விலைபோகும் மானம் : சென்னை முதல் பாரீஸ்வரை
ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படுபவைகளை இனி பணநாயக நாடுகள் என்று அழப்பதுதான் முறை. இன்றைக்குப் பணம்தான் வேட்பாளரைத் தீர்மானிக்கிறது, வாக்குகளைத் தீர்மானிக்கிறது, வெற்றியைத் தீர்மானிக்கிறது முடிவில் ஆட்சியையும் ஆள்பவரையும் தீர்மானிக்கிறது. மக்கள் வெல்வதில்லை, பணம்தான் வெல்கிறது. எதையும் பணம் தீர்மானிப்பதுபோல ஜனநாயகத்தையும் பணமே தீர்மானிக்கிறது. ஆர்கே நாகர் இடைத்தேர்தல் ஓர் உதாரணம். பிறநாடுகளில் பணம் இலைமறை காயாக அல்லது, பிறருக்குத் தெரியவந்தால் தப்பு, என்ற நிலைபாட்டுடன் நாகரீகமாக வேடமிட்டு மனிதர்களைக் கவர்கிறதெனில், நம்மிடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தாலும் பரவாயில்லை என்பதுபோல, சாலை நடுவே, ஊரறிய, நாடறிய எதைக்குறித்தும், எவர் குறித்தும் கவலைப்படாமல் பகிரங்கமாகக் குத்தாட்டம் போடுகிறது. அண்மைக்காலத் தமிழகச் சம்பவங்கள் தெளிவானச் சாட்சியங்கள்.
மானம் எனும் உணர்வு எல்லா மொழியிலும், எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் அவரவர் சமயம், மரபு, பண்பாடு, பழக்கவழக்கங்கள், சமூகப்படிநிலைகள், கல்வி, பணம், வயது சார்ந்து இருக்கவே செய்கிறது. ‘அப்பாவிகளைக் கொல்வது’ வெட்க கேடானது எனப் பயங்கரவாதிகளை இடித்துரைக்கும் அரசுகள், ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொல்லும் வெட்கக் கேடான வரலாற்றைத் தொடர்ந்து வாசிக்கிறோம். « பிச்சை எடுக்க வெட்கமாயில்லை, உழைத்து சாப்பிட என்ன கேடு ? » எனக்கேட்பவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்ததும், « கையெழுத்து சும்மாவராது, வீட்டில் போய் அம்மாவை பாரு » என்கிறான்.
கூச்சம், வெட்கம், மானம், தலை குனிவு, பழிச்சொல், அவமானம் அனைத்துமே பரிமான அளவில் வேறுபடினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர் வாழ்க்கையில் நேற்றைய பொருளில்தான் இன்றும் இச்சொற்கள் பொருள்கொள்ளப்படுகின்றவனவா ? என்பதுதான் இன்றைக்கு நம்முன்னே உள்ள கேள்வி.
தமிழ் இலக்கியமும் மானமும் :
« பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின »தாக வாழ்க்கை இருக்கவேண்டும் என்கிற அறத்தை இல்லறவாழ்க்கைக்கும் வற்புறுத்தும் வள்ளுவன், பொருட்பாலில் பிற்சேர்க்கையாக « மானம் » என்ற அத்தியாயத்தை எதற்காக இணைக்கவேண்டும் ? அறங்களை பகுக்க அறிந்தவனுக்கு, நியதிகளையும் வாழ்க்கைக் கூறுகளையும் இனம் பிரித்து கையாளத்தெரிந்த வள்ளுவனுக்கு, இனி வருங்காலத்தில் மானம் பொருளோடு பிணைக்கபட்டதென்கிற தீர்க்க தரிசனமும் தெள்ளத் தெளிவாக இருந்துள்ளது. காரணம் எதுவாயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே « மானம் » என்ற பண்பின் அவசியம் கருதி அதற்கொரு அத்தியாயத்தையும் பத்து குறளையும் ஒதுக்கினான், வள்ளுவனின் உயர்மக்கள் « இளிவரின் வாழாத மானம் உடையார் ».
தமக்கு ஓர் இழிவு வந்தபின் வாழக்கூடாது எனத் தீர்மானித்து உயிரை விடுதல் என்ற பண்பு உலகமெங்கும் இருக்கின்றது. இன்றும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு அதுவே முக்கிய காரணம். புறநானூற்றில் : «சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர்கூற, மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென் யான் » என ஒரு தாய் சூளுரைப்பது, பழிக்கு அஞ்சியே. சிலப்பதிகார கண்ணகிக்கு கணவன் கொலையுண்டதைக் காட்டிலும் அவன் கள்வனென பழியுற்றது அவமானம். « காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’- என வினவுகிறாள் அவள். முதலாம் நெடுஞ்செழியன் இன்றிருந்தால் ஐந்து லட்சமோ, பத்துலட்சமோ கண்ணகிக்குக் கொடுத்து சமாதானம் செய்திருப்பான். பிழைக்கத்தெரியாத நெடுஞ்செழியினும் அவன் துணைவியும் வழக்கம்போல பிழைக்கு அஞ்சி உயிரை விடுகிறார்கள். மகாபாரதத்தில் கர்ணன் தேர்ப்பாகனால் எடுத்து வளர்க்கப்பட் டது அவமானமல்ல, பலர் அறிய அந்த உண்மைச் சொல்லப்படுவது அவமானம். துரியோதனன் சபைதன்னில் விழுந்தது மானப்பிரச்சினை அல்ல, ஆனால் திரௌபதி அவனைப்பார்த்து சிரித்தது, வெட்க க்கேடானது. « அந்த ஏந்திழையாளும் எனைத் சிரித்தாளிதை எண்ணுவாய் » என்று வெப்பமான வார்த்தைகளில் அவன் பட்ட அவமானத்தை வெளிப்படுத்துகிறான். தொடர்ந்து பாஞ்சாலியை சபைநடுவே நிறுத்தி நிர்வாணப்படுத்த முயன்றதும், அதன் உச்சமாக பாரதப்போர் நடந்தேறியதும் காவிய உண்மை. மானத்தின் இழப்பிற்கு தற்கொலைதான் முடிவு என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்ட ஒரு சமூக அறம். இன்று அம்மரபு, சமூகத்தைச் சார்ந்திராமல், சமூகத்தின் பழிக்கு அஞ்சாமல் தனிமனிதன் தனது நெறி சார்ந்து மனத் திட்பம் சார்ந்து ஒழுகும் அறமாக பரிணாமம் பெற்றுள்ளது. ந்நிலையில் அவமானம் என்பதென்ன ? எதை அவமானமாக எடுத்துக்கொள்வது, அவமானமாக ஒன்றைக் கருதும் மனநிலை அனைவருக்கும் பொதுவானதாக எப்படி இல்லாமற் போனது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேவை. அவமானத்திற்குரிய செயலை செய்துவிட்டேன் அல்லது என்னைச் சேர்ந்தோர் எனக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டார்கள் என்றொருவன் எண்ணி வருந்துவது அவமானம் தரும் அனுபவம். என்றாலும் இந்த அவமானம் படிப்படியாக தனது பொருளை இழந்து வருவது கண்கூடு.
சங்க காலத்தில் அறம் அல்லாதவற்றைத் தவறுதலாகச் செய்து, பின்னர் செய்தவனே அக்குற்றத்தை அவமானாக க் கருதும்போக்கு இருந்தது பின்னர் அது
ஓர் ஆணோ பெண்ணோ விரும்பியோ விரும்பாமலோ தனது நலனை முன்னிட்டோ, தன்னைச் சார்ந்தோர் நலன் கருதியோ தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில், பெரும்பாலோர் (சட்டங்களோ, சமயமோ, நீதியோ என்ன சொல்கிறதென்பது இங்கு முக்கியமல்ல) நம்பும் அறத்திற்கு மாறாக ஒரு காரியத்தைச் செய்தாலுங்கூட அந்த உண்மையை சமூகத்தின் பெரும்பாலோர் அறியாதவரை அவமானமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. « ஏன் இப்படி கத்திப் பேசறீங்க, அக்கம்பக்கம் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க ? »,« மரவள்ளி கிழங்குக்காரி ஒருத்தி சந்தியடியில் வந்துகொண்டிருந்தாள். ‘அவளுக்குத் தெரியவா போகிறது’ என்று நந்தாவில் தோட்ட த்து மதகடியின் பக்கலில் குந்தினார் (அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்)» என்பதெல்லாம் பிறருக்குத் தெரியாதவரை அவமானமில்லை என்ற விதியின் பாற்பட்டதுதான். எனவே பிறர் என்ற பெரும்பான்மையினருக்குத் தெரியாமல், புகைபிடிக்கலாம், மது அருந்தலாம், கள்ள உறவு வைத்திருக்கலாம் தவறில்லை ஆனால் அந்த பிறர் அறிய வந்தால் தவறு, அவமானம், என்றொரு சமூக அறத்தை இடையில் கடைபிடித்தோம்.
இன்றைக்கு மானப் பிரச்சினையின் எடைஎவ்வளவு ?
பிரான்சு நாட்டில் அதிபர் தேர்தலுக்கு நிற்கும் வலதுசாரிவேட்பாளர்கள் இருவர் மீது பொது நிதியை தன்னலத்துடன் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் வெட்கமின்றி அவர்கள், « குற்றம் இழைக்காதவர்களென நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களைக் காட்டிலும், குற்றம் சாட்டப்பட்ட நாங்கள் திறமைசாலிகள் » என்கிறார்கள், அதாவது அவர்கள் தகாச் செயல் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை ஆதரிக்கிற தீவிர கிறித்துவ மதவாதிகளுக்கும் அவமானத்திற்குரியதல்ல. தமிழ் நாட்டில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வரையும் அவரது தோழியையும், சீடர்களையும் வெட்கமின்றி கொண்டாடும் கூட்டத்தைபார்க்கிறோம். ஒரு வாக்கின் சந்தை மதிப்பை நாலாயிரம் ரூபாய்க்கு உயர்த்தி இருப்பது கின்னஸ் சாதனை. நீதியை விலைக்கு வாங்கியவர்கள், ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து, இன்று எதையோ கடித்து தமிழர்களை அவமானத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். தமிழர்களின் இச்சாதனை இந்தியாவெங்கும் பரவும், இதற்கும் கூடுதலான விலைகொடுத்து இச்சாதனையை முறியடிப்பவருக்குத்தான் இனி ஆட்சி என்ற நிலை வரலாம். ஒரு வாக்கிற்கு நாலாயிரம் என்பது அடிமை வியாபாரம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கொத்தடிமைகளாக இருக்க வாக்காளர்களுக்குத் தரும் விலை. நவீன யுகத்தில் தகாச்செயல்கள் அறத்தின் பாற்பட்டதல்ல, சட்டம் மற்றும் நீதியின் பாற்பட்ட து. இங்கே சாட்சிகளும் தடயங்களும் மட்டுமே ஆதாரங்கள். நாலாயிரம் ரூபாயைக் கொடுக்கின்ற ஓரிருவர் எதிர் தரப்பில் அந்த நாலாயிரம் ரூபாயை கைநீட்டி பெறும் பெரும்பான்மையோர், இதில் இரு தரப்பினருமே தகாத செயலின் கூட்டுக் களவாணிகள் என்கிறபோது அவமானம் எங்கிருந்து வரும் ?
. « மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் » இன்று நம்மில் எவருமில்லை. தலைகுனிவு என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு இன்றைக்குஒரு ‘தகுதி’. நேற்றுவரை அவமானம் ஓர் இழிவான அனுபவம்; சமூகம் என்ற பெரும்பான்மையினர் நம்பும் அறத்திற்கு மாறாக தனிமனிதன் தகாச் செயலில் இறங்கிச் சம்பாதித்த மனநோய். இன்று அந்த அவமானம் இழிவானதல்ல. முன்னோர்கள் காலத்தில் ஒன்றிரண்டு மனிதர்களே இம்மனநோய்க்கு ஆளாகி இருந்தனர். பெரும்பான்மையோர் தகு செயலை செய்யாதபோதும் அறத்தை நம்பினார்கள். இன்று அறத்தை நம்புபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்,அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். நம்மில் பெரும்பாலோர் இன்று அறத்தை நம்பாதவர்கள். எனவே நமது தலைவர்களும் அறத்தை நம்பாத தில் வியப்பில்லை. குற்றவாளிகளுக்குத் தமது பெரும்பான்மை பலம் குறித்த சந்தேகங்கள் இல்லை. எனவேதான், கூச்சமின்றி அவர்களால் பேட்டிகொடுக்கமுடிகின்றது. எந்தச் சமூகத்திற்குத் தனது குற்றம் தெரியவந்தால் அவமானம் என ஒரு மனிதன் நினைத்தானோ அந்தச் சமூகத்தில் அனைவருமே தன்னைப்போன்றவர்கள் என்ற எண்ணம் தரும் துணிச்சல், ஆபத்தானது;
———————————————————————