நேற்றிரவு, சியாட்டல் வீதியில் நடந்தபோது, கடுமையன குளிர். விழாக் காலமானதால் கூடுதலான மின்விளக்குகள் அலங்கரிப்பில் சாலைகள். ஆங்கிலப்புத்தாண்டின் மகிழ்ச்சி கலகலவென்று சிரிப்பூடாக சிந்தியதுபோக இமைகளில் ஓளித்துகள்களாக ஒட்டிக்கொண்டிருந்தது போக, மெல்லிய இருள் பூசிய முகங்களில் குறையாமல் சிவந்த முகங்கள் என்பதால் பளிச்சென்று தெரிந்தது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுதாமல் கடக்கும் நொடிகளை அலங்கரிக்கும் முயற்சியில் ஒரு ஜாஸ் கலைஞன். தன்னைக் கடந்தும் செல்லும் மக்களின் கவனத்திற்கு தனது இசை உள்ளாகிறதா, அதன் உவகையும் இனிமையும் குளிருக்கு இதமாக பாதசாரிகளின் இதயத்தை வருடுகிறதா என்பதுபற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாதவன்போல இசைஇழைகளின் ஊடாக நாங்கள் விலகி வெகுதூரம் சென்றைருந்தபோதும் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
உலகின் மிகச்சிறிய அரசு என்ற அளவில் (எல்லைப்பரப்பில் பார்க்கிறபோது) வாடிகனும், போப் பிரான்சுவாவும் சட்டென்று நினைவுக்கு வருவதப்போலவே நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு என்றதும் ரஷ்யாவும் புட்டினும் நினைவுக்கு வருகிறார்கள். இவற்றுக்கிடையில் எத்தனையோ நாடுகளிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில நாடுகளையும் அதன் தலைவர்களை மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது.
மோடியை அறியாத பெரும்பான்மையான பிரெஞ்சுக்காரர்களைப் போலவே, பிரான்சு அதிபரைப்பற்றிக் கேள்விப்பட்டிராத கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்டு ஆனாலும் இந்த இருநாட்டு மக்களும் ஒபாமா யார், புட்டின் யார் ஏன் ? நாளை வரவிருக்கிற ட்ரம்ப்பையும் அறிந்திருக்கிறார்கள். மோடியை பிரெஞ்சுக்காரர்கள் அறியாததும், பிரான்சு அதிபரை இந்தியர்கள் அறியாததும் யார்குற்றம். ஒருவரைப்பற்றி நாம் அறியத் தவறியாதாலேயே அவர்கள் இருத்தல் இல்லை என்றாகிவிடுமா ?
ஒரிடத்தின் இருத்தல் பிற இடங்களில் இன்மை ஆவது இப்படித்தான். இவ்வுலகம் அறியப்பட்டவர்களால் மட்டுமல்ல அறியப்படாதவர்களாலும் முன்நகர்த்தப்படுகிறது, சுமந்து செல்லப்படுகிறது. வரலாறு படைநடத்துனர்களுக்கு மட்டுமல்ல படையில் ஆயிரத்தில் ஒருவராய் காலிழந்த கையிழந்த, உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களுக்கும் சொந்தமானது.
இருட்டிற்கு நிறமில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம் ? பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா ? அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக இருக்கலாமில்லையா ? ஆட்சியாளர்களைப்போல, நிர்வாகிகளைப்போல, அறிவியல் வல்லுனர்களைப்போல படைப்பிலக்கியவாதிகளைப்போல வியர்வை சிந்தும் இருட்டும் பகல் தான், விழாக்கால மின்சார அலங்காரத்தைப்போல முகமற்ற அந்த ஜாஸ் மனிதனும் விழாக்கால இரவுக்கு ஒளிச்சேர்ப்பவர்தான். வீதிகளில், பேருந்துகளில், அங்காடிகளில் இப்படித்தான் ஏதோவொரு இசைக்கருவியை வாசித்தவண்ணம் இவ்வுலகை இயக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
————————————————————————