2009 ஜனவரி 20 ல் ஒபாமா ஏற்படுத்திய நம்பிக்கையையும் மன நெகிழ்ச்சியையும் பிரெஞ்சுமக்களுக்கு 2017 மே 7 அன்று எம்மானுவெல் மக்ரோன் தந்திருக்கிறார். டிரம்ப்பின் வரவு கண்டு கலங்கிய உள்ளங்களுக்குப் பால் வார் த்ததுபோல பிரெஞ்ச் அதிபர் தேர்தலின் முடிவு அமைந்துள்ளது.
இளைஞர் , 39 வயது. இந்திய ஆட்சிப்பணிக்கு நிகரான பிரான்சு நாட்டின் Ecole Nationale d’Administration வார்ப்பு. தொடக்கத்தில், வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பின்னர், தனியார் நிறுவனத்தில் நிதித்துறை அதிகாரி. இதற்கிடையில் சோஷலிஸ்ட் கட்சியின் மூன்றாண்டுகால உறுப்பினர். தற்போதைய அதிபர் பிரான்சுவா ஹொலாந்துடைய அதிபர் தேர்தலின் போது அவரது குழுவில் அதிபரின் விருப்பத்தில் பேரில் தேர்தல் பணியாற்றுகிறார். ஹொலாந்து 2012 அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதும் அதிபர் அலுவலகத்தில் முக்கிய செயலாளர்களில் ஒருவராக நியமனம், அடுத்து மனுவல் வால்ஸ் என்ற ஹொலாந்து ஆதரவு பிரதமரின் கீழ் நிதி அமைச்சர். ஆரம்பம்முதலே அதிபர் ஹொலாந்தை விரும்பாத சோஷலிஸ்ட் அணியினர் சிலர் அவருடைய அமைச்சரவை அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி அவர் வழிக்காட்டுதலுடன் இயங்க்கிய அமைசரவையிலிருந்து வெளியேறுகின்றனர். நாட்டின் வளர்ச்சிவீதம், கடந்த வலதுசாரி அரசைக் காட்டிலும் அதிகரித்திருந்தது உண்மை, எனினும் ஹொலாந்து அதிபர் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்து நடந்த தீவிரதவாத தாக்குதல்கள் அந்த உண்மையைப் பின்னுக்குத் தள்ளியதோடு, பிரெஞ்சு மக்களின் அபிமானத்தை இழக்கவும் காரணம் ஆயிற்று. இலட்சியக் கனவுகளுடன் அமைச்சரவையில் இடம்பெற்ற எம்மனுவெல் மக்ரோனுக்கு தாம் நினைத்தபடி திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற குறை தவிர, அதிபர் ஹொலாந்தும் சரி, சோஷலிஸ்ட்டுக் கட்சியும் இரண்டுமே மூழ்கும் கப்பல், பிரான்சு நாட்டு வருங்கால அரசியல் பாரம்பர்ய கட்சிகளுக்குரியதல்ல, தவிர மக்கள் மாற்றத்தை விருப்புகிறார்கள் என்பதையெல்லாம் சரியாகக் கணித்திருந்த மக்ரோன் நிதி அமைச்சர் பதவியை உதறிவிட்டு வெளியேறுகிறார். « France en Marche » என்ற கட்சி சார்பற்ற புதிய இயக்கத்தைத் தொடங்குகிறார் (2016). சோசலிஸ்டு கட்சியில் இருந்திருந்தால், உட்கட்சித் தேர்தலில் தோற்று அதிபர் வேட்பாளர் ஆகும் கனவு ஆரம்பத்திலேயே கரைந்திருக்கும். மக்ரோனின் புதிய இயக்கத்திற்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது. அதிட்டமும் இவருக்குச் சாதகமாக அமைந்தது, எப்படியும் ஜெயித்துவிடுவார் என நம்பப்பட்ட முக்கிய வலதுசாரி கட்சியின் வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, முதற் சுற்றில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட, இரண்டாம் சுற்றில் இவருக்குப் போட்டி வேட்பாளராக களத்தில் நின்றவர் Front National கட்சியின் மரின் லெப்பென் என்ற பெண்மணி. பெரும்பாலான பிரெஞ்சுக்காரர்களுக்கு இனவாதப்பெண்மணியிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற மக்ரோன் தேவைபட்டார். இங்கும் மக்ரோனைத் தோற்கடிக்க, மரின் லெப்பெனுக்குச் சாதகமாக ரஷ்ய வத ந்திகள் மூட்டை மூட்டையாக வந்திறங்கின. ஆனால் பிரெஞ்சுமக்கள் ஏமாறவில்லை. மக்ரோன் 66,1% வாக்கும், மரின் லெப்பென் 34,9 % வாக்கும் பெற்றிருக்கிறார்கள். இனி மக்ரோன் செயல்பட அல்லது அவரது வாக்குறுதிகளை நிறைவேற்ற அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்(Assemblée Nationale) தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் (மொத்த உறுப்பினர்கள் 577). தவறினால் கொள்கைகளோடு ஒத்துப் போகிற பிறகட்சி உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மூன்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர் சமுத்திரத்தில் ஒரு துளியாய்க் கிடந்த இளைஞரால் இன்று உலகம் அறிந்த மனிராக எழுந்திருக்க முடிந்ததென்றால், இதுவும் முடியும் என்பதுதான் என்னைப்போன்றோரின் நம்பிக்கை.
——————————————————-
Great on the ground report. Thanks for sharing !!