கொண்டு வாடியவர்களில் முக்கியமாகப் போத்தணாவைசொல்லலாம். திடீரென்று குழந்தைபோல அழுவார். »( பக்கம் 83 கோ.கி) எனப் புலம்பெயர்ந்தவனின் துயர வாழ்க்கையை உரைக்கப் போத்தண்ணாவை முன் நிறுத்துகிறார் கிரா. எனினும் அவரே பின்னர், «எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து ஒரு தேசத்தில் வந்து வாழவேண்டியிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்கவேண்டாம் எல்லாம் பூமித்தாயினுடைய ஒரே இடம்தான் »(பக்கம் 75 கோ.கி) . எனக்கூறி சமாதானப்படுத்துகிறார். என்ன செய்வது வாழ்க்கைப் பிணிகளுக்குப் பலநேரங்களில் அருமருந்தாக இருப்பது இந்தச் சமாதனம் தான்.
புலம்பெயர்வதற்குரியக் காரணம் எதுவாக இருப்பினும், புலம் பெயர் மக்கள் நன்றிக் கடனாக, பெறும் வாழ்க்கைக்கு நன்றிக்கடனாக பிறந்த மண்ணின் கலையையும் பண்பாட்டையும் புதியபூமியில் விதைக்கிறார்கள்; உழைப்பையும், ஞானத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களால் அடைக்கலம் தரும் நாடுகள் அடையும் பலன்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உதாரணத்திற்குப் பிரான்சு நாட்டிற்கு, பிரெஞ்சு மொழிக்குப் பெருமைசேர்த்த அந்நியர்கள் அனேகர். அந்த வரிசையில் தமிழ்நாடும் தமிழ்மொழியும் இந்தக் கரிசல்காட்டுக் கதைசொல்லிக்கு ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர் வாழ்க்கையை வேடுவ வாழ்க்கையெனச் சொல்லக்கூடிய ஞானம் வேறு எவருக்கு உண்டு.
—————————————————————————–