அ. அண்டை வீட்டுக் காரரும், அடுத்த ஊர்க்காரரும்
எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர் அண்டைவீட்டுக்காரராகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது.
« நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது »
« தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று பேசிவிட்டுப் போகிறார் »
« கீரை விற்கிற பொம்பிளை அவர் பொண்டாட்டிக்கிட்ட பத்துபைசா குறைச்சு கொடுத்துட்டு போவது, நம்ம வீட்டுல இருக்கிறதுக்கு அதமாதிரி பேரம்பேசி வாங்க துப்பில்ல »
இப்படி புகையும் பகை, ஒரு நாள் வீட்டைத் திருத்துகிறேன், என செங்கல்லையும், ஜல்லியையும் அதே அண்டைவீட்டுக்காரர் இறக்குகிறபோது எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போல கொட்டீட்டீங்க என ஆரம்பித்து பற்றி எரிய ஆரம்பித்த மனம் கோர்ட் கேசு என போகும் கதைகள் உண்டு.
அண்டை வீட்டுக்கார ர் விபத்தில் அடிபட்டார் என்கிறபோது, பதறி ஓடி உதவும் மனம், அவர் மகன் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினான் என்கிறபோது பாராட்டுவதற்குப் படியேற மனைவி ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அண்டை வீட்டுக்காரர் பிள்ளையைப் பாராட்டவும் செய்வோம். பத்திரிகைகாரர்கள் கேமராவுடன் வந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம், விதிவிலக்காக, உண்மையிலேயே அண்டைவீட்டுக்காரனின் வளர்ச்சியை ஏற்கும் மனம் கொண்டவர்களாகவும் சிலர் இருக்கவும் கூடும். அவர்கள் கடலுள் மாய்ந்த இளம்வழுதி பாட்டுடைத் தலைவர்கள்.
இதே அண்டை மனிதர் கள் அடுத்த தெருவில், நமக்கு அறிமுகமற்ற மனிதராக இருக்கிறபோது அடையும் வளர்ச்சி குறித்து நாம் கவலைப் படுவதில்லை . அமெரிக்கா கொண்டாடும் தமிழன் என முக நூலிலும் எழுதுவோம். ஆனால் அவர் அண்டை வீட்டுக்காரனாக வந்த பிறகு அடையும் வளர்ச்சி தூக்கத்தைக் கெடுக்கிறது
இப்பிரச்சினை நமக்கு மேலே அல்லது கீழே உள்ளவரிடம் எழுவதில்லை ஆனால் சக அலுவலர்களிடை, சக ஆசிரியரிடை, சக பேராசிரியரிடை, சக எழுத்தாளரிடை, சக கவிஞர்களிடை, சகமொழிபெயர்ப்பாளரிடை. அதாவது சம நிலையிலுள்ள மனிதர்களிடை எழலாம். பதவிக்கு வரும்வரை மோடிக்கு சோனியா காந்தி மீது எரிச்சல் இருந்திருக்கலாம், பதவிக்கு வந்த பின் மோடியின் எரிச்சல் ட்ரம்ப்பிடம் என்றாகிறது. ட்ரம்பின் எரிச்சல் கடந்த காலத்தில் இதே பதவியில் ஒபாமா அடைந்த புகழின் மீதாக இருக்கலாம். திருச்சி கிளையில் எங்கோ ஊழியம் பார்க்கிறபோது பிரச்சினையில்லை, சென்னை கிளையில் பக்கத்து நாற்காலிக்கு அவர் மாற்றலாகி வருகிறபோது அவர் வளர்ச்சி உறுத்தும். தவிர சக அலுவலக நண்பர் மேலதிகாரியிடம் திட்டு வாங்குகிறபோது, அந்த ஆள் ஒரு முசுடு என நண்பரைச் சமாதானப்படுத்தும் மனம் , மேலதிகாரியால் அவர் வேலைத்திறன் புகழப்படும்போது நெஞ்சு பொறுப்பதில்லை.
காரணம் ஒருவரின் பலவீனத்தைவெறுப்பதில்லை, அவரின் பலத்தையே வெறுக்கிறோம். ஒருவரின் தோல்வியை வெறுப்பதில்லை, அவரின் வெற்றியைத்தான் வெறுக்கிறோம் . ஒருவரின் அறிவின்மையை வெறுப்பதில்லை அவரின் அறிவுடமையை அதனால் வந்து சேரும் கீர்த்தியை வெறுக்கிறோம். நமது நாற்பது வருட சர்வீஸுக்குப் ன்பிறகு கிடைத்த பாராட்டை மேனேஜரிடம்நேற்றுவந்த கிளார்க் கொண்டுபோய்விடுவாரோ, நமது பதவி உயர்வுக்கு போட்டியாகி விடுவாரோ என்பதால் விளையும் அச்சம். நம்மில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அண்டைவீட்டுக்கார ருட னான இவ்வுறவை சமாதானப்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று வகையினராக பிரிக்கலாம் : 1. வளர்ச்சிக்கண்டு வெறுக்கத் தொடங்கி தம் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் மனம் 2. அண்டை வீட்டுக் கார ரின் புகழை ஈடுகட்ட தம்மை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளில் கவனம் செலுத்தும் மனம், 3. மனிதர் வாழ்க்கையில் இதொரு அங்கமெனத் தொடக்கத்திலேயே தேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்ட மனம்.
மூன்றாம் வகையினர் மகாத்மாக்கள்.
முகநானூறு
இரண்டு முக நூல் முகவரியை எப்படியோ தொடங்கிவிட்டேன். இன்று ஒன்று போதுமென நினைக்கிறேன். ஒன்றை மூடலாமென நினைத்து தள்ளிக்கொண்டே போகிறது. கடந்த ஜனவரி மாதம்வரை கிட்ட த் தட்ட 4000 நண்பர்கள் தற்போது அந்த எண்ணிக்கையை இரண்டிலுமாக 300க்குத் தற்போது கொண்டுவந்திருக்கிறேன்.
இந்த எண்ணிக்கைக்குக் காரணம் தேடப்போய் கண்டறிந்ததே இப்பதிவின் முதற் பகுதி பிற காரணங்கள் :
- அநேக நண்பர்கள் பிறரை விமர்சிக்கிறபோது நாகரீகமாய் விமர்சிப்பதில்லை
- அருமை, சூப்பர் என எழுதும் நண்பர்கள், லைக் போடுகிறவர்கள் இவர்களில் உண்மையில் எத்தனை பேர் பதிவிடுவதை வாசிக்கிறார்கள் என்ற ஐயம்
- பல நண்பர்கள் சிஷ்யர்களையோ, தாஸர்களையோ தேடுகிறார்கள், நான் நண்பர்களைத் தேடுகிறேன்
- ஒரு சிலர் ஒவ்வொரு நாளும் உபதேசங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். எனக்கு உபதேசங்களை கேட்கும் வயதில்லை.
- சில நேரங்களில் முகநூல் வரி விளம்பரங்களைப் படிப்பதுபோல ஆகிவிடுகிறது.
- இறுதியாக, முகநூல் நண்பர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு என்ன ஆகப்போகிறது. தேர்தலுக்கா நிற்கப்போகிறேன்.
- முடிந்தவரை வாசிக்கிறேன், பிடித்திருந்தால் கருத்தை பதிவும் செய்கிறேன், சில நேரங்களில் காலம் கடந்து வருகிறபோது, நல்ல பதிவுகள் கவனத்திற்கொள்ளாமற்போக சந்தர்ப்பங்களுண்டு. இது இரு தரப்பிலும் நிகழலாம். எனவே குறைத்துக்கொண்டு, ஒத்திசைவான நண்பர்களுடன் மட்டுமே முகநூல் நட்பை வைத்துக்கொள்வது இரு தரப்பிற்கும் உதவக்கூடும்.
————————————–