ஒரு கேள்விக்கு இரு பதில்கள் : அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை முன்வைத்து 

amuthu                 « பல வருடங்கள் சென்ற பிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் கணக்கு சரியல்ல என்பது புரிந்தது. சில கேள்விகளுக்குப் பல விடைகள் இருந்தன. எதற்காக சிறுகதைகள்  எழுதுகிறேன் என்ற கேள்விக்கும் அப்படியே. பல சமயங்களில் நான் எங்கே எழுதுகிறேன் . கதை பிரவகித்து வரும்போது  அதைத் தடுக்காமல் தள்ளி நிற்கிறேன்  வேறு என்ன செய்கிறேன் என்ற எண்ணம் தோன்றும் » என அ. முத்துலிங்கம் தம்முடையசிறுகதைகள்  தொகுப்பு முன்னுரையில்  அல்லது அத்தொகுப்பு பற்றிய கருத்தாகத் தெரிவித்திருக்கிறார். அக்கருத்துரையிலேயே ஒரு சில வரிகளுக்கு அப்பால் « கம்ப்யூட்டரில் வந்து இறங்கும் மின்னஞ்சல்களைக்  கலம்  நிறைந்ததும் அவ்வப்போது காலி செய்வது போல எனக்குள் நேரும் வார்த்தைகளை நான் அப்புறபடுத்துகிறேன்  » என அவருக்கே உரித்தான மொழியில் தமது கதைமூல இரகசியத்தையும் போட்டுடைக்கிறார். அவர் பெயருக்கு முன்னால் இருக்கும் ‘அ’ என்ற உயிர் எழுத்திற்கு   அப்படியொரு விளக்கமும் உண்டென்பது ஆச்சரியமான செய்திதான். அவரை எழுதவைக்கிற காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துபோகட்டும் ஆனால் அதனாற் கிடைக்க க் கூடிய பலன்,  அக்கேள்விக்குக் கிடைக்கும் விடையைப் போலவே ஒன்றுக்கு மேற்பட்டவை  என்பது மட்டும் தெளிவு.  சொல்வனம் இணைய இதழ் பொறுப்பாளர்களில் ஒருவர்  எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறப்பு இதழுக்காக கட்டுரையொன்றை கேட்க  அவரது சிறுகதைத் தொகுப்பை (தமிழினி வெளியீடு)  மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அத்தொகுப்பை எனது பார்வையில் சிறுகதைகள், கதைகள், கட்டுரைகள் என வகைப்படுத்தி வைத்திருக்கிறேன். இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளில் மூத்த சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களை நினைவுகூர்கிறபொழுது, விடுபடமுடியாத முடியாத பெயராக  அ. முத்துலிங்கம் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் படைப்புகள்.  எழுத்தில்  ஒட்டுமொத்த வாசகர்களின்  ஏகோபித்த பாராட்டுதலை பெறுதலென்பதும், அப்புகழுக்குப் பங்கமின்றி தொடர்ந்து அனைவராலும் விரும்பி வாசிக்கப்படும் முன்னணி எழுத்தாளராக இருப்பதும் எளிதான காரியமல்ல.

 ஐந்துவிரல்களுக்குள் அடக்கிவிடக்கூடிய கதைமாந்தர் எண்ணிக்கை, ஒன்றிரண்டு சம்பவங்கள், செறிவான மொழி இவைகளெல்லாம் கூடிவந்தால் சிறுகதை. இன்றைய படைப்பிலக்கியம் பின் நவீனத்துவம், பின்-பின் நவீனத்துவம்(Post-postmodernism) எனப் புதிய புதிய அவதாரங்களை எடுத்தபின்னும், மேலேகண்ட பொதுப்பண்புகளை அவசியமாகின்றன.  அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை ஒரு வாசகனாக என்னை நிறுத்தி ‘ ஏன் நேசிக்கிறேன் ?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, எனக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட பதில்கள்  கிடைத்தன.

ஒரு நல்ல சிறுகதை என்பது தேர்ந்த கவிதையின் உரைநடை வடிவம், பாலும் பழத்துடன்முதல் இரவன்று கணவனை (இங்கு வாசகன்) தேடிவரும் மணப்பெண்ணிற்குச் சமம். இந்த இலட்சணங்களுடன், தெறிப்பானச் சொற்கள் ; கூரான குறுவாளை தடவிப்பார்க்கிற அனுபவம் ; கவிஞர் மோகனரங்கன் வியந்து பாராட்டுவதுபோல « விரைவுப் புகைவண்டியொன்றில் பயணிக்கையில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்   சாளரக் காட்சிகள் » ; துறட்டுக்கோலைப்(கொக்கைத் தடி ?) போல வாசகரின் மனதைப் பறிக்க முயலும் தொடக்க வரிகள் ; அத்தொடக்கவரிகளின் துணையுடன் ஜல் ஜல்லென்று சவாரி செய்யும் கதை பின்னல் ; கூத்துக்கலையை வார்த்தையாக்குகிறாரோவென   புருவங்களை உயர்த்தவைக்கும்  சொல்லாடல் ; எள்ளலும், பகடியுமாக சுவாரஸ்யத்தையும் விநோதத்தையும் சரிசமமாகக் கலந்து, பக்குவத்துடன் சமைக்கவும் விருந்தோம்பவும் செய்கிற எழுத்தாற்றல் ஆக  இவற்றையெல்லாம் முதழ்லிரவு மணப்பெண்ணின் கவர்ச்சிகரமான உருப்படிகள் எனவைத்துக்கொண்டால் – அது அ. முத்துலிங்கத்தின் சிறுகதை.  யாழ்ப்பாணக் கைப்பக்குவம் என்பதால் சிற்சில நேரங்களில் மாசிச் சம்பல் போல காரம் தூக்கலாக இருக்கிறது, நான் அதிகம் சொதிக்குப் பழக்கப்பட்டவன்.

இங்கே அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை மூன்று பொருளில் அணுக நினைக்கிறேன் :

  1. கதையாசிரியர் கதைசொல்லியா? கதைமாந்தர்களில் ஒருவரா?
  2. எழுத்தில் குறுக்கிடும் குறும்புகள்

3  அவர் கதைகளில் காணும் பொதுப் பண்புகள்

 

  1. கதையாசிரியர் கதைசொல்லியா கதைமாந்தரா?

‘தன்மையில் சொல்லப்படும்’,  ‘வாசகரை முன்வைத்து உரையாடும்’ அவரது சிறுகதைகள் பலவும் இச்சந்தேகத்தை எனக்கு எழுப்புவதுண்டு.  அப்படி எழும்போதெல்லாம்« கண்ணாடே,கரையாரே, காக்கணவம் பூச்சியாரே,  வரட்டோ !  » என ஆசிரியர் குரல் அப்போதெல்லாம் நமது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அதுவேகூட ஒரு வகையில் ஆசிரியருடைய கதைசொல்லும் ஆற்றலுக்கான சான்றாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேற்கு ஆப்ரிக்கா, கனடா, பாகிஸ்தான் என்ற களன்களின் அனுபவங்களாக, கட்டுரையோ என சந்தேகிக்கின்றவகையில் சொல்லப்படும் கதைகளிலெல்லாம் இப்படியொரு சிக்கலுக்குள் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அது  ‘அனுலா’ என்ற சிங்கள இளம்பெண்ணின் காதலுடன் விளையாடும்  போஸ்டாபீஸ் ஊழியனாக வரும்போதும் ; கடைசிக் கைங்கரியம் தணிகாசலத்தின் மனச்சாட்சியாக « அடி கமலா, நீ நினைத்ததில் எள்ளளவும் பிழையில்லை. முற்றிலும் சரி. நான் தான் துரோகி, பெரிய துரோகி ! » எனக் குற்ற உணர்வுடன் மனைவியின் பிணத்தருகே குமுறும் கணவனாக உருமாறும் போதும் ; « அக்கா வந்து முழுசுவார்க்கக் கூப்பிட்டா , « பேந்து வாறன் » எண்டு சொன்னன் ; அக்கா அப்பிடியே ’அறுநாக் கொடியில்’ பிடித்துகொற கொற எண்டு இழுத்துக்கொண்டுபோனா. நான் அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால் விருப்பம் » என அக்கா அக்காவென்று உருகும் சிறுவனாகட்டும் ; « நான் அப்போது உலகவங்கிக்காக மேற்கு ஆப்ரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கேதான் எனக்கு முதன் முதலில் கட்டிங்கிராசுடன் பரிச்சயமேற்பட்ட து » எனக்கூறும் உலகவங்கி ஊழியராக அறிமுகப்படுத்திக் கொள்கிறபோதும்  கதைமாந்தராக அவதாரமெடுக்கும் கதைசொல்லி ஆசிரியர்தானோ ? என்கிற கேள்விக்கும்,  கிடைக்கும்  பதில்கள் ஒன்றுக்கு மேற்பட்டவைதான்.

 

  1. எழுத்தில் குறுக்கிடும் குறும்புகள்

அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் எனில் குறும்பான சொல்லாடல்கள் இல்லையெனில் எப்படி ? எழுத்தில் நகைச்சுவையை வலிந்து புகுத்தாமல் ஓர் இயல்பாய் இழையோடச்செய்வது எல்லோருக்கும் ஆகிவந்த கலையல்ல. துக்கவீட்டில் கூட சூழலுக்குப் பொருத்தமாக ‘வருவதும் போவதும் தெரியாது’ என பழைய பாடலொன்றில் வருவதுபோல அவை வந்துபோகின்றன. « இந்த உலகத்திலேயே சிவப்பு ஒரு கறுவம் வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டுதான் நடப்பார். சிறு நீர் பாயும் தூரத்துக்குக் கூட அவரை நம்புவதற்கு  அந்த ஊரில் ஆள்கிடையாது »(வடக்கு வீதி) ; «  குறைந்தது நாலு பிழையுடன், விலாசதாருக்கு கிடைக்காத வகையில், ஆங்கிலத்தில் தந்தி எழுதும் அளவிற்கு, அவர்களுக்கு அமோகமான கல்வி அறிவு இருக்கிறது »(கோடைமழை) ; « இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை  நாயை ஒரு வார்த்தைக்கூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்குத் தர்மமாகப் படவில்லை » (எலுமிச்சை) ; « கிணற்றடியில் தினம் நடத்தும் அப்பாவின் அனுட்டாங்கள் முக்கியமானவை. வலக்கையின் இரண்டு விரல்களை வாய்க்குள் விட்டு ஓவென்று ஓங்களிப்பார். நாலு அங்குல நீளமான தொண்டைக்குள் இவரால் ஆறு அங்குலம் நீளமான விரல்களை நுழைக்க முடியும். »(பூமத்தியரேகை). « மனிதர்களுடைய வாயை இவ்வளவு குளோசப்பில் அவள் பார்த்த தில்லை . பெருவிரலில் எக்கி நின்று என் வாயைப் புகுந்து பார்த்தாள் »(எந்த நிமிடத்திலும் பறி போகும் வேலை) . இதுபோன்ற உதாரணங்களை இன்னும் இருபது பக்கங்களுக்கு நீட்டிக்கொண்டு போகலாம். அ. முத்துலிங்கத்தின் வெற்றிக்கு இதுதான் தீர்க்கமான காரணமாக இருக்கமுடியுமென்று நம்மில் எவராவது நம்பினோமென்றால் தோற்பது நாமாகத்தான் இருக்கமுடியும்.  ஏனெனில் இதுமட்டுமே காரணமில்லை, அவர் வெற்றிக்கு நுணுக்கமாக பல காரணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று இக்கடுரையின் இறுதியிலும் சொல்லப்பட்டுள்ளது.

  1. இவரது கதைகளில் காணும் பொதுபண்புகள்

இவரது கதைகளில் உள்ள  பொதுவான சில சிறப்பு அம்சங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லதென நினைக்கிறேன்.  அழைப்பு, ஒரு சிறுவனின் கதை, சங்கல்ப நிராகரணம், கடைசிக் கைங்கர்யம், பக்குவம்,  பீனிக்ஸ்பறவை, எலுமிச்சை…… தளுக்கு என நீளும், எனக்குப் பிடித்தமான பட்டியலில் , ‘அழைப்பு’ என்ற சிறுகதையை எடுத்துக்கொண்டு அ.முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் கைப்பக்குவத்தை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன்.

‘அழைப்பு’ நான் மிகவும் ரசித்து பலமுறை திரும்பத் திரும்ப வாசித்த கதைளில் ஒன்றென்பதும் எனது தேர்வுக்கான கூடுதல் காரணம்.  சிறுகதையின் தொடக்கம், அதை முன்னெடுத்துச் செல்லும் விதம், அதன் பரிணாமம், பின்னர் முடிவு என இதன் வாசிப்பு படி நிலைகள். இக்கதையை முதன்முறையாக நான் வாசிக்க நேர்ந்தபோது –  என்னவோ நாம்தான் கந்தப்பு ஆக வாழ்ந்தோமா ? என்ற ஐயத்திலிருந்து மீள சிலகணங்கள் தேவைப்படுகின்றன.  மீண்ட தும், வாசகனென்ற  உணர்வுபெற்று, கந்தப்பு ‘ஒழுங்கை’ வரை கசைசொல்லி நம்மை அழைத்துவந்திருக்கிறார் என்ற உண்மைமட்டுமே எதார்த்தம்,  என்கிற இருத்தல் உணரப்படும்போது  அந்த அனுபவத்தைச் சொல்ல வார்த்தைகள் போதா. தொடக்கம் முதல் முடிவுவரை   படிப்படிப்படியாக ஒரு நிலையிலிருந்து மற்றொன்றிற்கு வாசகரை ஒரு கதைசொல்லியாக  அவர் அழைத்துசெல்கிறபோது, அலுப்பற்ற பயண அனுபவம் நமக்கு வாய்க்கிறது.

அழைப்பு சிறுகதை ‘கந்தப்பு’ என்ற மனிதரின் மனப்புழுக்கம், உடற் புழுக்கம் என்கிற இரண்டு இடிபாடுகளையும், அந்த இடிபாடுகள் அவரை இறுதியில் எங்குகொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதையும் சொல்லும் கதை.  « ஊதல் காற்று உடலைக் கிழித்தது, விறுக் விறுக்கென்று கைகளை வீசியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தார் கந்தப்பு » என்று கதையைத் தொடங்குகிறார் கதைசொல்லி. நடக்கத் தொடங்க,  பாதை விரிந்து  நீள்வதுபோல கதையின் பாதையை,  கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகளைக் குறிப்பால் இந்த ஆரம்ப வரிகள் உணர்த்துகின்றன. கந்தப்பு என்ற கதை மாந்தர், புராணப்படங்களில் திடீரென்று தோன்றும் தெய்வங்கள் போல முதல்வரியை வாசித்த கணத்தில் தோன்றி கைகளை ஆட்டி ஆட்டி நம் முன்னே நடக்கிறார்.  விதிக்கப்பட்ட « நெருக்கடி ஒழுங்கையை » கைவீசி கடந்திட நினைக்கும் பாவப்பட்ட அம்மனிதரின் முனைப்பையும், அவர் கிழிபடும் பரிதாபத்தையும் கதையின் முதல்வரி நன்றாகவே  சித்தரிக்கிறது. தவிர கதையினைச் சிக்கலின்றி சொல்லிக்கொண்டு தொடர துணையாகவும் இருக்கிறது. « இண்டைக்காவது முதலாளி கணக்குத் தீர்த்தாரெண்டால் …உந்தச் சில்லறைக்கடன்களை ஒரு மாதிரிசரிகட்டலாம். சுப்பையாவின்ரை கடைக்காசை இண்டைக்குக் குடுத்திடவேணும். அவன் வீட்டிலே பழி கிடப்பன்.. இப்ப நாலு நாளாய் விரதம்.. அவள் பொடிச்சியைத் தனியகடன்காரருக்கு வகை சொல்ல விட்டிட்டு நான் என்ரைபாடு… சீ என்ன புழைப்பு.. »ஏனப்புலம்பும் கந்தப்பு அந்நியரல்ல அது நாமாக க் கூட இருக்கலாம், அல்லது நாம் அலுவலுக்கோ வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறபோது அரைக்கண்மூடி, இறுகிய முகமும், கசங்கிய சட்டையுமாக, காரணமின்றி வேட்டியின் முகப்பை உயர்த்திப்பிடிப்பதும்  தோள் துண்டினால் முகத்தைத் துடைப்பதுமாக  நம்மைக் கடக்கின்ற மனிதராகவும் அவர் இருக்கலாம். கந்தப்பு போன்ற மனிதர்களுக்கென்றே பிரச்சினைகள் வரிசையில் காத்திருக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தம்மிட த்தில் தீர்வு இல்லை, தம்மைச் சூழ்ந்துள்ள சகமனிதர்களிடமும் தீர்வுகள் இல்லை, கண்ணுக்குப் பலனாகாத தொலைதூரத்தில் இருக்கிற பரம்பொருள் பாரத்தைக் குறைக்கக்கூடும் என நம்புகிற கோடிக்கணக்கான வெகுளிகளில் அவரும் ஒருவர். கதை சொல்லி அவர்(கந்தப்பு) வாயிலாக உதிர்க்கும் « அப்பனே முனியப்பா » அதைத்தான் நமக்குச் சொல்கிறது. பெருங்கதையுடன் ஒப்பீட்டளவில், சிறுகதை கதை, «  மாந்தர் எண்ணிக்கையில் », « நிகழும் சம்பவங்களில் » சிறியதாக இருக்கலாம் ஆனால் பெருங்கதையைப்போல சிறுகதையிலும் வில்லில் அம்பினை ஏற்றி நாணை இழுக்கிறபோது, நாண்படும் அவஸ்தையைக் கதையில் முடிவுக்கு முன்பாக கந்தப்புவும் சந்திக்கிறார்.  பணிசெய்யும் சுருட்டு கொட்டிலில் ‘கொஞ்சம் வேலை தெரிந்த’ வெட்டுக்காரப் பொடியனால்  அவருடைய பணி கேலிக்குள்ளாகிறது. போதாகுறைக்கு முதலாளியின் நக்கலான பேச்சுவேறு. « மானங்கெட்ட சீவியம் ! » எனக் முனகிக்கொண்டு பசியுடன் வீடு திரும்பும் கந்தப்பு கோபத்தை வேளிப்படுத்தும் காட்சி கதையின் உச்சம். தேர்ந்தப் புகைப்படக்லைஞரைப்போல அ. முத்துலிங்கம் காட்சிபடுத்தும் அழகு, குறிப்பாக தொகுப்பில் 33ம், ,34ம் கல்வெட்டில் பதிவுசெய்யவேண்டிய பக்கங்கள். சிறுகதை எழதுகிற வளரும் தலைமுறையினர் கவனத்திற்கொள்ள வேண்டிய பகுதி.

கதைசொல்லியின் நீண்ட நெடிய பரந்துபட்ட வாழ்க்கை, மனிதர்களைப் பற்றிய கூர்மையான அவதானிப்புகளுடன் இணைந்து தேர்ந்தெடுத்த சொற்களில் கதையை அசைபோட்டிருக்கிறது. முகம் தெரியாத பல கந்தப்புகளுக்காக வாடிய கதைசொல்லியின் உள்ளம் அது. வாசிக்கிறபோது தரித்திர கந்தப்புடன் நாமும் பரிதவிக்கிறோம், கண்கள் கலங்குகிறோம்.

இறுதியாக அவரது அ.முத்துகிலிங்கத்தை இரசிக்க இதுபோன்ற வரிகளும் பெரிதும் உதவும் :

« அக்கா மூக்குத்திப் போட்டிருப்பாள் ; முகப்பருவும் போட்டிருப்பாள். »

« சிவப்புக்கூந்தல் தேனிக்கூட்டம் போல பின்னால் பறக்க ரோட்டில் அவள் ஸ்கூட்டர் ஓட்டிப்போகும்போது அடிக்கடிப் பார்த்திருக்கிறார்கள். »

« மரவள்ளி கிழங்குக்காரி ஒருத்தி சந்தியடியில் வந்துகொண்டிருந்தாள். ‘அவளுக்குத் தெரியவா போகிறது’ என்று ந ந்தாவில் தோட்ட த்து மதகடியின் பக்கலில் குந்தினார் »

—————————————————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s