ஓர் இணைய இதழ் சம்பந்தப் பட்ட நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அ.முத்துலிஙத்தின் கதைகளை மறுவாசிப்பு செய்தேன்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வசித்து வருகிறேன், இலங்கையிலிருந்து இங்கே தங்கியுள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தியிருக்கிறேன். தமிழ்ச் சங்கவிழாக்கள்,நண்பர்களின் குடும்ப விழாக்கள் ஆகியவற்றில் நட்பு, தொழில் என்ற அடிப்படையில் பங்கெடுப்பதுண்டு. தவிர எழுத்திலும் ஆர்வம் இருப்பதால் இலக்கியம் சார்ந்த ஈடுபாடும் உள்ளது. எனினும் எப்போதும் போல அ. முத்துலிங்கத்தின் கதைகளில் புரியாதசொற்களின்(தமிழ் அகராதிகளில் தேடிக்கிடைகாத சொற்கள்) விழுக்காடுகள் குறைந்திருக்கிறதே தவிர அவற்றின் பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிட்டதென கூற முடியவில்லை. இது ஏதோ ஈழ நண்பர்களின் எழுத்துகளில் காணும் பிரச்சினையல்ல வட்டார வழக்கினைக் கையாளும் கிராவைப் போன்றவர்களின் எழுத்துகளில் காணும் பொதுப் பிரச்சினை.
வேறு மொழிகளில் இப்பிரச்சினை இல்லையா? இருக்கிறது. எனக்குத் தெரிந்த பிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டிலும் பிரச்சினை இருகிறது. ஆனாலும் வாசிப்பை எளிதாக்கிக்கொள்ள இருமொழிகளிலும் வழிமுறைகள் இருக்கின்றன. சொற்களின் வழக்கு, மிகக்குறுகிய வட்டத்திற்குள் பயன்பாடுகொண்டதாக இருப்பினும் அதற்குப் பொருள்காண, விளங்கிக்கொள்ள மேற்குலக மொழிகளில் முடியும். பொதுவாக நான் வாசிக்கிறபோது ஒரே ஒரு சொல் சரியாக அவ்வாக்கியத்துடன் இசைத்து என்ன பொருளைத் தருகிறதென்பதை விளங்கிக்கொள்ளாதவரை அடுத்த வாக்கியத்தை வாசிப்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருப்பவன். நம்மில் பலர் அப்படித்தான் இருப்பார்கள் என்பதென் நம்பிக்கை.
தமிழில் பல நல்லகதைகளை வாசிக்கிறபோது இப்பிரச்சினைக்குறுக்கிட்டு வாசிப்பிலிருந்து என்னை வெளியேற்றுகிறது. எல்லா சொற்களையும் ஊகித்துப்பொருள் காண்பது இயலாத காரியம். சிக்கலான அல்லது திருகலான மொழிநடையை உபயோகிப்பது என்பது வேறு, புரியாதச் சொற்களை பயன்படுத்துவதென்பதுவேறு. பயன்படுத்த கூடாதா ? எனக் கேட்டால் பயன்படுத்தத்தான் வேண்டும். A Clockwork Orange (Anthony Burgess) நாவலைக்கூட குழப்பமின்றி புரிந்துகொள்ள முடியும், உரிய அகராதிகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்குச் சாத்தியமில்லை. ஆயிரம் பக்கங்களில் ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறபொழுது ஐந்துபக்கங்களைக் கூடுதலாக ஒதுக்கி அச்சொற்களுக்குரிய பொருளை விளக்கி, என்னைப்போன்ற மரமணடைகளுக்கு உதவினால் என்ன குறைந்துவிடும் ?
காதில் விழுந்ததொரு செய்தி
அம்பைசிறுகதைகளை என்னுடன் பிரெஞ்சில் மொழி பெயர்த்த பிரெஞ்சு பெண்மனி மலையாளமொழி கற்றவர், அவரோடு தமிழ் கற்ற பிரெஞ்சு பெண்மணி சென்னையில் இறங்கிய சில நாட்களில் நாம் படித்த தமிழுக்கும் வழக்கிலுள்ள தமிழுக்கும் காத தூரம் இருக்கிறதென எண்ணி அலறி அடித்துக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பியதாகச் செய்தி. விளைவாக மலையாளத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பது பிரச்சினையின்றி நடந்துகொண்டிருக்க, தமிழ் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
———————————-