காலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும், தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல். ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’ (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஆனால் இங்கும் ஒரு நுண்பொருளின் பயன்பாடு எஜமான்-அடிமை உறவின் அடிப்படையில் நுண்பொருள் -செயலிகள் உறவு தீர்மானிக்கப்படுகிறது. அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால் எஜமானடிமைகள் எஜமானுமல்ல அடிமையுமல்ல. எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள். இப்படி வேடம் தரித்த எஜமான்கள் இருப்பதைப்போலவே வேடம் தரித்த அடிமைகளும் இருக்கிறார்கள். இவ்வடிமைகள் அடிமைகள்போல பாவனைசெய்பவர்கள், உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.
மார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான் அடிமை இருபண்புகளுடனும் இன்றைக்கு வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான் என்கிற உண்மைநிலை.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை. புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனது உரிமைக்குப் போராடுகிறவன், இன்று நிலமை வேறு, இழைக்கப்படும் அநீதிக்கு சமாதானம் செய்துகொள்ளும் போக்கைக் காண்கிறோம். நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன் அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல, தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து, இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது.
அதிகாரம்
எஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன. « நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது » என்பதால் பிறப்பது . இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘தெய்வீக உரிமை’ (Divine right) என அழைத்தார்கள், அத்தெய்வீக உரிமை சராசரி மனிதனுக்கு வாய்க்காத பிறப்புரிமை. இந்திய மரபின் வழி பொருள்கொள்வதெனில் கடவுள் விதித்தது. கடவுள் « எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் » அல்லது « உங்களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை » என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை இயக்குத் திறன் ( Power) எனக் கருதலாம்.
இந்த அதிகாரம் கேள்விகளை அனுமதிக்காத எஜமான்களை உருவாக்குகிறதென்பது உண்மைதான் ஆனால் அவர்களே சோர்வுறுகிறபோது, பலவீனப்படுகிறபோது எஜமானடிமையாக உருமாருகிறார்கள்.
எஜமானடிமைகள்
அநாமதேயம் முழுமையானச் சுதந்திரத்தை அனுபவிக்க உதவும். நான்குபேர் நம்மை அறியத் தொடங்குகிறபோது அந்த நான்குபேர் எதிர்பார்ப்புகளுக்காக நமது சுதந்திரத்தை இழக்கச் சம்மதிக்கிறோம். நான்கு பேர் நாற்பதாயிரம்பேராக அல்லது நாட்டின் பெரும்பாலோரால் அறியப்படுகிறபொழுது தமது சுதந்திரத்தை முற்றாக இழக்கிறார்.இழந்தவற்றை மீட்க மன்ன ன், முதலாளி, தலைவன், எஜமான் என்ற ‘இன்னவாக இருக்கிறேன்’ வழங்கும் அதிகார உரிமையைத் தெரிவிக்க பிரயோகிக்க தனித்து முடியாது என்கிறபோது சமயகுருவாக அமைச்சர்களாக, ஆலோசர்களாக உள்ளே நுழைகிறவர்கள்,இவர்களை வழி நடத்துகிறார்கள், முடிவில் எஜமானாக இருப்பவர்கள் எஜமானடிமைகளாக மாறுகிறார்கள்.
முடியாட்சியும் எஜமானடிமையும்
முடியாட்சியில், எதேச்சாதிகார நிர்வாகத்தில், நவீன மக்களாட்சியில் என வரலாறெங்கும் எஜமானடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். வானளாவிய அதிகாரமென்பது உண்மையிலில்லை. தெய்வீக உரிமை கொண்ட மன்னர்களை கேள்விகேட்கின்ற உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு எனக் கருதியதாலோ என்னவோ அக்கடவுளின் பிரதிநிதிகளாக அறியப்பட்ட சமயகுருக்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். பின்னாளில் மக்களாட்சிமுறை உள்ளே நுழைந்தபொழுது பிரிட்டிஷ் கோமகன்களும் கோமகள்களும் சமயகுருக்களுக்கு மட்டுமின்றி, தஙளுக்குப் படி அளக்கும் பாராளுமன்றத்திற்கும் அடிமைகளாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காதலித்தவனை அல்லது காதலித்தவளை மணமுடிக்க முடியாமல், விரும்பியதை உண்ணமுடியாமல், உடுத்தமுடியாமல், அணியமுடியாமல், விரும்பிய முடிவை எடுக்க முடியாமல் சடங்கிற்கும், சம்பிரதாயத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்` பணியும் எஜமான்களாக வாழும் நெருக்கடி.
மக்களாட்சியும் எஜமானடிமையும்
மக்களாட்சியில் வேறுவகையான எஜமானடிமைகள். இங்கே தமது அதிகாரம் நிரந்தமற்றதென்கிற அச்சம் தலைவர்களை நிழல்போல தொடர்கிறது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள, உபாயங்களைத் தேடுகிறார்கள். மீண்டும் தலைமைப்பொறுப்பேற்பதென்பது பணமின்றி நடவாது, வாக்காளர்கள் அவர்களின் வாக்குறுதியைக் காட்டிலும் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களென்பது அவர்களுக்குத் தெரியும், பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டும், அந்தப்பணத்தை எப்படியாவது பெற்றாகவேண்டும். பெரும் பணக்கார்களின் கொடையாக இருக்கலாம், ஊழல் பணமாக இருக்கலாம். இதைச் தனியே செய்ய முடியாதென்கிறபோது இதற்கு ஏற்பாடு செய்கிற, வழிவகுக்கிற மனிதர்களின் துணைவேண்டும்,ஆலோசகர்கள் வேண்டும். ஜனநாயகத்தில் எஜமானடிமைகள் உருவாகும் இரகசியமிது.
நவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருகிற அரசாங்க அதிகாரிகளுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். பல அரசியல் எஜமானர்கள் அடிமைகளாக இருந்து எஜமானர்களாக உத்தியோக உயர்வு பெற்றவர்கள். அதனால் இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். « ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன் », « அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் » என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை களையெடுத்து அலுத்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம். இது எஜமான் – அடிமை சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.
பல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில் ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.
தன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்டுள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது. அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.
(குறிப்பு : அண்மையில் மலைகள் இணைய இதழுக்கென எழுதி வெளிவந்த கட்டுரை சில திருத்தங்களுடன் – மலைகள் இணைய இதழுக்கு நன்றி)
————————————————————————————-
மிகச்சிறப்பான கட்டுரை. எஜமானடிமை என்ற சொல் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் இன்னவாக இருக்கிறேன். அதனால் எனக்குச் சில அதிகாரம் செலுத்தும் உரிமை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியக் குடும்ப அமைப்புகளில் இந்த அதிகாரம் செலுத்தும் போக்கு பெரும்பாலும் ஆண்களிடமே இருக்கிறது. அப்படியானால் குடும்ப அமைப்பில் எஜமானடிமை என்பதை எப்படி புரிந்து கொள்வது? நன்றி
இரத்தம் சுண்டிய காலத்தில் ஆண்களைப் பாருங்கள், வா போ என்கிறவர்கள் வாம்மா போம்மா என்பார்கள். வயதான காலத்தில் பெண்களிடம் பொறுப்பை ஒப்படைத்து அக்கடாவென்றிருக்கும் ஆண்களும் இந்த ரகம்தான். கடந்த கால வாழ்க்கைக்கு பழிதீர்த்துகொள்ளும் பாட்டிமார்கள் அனேகம். இளம்பெண்கள் எஜமானடிமைகளாக தங்கள் ஆந்துணையை மாற்ற அன்பொன்றுதான் பிரதான உபாயம்.