பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்):

 

மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)

 

கலை, இலக்கியத்துறையில்   பதினைந்தாம் நூற்றாண்டில்  நிகழ்ந்த மாற்றங்களை ஒருவித பகுத்தறிவு அணுகுமுறை என வர்ணிக்கலாம். சமயத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி,  இயற்கையைப் போற்றிய கிரேக்க- இலத்தீன் தொன்மத்தின்மீது உருவான பற்றுதல் அல்லது  அமைத்துக்கொண்ட நோஸ்ட்டால்ஜியா தடமே மறுமலர்ச்சி. இடைக்காலத்தில் ஆதிக்கச்சக்தியின்கீழ் அண்டிப்பிழைத்த படைப்பாளிகள், கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி சமயத்தின் நிழலிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு  தொன்மத்திற்கு பயணிக்க முடிவுசெய்ததின் விளவு அது.

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் கலை இலக்கிய துறையில் இத்தாலிநாட்டின் பங்களிப்பினை குறைத்துமதிப்பிடமுடியாது, அதிலும்குறிப்பாக ஓவியம் சிற்பம் ஆகியவற்றில் உலகப்புகழ்பெற்ற கலை வல்லுனர்களை வழங்கிய பெருமை அந்நாட்டிற்குண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு முழுக்க முழுக்க இத்தாலி நாட்டின்  சாதனை, அச்சாதனையின் தாக்கம் பிரான்சு நாட்டில் இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? அதற்கான சூழல்கள் எவை என்பதை மிகச் சுருக்கமாக இப்பகுதியில் காண்போம்.

இடைக்கால அரசியல் சூழலும், மறுமலர்ச்சியும்:-

இடைக்கால இலக்கியங்களின் பண்பாடு, அவை செயல்பட்ட விதம் உண்மையான கலை இலக்கியவாதிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.  நிலமானிய அமைப்புமுறை கட்டமைத்திருந்த அரசியல்,  அதிகாரத்தில் இருப்பவர்களை, அரசவையில் கொலுவீற்றிருப்பவர்களை துதிபாடும் இலக்கியத்திற்கு,  காணாத வீர தீர சாகசங்களை அவர்களிடம் கண்டதாக,  இட்டுக்கட்டிப் பிழைப்பதைத் தொழிலாகக்கொண்ட இலக்கியத்திற்கு வழிவகுத்திருந்தது.  ஒரு சிலரை அரியாசனத்தில் அமர்த்தி  புகழ்ந்துரைக்கும் இழிநிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு வெதும்பிய உண்மையான படைப்பாளிகளுக்கு இத்தகைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க மாற்றுவழியொன்று தேவைபட்ட து. இப் “ புதிய வாழ்க்கை(nouvelle vie)”  நிலமானிய பிரபுக்களின் காலடியில் கலையையும் இலக்கியத்தையும் கிடத்தி வயிறுவளர்க்க விரும்பாத படைப்பாளிகளுக்கு ஓர் ஔட தமாக வாய்த்தது.  இதே காலக் கட்டத்தில் இத்தாலி நாட்டில் ஓவியர்கள் தனிமனித உணர்வுகளுக்கு கொடுத்த முன்னுரிமை பிரெஞ்சு படைப்பாளிகளையையும் அவ்வழியில் சிந்திக்க வை த்தது. இத்தாலியர்களின் வழியில்  சக மனிதனை மையப்பொருளாக (centre d’intérêt) இலக்கியத்தில் இடம்பெறச் செய்தார்கள். சாமானிய மனிதனும்  கவனத்திற்கொள்வதற்குரிய தகுதி (dignes d’intérêt ) பெற்றவன் எனக் கருதினார்கள். அடிமை-ஆண்டான் என்ற உறவுமுறையில் விதந்தோதும்,  பரணிபாடும் இடைக்கால இலக்கியத்தின் தட த்தைச் சகமனிதருக்கென செப்பனிட்டு மனித வாழ்க்கைமீதான தீராப் பசியை,  கலை இலக்கியத்தில் ஆற்றிக்கொண்டார்கள். அறிய நேர்ந்த புதிய உண்மைகளும், புதிய எந்திரங்களின் வருகையும் – குறிப்பாக எச்சு எந்திரம்- மறுமலர்ச்சிகாலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வித்திட்டன. அனைத்திற்கும் மேலாக கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி  தொன்ம இலக்கியங்கள் மனிதரை போற்றியவை என்ற சிந்தனை, அவ்வுணர்விற்குக் கூடுதலாக உந்துதலை அளித்தது.

இடைக்கால சமயச் சூழலும் மறுமலர்ச்சியும்:-

ப்ரோட்டஸ்டண்ட்  எனும் கிறித்துவ சீர்திருத்த சபை உருவானதும் பதினைந்தாம் நூற்றாண்டில் அல்லது மறுமலர்ச்சி காலத்தில் என்பதை மறந்துவிடமுடியாது. இந்து மதத்தில் இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதைப்போல, தீயைத் தணிக்கின்ற வகையில் சைவம் வைணவம் எனப் பிரித்து உண்மையான சீர்திருத்தத்திற்கு வழியின்றி செய்துவிட்டார்கள். இடைக்காலத்தில் கிறித்துவ சமயத்தில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான வழிபாட்டுச் சடங்குகள்; அச்சடங்குகளிற் பின்பற்றபட்ட,  பெருவாரியான விசுவாசிகளுக்குப் புரியாத இலத்தீன்மொழி வழிபாடுகள்; சமயத்தின் பேரால் திணிக்கப்பட்ட மூட நம்பிக்கைகள்; பாவமன்னிப்பிற்கிடையே புகுந்த பணம் ஆகியவனவெல்லாம் மார்ட்டின் லூதர் என்ற ஜெர்மானிய இறையியல் அறிஞரை, கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவிக்க காரணமானது. அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதனால், விவிலியம் வெகுசனமொழிக்குக் கொண்டுசெல்லப்பட்டு மதகுருமார்களில் கைகளில்  இருந்த இலத்தீன் மொழி பிரதிகள், விசுவாசிகளான சாதாரண மக்களின் கைகளுக்குச் சென்றன, விளைவாக  சமயத்திலும் சாதாரண மக்களின் முக்கியத்துவத்தை உணரத்தொடங்கிய காலம் மறுமலர்ச்சிகாலம்.

மானுடவாதம் (l’humanisme)

மேற்கண்ட சூழலில், மனிதர் நலனில் அக்கறைகொண்ட மானுடவாதம்  என்ற கலை இலக்கிய கோட்பாடு உருவானதில் வியப்பில்லை.  மனிதரைக் கலை இலக்கிய படைப்புகளில் கொண்டாட வீரதீரங்கள் அவசியமல்ல, நற்பண்புகளே போதுமானவை என்றும், தொல் இலக்கியப் பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை என்றும்   இக்கோட்பாடு வாதிட்டது. இக்கருத்தியத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட மறுமலர்ச்சிகால கவிதைகள் மற்றும் இதர படைப்புகள்  கிரேக்கம்-இலத்தீன் தொல் இலக்கியங்களின் சாரத்தைக் குறிப்பாக மானுடப்  பண்புகளை எதிரொலிப்பவையாக இருந்தன.

மறுமலர்ச்சிகால ஓவியர்கள்

இவர்கள் அனைவருமே, மனிதர் உணர்வை ஒளியுடன் கலந்து மனித உடலை கலை நயத்துடன் ஓவியங்களாக படைத்த மறுமலர்ச்சிகால ஓவியர்கள் அனைவருமே ஏற்லனவே கூறியதுபோல இத்தாலி நாட்டவர்கள். லியோனார்டோ டாவின்சி(Leonardo di ser Piero da Vinci)  ஓவியரும் சிற்பியுமான ‘மைக்கலாஞ்சலோ’ (Michelangelo di Lodovico Buonarroti Simoni ), இளம் வயதிலேயே புகழின் உச்சத்தைத் தொட்ட ‘ரஃப்பாயெல்’(Raffaello Sanzio), பின்னர் புகழ்பெற்ற வீனஸ் ஓவியத்தைப் படைத்த ‘தீத்தியன்’(Titian), கரவாஜியோ(Michelangelo Merisi da Caravaggio) அனைவருமே இன்றும் கொண்டாடப்படும் ஓவியர்கள்.  பிரான்சு நட்டில் இவர்களின் தாக்கத்தில் பிரான்சுவா க்ளூஏ(François cluet), ழான்க்ளூஏ(Jean Cluet) இரண்டே இரண்டு ஓவியர்களைத்தான் காண முடிகிறது. இவர்கள் முறையே தந்தையும் மகனும் ஆவர், இவர்களை பிரெஞ்சு ஓவிய வரலாறு லெ க்ளூஏ(Les Cluet)  என அழைக்கிறது. ஆனால் இவர்களை இத்தாலிய ஓவியர்களுடன் ஒப்பிட முடியாது.

 

மறுமலர்ச்சிகால படைப்பாளிகள்

இலக்கியதுறையில்  பிரெஞ்சு படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க்க வகையில் கவனம் பெற்றுள்ளனர் அவர்களில் முதலாம் பிரான்சுவா மன்ன னின்  சகோதரியும் ஒருவர், முதல் பிரெஞ்சு பெண்கல்விமான் என்ற அடைமொழிக்கும்  சொந்தக் காரர், பெயர் மார்கெரித் தெ நெவார் (Marguerite de Navarre). L’Heptaméron என்ற சிறுகதை தொகுப்பு இவருடையது; எழுத்தாளர் பிரான்சுவா ரபெலே ஒரு மானுடவாதி, நான்கு நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் Pantagruel, Gargantua முக்கியமானவை. இவ்விருவரைத்தவிர, ப்ரோட்டஸ்டண்ட் சார்பானவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி தண்டனைப்பெற்ற கவிஞர் கிளெமொன் மெரோ (Clémont Merot), தொடங்கி, பியெர் தெ ரொன்சார் (Pierre de Ronsard), ழோஆகிம் துபெல்லே (Joachim du Bellay) போன்ற கவிஞர்களும் மறுமலர்ச்சிகாலத்தில் குறிப்பிடத் தக்கவர்கள்.

——————————————————

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s