வருடத்தில் ஒரு முறைதான் இந்தியா வருகிறேன், அப்படி வருகிறபோது அதிகப்பட்சமாக ஒருமாதம் பிறந்தமண்ணில் தங்க நேரிடுகிறது. அதிலும் 90 விழுக்காடு தமிழ்நாடு அரசிற்கு சம்பந்த மற்ற புதுச்சேரியில் நாட்களைக் கழிக்கிறபோது ( எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், அவர் பெயர்என்ன, தெரிந்துகொள்ள முயன்றதில்லை) தமிழ்நாட்டில் ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என இருக்கத்தான் ஆசை. உண்மையில் பெரும்பாலான தமிழர்கள் அப்படித்தானே இருக்கிறோம் பாமரமக்களை விடுங்கள், படித்தவர்களும் ( அறச்சீற்றம் தான் எனது மூச்சென கட்டுரையிலும் கவிதையிலும் மறக்காமல் எழுதும் நமது எழுத்தாளர்கள் உட்பட) அப்படித்தானே இருக்கிறார்கள். பத்துவிழுக்காடு மக்கள் கிளர்ச்சியோ, கலகமோ செய்து என்ன ஆகிவிடும் என்ற கவலையும் எழாமலில்லை.
பினாமி அரசு
பினாமி அரசுக்கு உரிமைகோரியவர்கள் சாதித்திருக்கிறார்கள். சாதித்தது தமிழ்நாட்டின் பிரச்சினைகளெல்லாம் முடங்கிக் கிடக்கிறதே என்பதற்காகவே அல்ல. அம்மையாரை(காவிரியை அல்ல) பெங்களூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரவேண்டும், எம். எல். ஏக்களை பட்டியிலிருந்து விடுவித்திருந்தாலும், குறைநாளுக்கும் அவர்களுக்குக் கொள்ளும் தண்ணீரும் காட்டவேண்டும். அடுத்த தேர்தலில் மீண்டும் வாக்காளர்களுக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக மொய் எழுதவேண்டும், அவர்கள் ஆரத்தித் தட்டுகளில் இனி 500 ரூபாய் செல்லாதென்கிறபோது 2000 ரூபாயாவது போடவேண்டும், கூட்டணிக் கட்சிகளைக் கவனிக்க வேண்டும். என பல கடமைகள் காத்திருக்கின்றன.
ஆட்சியைப் பிடிக்கப் போட்டியிட்டவர்களில் ஓர் ஆணியினர் அதிஷ்ட்த்தையும் தீபாவையும் நம்பினார்கள். ஆனால் மற்றக் கூட்டத்திற்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. இந்நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்ற தானம் தரும ம், தண்டம் என எதையும் முயன்று பார்க்கவேண்டிய நிலமை.
பினாமி அமைச்சரவை ஆதரித்த சட்டசபை உறுப்பினர்களின் மன நிலையையும் பார்க்கவேண்டும். சட்டசபை கலைக்கப்பட்டால் திரும்ப ஜெயிப்பதென்பது இம்முறை எளிதல்ல, தவிர ஏற்கனவே எதன் தயவால் வாக்கை அள்ளமுடிந்த தென்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்நிலையில் எதை நம்பி ஓ.பி.எஸ் பின்னால் அணி திரளுவது ? அவர்களுக்குரிய தற்போதையை விலையைக் கொடுக்க அவர் தயாரில்லை, மடியில் தகுந்த பணமும், உரிய தரகருமின்றிச் சந்தைக்கு வரலாமா ? ஆக பினாமி ஆட்சியில் அவ்வப்போது சிறிய ஊடலுடன் (பெரிய ஊடல் ஆபத்தில் முடியும்) முடிந்த வரை கறந்து சட்டசபை ஆயுளை நீட்டுவது தான் பிழைக்கத் தெரிந்த தமிழர்களுக்குள்ள புத்திசாலித்தனம், அதைச் செய்திருக்கிறார்கள்.
எதிர்கட்சிகளின் நிலமை
இன்றைய தேதியில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் உட்பட அனைவருக்கும் தி.மு.க எதிரி. சசிகலா முதல்வர் என்றாலும் பரவாயில்லை ஆனால் திமுக பலனைந்துவிடக்கூடாது. இதில் பா.ம.க, மக்கள் நலக்கூட்டணி அனைவருக்கும் ஒரே எதிரி தி.முக. தான் மன்னார்குடி அதிமுக இல்லை. தே.தி.முக எதிர்காலத்தில் தி.முக.வுடன் இணைந்து தேர்தலில் நிற்கலாம், காங்கிரஸும் திருநாவுக்கரசு வேளியேற்றப்பட்டால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கலாம். விடுதலை சிறுத்தைகளும் இடதுசாரிகளும் தினகரன் ஊழல்வாதியல்ல எனக்கூறி அவரை முன்னிறுத்தி கைகோர்ப்பார்கள். பல காரணங்கள் இருப்பினும் திமுகவைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப்பெற சசிகலா அணியினரின் அதிமுகவில் வாய்ப்புண்டு. எப்போதும் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரணியில் இருப்பதென்கிற முடிவெடுத்த பா.ம.க, பஜக வோடோ அல்லது வழக்கம்போல தனி அணியாக நிற்கலாம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்ம ம் மறுபடி வெல்லும் என்கிறார்களே ?. நாம் குற்றவாளி என கைகாட்டுகிற கூட்டமும் அதைத்தான் சொல்கிறது. என்ன செய்யலாம் ? இன்னொரு ஜல்லிகட்டு வழிமுறையிலான அறப்போராட்டம் மட்டுமே தமிழர் மானத்தை மீட்டெடுக்க உதவும்.
————————————————————-