நீதிமன்றத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளனாக கடந்த வாரம் சென்றிருந்தேன். தவறா னத் தகவல்களைத் தெரிவித்து பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவித்தொகையைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு. சம்பந்த ப்பட்ட துறை தமிழ்ப்பெண்மணியிடம் தவறாகப் பெற்றதொகையை திரும்பச்செலுத்தவேண்டுமெனத் தெரிவித்து அவர் அதைச் செலுத்தியும் வருகிறார். பிரச்சினை அரசின் உதவியைப் பெற விண்ணப்பத்தில் உண்மைத்தகவல்களை மறைத்தார் என்பதால் நீதிமன்றத்திற்கு வரவேண்டியிருந்தது. தமக்கு விண்ணப்பத்தை நிரப்ப மொழி தெரியாதெனவும், தமது 18 வயதுமகனைக்கொண்டு நிரப்பியதில் இது நிகழ்ந்துள்ளது எனப் பெண்மணி நீதிமன்றத்தில் தெரிவித்தார் . குற்றம் சுமத்தப்பட்ட பெண்மணி இதுவரை எந்தக்குற்றத்திற்கும் ஆளானவர் அல்லர் என்பதைக் கருத்திற்கொண்டும், அவர் மறை த்தாரெனசொல்லப்பட்ட வருவாய் அவ்வளவு முக்கியமானதல்லவென்றும்., பதினெட்டு வயது மகன் பொறுப்பின்றி விண்ணப்பத்தை நிரப்ப வாய்ப்புண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டு குற்றத்திலிருந்து அப்பெண்மணிட்யை நீதிமன்றம் விடுவித்த து.
ஆனால் இது சுவாரஸ்யமான விடயமல்ல , அன்றைய தினம் வேறொரு வழக்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர் கவனத்தைப் பெற்றது. குற்றவாளி ஒரு ஹாலந்து நாட்டவர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் இருக்கிறார். விசாரனையின் போது சிறைவாசத்திலிருந்த அவரை விலங்கிட்டே அழைத்து வந்தார்கள். அவர் செய்த குற்றம் அல்லது செய்யும் குற்றம் பெரிய நகைக்கடைகள், உயர்ந்த ஆடைக் கடைகள் நட்சத்திர ஓட்டல் கள் இங்கே தங்கி விலையுயர்ந்த நகைகளை வாங்குவது, உயர்ந்த ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அதற்குரிய பணத்தை கடனட்டைகளில் அல்ல காசோலைகளில் செலுத்துவது. இம்மோசடியை பலமுறை செய்து தொடர்ந்து சிறை, விடுதலை என்று காலத்தை கழிக்கிறார்.
உங்களைப்பார்க்கிறபோது குற்றவாளிபொல தெரியவில்லை பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள். எப்படி இக்குற்றங்களை தொடர்ந்து செய்கிறீர்கள் இதிலிருந்து விடுபட நினைத்த தில்லையா ? என்று கேட்ட நீதிபதி அக்குற்றவாளி பற்றி தெரிவித்த செய்திகள் வியப்பூட்டுபவை. பத்துவருடங்களுக்கு முன்புவரை
அவர் ஒரு பத்திரிகயாளர், எழுத்தாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளருங்கூட, பெரிய குடும்பத்து பிள்ளை. இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுககம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர அவளை நம்பி ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன் அந்தப் பெண்மணி வெளியேறுகிறாள். மனம் உடைகிறது, நடுத் தெருவில் விடபட்டார், பழைய ஆடம்பர ர வாழ்க்கையிலிருந்து வெளிவர இயலாமற்போக மேற்கண்ட குற்றங்களில் இறங்குகிறார்.
சரி எதற்காக பிரான்சு ?
பிற ஐரோப்பிய நாடுகளினும் பார்க்க பிரெஞ்சு வங்கிமட்டுமே
எனது சொற்பத் தொகை இருப்பை நம்பியும், எதற்காக
பிரான்சு நாட்டில் கணக்குத் தொடங்குகிரீர்கள் என என்னைப்பற்றியத் தகவல்களை சேகரிக்காமல் கணக்குத் தொடங்க அனுமதி த்தது . ஆயிரம் யூரோவுக்கு மேற்பட்டத் தொகைக்கு இங்கே கடைகளில் பணமாக செலுத்த முடியாது என்ற சட்டம் எனக்குச் சாதகமாக இருக்கிறது. அதிலும் இங்குள்ள பெரிய கடைகளில் கடைக்கு வருபவர்களையெல்லாம் கனவான்களாகப் பார்க்கும் வழக்கமுள்ளது அதிலும் இரண்டாயிரம் மூவாயிரம் என்று காசோலை தருகிறபோது பிரச்சினை எளிதாக முடிகிறது. ஐயாயிரம் பத்தாயிரமென காசோலையை நீட்டியிருந்தா ல் ஒரு வேளை சந்தேகம் வரலாம், எனவே எதுவரை செல்ல லாம் என ஓர் அளவு வைத்திருக்கிறேன். ஒருவகையில் பிரான்சும் என் குற்ற எண்ணிக்கையைப்பெருக்க காரணம். என்னுடைய வக்கீல் இதுபற்றி விரிவாக கோரிக்கை வைப்பார், என்றார். அவருக்காக வாதாடிய வக்கிலும் குற்றவாளி பிரச்சினையை பரிவுடன் அணுகுமாறு வேண்டுகோள் வைத்தார். அரசுதரப்பு வக்கீல் கடுமையாக ஆட்சேபித்து ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடும் கேட்டார். பாதிக்கப்பட்ட வர்களில் ஒரு தமிழர் நகை கடையும் அடக்கம். நீதிமன்றம் மூன்றாண்டு தண்டனை மட்டுமே வழங்கியது. அவர் குற்றத்திற்கு இதுபோன்ற நிறுவன்ங்களும் ஒருவகையில் பொறுப்பு என்ற கருத்தினை தீர்ப்பிடையே கூறினார்.
குற்றவாளிகளின் முகம்.
குற்றவாளிகளெக்கென முகமுண்டா ? தமிழ்ச்சினிமாக்களில் அக்காலத்தில் சிங்கப்பூர் பெல்ட்டும், தூக்கிக் கட்டிய லுங்கியும், அடர்ந்த புருவங்களும் பெரிய கண்களும், உப்பிய கன்னத்தில் மருவும், « இன்னா நைனா ?« jj »என அறிமுகமாவார்கள். நவீன உலகில் அவர்கள் கனவான்கள், பெருங்கனவான்கள். தண்டிக்கபடாதவரை திறமைசாலிகள். பிழைக்கத் தெரிந்தவர்கள் :
இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர்
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்
அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்
காலங் கருதி அவர்பொருள் கையுறின்
மேலோ ராயினும் விலக்கலு முண்டோ (சிலப்பதிகாரம்)
பாவம். நம்பி கெட்டவர்.