புரட்சியாளன் என்பவன் யார்? ‘இல்லை’ இனி என்னால் முடியாது !” என தனக்கிடப்பட்ட ஆணையை மறுக்கிற மனிதன். அவன் மறுப்பவனே அன்றி நிராகரிப்பவனல்ல. அம்மனிதனே ‘சரி’ என்று இடப்படும் ஆணைக்குச் செயலின் தொடக்கத்தில் சம்மதிப்பவனாகவும் இருக்கிறான். தனது வாழ்நாள் முழுக்க தனக்கிடப்பட்ட ஆணைகளை மறுப்பின்றி நிறைவேற்றிய ஓர் அடிமை, இடப்பட்ட புதிய கட்டளையொன்றை ‘ஏற்பதற்கு உகந்ததல்ல’ என்று தீர்மானித்தது திடீரென்று எடுத்த முடிவு. அவனுடைய திடீர் ‘மறுப்பிற்குப் பொருள் என்ன?
உதாரணத்திற்கு “இப்பிரச்சினை சகிக்க முடியாத அளவிற்கு நீடித்துவிட்டது” என்றோ; “இதுவரை சரி, இனி சரிவராது” என்றோ; “நீங்கள் வரைமுறையற்று நடந்துகொள்கிறீர்கள்” என்றோ; அல்லது “அததற்கு வரம்பு இருக்கிறது, அதை நீங்கள் மீறக்கூடாது” என்றோ பொருள் கொள்ளலாம். ஆக மொத்தத்தில் ‘இல்லை’ என்னால் இனி முடியாது! என்ற மறுப்பு, அனைத்திற்கும் ஓர் வரம்பு இருக்கிறதென ஓர் எல்லையின் இருப்பைத் தெரிவிக்கிறது. மற்றொரு ஆசாமி “வரம்பை கடக்கிறார்” என்ற சிந்தனையை ஒரு புரட்சியாளனிடமும் காண்கிறோம். அந்த மற்றவர் தமக்குள்ள உரிமையை, அதன் எல்லைக்கு அப்பாற்பட்டு, எதிர்கொள்ளவேண்டிய பிரிதொரு உரிமைக்குள் -அதன் எல்லைக்குள் நீட்டிக்கப் பார்க்கிறார் எனப் புரட்சியாளன் கருதுகிறான். ஏற்க முடியாததொரு அத்துமீறலெனக் கணித்து திட்டவட்டமாக மறுத்தலும்; புரட்சியாளனிடம் தனக்குள்ள நியாயமான உரிமைக்குறித்த தெளிவின்மையும் – சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அவனுடைய “எனக்கும் உரிமையிருக்கிறது…” என்கிற மனப்போக்கும் இணைந்துகொள்ள ‘எதிர்ப்பு மனப்பான்மை’ தனக்கான அடித்தளத்தைப் புரட்சியாளனிடம் அமைத்துக்கொள்ளும். ஏதோ ஒருவகையில், எங்கேனும் கொஞ்சம் நியாயம் தன்பக்கம் இருக்கிறதென்ற உணர்வு ஒருவருக்கு எழாதவரை கிளர்ச்சிக்கு இடமில்லை. அந்த வகையில்தான் கிளர்ந்தெழும் அடிமைக்கு மறுப்பதும், சம்மதிப்பதும் சத்தியமாகின்றன. உரிமைக்கான எல்லையை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஐயத்திற்குரியவற்றை அதன் எல்லைக்குள் வைத்திருக்கவும் விரும்புகிறான். தம்மிடமும் ‘பொருட்படுத்தக்கூடியவை…’ உள்ளன என வற்புறுத்துகிற புரட்சியாளன் அவற்றை மற்றவர்கள் ‘கவனத்திற்கொள்ள’ வேண்டுமென எதிர்பார்க்கிறான். தனக்கென்றுள்ள உரிமையை ஒடுக்கும் ஓர் ஆணையை, ஏற்கக்கூடிய வரம்பிற்கு அப்பாற்பட்டதெனக் கருதி எதிர்க்கிறான்.
அத்துமீறல் ஆசாமியை வெறுக்கிற அதேவேளை, கிளர்ச்சியில் ஈடுபடுகிற போதெல்லாம் தாமதமின்றி தன்னில் ஒரு பகுதியிடம் மனிதன் முழுமையாக அவனைப் பிணைத்துக்கொள்கிறான். தமது சுய மதிப்பீடுகளைக் குறிப்பாலேனும் உணர்த்த முற்பட்டு அதற்கு எந்த விலையென்றாலும் கொடுத்து, அதை அழிவினின்று பாதுகாக்க முற்படுகிறான். இதுவரை அமைதி காத்தவன். நிர்க்கதியாய் விடப்பட்ட நிலமையில், அவனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதில் தெளிவிருந்தபோதும் உடன்பட்டான். எவ்வித விருப்பமும் இல்லை, எதைப்பற்றியும் அபிப்ராயங்கள் இல்லை என்பதே அவனது அப்போதைய மௌனத்திற்கான பொருள், அதாவது வேண்டியதென்று எனக்கெதுவுமில்லை என்பதுதான் அதற்கான பொருள். அபத்தவியலைப்போலவே விரக்தி மனோபாவமும் அனைத்தையும் பொதுப்படையாகப் பார்க்கிறது. எதனிடத்திலும் தனிப்பட்டவகையில் கவனம்செலுத்துவதில்லை. வாய்மூடி இருப்பதன் அர்த்தம் அதுதான். ஆனால் பேச ஆரம்பித்த கணத்தில் ( அது மறுப்பதற்கு என்கிறபோதும்) அவனுடையக் கருத்தைக்கூறவோ, அவனது விருப்பத்தைத் தெரிவிக்கவோ இயலும். சொற்பிறப்பியல் அடிப்ப்டையில், கிளர்ச்சியாளன் (Le révolté) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு புறங்காட்டுதல், முகத்தைத் திருப்பிக்கொள்ளல் என்றாகிறது எஜமானின் சாட்டையின்கீழ் காரியங்களைச் செய்தான். தற்போது என்ன நடக்கிறது? விருப்பம் அல்லாதவற்றை நிராகரிக்கிறான். எல்லா விழுமியங்களும் கிளர்ச்சியில் முடிவதில்லை ஆனால் ஒவ்வொரு கிளர்ச்சியும் மறைமுகமாக விழுமியத்தை முன்வைக்கிறது. நாம் நினைப்பதுபோல உண்மையில் இப்பிரச்சினை விழுமியத்தை அடிப்படையாகக்கொண்டதா?
தெளிவின்மையுடன் என்றாலும், கலகம் அல்லது கிளர்ச்சியில் உள்ளுணர்வு விழித்துக்கொள்கிறது. புரிதல் ஓர் ஒளிகீற்றுபோல திடீரென நிகழ தன்னிடம் ஏதோ ஒன்று இருப்பதும் அந்த ஏதோ ஒன்றை தன்னில் அடையாளம் காண்பதும் அம்மனிதனிடத்தில் நிகழ்கிறது. அக்கணத்திற்கு முன்பாக அவன் தன்னை உண்மையில் அடையாளப்படுத்திகொண்டவனல்ல. கிளர்ச்சிக்கு முன்பாக இழைக்கப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டவன். இதைக் காட்டிலும் கூடுதலாகக் கிளர்ச்சியில் இறங்கவேண்டிய ஆணைகளுக்கெல்லாம் மறுபேச்சின்றி பணிந்திருக்கிறான். அவ்வாறான தருணங்களில் பொறுமையைக் கடைபிடித்தவன் – ஒரு வேளை மறுப்பை வெளியிற்காட்டாமல் அவனுக்குள் வைத்திருந்திருக்கக்கூடும். ஆனால் வாய் மூடியிருந்ததைவைத்து உரிமைப்பற்றிய விழிப்புணர்வைக்காட்டிலும் உடனடி நலனில் அக்கறை கொண்டிருந்திருக்கிறான் எனக்கருத வேண்டியிருக்கிறது. பொறுமையை இழந்த நிலையில், பதற்றத்தால் உருவான இத்திடீர் எதிர்வினை முன்பு எவற்றுக்கெல்லாம் மறுப்பின்றி செயல்பட்டானோ அவைகளோடும் சம்பந்தப்பட்டதாகிறது, ஆக இத்திடீர் மறுப்பை கடந்தகாலத்தின் மீதான செயல்பாடெனக் கருத இடமுண்டு. அடிமை தன்னை சிறுமைபடுத்துகிற எஜமானின் கட்டளையை நிராகரிக்கும் கணத்திலேயே தன்னுடை அடிமை நிலமையையும் நிராகரிக்கிறான். வெறுமனே மறுத்தலால் அவன் எட்டிய இலக்கிற்கும் கூடுதளான நிலமைக்கு தற்போது கிளர்ச்சி உதவுகிறது. தனது எதிராளிக்கென கிழித்திருந்த எல்லைக்கோட்டைத் தற்போது மீறுவது இவன். மீறுவதோடன்றி தன்னை சரிநிகராக நடத்தவேண்டுமென்கிறான். தொடக்கத்தில் மூர்க்கமானதோர் பண்பாக மனிதனிடம் இருக்கிற எதிர்ப்புசக்தி மனிதனை முழுமையாக அபகரித்து, அவனூடாகத் தன்னை முன்நிறுத்துகிறது.அவனுள் உள்ள இப்பகுதியை பிறர் மதிக்கவேண்டும், அதுவே அவன் விருப்பம், எனவே பிற அனைத்தினும்பார்க்க மேம்பட்டதாக அதை நினைக்கிறான், தனது உயிர் உட்பட பிறவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்க்கிறான், கிடைத்தற்கரிய செல்வம், அது மட்டுமே மனதிற்கு உகந்ததாக இருக்கிறது. இதற்கு முன்பாக சமரசம் என்றபெயரில் முடங்கிக்கிடந்த அடிமை, சட்டென்று விழித்துக்கொள்ள, அதன விளைவாக துள்ளிக்குதிக்கிறான் (« ஏறக்குறைய அதுபோலத்தான் »), இனி சமரசத்திற்கே இடமில்லை என்பதுபோல, முடிந்தால் ‘அனைத்தும்’ தவறினால் ‘ஒன்றுமின்மை’ (Tout ou Rien) என்கிற முடிவுக்கு வருகிறான், திடீரென்று உதித்த ஞானோதயம், கூடவே கலகமும் பிறக்கிறது.
ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாக விளங்குகிறது. அவனுக்குள் நிகழும் இந்த ஞானோதயம் ‘அனைத்துமாக’ ( குழப்பங்களுக்கிடையிலும்) தன்னைப் பிரகனடபடுத்திக்கொள்கிற அதேவேளை அவனது உயிரை அந்த ‘அனைத்திற்காக’வும் இழக்க அவன் தயார் என்கிற மனநிலை காரணமாக ‘ஒன்றுமின்மை’ ஆகவும் இருக்கிறது. போராளி தன்னை அனைத்துமாக கட்டமைத்துக்கொள்ள விரும்புகிறான். திடீரென்று தன்னில் கண்டுணர்ந்து போற்றுகிற விழிப்புணர்வில் தன்னை முழுமையாகக் காண அவன் விழைகிறான், இயலாதெனில் ‘ஒன்றுமின்மை’ ஆவது அதாவது தனது ஆதிக்க சக்தியிடம் முற்றாக தோற்றொழிந்துபோவதென தீர்மானிக்கிறான். கடைசியில் தான் புனிதமென்று கருதுகிற சுதந்திரத்தைப் பறிகொடுப்பதைக்காட்டிலும் இறுதித் தோல்வியாக மரணத்தைக் தழுவவும் அவன் சித்தமாக இருக்கிறான். ஒருவர் காலடியில் அடிமைப்பட்டுக்கிடப்பதைக்காட்டிலும், அந்த ஒருவர் காலடியில் உயிரை விடுவது மேல் என்பது அவனது இறுதிக்கட்ட சித்தாந்தம்.
-புரட்சியளன் நூலிலிருந்து
——————————-
புரட்சியாளன்
அல்பெர்கமுய்
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
காலச்சுவடு. நாகர்கோவில்
—————————–