பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள். ஒரு படையில் முன்வரிசையில் இருக்கிற, தாக்குதலை முன்நின்று நடத்துகிற அதன் விளைவுகளையும் முன்நின்று எதிர்கொள்கிற படைக்காவலர் அல்லது படைவீரர் ‘Avant-Garde’, அதாவது ‘படைக்கு முந்தி’, என்று இருப்பவர்கள், முன்னணி வீரர்கள். இச்சொல்லை முதன் முதலில் தற்போது அனைவரும் அறிந்துள்ள பொருளில் உபயோகித்தவர் குளோது ஹாரி தெ சேன் சிமோன் (Claude Henri de Saint-Simon (1825). அவருடைய நூலொன்றில் (Opinions littéraires, philosophiques et industrielles) ராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த சொல்லுக்கு , தமது சோஷலிஸ சிந்தனையின் பாற்பட்ட விளக்கமொன்றை அளித்திருந்தார். பின்னர் அரசியல், கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் அவர் விரும்பிய பொருளிலேயே அச்சொல் கையாளப்பட்டது.
கலை மற்றும் பண்பாட்டியியல் இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் அவற்றின் போக்குகள் தங்கள் செயல்பாட்டின் கருவியாக இக்கருத்தியத்தைப் பார்த்தன. இனி வருங்காலத்தில் கலையிலும் பண்பாட்டிலும் நிகழவிருக்கும் மாற்றத்திற்கு தங்கள் இயக்கமே காரணமாகவிருக்குமென இதன் பங்குதாரர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் மரபுக்கு எதிரானவர்கள், புதுமை விரும்பிகள், புரட்சியாளர்கள் எனத் தங்களை அழைத்துக்கொண்டனர்.
ஆரம்பத்தில் கூறியதுபோல பத்தொன்பதாம் நூற்றாண்டு இதன் தொடக்கம். பழமைக்கும் பழமைவாதிகளுக்கும் இனி இடமில்லை, தங்கள் இயக்கம் காலத்தால் முந்தியது என்பதெல்லாம், அவான் கார்டிஸ்டுகள் தெரிவித்தக் கருத்துகள். அவ்வகையில் தொன்மத்திற்கு எதிரான கற்பனாவாதம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சுநாட்டிலிருந்த பர்னாஸ் (Parnasse) எனும் கவிதை இயக்கம், எதார்த்தவாதம் அனைத்தும், இந்த இலக்கியப்போக்கிற்கு உட்பட்டவை. மொத்த த்தில் புதிது புதிதாய் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பழைய மரபுகளுக்கு எதிராகத் தோற்றுவிக்கபட்ட இலக்கியவாதங்கள், அவற்றின் அபிமானிகள் அனைவரையும் அவான் – கார்டிஸ்டுகள் என்றே அழைக்கவேண்டும்.
« படைப்புகளின் பெருமையென்பது, அவற்றின் அசாதாரண, இதுவரை அறிந்திராத பண்பு சார்ந்த விடயம் ; அழகியல் விடயத்தில், நிரந்தர முன்னுதாரணம் இல்லை ; படைப்பவன் சிந்தனைக்கு முடிவென்று எதுவுமில்லை, எனவே படைப்பாளி நவீனத்தின் சாரத்தில், அதன் உற்பத்தி யில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் ; மரபிலிருந்து முற்றாகத் துண்டித்துகொண்ட தாங்கள் இனி அனைத்து படைப்பிற்கும் முன்னோடிகள், என்பதெல்லாம் அவான் – கார்டிஸ்டுகள் முன்வைத்த வாதங்கள். அனைத்துக்கும் மேலாக, தங்கள் கலை இலக்கிய செயல்பாட்டை பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான யுத்தமாகக் கருதினர்.
ஆனால் ஒவ்வொரு முறையும் இஸங்கள் உருவாயின, அவற்றின் கர்த்தாக்கள் தங்களை முன்னோடிகள், புதுமை விருபம்பிகள், புரட்சிகர சிந்தனைக்குச் சொந்தக் காரர்கள் என அழைத்துக்கொண்டு செயல்பட, ஏற்கனவே இஸம் கண்டவர்களை பழைய ஆசாமிகள், பழைய சிந்தனைக்கு சொந்தக்காரர்கள் எனக்கருதப்போக அவர்களே அவர்களுக்கு எதிரிகளாக மாறினார்கள்.
தொடக்க கால அவான் கார்டிஸ்டுகளுக்குப் பழமையென்பது பதினேழாம் நூற்றாண்டு படைப்பிலக்கிய நெறிகள் மற்றும் கலை இலக்கிய கூறுகள். விளைவாக, உயர் இலக்கியத்திற்குச் சான்றாகத் திகழ்ந்த ‘Belles-Lettres வகைப்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிராகரிக்கப்பட்டு அவ்விடத்தை அவான் -கார்டிஸ்டுகள் கைப்பற்றுகின்றனர். தவிர மரபார்ந்த இலக்கிய திறனாய்வாளர்கள் புதியதலைமுறை இளம் எழுத்தாளர்களை , அவான்-கார்டிஸ்டுகள் என்ற பார்வையை வைத்தனர். மல்லார்மே, லொத்ராயோன் போன்ற படைப்பாளிகள் அவான்-கார்டிஸ்ட்டுகளானது இப்படித்தான். அரசியலிலும் இது எதிரொலித்தது. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின்னர் பூர்ஷ்வாக்களுக்கு எதிரான சாமன்யர்களின் இயக்கமென்று அவான் கார்டிஸ்டுகள் இயக்கம் கருதப்பட்டது. அவ்வாறே முதலாளித்துவத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தினர் இயக்கமென மார்க்ஸிய வாதிகளும் நினைத்தனர்.
1890 -1914 க்கும் இடையிலுருவான இஸங்களின் செயல் திட்டங்களில் அரசியலும் கலந்தது, உயிர்வாழ்க்கையோடு கலையையும் இணைத்துப் பார்த்தன. விளைவாக 1902ல் ஜீவாதாரவாதம் ( le vitalisme) மானுட வாதம் (l’humanisme) போன்றவையும் 1913ல் ; வருங்கால வாதம்( le futurisme), புதிய உணர்வு (l’esprit nouveau) போன்றவை மனிதர்வாழ்க்கையில் பிரதான நோக்கு, ஒருமைப்பாடு, முரண்பாடுகளைக் களைதல், வளத்தைப் பெருக்குதல் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பிறந்தன. ஆனால் கலையும் இலக்கியமும் தீவிரமாக கட்டுப்பாடற்று, எதேச்சையாக இயங்க வேண்டும் என ஒரு சிலர் நினைக்கத் தோன்ற 1916ல் சுவிஸ் நாட்டில் நாட்டில் தாதாயிசம் (le Dadaisme) பிறந்தது . அதன் தந்தை ஜெர்மன் கவிஞர் த்ரிஸ்தன் ஸாரா ( Tristan Tzara). தாதாயிஸ வாதிகள் படைத்தலைக்காட்டிலும், ஏற்கனவே நிறுவபட்டிருந்த அமைப்பு முறைய, அல்லது ஒழுங்குமுறையை தகர்க்க விரும்பினர்.
முதல் உலகப்போருக்குப் பின்பு்க் சிந்தனாமுறையை பிரிவினையின்றி தீவிரமாக செயல்படுத்துவது அவசியம் என உணர்ந்த ஆந்த்ரே ப்ரெத்தோன் (André Breton), லூயி அரகோன் போன்றவர்கள் ஸாராவின் சீடர்களிடமிருந்து,( தாதா இயக்கத்திடமிருந்து) பிரிந்து மீ எதர்த்தவாத த்தைப் படைத்தனர், 1919 லிருந்து 1924 வரை இவ்வியக்கம் மிகுந்த செல்வாக்குடனிருந்த து. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்யநாட்டில் அரசாங்கம், சமயம் ஆகியவற்றிற்க்கு எதிராக உருவான சூன்யவாத த்தை (le nihilisme) (இலக்கிய வெளியில் இதன் தீவிர ஆதரவாளர்கள் ரஷ்யாவில் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, பிரான்சு நாட்டில் எமில் ஸோலா) , மீஎதார்த்தவாதிகள் எதிர்த்தனர்.
இரண்டாம் உலகப்போருகுப்பின், சோஷலிஸக் கொள்கையைத் தீவிரமாக க் கையிலெடுத்த அவான்கார்டிஸ்டுள் உள்ளே நுழைந்தனர். பிரான்சுநாட்டில் மூன்று இலக்கிய இதழ்கள் அப்போது பிரசித்தமானவை, அவற்றின் அடிப்படையில் மூன்று குழுவினராகச் செயல்பட்டு காலனித்துவத்தை எதிர்த்தனர். எழுத்துக்கலையும் பிரதியும் முக்கியத்துவம் பெற்றன. படைப்புகளை இனம் பிரித்து பார்ப்பது குறைந்தது. சொல்லின் நேரடிப்பொருள், நிறுவப்பட்ட குறியீடு ( முதற் பொருள் / குறிப்பிட்ட பொருள் ; குறிப்பொருள்/உட்பொருள் ; வரையறுக்கபட்ட பொருள்/ பரந்தபொருள்) முக்கியத்துவமிழந்து , வடிவம் செல்வாக்கினைப் பெற்ற காலம்.
இறுதியாக சிங்மண்ட் ப்ராய்டும், கார்ல் மார்க்ஸ்ஸும் இவ்வியக்கத்தின் இறுதிப் படைவீரர்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள். இருந்தபோதும்,
ழான் -லுய்க் மொரோ வின் (Jean-Luc Moreau ) என்கிற எழுத்தாளர் 1992 முன்வைத்த புதிய புனைவு (la Nouvelle Fiction), அடுத்து l’OuLiPo (Ouvroir de littérature potentielle -1962) போன்றவை புதியவகை அவான் கார்ட்களை – கலை இலக்கிய கிளர்ச்சியாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. எனினும் அரசியல் களத்தைப்போலவே இலக்கிய களத்திலும், பின் நவீனத்துவ சுகத்தில் புரட்சி, மாற்றம் போன்றவை தங்கள் வீரியத்தை இழந்திருப்பதாகத்தான் படுகிறது
————————————-