பிரான்சு நாடும் அதிபர் தேர்தலும்
பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முதற் சுற்று முடிவு தெரிந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்டு, மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் வேட்பாளர்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். இரண்டாவது சுற்றில் தேர்வாகி இருப்பவர்கள் ஒருவர் எம்மானுவல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென். இம்முடிவு மற்றொரு உண்மையையும் தெரிவித்துள்ளது, தற்போதைக்கு இட து சாரி வேட்பாளர்கள் பிரெஞ்சு அரசியலுக்கு வேண்டாம் என்பது தான் அது, பிரெஞ்சு வாக்காளர்கள் அவர்களைக் கூடாதென நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
முதல் சுற்றில் பதினோரு வேட்பாளர்கள். அவர்களில் முதல் ஐந்து இட த்தைப் பெற்ற முக்கியமானவர்கள் 1. எம்மானுவெல் மக்ரோன்2. மரின் லெப்பென் 3. ஃபிரான்சுவா ஃபிய்யோன் 4. ழான் லுயிக் மெலான்ஷோன் 5. பெனுவாஅமோன்
பிரான்சுவா பிய்யோன்(François Fillon)
கடந்த காலத்தில் RPR , இன்றையUMP மொத்தத்தில் தெகோல் கட்சியென (Charles de Gaulle) புதுச்சேரி முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் அபிமானத்துடன்அழைக்கும் கட்சியின் வேட்பாளர். உட்கட்சி தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர்களான முன்னாள் அதிபர் நிக்கோலா சர்க்கோசியையும், கருத்துக் கணிப்பில் அதிபராக வரக்கூடும் என நம்ப ப்பட்ட மிதவாத வலதுசாரியும், முன்னாள் பிரதமருமான அலென் ழுப்பேயையும் வென்று, கட்சியின் ஆஸ்தான வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். இவர் தேர்வுக்கு தீவிர கிறித்துவ மதவாதிகள் பின்புலத்தில் இருந்த தாக நம்பப்பட்டது. உட்கட்சி தேர்தலில் வென்றபின்பு ஃபிரான்சுவா ஃபிய்யோன் அதிபராவது உறுதி என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன் பின்பு புலனாய்வு பத்திரிகைகள் அவர் வீட்டுக் குப்பையைக் கிளறியதில் எது வெளிவருமோ அதுவெளியில் வந்தது.
‘Affaire Penelope Fillon’ அல்லது பெனெலோப் ஊழல் :
திருமதி பெனெலோப், திரு ஃபிய்யோன் மனைவி, வழக்கறிஞர். குற்றச்சாட்டின்படி 1998 -2007 அடுத்து 2012 இந்த ஆண்டுகளில் வேட்பாளர் ஃபிய்யோன் தமது மனைவியை மட்டுமல்ல தமது பிள்ளைகளையும் தமது அலுவலர்களாக நியமித்து மனைவிக்கு 813440 யூரோவை ஊதியமா க க் கொடுத்தார் என்பது முதற் குற்றசாட்டு, அடுத்து ‘Revue des deux monde’ பிரதியின் ஆலோசகர் என்ற வகையில் 100 000 என்ற தொகையை பெனெலோப் பெற்றார் என்பது இரண்டாவது குற்றசாட்டு, இத்தம்பதிகளின் பிள்ளைகளும் 2005-2007ல் அவ்வாறான அலுவல்களுக்கு 84000 யூரோக்களை ஊதியமாக பெற்றனர் என்ற குற்றசாட்டுமுண்டு. மேற்கண்டவை முதன்மைக் குற்றசாட்டுகள். இவற்றைத் தவிர வேறு சில குற்றச்சாட்டுகளும் உள்ளன.பாரளுமன்ற உறுப்பினர் தமது அலுவல்களைக் கவனிக்க உறவினர்களை அரசு செலவில் நியமித்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இப்பிரச்சினையில் உண்மையில் அவர்கள் அப்பணியைச் செய்தார்களா ? என்பதும் ஊதியத் தொகையின் அளவும் பிரசினைக்கு வித்திட்டுள்ளன. இது தவிர ஃபிய்யோன் பரிசாகப்பெற்ற பொருட்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடகட்சி அதிபர்வேட்பாளர் தேர்வின்போது தம்மை அப்பழுக்கற்ற வேட்பாளர் எனகூறிகொண்டவர், சக வேட்பாளரான சர்க்கோசியை (அவர் மீதும் வழக்கு, விசாரணை அளவில் உள்ளது) கடுமையாக விமர்சித்த மனிதர், பிரச்சினை வெளிவந்த பிறகு சட்டப்படி அதில் எந்த த் தவறுமில்லை என்றார். அவரது கட்சியிலேயே ஒரு சாரார் அவரை விலக்கிக்கொண்டு மாற்று வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்றார்கள். ஃபிய்யோன் விலகமாட்டேன் என அடம் பிடித்தார். அவருக்கு எதிராக இருப்பவர்களைச் சமாதானப்படுத்தினார், கட்சியின் தீவிர அபிமானிகளின் வாக்கும், தீவிர கிறித்துவ மதவாதிகளின் வாக்கும், ஆளும் கட்சிமீதான கோபமும் தம்மைக் காப்பாற்றிவிடுமென நம்பினார். ஆனால் முதல் சுற்று முடிவு அவரை ஏமாற்றிவிட்டது. நாட்டின் முதன்மையான கட்சியின் வேட்பாளர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு இரண்டாம் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பெனுவா அமோன்(Benoit Hamon)
தற்போதைய ஆளுங்கட்சியான மிதவாத இடதுசாரிகள் கட்சியின் சார்பில் பெனுவா ஹமோன் முதல் சுற்றுக்குத் தேர்வானார். கடந்த அதிபர் தேர்தலில் இருந்தே சோஷலிஸ்டுகளின் மூத்த தலைவர்களிடையே பிளவு இருந்த து. 2007லும், 2012லும் தீவிர சோஷலிஸ்டு அபிமானிகள் உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினார்கள். உட்கட்சி தேர்தல் முடிந்த தும், வெற்றிபெற்ற தங்கட் கட்சி எதிரணி வேட்பாளரை, கட்சியின் நலனை முன்னிட்டு அதிபர் தேர்வில் ஆதரிப்பது என்கிற சடங்கு தொடரும். கடந்த 2012 அதிபர் தேர்தலில் ஹொலாந்து எனும் மிதவாத சோஷலிஸ்டு வென்றார். உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவருக்கு எதிராகப்போட்டியிட்ட மர்த்தின் ஒப்ரி போன்ற தீவிர சோஷலிஸ்டை வென்று பொது வேட்பாளராக களத்தில் இறங்கினார். வழக்கம்போல சோஷலிஸ்டுகள் தங்கள் வேட்பாளரை ஒற்றுமையாக ஆதரித்தனர். ஹொலாந்து அதிபரானார். தமது கட்சியின் எதிரணியினரை அவர் ஆசிபெற்ற அமைச்சரவையில் அமைச்சர்களாக வைத்து பிரச்சினையை முடித்துக்கொள்ள நினைத்தார். அமைரவையில் பதவிக்காலம் நெருங்க நெருங்க அதிபர் ஹொலாந்தும், அவருடைய அமைச்சரவையும் மக்கள் செல்வாக்கை இழந்துகொண்டிருந்தது மூழ்கும் கப்பல் எனத் தெரிந்து, ஹொலாந்து ஒரு வலதுசாரிபோல நடந்துகொள்கிறார் என்ற குற்றசாட்டினை ஒரு சாக்காகவைத்து, அதிபரின் எதிரணியினர் அமைசரவையிலிருந்து, (பழைய பகையும் காரணம்) ஒவ்வொருவராக விலகிக் கொண்டனர், அவர்களில் ஒருவர்தான் பெனுவா அமொன்.
உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் ஆதரவினால், அதிபர்ஹொலாந்தின் அமைச்சரவை பிரதமராக இருந்த மனுவல் வால்ஸ் என்பவரைத் தோற்கடித்து வேட்பாளராக பெனுவா அமோனால் முடிந்த து. எனினும் முதற்சுற்றுத் தேர்வில் ஹொலாந்து ஆதரவாளர்கள் இவரை ஆதரிக்காததும், முன்னாள் சோஷலிஸ்டும், கம்யூனிஸ்டுகள் ஆதரவுபெற்ற தீவிர இடதுசாரி மெலான்ஷோன் இட து சாரி வாக்குகளைப் பங்கிட்டுக் கொண்ட தும் இவருடைய மிக மோசமான தோல்விக்குக் காரணம். ஆளுங்கட்சியின் வேட்பாளர் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறாதது மட்டுமல்ல நான்காம் இட த்திற்குத் தள்ளப்பட்ட து மிகப்பெரிய கொடுமை.
எம்மானுவெல் மக்ரோன்(Emmanuel Macron)
39 வயது இளைஞர். அதிக வாக்குகள் பெற்று முதற் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள வேட்பாளர். 2006 -2009 வரை ஆளும் சோஷலிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். நிர்வாகத்துறையில் உயர் கல்வி முடித்தவர். திடீரென்று 2012ல் அதிபர் ஹொலாந்து தமதுஅலுவலக முதன்மைசெயலராக நியமித்தார். அதன் பின்னர் அவரது செயல் திறனின் அடிப்படையில் நாட்டின் முக்கியமான நிதி அமைச்சர் பதவியை 2014ல் வழங்கினார். சக அமைச்சர்களுக்கு இவர் மீது பொறாமையுங்கூட. தமது செல்வாக்கு சரிந்திருக்கும் உண்மையை உணர்ந்த ஹொலாந்து மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவிக்க நேரம் பார்த்து இவரும் விலகிக்கொண்டு அதிபர் தேர்தலுக்குக் கட்சிகள் சாராத வேட்பாளராகத் தம்மை அறிவித்து நாடெங்கும் ஆதரவு திரட்டினார். வலது சாரிகள், இடது சாரிகள், கல்விமான்கள், வல்லுனர்கள், கலைஞர்கள் ஆதரவுகள் கிடைத்தன. ஹொலாந்து ஆதரவு பெற்ற பிரதமர் வால்ஸ் உட்கட்சி தேர்தலில் தமக்குரிய வாய்ப்பின பெனுவா அமோனிடம் பறிகொடுக்க, இவரோ கட்சி சார்பின்றி போட்டியிட்டு பிரான்சு நாட்டின் அடுத்த அதிபராக வரகூடிய வாய்ப்புள்ள முதல் வேட்பாளர்.
மரின் லெப்பென் (Marine Le pen)
தீவிர வலது சாரி. இனவாதி. வாரிசு அரசியலின் பிரெஞ்சு உதாரணம். அப்பா jean Marie Lepen பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது அபராதம் செலுத்தும் நபர். மரின் லெப்பென் தந்தைக்குத் தப்பாத வாரிசு. டொனால் ட்ரம்ப்பின் பெண்வடிவம். பாரம்பர்ய வலதுசாரிகளின் வீழ்ச்சி, பாமர மக்களின் செல்வாக்கு, தேசியவாதம், இனவாதம், பயங்கரவா த த்திற்கு எதிரான நட வடிக்கைகள் என்று அறிவிக்கும் அதிரடியான கொள்கைகள் இவரை முன்னிறுத்துகின்றன. கருத்துக் கணிப்பின்படி இரண்டாவது சுற்று தகுதி த் தேர்வில் முதலிடம் பெறுவார் என நம்பப் பட்ட து. மக்ரோன் இவரைப் பின்னுக்குத தள்ளி முதலிட த்தில் இருக்கிறார். 2002 அதிபர் தேர்தலில் இவருடைய தந்தை ழான் மரி லெப்பென் இவரைப்போலவே இரண்டாம் இட த்தைப் பெற்றார். அவருக்கு எதிராக நின்றவர் இன்றைய ஃபிய்யோன் கட்சியைச்சேர்ந்த சிராக். இனவாத கட்சி பிரான்சு அதிபராக வந்துவிடக்கூடா தென கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு சிராக்கிற்கு ஆதரவளிக்க ழான் மரி லெப்பென் தோற்றார். தற்போதும் இடதுசாரிகளைக் காட்டிலும் வலது சாரிகள் எம்மானுவெல் மக்ரோனுக்கு ஆதரவை பகிரங்கமாக த் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அபிமானிகள் எந்த அளவிற்கு மரின் லெப்பெனை எதிர்த்து வாக்களிப்பார்களெனத் தெரியவில்லை. மரின் லெப்பென் தோற்கடிக்கப்படவேண்டும் என்பது தான் பெரும்பான்மையோர் ஆசை. பிரான்சு நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது. இன்னொரு ட்ரம்ப் உருவாகிடக் கூடாது என்பதுதான் எல்லோருடைய கனவும்.
—————————————————————————–
Very good.political analysis