(எனது நாவல்கள் அனைத்துமே சிறுகதைகளாக முதலில் வெளிவந்தவை
பார்த்திபேந்திரன் காதலி (ஆனந்த விகடன்) –நீலக்கடல்
நிலா அழகா இருக்கில்லே ? (நிலா இதழ்) – மாத்தா ஹரி
புஸுபுஸுவென்று ஒரு நாய்க்குட்டி (திண்ணை இதழ்) – காஃப்காவின் நாய்க்குட்டி)
அருகிலிருந்த தேவாலயத்தின் மணி இரவின் நிசப்த த்தைக் குலைத்தது. விழித்துக்கொண்டேன். ஓசையை எண்ணத் தவறியிருப்பினும் பன்னிரண்டு முறை அடித்திருக்கவேண்டும். இந்த எண்ணிக்கையில் தவறு இருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல. நான் விழித்துக்கொண்டதும், வியர்வையில் நனைந்திருந்த தும் இங்கே முக்கியம், நிஜம்.
இந்த அவஸ்தை எனக்குக் கடந்த இரண்டு மாதங்களாகவே இருக்கிறது. சொல்லிவைத்தாற்போல், நள்ளிரவில் சர்ச்சின் மணியோசையோடு புதைந்து பூச்சாண்டி காட்டுகிற அவஸ்தை. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாய்ப் போராடிக் களைத்து, இறுதியில் சித்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிற மரண அவஸ்தை.
எலிஸா என்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பிரெஞ்சு நண்பி. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள். அவளுக்கு நான்படும் அவஸ்தையின் பரிமாணம் தெரியாது இரண்டு கைகளையும் பிணைத்து, மடக்கியிருக்கும் கால்களுக்கிடையில் துருத்திக்கொண்டு கம்பளிப்போர்வைக்குள் அடங்கிக் கிடந்தாள்.
போர்வையை ஒதுக்கிவிட்டு, இரவ உடையில் உடலை மறைத்து, பாதங்களில் ஸ்லிப்பரைச் சூடி சபதமின்றி எலிஸாவின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்ற அதீத கவனத்துடன், கதவினைப் பின்புறம் தள்ளிச் சாத்திவிட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தேன்.
காத்திருக்கும் என் கம்ப்யூட்டரை கண்டதும் பெருமூச்சு. எதிரிலிருந்த நாற்காலியில் என்னை இருத்திக்கொண்டு, மின்சாரத்தை இட்டு உயிர்ப்பித்தேன். மானிட்டர் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டேன். தமிழ் சாஃப்ட்வேரை உயிர்ப்பிக்கும்வரை பொறுமையில்லை. விரல்கள் கீ போர்டைச் சீண்ட ஆரம்பித்து தடதட வென்றன.
கற்பனையும் நிஜமும் வார்த்தைகளாக உயிர்பெற, விரல்கள் அவற்றுக்கு வடிவம்கொடுக்கப் பரபரபரத்தன. எழுத்தாளன் மனத்துடன் கண்தை மட்டுமின்றி காணாததையும் இறக்கிவைக்க ஆரம்பித்தேன். இல்லையெனில் எந்த நேரமும் தலைவெடித்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பெரும்பாலான ஐரோப்பியப் பெண்களைபோலவே எலிஸாவும் புகைபிடிப்பவள். குறிப்பாகஅவள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் புகை வருவதைக்கண்டு அருவருப்பதுண்டு. ஆனால் அதனை அவளிடம் சொல்ல எனக்கு வழக்கம்போலத் தயக்கம், காரணம் நானும் புகைபிடிப்பவன், தவிர அவள் பெண்கள் விடுதலைப்பற்றி அதிக விவாதிக்கும் பெண்.
எலிஸாவிற்கு எல்லாவற்றிலும் சுதந்திரம் வேண்டும், செக்ஸ் உட்பட. விமலாவிற்கு நேர் எதிர். விமலாவிற்குப் பிடிக்காத தெல்லாம் எலிஸாவிற்குப் பிடிக்கும். எனக்கு எலிஸாவைப் பிடித்து, விமலாவைப்பிடிக்காமற் போனது இப்படித்தான்.
விமலா…
அம்மி மிதித்து அருந்ததிக் காட்டி, ‘மாங்கல்யம் தந்து நானே’விற்கு ப் பிறகு ‘ராமனிருக்கும் இடம் அய்யோத்தி என’ பிரான்சு நாட்டிற்கு வந்த என்னுடைய சீதா பிராட்டி, தாலிகட்டிய பந்தம். ‘பின் தூங்கி முன் எழுந்து ‘ கேட்டிருந்தால் எலிஸா வீடுவரைக் கூடையில் என்னைச் சுமந்து செல்ல தயாரகவிருந்த இருபத்து நாலு காரட் பத்தினிப்பெண்.
வழக்கம்போல தலையைக் காட்டிவிட்டு வந்துவிடுவது என்றுதான் இந்தியாவிற்கு வந்திருந்தேன். அப்பாவிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி, அம்மாவை மூக்கு சிந்தவைக்க ‘எலிஸா’ வைத் தற்காலிகமாக மறக்க நேரிட்டது. விமலாவிடம் அம்மாவின் எதிர்பார்ப்பும், அவள் தகப்பனிடம் அப்பாவின் எதிர்பார்ப்புமிருக்க, என்னுடைய எதிர்பார்ப்பு பற்றிக் கவலைப் படாமல் அவசரத்தில் போட்ட மூன்று முடிச்சு. கோழையா ஒரு புழுவைப்போல பெற்றோருக்கு வளைந்து, அவளைக் கைப்பற்றி பிரான்சுக்கு வந்த பிறகுதான் எனக்கும் விமலாவிற்குமுள்ள இடைவெளி இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் உள்ள தூரமென புரிந்தது.
எலிஸா, எங்கள் இருவரையும் ஒட்டவைக்க முயற்சி எடுத்தது என்னவோ உண்மை. மஞ்சள் குங்குமத்தைவிட லிப்ஸ்டிக் பர்ஃப்யூம்களில் எனக்கிருந்த கூடுதல் இச்சையில் விமலா வேண்டாதவளானாள். பிறகு ? பிறகென்ன ஒரு நாள் போயே போய்விட்டாள். மணெண்னெய் இன்றி, ஸ்டவ் விபத்தின்றி, அவளை முடித்துவிட்டேன். அந்நியர் விவகாரங்கள் என்றால் அலட்சியத்தோடு கையாளும் போலிஸாரின் விசாரணை, நீதிமன்றம், தீர்ப்பு எல்லாமே நான் நினைத்தபடி அமைந்தது. எலிஸா கூட ஆரம்பத்தில் சந்தேகப் பட்டு இப்போது நான் அப்பாவி என்கிறாள்.
இரண்டு மாதத்திற்கு முன்புவரை நிமதியாகத்தானிருந்தேன். எப்போது, எங்கே என்பதில் குழப்பமிருக்கிறது. ஆனால் விமலாவால் துரத்தப்படுகிறேன். ஓட முடியாமல் களைத்திருக்கிறேன். இந்த பயம் அங்கே இங்கேயென்று படுக்கைவரை வந்துவிட்டது.
அள்தான் எழுந்துவிட்டிருந்தாள். இரண்டு நாட்களாக க் காய்ச்சல் வேறு, தொடர்ந்து இருமுவது கேட்ட து. சில விநாடிகளின் மௌன ஓட்டத்திற்குப் பிறகு, அந்தக் காலடி ஓசை. எப்போதும் பதிய மறுக்கும் பாதங்கள். காற்றுக்குக் கூட துன்பம் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அக்கறைகொண்ட நடை. அது ஓசையல்ல, முணுமுணுப்பு. விமலாவைப்போலவே, என் வெறுப்புக்கு ஆளாகும் காலடிகள். திடீரென்று நடக்கும் சப்தம் அறுபட்டது. சிலநொடிகள் அமைதிக்குப் பிறகு கதவு திறக்கிறது, பருத்தியியினால் ஆன இரவாடையில் விமலா.
« விமலா.. ! » அதிர்ச்சியில் மேல் அண்னத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது. அவள் மெல்ல நெருங்கினாள்.
« என்ன பரத் மறுபடியும் பிரமையா ? நான் விமலா இல்லை. எலிஸா. நாளைக்கு முதல்வேலையா சைக்கியாஸ்ட்ரிட்டைப் போய்ப் பார்க்கறீங்க. »
என் தோளில் சாய்ந்து, தனது மெல்லிய கரங்களை என் கழுத்தில் கொண்டுபோய்வருடி, மெள்ளக் குனிந்து தன் அதரங்களை என் கழுத்தில் ஒற்றியெடுத்தாள். நான் கற்பனையில் விமலாவை நிறுத்திக் கலவரப்பட்டேன். .
« என்ன இப்படி வேர்க்குது ? » என்றவள் தன் தலையை அவளது மார்பில் இறக்கிக்கொண்டாள். நான் எழுதியிருந்ததைப் படிக்க ஆரம்பித்தாள். »
எங்களிடையே நிசப்தம் ஆக்ரமித்துக்கொண்டிருந்த து. மேசையிலிருந்த அலாரம் தேவையில்லாமல் அலற, அவள் என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டாள்.
« எனக்குத் தண்ணீர் வேணும். தாகமாயிருக்கு » என்றவள், சமயலறைக்குச் சென்றாள். அடுத்த சில விநாடிகளில், தண்ணீர் பாட்டிலைத் திறப்பதும் பின்னர் குடிக்கின்ற ஓசையும் தெளிவாக க் கேட்டது.
« பரத் சிகரட் தீர்ந்துபோச்சு வாங்கி வாயேன். »
« இந்த நேரத்திலா ? » என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தாலும், என மன அழுத்தத்திற்கும் உடற்முழுக்கத்திற்கும் எனக்கும் சிகரெட்டும் ‘சில்’ என்ற வெளிக்காற்றும்தேவைப்பட்டன. லெதர் ஜாக்கெட்டை அணிந்து தலைமுடியைக் கையால் ஒதுக்கிக்கொண்டு வெளியில் வந்தேன்.
வீதி வெறிச்சோடியிருந்தது. சாலயோர மரங்க்களின் பயமுறுத்தலை யொதுக்க, மேகத்திலிருந்து வேளிப்பட்டு நிலா முழுசாக வெள்ளை வெளேரென்று புத்தம் புதுசாக.– இன்று பௌர்ணமியோ ? நடைபாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. தலையை உயர்த்தி என்னைப் பார்த்தபின்னர் இறக்கிக் கொண்டது, நிலவொளியில் மின்னும் கண்களில், நீலத்தில் தீ ஜுவாலை.
மீண்டும் அந்த ஓசை, பின் தொடர்வதுபோன்ற காலடிஓசை. எனக்குப் பழக்கப்பட்ட என்னைத் துரத்தும், நான் அறிந்த விமலாவின் காலடிகள். ஏதோ ஒரு திட்டத்தோடு நிராயுதபாணியாக இருக்கும் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து நெருங்கும் காலடிகள். குளிர்ந்த காற்று, அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டில் இறங்கி முதுதுத் தண்டில் இறங்க உடலொருமுறை சிலிர்ந்து அடங்கியது.
« நிலா அழகாயிருக்கில்லே ? » என் தோளில் குளிர் காற்றோடு கலந்த வார்த்தைகளின் ஸ்பரிஸம். திரும்பிப் பார்க்கிறேன்.
பனியில் நனைந்த ஒரு பெண்ணுருவம். முகம், விமலாவினுடையது தான் சந்தேகமில்லை.
« விமலா நீயா ? »
«நானேதான் பரத் ! இங்க பாருங்க நீங்க கட்டின தாலியில் மஞ்சளின் ஈரங்கூட இன்னும் காயலை. என்னோட உதட்டைப்பாருங்க, உங்களுக்குப் பிடித்த எலிஸாவின் உதடுகள்போல இருக்க பச்சை இரத்தத்தில் தோய்ந்துவச்சிருக்கேன்.. பரத் கிட்ட வாங்க.. »
« இல்லை விமலா, என்னை விட்டுடு. ஏதோ நடந்துபோச்சு »
« அதை த்தான் நீங்க சரியா புரிஞ்சுக்கணும். வாவிலும் சாவிலும் என்னைப்போலப் பெண்ணுக்கு கணவன் துணையில்லாம இல்லாம எப்படி ? மாட்டேன்னு சொல்லிடாதீங்க. »
அவள் என்னை நெருங்கியிருந்தாள். அபோது தான் அதனைக் கவனித்தேன். அதிர்ச்சியில் உறைந்து நிற்க, நிலவொளியில் பளபளவென்று மின்னிய அந்தக் கத்தியை என் வயிற்றில் மெள்ளச் இறக்கினாள். நான் துவண்டு சரியத் தொடங்கினேன்.
« என்ன இன்னுமா எழுதற ? நான் சிகரெட் கேட்டேனே என்ன ஆச்சு ? »
« எலிஸாவின் குரல் கேட்டு நான் எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டுத் திருப்பினேன்.
« மன்னிச்சுக்க டியர்.. கதையிருந்த கவனத்துல உன்னை மறந்துட்டேன் »
அவளுக்குச் சிகரெட் இல்லாம எதுவும் நடக்காது. இந்த நேரத்தில் கடைகள் ஏது ? ஏதாவதொரு தானியங்கி எந்திரத்த்தை த் தேடியாகனும் அல்லது ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகனும். லெதர் ஜாக்கெட்டை அவசரம் அவசரமாகப் போட்டுக்கொண்டு வெளிக்கதவைக் கவனமாகச் சாத்திவிட்டு இரண்டு இரண்டு படிகளாகத் தாவி இறங்கி வீதியில் கால்வைத்தேன்.
வீதி வெறிச்சோடியிருந்த து. சாலயோர மரங்களின் பயமுறுத்தலை யொதுக்க, மேகத்திலிருந்து வேளிப்பட்டு நிலா முழுசாக வெள்ளை வெளேரென்று. இன்று பௌர்ணமியோ ? நடைபாதையில் சாம்பல் நிறத்தில் ஒரு பூனை. தலையை உயர்த்தி என்னைப் பார்த்தபின்னர் இறக்கிக் கொண்டது, நிலவொளியில் மின்னும் கண்களில், நீலத்தில் தீ ஜுவாலை….
(மாத்தா ஹரி நாவலின் மூலக் கதை. இச்சிறுகதை நிலா இதழில் 2002ல் வெளியாயிற்று. )