‘ஆயிரம் ரூபாய் நோட்டு ‘என்றொரு படத்தை netflixல் அண்மையில் பார்க்க நேர்ந்த து. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அறுபதுகளில் வந்த ‘ஆயிரம் ரூபாய்’ என்றொரு தமிழ்த் திரைப்படத்தை அது நினைவூட்டியது. படத்தில் தெருவில் ஆடிப்பாடி பிழைக்கும் சாவித்திரிக்கு ஒரு நாள் ஆயிரம் ரூபாய் தாளொன்று கிடைக்கிறது. அதைப் பாதுகாக்க அல்லாடுகிறார், அவசரத் தேவையை முன்னிட்டு உபயயோகிக்கலாம் என்று போனாலும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே தாளம்போடும் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் எப்படி வந்ததென்ற கேள்வி. முடிவில் ஒரு கட்டத்தில் பைத்தியங்கூட அவருக்குப் பிடிக்கிறது.
‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ (1000 Rupee Note) ஒரு மராத்திய திரைப்படம். அடிப்படையில் ‘ஆயிரம் ரூபாய்’ கதையின் மையக் கருத்தை ஒட்டியதுதான், திரைக்கதை அமைப்பிலும் பிரமாதமான வேறுபாடுகளில்லை. எனினும் தமிழ் ‘ஆயிரம் ரூபாய்’ நாம் நன்கறிந்த மெலோ டிராமா வகையறா, அதாவது ‘சோப் ஒபேரா‘ (soap opera)ரகம். ஆனால் மராத்திய ‘ஆயிரம் ரூபாய் நோட்’ சிக்கல்களைத் திணிக்காத, எளிமையான திரைக்கதையும் சம்பவக் கோர்வையுமாக விசும்பல்கள் தேம்பல்களின்றி எதார்த்த முறுவல்களுடன் நகரும் சினிமா. எத்தனை யுகங்கள் வந்துபோயினும், ராஜபாட்டை அறியாது முட்டுச் சந்துகளில் உறைந்து துன்பத்துடன் வலுவில் கை கோர்க்கும் வாழ்க்கைக்கு உரியவர்கள் ஏழைகள் என்பதை நியோ ரியலிஸத்துடன் காட்சிப்படுத்தும் சினிமா.
சாவித்திரி இடத்தில் இங்கே உஷா நாயக், ஆட்டம் போடவந்த இளமையும் கவர்ச்சியுமிக்க நாயகிஅல்ல, வயதானப் பெண்மணி. மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமமொன்றில் உழலும் கதை. விவசாயியான ஒரே மகன் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலைசெய்துகொள்கிறான் (இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மல்லையாக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை), கொள்ளிவைக்க உதவும் என்பதுபோல அரசுசெய்த அற்ப உதவியையும் மருமகள் சுருட்டிக்கொண்டுபோக, நிர்க்கதியாய் விடப்பட்ட விதவை. கிராமத்தில் ஒருபணக்கார குடும்பத்தில் பத்துபாத்திரம் தேய்த்து, வீடுபெருக்கி, நாளெல்லாம் அவர்கள் வீட்டுத் துணிகளை அலசி அவர்கள் தின்று மீந்த தில் பசியாறும் பெண்மணி. வீட்டில் அடுப்பு மூட்டுவது டீ போட மட்டும் தான். தொடக்கத்தில் இந்த அடுப்பைமூட்டும் முயற்சியில் தீப்பெட்டியில் இருந்த நான்கு குச்சிகளில் மூன்று பயனற்றுப்போக, நான்காவது குச்சியிலாவது அடுப்பு பற்றவேண்டுமென கடவுளை வேண்டுவதும், மெல்ல மெல்ல விறகில் தீப்பிடித்து பரவ, தீச்சுவாலையின் செழுமை கன்னக்கதுப்பிலும், கண்மணிகளிலும் மினுங்குவதும், அந்த மினுங்கலை உதட்டோரங்களில் வழியவிடுவதும் கணநேரக் காட்சியென்றாலும் கோடிபெறும். ஏழைகள் வாழ்வில் மகிச்சிக்கூட ரேஷனுக்கு உட்பட்டதில்லையா ? இருந்தும் அதையும் அண்டைவீட்டுக்காரனான சுதாமா என்ற ஆட்டிடையன் குடும்பத்துடன் பகிர்ந்து வாழ்பவள். « யாருடனாவது சேர்ந்து குடித்தால் தான் டீ சுவைக்கிறது » எனும் பெண்மணி. அறுந்த செருப்பைத் தைக்கவும், ஐம்பது காசு செலவழித்து ஒரு தித்திப்பு ரொட்டி வாங்கவும் பலமுறை யோசிப்பவள், காரணம் சிக்கனம் அல்ல, அவள் கையிறுப்பு அவ்வளவுதான்.
இந்த அன்றாடம் காய்ச்சியின் வாழ்வில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறுக்கிட, வாழ்க்கைத் திணறுறது. வழக்கம் போல தேர்தல் பிரச்சாரத்திற்குவருகிற ஓர் அரசியல்வாதி வாக்குகளை விலைகொடுத்துவாங்குகிறான். தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டால் ஒருவேளை நல்ல சாப்பாடும், பணமும் கிடைக்குமென்கிற சுதாமா குடும்பத்துடன் இவளும் தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறாள். உணவுப் பொட்டலத்துடன், வயதான பெண்மணிக்கு விவசாயியான மகன் தற்கொலை செய்துகொண்ட தகவலால் வேட்பாளரிடமிருந்து கூடுதலாக இரண்டொரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கிடைக்கின்றன. தலைவலி அன்றே ஆரம்பிக்கிறது. எங்கே பாதுகாப்பாக வைப்பதென்ற கவலையில் உறக்கமின்றி தவித்து (எந்த வெண்டைக்காய் வங்கியும் அவளுக்குத் தெரியாது), தனக்கிருக்கும் சில ஆசைகளை (உடைந்திருக்கும் மூக்குக் கண்ணாடியை சரி செய்வது, தன் மகன் படத்திற்கு பிரேம் போடுவது, தனக்கும் சுதாமா குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுப்பது) நிறைவேற்றிக்கொள்வதன்மூலம் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாமென நினைக்கிறாள். நகரம் நோக்கிப் பயணம். பேருந்து நடத்துனர் ஆயிரம் ரூபாயை மறுக்க, உடன் பயணிக்கும் சுதாமா பணம்கொடுக்கிறான். கண்ணாடிகடை, படத்திற்கு பிரேம் போடும்கடை அனித்திலும் இதே அனுபவம். துணிக்கடையில் மாற்றிக்கொள்ளலாமென நினைத்து அங்குபோகிறார்கள். கடைமுதலாளி சந்தேகித்து ரோட்டோரம் போகுகும் போலீஸ்காரரை அழைக்கிறார், பாகிஸ்தானில் அடித்த கள்ளப் பணமாம், எனவே வயதான பெண்மணியும் துணைக்குவந்த அப்பாவி சுதாமாவும் விசாரணை யென்ற பெயரில் அடிபடுகிறார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், இறுதியாக சுதாமா கைவசமிருந்த பணத்தையும் இழந்து வீடு திரும்புகிறார்கள். இச்சம்பவத்தில் வழக்கம்போல இலாபம் பார்ப்பது போலீஸ்காரர்கள். வேட்பாளர்மீதான புகாரை பதிவு செய்வதைத் தடுக்க 50000 ரூபாயும், வேட்பாளரைக் காப்பாற்ற செய்த உதவிக்குச் சில ஆயிரங்களும் கைமாறுகின்றன.
இந்தியாவில் ஏழைகள் கையில் 500 ரூபாய் நோட்டையும், 1000 ரூபாய் பார்க்க முடிவதற்கு ஒன்று தேர்தல் காரணமாக இருக்கலாம் ; அல்லது சிறுகச் சிறுக வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி சேர்த்ததாக இருக்கலாம். திடீரென்று 500 ரூபாயையும் 1000 ரூபாயையும் செல்லாதாக்கியதன் மூலம் இந்திய மத்திய அரசு உண்மையில் யாரைத் தண்டிக்கிறது ? ‘ஆயிரம் ரூபாய் நோட்’ படத்தில் வரும் ‘பூதி’ போன்ற பெண்மணி ‘ஓட்டு’க்காக வாங்கிய பணம் என்ற காரணத்தால் அவளைப் தண்டிப்பதைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் வங்கியென்றாலென்ன அது கறுப்பா சிவப்பாவென்று அறியாமல், உறிப்பானையையும் அண்டாகுண்டாவையும் வங்கியாகப் பாவிப்பவர்களைத் தண்டிப்பதில் மோடிக்கு என்ன அப்படியொரு குரூரமான சந்தோஷம்? எத்தனை சதவீத இந்திய மக்கள் வங்கிகள் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ? இந்தியாவில் மக்கட்தொகை வீதாச்சாரத்திற்கேற்ப வங்கி எண்ணிக்கை உள்ளதா ? இருக்கின்ற வங்கிகளின் சேவை தரமென்ன ? இவற்றிலெல்லாம் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவராமல் ஓர் உலக்கையை நட்டு புதிய இரண்டாயிரம் எனும் பணமுடிச்சை வைத்து முடிந்தால் எடுத்துக்கொள் எனக்கூறும் மோடி மந்திரம் சொல்வதென்ன ?
கட்டுக் கட்டாய் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் புதிய 2000 ரூபாய் இடவசதியைப் இரட்டிப்பாக்கி கூடுதலாக பதுக்க உதவி செய்திருப்பதைத் தவிர்த்து கண்டபலன் என்ன ?
———————————————————–