கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. க. பஞ்சாங்கம் ‘(புரட்சியாளன் நூல் முன்னுரை

puratchiyalan        “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005) “ஜே ஜே சில குறிப்புகள்” (1981) நாவலை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அல்பெர் கமுய் (இதுதான் சரியான உச்சரிப்பு என்கிறார் கிருஷ்ணா) எனக்குத் தெரிய வந்தார். சுந்தர ராமசாமி சுட்டுகிற பெயர் என்பதனாலேயே மனதில் கிடந்த அந்தப் பெயர், பின்னாட்களில் “அந்நியனை” வாசிக்க நேர்ந்தபோது என்றும் அழியாத பெயராக எனக்குள் நிலைத்துவிட்டது. என் குணச் சித்திரத்தைக் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுபோட்டுக் கிழித்து எறிந்துவிட்டு எனக்குள் இருந்த புதிய சித்திரத்தைக் கண்டடையப் பெரிதும் பயன்பட்ட படைப்பு அது. வாசிப்பு மூலம் புதிதாகப் பிறக்கலாமென்று உணர்த்திய உன்னதம் நிகழ்ந்த காலமாக என் நினைவில்  அது பதிந்துள்ளது. சூழலை எப்படி உள்வாங்குவது, கணங்களில் வாழ்தல் என்பது என்ன, மற்றவர் நமக்கு என்னவாக இருக்கிறார், நிச்சயமற்ற உலகில் நிரந்தரமென்கிற பாவனையில் வாழ்தல் எப்படிச் சாத்தியமாகிறது முதலிய பல்வேறு விசாரணைக்குள் என்னை இழுத்தடித்தது ‘அந்நியன்’. அந்த அனுபவத்தை எல்லாம், இப்பொழுது அவருடைய கட்டுரை நூலைப் ‘புரட்சியாளன்’ என்ற தலைப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்ப்பில் வாசித்து முடித்த கையோடு எண்ணிப் பார்க்கிறேன். இத்தகைய முந்தைய கால நிகழ்வுகள் குறித்த நினைவுகள் தரும் ஒருவிதக் களிப்புணர்வோடு இந்த முன்னுரையை எழுதத் தொடங்குகிறேன்.

II

ஓரிடத்தில் கமுய், ‘புரட்சி பற்றிய பிரச்சனையை மேற்கத்திய சிந்தனை மட்டுமே துல்லியமான பொருளில் கையாண்டிருக்கிறது’’ (ப – 26) என்று எழுதுகிறார்; இந்தக் கூற்றிற்கு மிகப்பொருத்தமாக, கிரேக்க நாகரிகம் தொடங்கி, நவீனத் தொழிற்சமூகம் வரை, இலக்கியவெளியிலும் சமூக வரலாற்று வெளியிலும் தத்துவச் சிந்தனைத் தளத்திலும் ஐரோப்பாவில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ள புரட்சிகளின் அல்லது கிளர்ச்சிகளின் வரலாற்றை, வரலாறு என்ற முறையில் தொகுக்காமல், மனிதர்களின் எதிர்கால நலனை நோக்கிய தத்துவ விசாரணை என்ற நெறிமுறையில் நின்று இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும்,  “கொலைச்செயல், கலகக்குரல் – இரண்டையும் முன்வைத்து, தற்கொலை மற்றும் அபத்தவியல் கருத்தின் அடிப்படையில் ஆரம்பித்து வைத்த சிந்தனையென இக்கட்டுரையைக் கருதலாம்” (ப – 8) என்று தன் முன்னுரையில்  “ இது ஓர் ஆரம்பம்தான்’ என்கிறார். அந்த அளவிற்கு நவீன நூற்றாண்டில் மனிதப் பிரச்சனைகள் பெரும் புதிராகவும் சிக்கலாகவும் வளர்ந்து கிடக்கின்றன.

‘தான் வாழும் காலத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி’ (ப – 6) என்று 1951 – இல் வெளிவந்த இந்த நூல் குறித்துக் கூறுகிறார். அவர் வாழ்ந்த அந்தக் காலம் எப்படிப்பட்டதாக இருந்தது. அவரே எழுதுகிறார் :  “தனித்தொதுங்கியிருந்த குற்றம், இன்றைக்கு அறிவியல் போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்று வரை  தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது’ (ப – 6) திரும்பும் திசைதோறும் கொலைச் செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது. நாசுக்காகப் புலம்பிக் கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். இரண்டாம் உலகப் போர் (1939 – 1945) முடிந்த பின்னணியில் அமைந்த, அவர் வருணிக்கும் அந்தச் சமூகச்சூழல், இன்றைக்கும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் கூடுதலான கொடூரங்களோடு தொடர்கிற யதார்த்தச் சூழலில், இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுக் கிடக்கும் நம் சூழலைப் புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்து கொள்ளப் பேருதவியாக இருக்குமென்று உறுதியாக நம்பலாம்.

மிகவும் தீர்க்கத்தரிசனத்தோடு 1951 – லேயே  “தண்டிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள இந்த யுகம் (அதற்கு முன்பாக அதன் குற்றமும்  புரிந்து கொள்ளப்படவேண்டும்) அடுத்த ஐம்பது ஆண்டுகளில் எழுபது மில்லியன் மனித உயிர்களைக் கொத்தடிமைகளாக்கவோ, கொன்று குவிக்கவோ அல்லது அவர்கள் வாழ்ந்த அடையாளத்தை முற்றாக அழித்துவிடவோ கூடுமென்று கருதப்படுகிறது.” (ப – 6) என்று எழுதுகிறார். அவர் கருதியதற்கும் மேலாக, இரண்டு உலகப் போரிலும் சமயப் போரிலும் கொன்றொழித்த மனித உயிரிகளை விட அதிகமான உயிரிகளை, அதற்குப் பின்னால் வந்த நமது காலகட்ட வரலாறும் கொன்றொழித்திருக்கிறது. கொலைகளின் வரலாறுதான் மனித சமூக வரலாறா?. “நமக்கு விடப்பட்டுள்ள இந்தச் சவாலை ஏற்பதும் தெளிவாக விளங்கிக் கொள்வதுமே இதைக் கடப்பதற்கான வழிமுறை. தன் கட்டுரையின் நோக்கமும் இதுதான்” என்கிறார்.

III

தங்கள் எஜமானர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கக் கொல்லவும் வேண்டும், கொல்லப்படவும் வேண்டும் என்கிற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அடிமைகளின் கிளர்ச்சியை விளக்குகிறார். எழுபது அடிமைகளுடன் தொடங்கிய அந்தக் கிளர்ச்சி, எழுபதாயிரம் கிளர்ச்சியாளர்களைக் கொண்ட படையாக மாறி, ரோமானியரின் இராணுவத்தைத் தோற்கடித்து ரோம் நகருக்குள்ளே அணிவகுத்துச் சென்றது; ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கி நடத்திய இந்தக் கிளர்ச்சி புதிதாக எதையும் கொண்டுவரவில்லை; “அடிமைகளின் இராணுவம் அடிமைகளை விடுவித்துப், பதிலாக அவர்களுடைய முன்னாள் எஜமான்களை அவர்களிடம் அடிமைகளாக ஒப்படைத்தது” என்கிறார். விளைவு, மனிதர்களை மீண்டும் கொல்வதற்கு வழிகாட்டியதொன்றே அதன் பலன் என்கிறார். இறுதியில் ரோம் நகரை முற்றுகையிட, ஸ்பார்ட்டகஸ் படை அணிவகுத்துச் செல்லுகிறது; ரோம் நகரின் புனிதச் சுவர்களைக் கண்டதும், தொடர்ந்து செல்லத் தயங்கித் திரும்ப நினைக்கிறது. இப்பின்வாங்கல் முடிவிற்குப் பிறகு தோல்வியும், உயிர்த்தியாகமும் மீண்டும் அடிமைகள் வாழ்வில் கோலோச்சத் தொடங்குகின்றன. ரோமானியத் தளபதியுடன் நேர்க்கு நேர் சரிசமமாக நின்று போரிட ஸ்பார்ட்டகஸ் முன்னேறிச் செல்ல முயலுகிறான்; ஆனால் அவனால் முடியவில்லை; கொல்லப்படுகிறான்; கொன்றது எஜமானர் படையல்ல; கூலிப்படை. அவனைப் போன்றே அடிமைகளாலான கூலிப்படை. அவர்கள் கொன்றது ஸ்பார்ட்டகஸ் விடுதலையை மட்டுமல்ல, தங்களுடைய விடுதலையையும் சேர்த்துக் கொலை செய்தார்கள் என்று எழுதுகிறார் கமுய். தொடர்ந்து, அடிமைகளால் சிலுவையில் அறையப்பட்ட ஒரு ரோமானிய உயர்குடிமகனுக்காக, படைத்தளபதி கிராஸ்ஸஸ், ஆயிரம் சிலுவையில் ஆயிரம் அடிமைகளை ஏற்றிக்  “காப்புவால்” ஆரம்பித்து,  “ரோம்” வரை நெடுகச் சாலையில் நிறுத்திக் காட்டினான். இந்தக் கிளர்ச்சி இறுதியில் உணர்த்தியது என்ன? இத்தனை மனிதக் கொலைகளால், அழிவுகளால் அறிந்து கொண்ட செய்தி என்ன?  “முதலாவதாக அதிகார உலகில் சரிநிகர் சமம் என்பதற்கு இடமில்லை; அடுத்ததாக தங்கள் குருதிக்கு, மிகக் கடுமையான வட்டி கணக்கிடக் கூடியவர்கள் எஜமானர்கள் என்ற உண்மை” என்கிறார். இப்படித்தான் எந்தச் சங்கிலியிலிருந்து விடுபட முயல்கிறோமோ அதைவிடக் கடினமான சங்கிலிக்குள் சிக்கிக் கொள்ளுவதுதான் புரட்சிகளின் வரலாறாக இருக்கிறது என்பதைத்தான் பலவாறு தனக்குள் செறிந்து கிடக்கும் தத்துவச் சிந்தனைகளின் மூலம், ஒரு படைப்பாளிக்கே உரிய உருவகம், அங்கதம், கவித்துவம், துக்கம், தொனி முதலியவைகளைச் சுமந்துவரும் ஒருவகையான கனமான மொழியால் உரையாடலை வளர்த்தெடுத்துக் கொண்டு போகிறார். தத்துவச் சொல்லாடல் என்றாலே, எளிதில் புரியாத மொழியாடல் வந்து கூடிக் கிடப்பதும் தவிர்க்க முடியாதது; அப்படியான இடங்கள் மூலத்திலேயே அமைந்து கிடப்பதால் மொழிபெயர்ப்பிலும் அத்தகைய இடங்கள் தொடர்கிறது என்று நினைக்கிறேன். புரியாமை என்பதும் மனித இருப்பின் ஓர் அம்சம்தான். கவர்ச்சியின் இரகசியமும் அதுதான்.

IV

ஸ்பார்ட்டகஸ் நடத்திய கிளர்ச்சியை எப்படி வர்ணித்தாரோ அதுபோலவே ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சி, அரசக் கொலை நடத்திய பிரெஞ்சுப் புரட்சி, மீஎதார்த்தவாதிகள் நடத்திய கிளர்ச்சி, மார்க்சிய அடிப்படையில் நடந்த இரஷ்யப் புரட்சிகள், முசோலினி, ஹிட்லர் நடத்திய புரட்சிகள் என நடந்த அனைத்துப் புரட்சிகளாலும் நடந்த விளைவு என்ன? இந்தத் தற்கொலைகளும் கூட்டுக் கொலைகளும் மானுட நலத்திற்கு வழங்கியது என்ன? தனிமனிதப் பயங்கரவாதத்தையும் அரசுப்பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுத்த இந்தப் புரட்சிகளால் மானுட சமூகம் கண்டதென்ன? இப்படியான ஓர் அணுகுமுறையில் நடந்த புரட்சிகளை எல்லாம் விமர்சித்துச் செல்வதால், இவர் புரட்சிக்கு எதிரானவரா என்றால் இல்லை.  ‘புரட்சியாளன்’ என்ற இந்த நீண்ட கட்டுரையைப் பொறுத்த வரை, புரட்சிக்கு ஆதார சக்தியான  ‘கிளர்ச்சி’ மனிதர்களின் இயல்பான உணர்ச்சி சார்ந்தது, மனித வளர்ச்சிக்கு அதுவே ஆதாரசக்தி என்றே கருதுகிறார்.

  1. மனிதர்களின் இன்றியமையாத பரிமாணங்களில் கிளர்ச்சியும் ஒன்று (ப – 28)
  2. மனிதர்களிடையிலான ‘ஒருமை’ உணர்விற்குக் கிளர்ச்சிதான் அடித்தளம் (ப – 29)
  3. “நான் கிளர்ச்சி செய்கிறேன்; எனவே நாம் இருக்கிறோம்” (ப– 30)
  4. தத்துவக் கொள்கைகளில் “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்ற சொற்றொடர் ஆற்றும் அதே பங்களிப்பை இங்கே கிளர்ச்சியும் செய்கிறது. (ப – 30)
  5. இன்றைய உயிர் வாழ்க்கை என்பதே ‘ஒரு மரண தண்டனை’ எனப் பொருள் கொள்ளப்படும் நிலையில்  ‘கிளர்ச்சியை’ அதனுடைய சமகாலத்து இயக்கமாகப் பார்க்க வேண்டும். (ப – 33)
  6. கலகம் – ஒருவகையான துறவு (ப – 145)
  7. யுகங்கள் பலவாக, மனித இதயத்திலிருந்து உள்ளுணர்வு பிறப்பித்த கிளர்ச்சிப் பயணம். (ப – 146)

இன்னும் கிளர்ச்சியாளன், களைப்பின்றித் தீமையுடன் மோதுகின்றான் (ப – 474), கலையும் கிளர்ச்சியும் இறுதிமனிதன் உள்ளவரை உயிர்வாழும் (ப – 474), கிளர்ச்சி, பைத்தியக்காரத்தனமான பெருந்தன்மை மிக்கது, (ப – 471) பிரதிபலனை எதிர்பாராத கண்ணியம் மிக்கது, அநீதியை மறுப்பது, அதற்காக வலிமை மிக்க தன் அன்பை வழங்கத் தயங்குவதில்லை. (ப – 476), தன் இருப்பின் மூலம் இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. அன்பு, நற்பலன் – வேறு நோக்கம் அதற்கில்லை. மனிதனுடைய ஒரே ஆற்றல் கிளர்ச்சி. இது அவனிடமுள்ள விநோதமான ‘அன்பு’ ஒன்றை நம்பியிருக்கிறது (ப – 476) என்றெல்லாம் அல்பெர் கமுய் எழுதிக் கொண்டு போகும்போது, வெறுப்பு அரசியலால் நடந்த புரட்சிகளுக்கு எதிராக அன்பு நெறிப்பட்ட கிளர்ச்சியை, மனித விடுதலைக்கு முன் வைக்கிறார் எனப் படுகிறது. பன்னாட்டு நிதிக் குழுமங்களால் உலக வளங்கள் எல்லாம் சுருட்டப்பட்டு மூலதனக் குவியல் வெறித்தனமான அரங்கேறிக் கொண்டிருக்கும் நமது கேடுற்ற யுகத்தில், கமுய் போல நாமும்

“சொந்த நிலத்தில் அளவான மகசூல், திட்டமான அன்பு, பூமி மூன்றையும் திரும்பவும் வெல்ல, வில்லில் நாணை ஏற்ற வேண்டும்” (ப – 480)

அதற்குக் கிளர்ச்சி நெருப்பை அவியாமல் காப்பாற்றிக் கொண்டுவரத் தெரிய வேண்டும். அதற்குத்தான் இந்தப் பிரெஞ்சுப் மொழிப் படைப்பின் தமிழ்மொழிபெயர்ப்பு நூல் என்று கருதுகிறேன். வாசிக்கும்போது படைப்பாளியின் கருணை உணர்வுகள் ததும்பும் நடையைச் சுவாசித்துப் பன்மடங்கு உயிர்ப்புடன் வாழ்வதாய் உணர்ந்தேன். இப்படியொரு வெற்றிகரமான மொழிப்பெயர்ப்பை நிகழ்த்திக் காட்டிய கிருஷ்ணாவையும் படைப்பாளியை வியந்தது போலவே வியந்து பாராட்டுகிறேன். வாழ்வு குறித்தும், மனிதம் படும் வதை குறித்தும் தீவிரமான ஈடுபாட்டோடு கூடிய தேடல் உணர்வுதான் இத்தகையக் கடுமையானதொரு மொழிபெயர்ப்பு வேலைப்பாட்டினைச் சாதித்துக் காட்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் இத்தகையச் சிந்தனை வளத்தைக் கொண்டுவந்து தரும் பதிப்பகத்தாரையும் பெரிதும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.;

—————————————————————————————————

புரட்சி யாளன்

அல்பெர் கமுய்

பிரெஞ்சிலிருந்து   தமிழில்  நாகரத்தினம் கிருஷ்ணா

காலச்சுவடு பதிப்பகம்

நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா

 

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s